Wednesday, October 12, 2011

சுயமரியாதை


சுயமரியாதைக்காரர்கள்   
கௌரவப் பிச்சைக்கு 
மக்களைக் கையேந்த வைத்து  
சுயமரியாதையில்லாமல் 
வாழப் பழக்குகிறார்கள்.  
-------------------------------------------------------------- 

நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டம்

 ----------------------------------------------------------

கும்பலாகக் கூடையைப் போட்டு 
குப்புறத் தூங்கும் திட்டத்தால் 
ஏரிகளும் குளங்களும் 
மக்கள் வெள்ளத்தில் நிரம்பி, 
கோவனாண்டிகளின் குடிகள் மூழ்கின.   
----------------------------------------------------- 

இறையாண்மை

 --------------------------------------------- 

கவனம் மக்களே! 
இறையாண்மைக்குப் பிறந்த 
அரசியல் வியாதிகள் 
தேச பக்தியின் அகோரப் பசிக்கு 
உங்களை இரையாக்கும் 
வாய்ப்பிருக்கிறது.  
-----------------------------------------------    
  
                               - அகரத்தான். 

அகரத்தான் உளறல்கள்

எல்லோருக்கும்
உலகத்திற்குள் வீடும்,
எனக்கு மட்டும்
வீட்டிற்குள் உலகமும்.
------------------------------------

சாப்பிட்டே சாகிறான்.
தூங்கியே சாகிறான்.
விழித்தே சாகிறான். 
குடித்தே சாகிறான்.
நான் இலக்கியம் படித்தே
சாகச் சொல்கிறேன்.
---------------------------------------

எப்போதும் செய்வதாக சொல்லியே
எதுவும் செய்யாமல் சாகடிப்பீர்.
இம்முறை செய்வதாகச் சொன்ன 
இலவசத் திட்டங்களை 
செய்ய வேண்டாம் என்கிறோம்.
நாங்கள் வாழ்ந்துவிட்டு போகிறோம்.
----------------------------------------------------------

நல்லக் காதலர்களை விடவும்  
கள்ளக் காதலர்கள் தாம்
உலகைத் தூங்க வைத்து
முழு திருப்தியடைகிறார்கள்.
-------------------------------------------------

நாட்டுப் பற்று அதிகமிருப்போர்
சம்பளம் பெறாமல்
நாட்டுக்கு உழைக்கக் கடவீராக.
-------------------------------------------------
அவசரப் பயணத்தின் போது தான்
பேருந்து ஓட்டுனர்கள்
நமக்கு நடை வண்டி நாட்களை
நினைவுக்கு படுத்துகிறார்கள்.
---------------------------------------------------

மும்மாரியில் நனைந்து 
கட்சி அலுவலகங்களில்
புரளும் மலைப் பாம்புகள்,
உணர்வதில்லை தாம்
குடிநோயாளியாகியிருப்பதை.
-------------------------------------------------     

                               - அகரத்தான்.

Tuesday, October 11, 2011

அகரத்தானின் அகம்


தேர்தல் படுத்தும் பாடு

 --------------------------------------------------------------- 

அப்பா இறந்தபோது 
துட்டி கேட்க வராதவர்கள் 

அம்மா மனச்சிதைவிலிருந்தபோது   
ஆறுதல் சொல்லாதவர்கள்

விபத்தில் காயமுற்றபோது 
நலம் விசாரிக்காதவர்கள் 

நம் காலுக்கு செருப்பாய் 
உழைக்க மன்றாடுவது 
      
தேசபக்தியன்றி வேறில்லை.            
------------------------------------------------------ 





சனநாயகப் படுகொலை

 ------------------------------------------------------------------- 

எவ்வளவு காவல்கள்? 
எவ்வளவு இராணுவப் படைகள்? 
எவ்வளவு விழிப்புணர்வு பிரச்சாரங்கள்? 
எவ்வளவு கண்காணிப்புகள்? 

அவ்வளவையும் மீறி  
இவ்வளவு திருடர்கள். 
-------------------------------------------------------------- 




    

ஆறுதல் கடைகள் 

--------------------------------------------------- 

கண்ணாடி சீசாக்களில் 
அடைபட்டிருக்கும் 
அலாவுதீனின் பூதங்கள் 
வாடிக்கையாளர்களின் 
மனச் சிக்கல்களை    
ஆற்றுப் படுத்துகின்றன. 
அரசு கடைகள் இப்போது 
ஆறுதல் கடைகளாகி விட்டன.
----------------------------------------------- 






     

நாடு நலம் பெற...

 --------------------------------------------------- 

மக்கள் நலத் திட்டங்களுக்கு 
அரசின் நிதியாதாரம் பெருக 
மணல் விற்கலாம். 
மது விற்கலாம். 
கஞ்சா விற்கலாம். 
அபின் விற்கலாம். 
எராயின் விற்கலாம். 
பிரவுன் சுகர்  விற்கலாம்.   
------------------------------------------------ 

காசே தான் கடவுளடா...

 -------------------------------------------------------------------- 

கடவுள் தரிசனமென்று   
கல்லாக் கட்டுகிறார்கள் 
கடவுளின் முகவர்கள். 
ஐநூறு ரூபா முன் வரிசையிலும்     
இருபது ரூபா பின் வரிசையிலும். 
---------------------------------------------------------- 




ஓடு சுமக்கும் நத்தை 
---------------------------------------------------------- 

வேலைக்கு மலைத்தவன் 
வேலை செய்தான்.    
வேளா வேளைக்கு 
உணவுத் தேவை தீர்க்க 
ஆண் மகவு பிறந்தது.    
------------------------------------------- 






கடவுளின் மொழி 
------------------------------------------------- 

மகிழ்ச்சிக்கும் துயருக்கும் 
மொழி தேவையில்லை.  
கடவுளிடம் முறையிட மட்டும் 
சமசுகிருதம் இருந்தால் போதுமானது.  
-----------------------------------------------------------  

                         - அகரத்தான்.       
Blogger Widgets