Sunday, September 25, 2011

அகரத்தான் கவிதைகள்

காத்திருப்பு
-----------------------------------------------
சொத்துப் பிரச்சினைக்காக
மூன்று கொலைகள் நிகழ்ந்த
ஓட்டுப்புரை வீட்டின்
மாமரக் கொல்லையில்
விளையாட்டை பாதியில் நிறுத்தி
உயிர் தப்பியோடிய
குழந்தையின் வரவுக்காக
காலடிச் சுவடுகளைப் பார்த்தவாறு
காத்திருக்கின்றன மரப்பாச்சிகள்.
-------------------------------------------------------------------------------------
வாழ்தலின் நிமித்தம்
--------------------------------

காந்திகள் வன்மம் கொண்டு
கையில் தூக்குக் கயிற்றோடு
திரிவதால்

வேறு வழியில்லை தோழா!

தலைமுறைக் கோபம் தேக்கி
சொக்கப் பனைக் கொளுத்து!

தூக்குக் கயிற்றையும்,
மகாத்மா என்ற வெற்றுப் பட்டத்தையும்,
சனநாயகம் என்ற கறிக்குதவாச் சொல்லையும்,
இன்ன பிற இத்தியாதிக்களையும்.
-----------------------------------------------------------------------------
பிள்ளையார் சதுர்த்தி
-----------------------------------------------------------
பிள்ளையாரை
சிறுமைப் படுத்தி விட்டதாக 
கூப்பாடு போட்ட
சிறுமூளை பாதித்த ஓருடல்
பிரச்சினையின் தோளில்  
நின்று கொண்டிருந்தது.
-----------------------------------------------------------
பார்வதிக்குடி
------------------------------------
சாதியப் பேரணி.
கலவரம்.
துப்பாக்கிச் சூடு.
சில மது புட்டிகள் உடைந்தன.
குறிப்பிட வேறொன்றுமில்லை.  

--------------------------------------------------
விசித்திரங்கள் 
-----------------------------------------

உடைபடும் ஓசை.
வீட்டிற்குள் சண்டையையும்,
காயலான்கடையில் சந்தோசத்தையும்
ஒருங்கே கொண்டு வருகிறது.
-------------------------------------------------------------

கூத்து மேடை.
ராசா குடிகளுக்கும், 
குடிகள் ராசாவுக்கும்
படியளக்கின்றனர்.
---------------------------------

ஆக்கிரமிப்பு அகற்றம்.
கோயில் இடிபாடுகளுக்குள்  
கடவுளின் அழுகுரல்.
யார் யாரைக் காப்பாற்ற?
-------------------------------------------

கல்லைக் காசாக்குவர்.
மண்ணை நீறாக்குவர்.
காகிதத்தை பணமாக்குவர்.
பிறகெதற்கு கையேந்துவர்?
------------------------------------------ 

சேரி கருமாரியம்மனுக்கு
குட முழுக்கு விழா.
அவர்கள் தீர்த்தம் வழங்கினர்.
இவர்கள் மோட்சம் பெற்றனர்.
-----------------------------------------------

உறங்குமுன் உடமையாளனும்,
தொழிலுக்கு கிளம்புமுன் திருடனும்
கடவுளை மனமுருக வேண்டினர்.
---------------------------------------------------------


தற்கொலைக்கு முயன்று தோற்றுப்போன நண்பனுக்கு அர்ப்பணம். 
-------------------------------------------------------------------------------------------------------
கருமாயப்பட்ட வாழ்க்கை 
-------------------------------------------------------------------------
அவனுக்கு வாய்த்த வாழ்க்கை
இளம் காளையிடம்
இரவலுக்கு சிக்கிய
இரு சக்கர வாகனமாய்
இருப்பு அழிகிறது.      
------------------------------------------------------------------------

இறுதி தீர்மானம்
-----------------------------------------------
வாழ்வோடு போராடும் வலுவிழந்து
அம் முடிவெடுத்தபோதே,
அவனைச் சார்ந்திருந்த
அப்பனையும், ஆத்தாளையும்
பெண்டாட்டியையும்,
மூன்று பிள்ளைகளையும்
மற்றும்
சில கடன்காரர்களையும்
கொலை செய்வதென
தீர்மானித்திருந்தான். 
--------------------------------------------------------

காற்றினில் வரும் கீதம்
-------------------------------------------------------------------

இறப்பதற்கு சில கணங்களும்
வாழ்வதற்கு பல யுகங்களும்
கோப்பைகளில் ஊற்றி
மேசையின் மீது வைக்கப் பட்டன. 

வாழ்ந்து களிக்க சிலர் வாழ்வையும்,
வாழ்ந்து சலித்த பலர் இறப்பையும்
தெரிவு செய்து பருகினார்கள்.

காற்றில் மிதந்து வரும்
இசைக் குறிப்புகளில்
தாள லயங்கள் மட்டும்
சற்றே மாறுபட்டிருந்தன.

அவ்வளவு தான்.
------------------------------------------------------- 
 
   
         
                                                                                                                      - அகரத்தான்.  

