Saturday, June 30, 2012

கண்களை விற்று சித்திரம் வாங்கியவன்

 -----------------------------------------------------------------------------------------------------------



பெரிய மீன்களை விட்டெரிந்து
பெரும் முதலைகளை வலைகளுக்குள் வீழ்த்தியவன்
அதிகாரத்தின் மந்திரக்கோலை
அபகரித்து ஆட்டிப் படைத்தான்.
சரசுவதியும் லட்சுமியும்
அவர்கள் சொன்னதைச் சொல்லும்
கிளிப் பிள்ளைகளாகினர்.
அவர்கள் வீசும் ஒரு சில நெல்மணிகளுக்காகவும்
சின்னஞ்சிறிய பழத் துண்டுகளுக்காகவும்
அவர்களை வலம் வரப் பழகியிருந்தனர்.
இப்போதெல்லாம்
அவர்கள் முன்பைப் போலில்லை.
கூண்டைத் திறந்தே வைத்தாலும்
பறக்க எத்தனிப்பதில்லை.
அடிமைச் சகவாழ்வை அப்படியே ஏற்றிருந்தனர்.
கண்கெட்ட பின்னே சூரிய வணக்கம் போல்
காலம் கை மீறிய வேளை
மக்கள் நலன் மண்ணாங்கட்டியென
அரசன் அங்குசம் எடுத்தால்,

நவீன காமராசர்களிடம்
தங்கள் குழந்தைகளைப் பணம் கொடுத்து விற்றவர்கள்
முதலைகளின் வாக்கு வங்கியில்
கை வைக்கும் துர்சொப்பனம் வழங்குவர்.
எல்லாம் உன் கண் முன் தான் பறிபோயிற்று.
பார்வையாளன் வரிசையிலமர்ந்து
வாய் பிளந்து வேடிக்கைப் பார்த்தது நீ தான்.
அவர்களை மட்டும் கூண்டிலேற்றி நீ தப்பவியலாது.
செவிகளை விற்று அலைபேசி வாங்கிய நீ
பேசுவதற்கு ஒன்றுமில்லை.
போர்க்கால அடிப்படையில்
நீ செய்ய வேண்டியது எல்லாம் ஒன்று தான்.
அது
எல்லாவற்றையும் பொத்திக் கிடப்பதே!


 -








Thursday, June 28, 2012

அசுர பூதம் ...



நீ புழுதியில் புரண்டெழுந்த
உன் புண்ணிய பூமியின் வீதிகளில்
பாலாறும், தேனாறும்
உன் படுக்கையறையில் கலைப் பொருட்களும்
உன் படுக்கைவிரிப்பில் பூ வேலைப்பாடுகளும்
உன் அறையெங்கும் வியாபித்திருக்க
உயர்ரக வாசனைத் திரவியங்களும்
குளிர்பதனியில் பாதுகாக்கப்பட்ட
உயர்தர உணவுப்பொருட்களும்,
உயிர்காக்கும் மருந்துப் பொருட்களும்
உணவருந்த தங்க வட்டில்களும்
குடி நீரருந்த வெள்ளிக் குவளைகளும்
நித்தமும் சித்தம் மகிழ
சுவற்றை அலங்கரிக்கும் காணொலியும்
கூடவே
உன் அண்டை வீட்டானை அச்சுறுத்தவென
உன் தலையணைக்கடியில்
அவன் ஒழித் து வைத்திருக்கும் வெடிகுண்டுகளும்
வெடிக்கும் குணமுடைய குண்டுகள்
காந்தியம் பேசிக் கொண்டிராதென
உனதறையின் கதவு தட்டி
எச்சரிக்கிறான் உதயகுமாரன்.
கொடும் சட்டத்தின் வழி
அடக்குமுறை ஏவுகிறான் சதிகாரன்.
வளர்ச்சி எனும் அசுர பூதத்தின்
அகோர பசிக்கு இரையாகும்
எம் சனங்களின் எதிர்காலத்தை
கணக்கில் கொள்ளாது
அவன் அவிழ்த்து விட்ட
புளுகு மூட்டைகளை
உண்மையென நம்பி
கனவுகளுடன் கை கோர்த்து
கண்ணுறங்கும் நீ
நாளைய உலகம் உனதென்கிறாய்  .
காலன் தன்னுடைய தென்கிறான் .
விடிந்தால் தான் தெரியும் யாருடையதென்று.





- அகரத்தான் 



















Wednesday, June 20, 2012

சுதந்திர நாட்டின் அடிமை....

 ------------------------------------------------ 





சிறந்த அடிமைக்கான தேர்வில்
வெற்றிக்கனி பறித்தவன்
ரொட்டித் துண்டைக் கவ்வியவாறு
விசுவாசத்திற்கு வாலாட்டுகிறான்.

எசமானனைத் தவிர எல்லோரையும் கடிக்கிறான்.
உணவுக்காக மட்டும் வாயைத் திறக்கிறான்.
நாற்காலியில் அமர வைத்தோனின் பெருவிருப்பை
ஒரு பாலியல் தொழிலாளியைப் போல்
நிறைவேற்றுவதில் திருப்தி கொள்கிறான்.

அதிகாரத்திலிருக்கும் அயோக்கியன்
நீட்டும் கோப்புகளில் கேள்வியின்றி
கையொப்பம் செய்து முறுவளிக்கிறான்.
மக்கள் விரோத செயல்களை அங்கீகரிக்கிறான் .

ரோம் பற்றிஎரிந்தபோது
பிடில் வாசித்த நீரோ மன்னனைப்போல்
கடும் நெருக்கடியில்
சனங்கள் சிக்கித் தவித்தபோதெல்லாம்
இன்ப சுற்றுலாவுக்காக விமானம் ஏறுகிறான்.

அவன் உயிரோடிருப்பதை
ஊடகங்களின் வழி அறியும்போது
பெயர் உச்சரிக்கவியலா தேசத்தின்
அதிபரோடு கை குலுக்குகிறான்.

இனப் படுகொலையாளனின் ரத்த விருந்தில்
சிறப்பு விருந்தினனாக கலந்து
அவனுக்கு நற்சான்றிதழ் வழங்குகிறான்.

சிறந்த அடிமையென மகுடம் சூடி
பிறவிப் பயனடையும் அவ் அடிவருடி
சனங்கள் வலியில்லாமல் சாக
சயனைடு வழங்குகிறான்.

வரலாற்றின் கறைபடிந்த பக்கத்தில்
அவ் அடிமையின் பெயர் பதியும்போது
அவன் கைகளில் திணிக்கப்பட்டிருந்த
சனநாயகக் கட்டாரி  
சனங்களின் சிரங்களை குறிவைத்து
வேகமாகக் கீழிறங்கிக் கொண்டிருக்கிறது.
-------------------------------------------------------------- 

















Blogger Widgets