சீனப் பெருஞ்சுவரை விடவும்
நீண்ட சாதனைப் பட்டியலுக்கு சொந்தக்காரனை
தலைமேல் வைத்து கூத்தாடக் காத்திருக்கும்
மக்கள் மந்தைகளை எதிர்கொள்கையில்
மகேசர்கள் பாதுகாப்பை
பன்மடங்கு பலப்படுத்துகிறார்கள். --------------------------------------------------------------------------- மக்களின் தலைமுறைக் கோபத்திலிருந்து சிறு சேதமின்றி மீண்டு வந்ததை வைத்தே அந்த மாநில மாநாடு வெற்றி என்கிறான். ------------------------------------------------------------------------ அரசு மருத்துவமனைகள் பிறப்பையும், இறப்பையும் உறுதி செய்கின்றன. ----------------------------------------------- ஒருமுறை கடந்து செல்ல வேகத்தடை உடைத்து அவனுக்கு வழி செய்பவன் அன்றைய பொழுதேனும் விபத்து நடக்காதென உத்திரவாதம் அளித்தால் ஆசுவாசம் கொள்ளலாம். ---------------------------------------------------- ஐந்து கோடி கொடுத்தால் நீயும் ஆதினம் ஆகலாம். முடியும் வச்சுக்கலாம். முடியரசியையும் வச்சுக்கலாம். ------------------------------------------------------ சோற்றுப் பொட்டலத்திற்காக சிலநூறு பேரும், புட்டிகளிலிருந்து கண் சிமிட்டும் அரசு மதுவை அருந்த சிலநூறு பெரும், கையூட்டு பணத்தை கைக்கொள்ள சிலநூறு பேரும், கழுதை மூக்கின் நிறம் காண சில நூறு பெரும் என கூடியதில் மண்டல மாநாடு களை கட்டியது. --------------------------------------------------------------------------------------- கடவுள் இல்லை. அவ்வளவு தான். வேறொன்றுமில்லை. ------------------------------------ ஒரு நாள் விடுமுறைக்குக் கூட உதவாத கடவுளைக் கட்டிக் கொண்டு நீயே அழு. எனக்கொன்றும் அவசியமில்லை. --------------------------------------------------------------------- ஒரு இலட்சம் கையூட்டு பெற்று ஊழலை சிறுமைப் படுத்தியவனுக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல். எண்ணவியலா கோடிகளை கையூட்டு பெற்று ஊழலைப் பெருமைப் படுத்தியவனுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு. வாழ்க சனநாயகம்! ------------------------------------------------------------------------------ எல்லா நதிகளையும் வனங்களையும் விலை நிலங்களையும் தின்று செரித்தவன் இனி, கல்லைத் தான் மண்ணைத் தான் தின்னத்தான் வேண்டும். ------------------------------------------ சனநாயக நாட்டில் கொலை செய்வது கூடவா குற்றம்? நீங்களே சொல்லுங்கள். ------------------------------------------------- வாழ்தலுக்கான கணங்களையும் மனங்களையும் சேமித்து வைக்காதவன் பணங்களை மட்டும் சேமித்து வைத்திருக்கும் அபத்தத்தை என்னென்று சொல்ல? ----------------------------------------------------------- கள்ள சாராயத்தை ஒழித்த நல்லவர்கள் நல்ல சாராயத்தை காய்ச்சி விற்கிறார்கள். வாங்கி ஊற்றிக் கொள்ளுங்கள். ---------------------------------------------------------------------- பயணச் சீட்டெடுக்க தயங்கி குழந்தைகளின் வயதை குறைத்துச் சொன்ன தாய்மார்களை தங்களின் உண்மை வயதை உரக்கச் சொல்லி திக்கு முக்காட வைக்கின்றன குழந்தைகள். -----------------------------------------------------------------------------
--------------------------------
பெரு மதிப்புற்குரியோரே!
நான் பேசுவதும் எழுதுவதும்
உங்களுக்காகத் தானன்றி
ஒருபோதும் எனக்கில்லை என்பதால்
நான் வலியுறுத்தும்
எதையும் பின்பற்றுவதில்லை.
----------------------------------------------------------
மலையாளியின் உயிருக்கு ஒரு கோடி பணமும்,
தமிழன் உயிருக்கு ஒரு கோடித் துணியும்,
சீக்கியனின் மயிரைக் காக்கவும்,
தமிழனின் உயிரைப் போக்கவும் வலியுறுத்துபவன்
அதிகாரத்தில் நீடிக்கிற வினோதம் தான்
உலகின் எட்டாவது அதிசயம் என்பேன். -------------------------------------------------------------------------------- அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்தாமல் வருமானத்துக்குப் புறம்பாக சொத்துக் குவித்தால் தவறில்லை. --------------------------------------------------------------------------
நூறுநாள் வேலை வாய்ப்புத் திட்டம்
------------------------------------------------------------
மன்னர்களும், வெள்ளையர்களும், சமீன்களும், மக்கள் பிரதிநிதிகளும் என்ற நீள்பட்டியலில் குடிமக்களுக்கும் அதிகாரப் பரவலாக்கம் நிகழ்ந்திருக்கிறது ஊழலில் பங்கேற்க! வாழ்க சனநாயகம்! ------------------------------------------------------------------------------
-------------
உன் நண்பன் யாரெனச் சொல்! உன்னை யாரென்று சொல்கிறேன் என்றவர் இனக் கொலையாளியை நண்பனெனும் கற்பூரம் சுமக்கும் கழுதையை அடையாளம் காட்டப் போவதில்லை. ------------------------------------------------------------------- எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒருவன் யார் ஈன்ற குட்டியையோ கவர்ந்து செல்ல வியூகம் வகுக்கிறான். ------------------------------------------------------------ அதிகாரத்தின் அன்றாட அதிர்ச்சிகளால் உறைந்தவர்கள் ஒன்று சேர்ந்து அளித்த அதிர்ச்சி வைத்தியத்தில் நாற்காலிகள் ஆட்டம் கண்டன. --------------------------------------------------- ஓடியவளை எண்ணி வியந்த காலம் நேற்றிருந்தது. ஓடாதவளை எண்ணி வியக்கின்ற காலம் இன்றிருக்கிறது. ------------------------------------------------------ அலைக்கற்றை, விண்வெளி, ஆயுதபேரம், நிலக்கரி, சவப்பெட்டி, மட்டைப் பந்து ஊழலென குட்டிப் பூதங்களை ஈன்ற பெரும்பூதம் வேடிக்கைப் ஆர்த்துக் கொண்டிருந்த அலாவுதீங்களை சீசாவுக்குள் அடைத்து விட்டது. --------------------------------------------------------- இராசா வீட்டுக் கன்றுக்குட்டி சொந்தக் காணியிலும் மேயலாம். ஊரார் காணியிலும் மேயலாம். கட்டிப்போட எத்தனித்த நீ அதிகாரத்தின் கருணையிருந்தால் உயிர் தப்பிப் பிழைக்கலாம். பிரதி கடனாக அரண்மனை உன்னிடமிருந்து எதிர்பார்ப்பது எல்லாம் உன் நாக்கு உன் சொல் உன் குரல்வளை உன் முதுகெலும்பு உன் மன்னிப்பு உன் ஒப்புக்கொடுத்தல் உன் சரணாகதி! யோசிக்காதே! ஒருமுறை விழுந்து எழுந்தால் எல்லாம் சரியாகி விடும். ---------------------------------------------
Blogger Widgets