Monday, October 3, 2011

காந்தி செயந்தி - சில குறிப்புகள்.


சில குறிப்பிட்ட தினங்களில் 
மது விலக்கம் செய்கிற அரசுக்கு 
இருக்கிறதோ இல்லையோ, 
வெட்கக் கேடாக இருக்கிறதெனக்கு. 
-------------------------------------------------------- 

தடை விதித்த தினத்தில்  
மட்டும் தான் 
மது விற்பனையும்  
மது குடிப்பதும்    
களை கட்டுகிறது. 
-------------------------------------- 

புத்தகத்தை 
புத்தகமாக 
வைத்திரு என்றார். 
புத்தகத்தை 
புத்தகமாகவே 
வைத்திருக்கிறேன். 
------------------------------ 

குடிநோயாளிகள் கவனத்திற்கு 
------------------------------------------------ 

காந்தி செயந்தியில் நரகத்திற்கும், 
பிற தினங்களில் சொர்க்கத்திற்கும்  
அரசு மரியாதையோடு 
அனுப்பி வைக்கப் படுவீர். 
------------------------------------------------- 

காந்தி செயந்தி 
----------------------- 

காந்தி குடிக்காதே என்றார்.      
ஆறு மணிக்கு மேல் குடி என்கிறது 
மனசும், அரசும்.   
-------------------------------------------------- 

குடிக்க பணம் தேவையில்லை அப்பு,  
எவனாச்சும் மாட்டுவான். 
பொறுமை தான் தேவை.  
---------------------------------------------------------- 
 
யாரெல்லாம் என் கட்சி?  
வா நண்பா, 
நாம குடிச்சிட்டு சாவோம்.    
அவங்க குடிக்காம சாகட்டும். 
--------------------------------------------- 
  
யாருயா இவங்கள பொறக்க சொன்னது, 
யாருயா இவங்கள சாவ சொன்னது?  
ஏன்யா நம்மள சாவடிக்கிறாங்க?       
நாட்டுல நடக்குற அக்குருமங்கள கண்டு 
அவரு உசுரோட இருந்திருந்தா கூட 
கடைய திறக்கத் தான்யா சொல்லுவாரு. 
---------------------------------------------------------------- 

                                   - அகரத்தான். 

குமுறல்கள்




அணு உலை குறித்த
அச்சம் தேவையில்லை. 
நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும்,
மின் பற்றாக்குறையை சமாளிக்கவும்  
நாடாளுமன்ற,
சட்டமன்ற வளாகங்களில்
அணு உலைகளை நிறுவி 
நாட்டை வளப்படுத்துவோம்.
ஜெய் சங்கர்!
(ஜெய் ஹிந்த் யாருன்னு தெரியாது.
எனக்கு ஜெய் சங்கரை தான் தெரியும்)
-----------------------------------------------------

கந்தன் காய்ச்சியத்தை
குடித்தால் காலமாகிடுவாய். 
கவர்ன்மென்ட் காய்ச்சியத்தை
குடித்தால் வாழ்நாள் நீடித்திடுவாய்.
--------------------------------------------------------

தங்கள் பிறந்த தினத்தில் மட்டுமே 
மதுவிலக்கை அமல்படுத்த,       
எந்த தலைவனும் வலியுறுத்தவில்லை.            

இது சத்தியம்.
---------------------------------------------------------------

அணு உலையால்
உலகுக்கு ஆபத்தில்லையா? 

ஆபத்து தான்...
ஆனால் ஆபத்தில்லை. 

நதிகளில் அளவுகடந்து
மணல் வாருவது, 
மாசுபடுத்துவது
தவறில்லையா?

தவறு தான்...
ஆனால் தவறில்லை.

நெடிதுயர்ந்த மலைகளை
உடைத்து காசு பண்ணுவது
இது இயற்கை மீறலில்லையா?

மீறல் தான்...
ஆனால் மீறலில்லை.  

கனிம வளங்களைக்
கொள்ளையடிக்க வனங்களையும், பழங்குடியினரையும்
காலிசெய்வது தான் வளர்ச்சியா?  

வளர்ச்சியின்மை தான்...
ஆனால் வளர்ச்சி.   
 
நிலத்தடி நீரை 
புட்டிகளில் அடைத்து
வணிகப் பயன்பாட்டிற்கு விற்க
அனுமதிப்பது சரியா?

சரியில்லை தான்...
ஆனால் சரி.

விவசாயத்தை புறக்கணித்து, 
விவசாய நிலங்களை கூறுபோடுவதை
தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது
அரசுக்கு நல்லதாக தெரிகிறதா?  

நல்லதில்லை தான்... 
ஆனால் நல்லது  .

மது விற்பனையால்
அரசுக்கு இத்தனை கோடி
லாபம் என்பது பெருமையா?

சிறுமை தான்..
ஆனால் பெருமை.   

பூர்வகுடிகளை பூண்டோடு அழிக்க
வெட்டுக்கத்தி கொடுப்பது தான்
உனது இறையாண்மையா?

இறையாண்மை இல்லை தான்...
ஆனால் இறையாண்மை.

சொந்த தேசத்து வளத்தை
தானே சுரண்டி கொழுக்க,
மக்களிடம் அங்கீகாரம்
வாங்குவது தேர்தல் சனநாயகமா?

சனநாயகம் இல்லை தான்...
ஆனால் சனநாயகம்.

என்ன மக்கா,
கிருத்திரியம் பிடிக்குதா? 

நல்லா புரிஞ்சுக்க,

எதுவுமே நீ செய்தால் தான் தவறு. 
அரசாங்கம் செய்தால் சரி தான்.   
-------------------------------------------------------- 

                                  - அகரத்தான். 

Saturday, October 1, 2011

குறும் பூக்கள்



காதல் பைத்தியங்களின் உளறல்களை
உடனிருந்து கேட்பதைக் காட்டிலும்
பெருந்துன்பம் உலகில்
வேறிருப்பதாய் தெரியவில்லை.
-------------------------------------------------------

நம் கைகளுக்கு மாறியவுடன்
வெடிக்கும் பலூன்களையும்,
உடையும் பொம்மைகளையும்
திருவிழாக் கடை வியாபாரிகள்
எங்கிருந்து தான் பெறுகிறார்கள்?
-------------------------------------------------------

நம் முதிராப் பருவத்தில்
முகிழ்த்த முதல் காதல்
மழைக் கால மேகமாய்
கலைந்ததால் தான்,

உனக்கு உன் கணவனும்,
எனக்கு என் மனைவியும்,  
நமக்கு நம் பிள்ளைகளும்,
இந்த துயரற்ற வாழ்வும்
வரமாய் வாய்த்திருக்கிறது.

காதல் கை கூடியிருந்தால்
நம் துயரம்
சொல்லில் அடங்காததாய்
இருந்திருக்கும்.
----------------------------------------------------------
                                  - அகரத்தான்.   
Blogger Widgets