சாகாவரம் பெறும் தெரு நாய்கள்

  கால காலமாக
வளைந்து குழைந்து வாலாட்டி
பாசாங்கு செய்கின்ற தெரு நாய்கள்
நமது பாதுகாவலர்களாகவும்
தீவிர விசுவாசிகளாகவும் இருப்பதாக 
கட்டியம் கூறுகின்றன.

கால காலமாக
நம் கைவசம்
ஒரேயொரு ரொட்டித்துண்டு இருக்கிறது.

அது
தேவலோக அமிர்தம் போலவும்,
அனுமன் கொணர்ந்த சஞ்சீவிவேர் போலவும்,
நாரதர் பெற்ற ஞானப்பழம் போலவும்,
அவ்வைக் கிழவிக்கு கிடைத்த நெல்லிக்கனி போலவும்
அபூர்வ சக்தி வாய்ந்ததாய் இருக்கிறது.

அந்த அபூர்வ ரொட்டித்துண்டை
தெரு நாய்களுக்கு வீசுகிறோம்.   

வீசியதை விழுங்கிய நாய்கள்
சாகாவரம் பெற்றதும்,
மிகுபசியால் வரம்புமீறி
நம் வட்டிலிலும் வாய் வைக்கின்றன.

விபரீதம்  உணர்ந்து 
விரட்டவென காற்றில்  
வீசிய நம் கைகளை 
வெறியோடு பாய்ந்து கவ்வுகின்றன.

அபயக் குரலெழுப்பும் வேளையில்
தாவி மேலே விழுந்து நம்மை
குப்புறத் தள்ளி குரல்வளையை
கடிக்கத் தொடங்குகின்றன.

ஆப்பசைத்த குரங்கின்
நிலையிலிருந்து நாம்,  
நம்மை நொந்து கொள்ளவா?
நாய்களை நொந்து கொள்ளவா?
                                                                                                                                                      - அகரத்தான்.                                                                                                             

பரமக்குடி துப்பாக்கி சூடு பற்றிய என் கருத்து


                                       மாலை வணக்கம். சாதியையும், மதத்தையும் வைத்து யார் கடை பரப்பினாலும் அதை நாம் வேடிக்கை பார்த்து கொண்டு வாளாதிருக்க முடியாது. முதலில் இந்த மாதிரி பேரணிகளுக்கு அனுமதி வழங்குவதென்பது கூடாது. அது சனநாயக மறுப்பு என சொன்னாலும் அந்த மறுப்பை வரவேற்க வேண்டிய நிலையிலேயே நாம் உள்ளோம். மனிதத்தின் அடிப்படையில் அணி திரண்டு ஒடுக்கப்பட்ட இனத்தின் நியாயங்களை, போர்குரலை பதிவு செய்ய வேண்டுமே அன்றி சாதியத்தின், மதத்தின் பின் நின்று கொண்டு அறைகூவலிடக் கூடாது. அப்புறம், ஆதிக்க சாதி பேரணி, ஒடுக்கப்பட்ட சாதி பேரணி என்று எதையுமே இனம் பிரித்து பார்க்க தேவை இல்லை என்பதே என் கருத்து. சாதியால், மதத்தால் நாம் பிரிந்து கிடைப்பதாலேயே நம் இன விடுதலை இன்னுமொரு நூற்றாண்டுக்கு பின்னுக்குத் தள்ளப் பட்டிருக்கிறது.                                                                           ஒரு கொலைக்கு தண்டனையாக இன்னொரு கொலையை அரசாங்கம் என்ற பெயரில் செய்வதை நாம் வரவேற்க முடியாது. கொலைக்கு தண்டனையாக இன்னொரு கொலை செய்யும் அரச பயங்கரவாதத்தை வேரறுக்க கிளம்பும் எதிர்வினையை நாம் நியாயப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகிவிடும்.                                                     சாதியை வைத்து வயிறு பிழைக்க யார் கிளம்பினாலும், அவன் பின்னால் அணி திரளும் யாரும் உயிரோடு வீடு திரும்ப முடியாது என்ற நிலையை உருவாக்குவதன் மூலம் மட்டுமே இந்த குடிகேடர்களை திருத்த முடியும். அப்பொழுது தான் தான் உண்டு, தன் வேலை உண்டு  என்று குடும்பத்தை கவனிப்பான். இல்லையெனில் தினம் ஒரு மாநாட்டுக்கு சென்று வருவதையே பிழைப்பாக வைத்துக் கொள்வான். மதுப் புட்டியும், கோழி பிரியாணியும், காந்தி படம் பொறித்த காகிதமுமே  ஒரு இனத்தின் தேசிய அடையாளமாவதை சகித்துக் கொள்ளமுடியாது.  உறுதியான நடவடிக்கையை எடுப்பதன் மூலம் மட்டுமே சமூக மாற்றத்தை மேற்கொள்ள முடியும். இன்றைய ஆட்சியாளர்கள் என்ன மன நிலையில் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தினார்களோ தெரியவில்லை. ஆனால், எனது மனநிலை இது தான். 

Blogger Widgets