Friday, July 29, 2011

கேள்விகளால் ஒரு வேள்வி.


புதைகுழிகளில்
ஓடைகளில்
கால்வாய்களில்
கிணறுகளில்
மலக்குழிகளில்
எம் இனத்தின்
எலும்புக்குவியல்கள்.
கேட்கத் தோன்றவில்லையா?


சத்துணவு இல்லாமல்
மருத்துவ வசதி இல்லாமல்
உயிர்காக்கும் மருந்துகள் இல்லாமல்
பொருளாதாரத் தடை அமலில்
எம் இனத்தின் பிணக்குவியல்கள்.
கேட்கத் தோன்றவில்லையா?


இருளின் ஆழ்கடலுள்
வெடிசுமந்து ஊடுருவி
போர்க்கப்பலை மூழ்கடித்து
நாங்கள் சிதறியபோது
கேட்கத் தோன்றவில்லையா?


ஓமக்காலை மாணவி கிருஷாந்தி
இராணுவச் சோதனைச் சாவடியில்
பதினோரு சிங்களக் காடையர்களால்
சிதைக்கப்பட்டு
செம்மணியில் புதைக்கப்பட்டபோது
கேட்கத் தோன்றவில்லையா?


இராணுவ காடையன் லலித்கவா
தமிழ்ப் பெண்ணொருத்தியை
அலங்கோலமாக்கி
அவளையும்,
அவள் கணவனையும்
மண்வெட்டியால் அடித்தே
கொன்று புதைத்தபோது
கேட்கத் தோன்றவில்லையா?


விஜிகலா காவல் நிலையத்தினுள்ளும்
சிவமணி காவல் வாகனத்தினுள்ளும்  
அம்மணமாக்கி,
கை, கால்களைக் கட்டி
அலங்கோலமாக்கி 
தலைகீழாகத் தொங்கவிட்டு
இரும்புக் கம்பியாலும்
சாட்டையாலும் விளாசியவர்களைக்
கேட்கத் தோன்றவில்லையா?      


வீரபத்திரர் கோவிலடி இந்திராவை
ஆறு வயது மகன் முன்னே
ஒரு மிருகம் வாய் பொத்த
மறு மிருகம் வன்புணர்ந்தபோது
கேட்கத் தோன்றவில்லையா?


காங்கேசன்துறையில்
தமிழனாகப் பிறந்த குற்றத்திற்காக
கணவனின் கண்முன்
மனைவியை,
குழந்தையை
உயிரோடு எரியூட்டியபோது
கேட்கத் தோன்றவில்லையா?


வரிசையாக நிறுத்தி
சுட்டுக் கொன்றதைக் கண்டு
அழுதரற்றிய தமிழனுக்கு
அழக்கூட
அனுமதி மறுக்கப் பட்டபோது
கேட்கத் தோன்றவில்லையா?


யாழ் இடப்பெயர்வில்
நிற்கக்கூட நேரமின்றி
எல்லோரும் ஓடிக் கொண்டிருக்க
விமான குண்டு மழைக்கும்
கொட்டும் மழைக்குமிடையே
இருபுறமும் மிதிவண்டிகளை நிறுத்தி
பேறு முடிந்த சில கணங்களில்
குழந்தையோடு
உயிர் காக்கும் ஓட்டத்தை
அவள் தொடர்ந்தபோது
கேட்கத் தோன்றவில்லையா?


நல்லூர் கந்தசாமிக் கோவிலருகே
காந்திய வழியில்
கோரிக்கைகளை முன் வைத்து
உண்ணா நோன்பிருந்த திலீபனை
உண்டு தீர்த்த
கூட்டுத் துரோகங்களை
கேட்கத் தோன்றவில்லையா?


அமைதி ஒப்பந்தக் காலத்தில்
நிராயுதபாணி தமிழீழ தளபதிகள்
பன்னிருவரை கைதுசெய்து
சிங்கள சித்திரவதைக்கூடமனுப்பி
குப்பி கடிக்க வைத்தவனை
கேட்கத் தோன்றவில்லையா?


புலித்தளபதி ரவீந்திரனைப்
பெற்ற மாதரசியை
சிங்கள இராணுவக் காடையர்கள்
கண்ட துண்டமாக
வெட்டி வீசியபோது
கேட்கத் தோன்றவில்லையா?


பெண் போராளியின் தம்பியை
மரத்தில் கட்டிவைத்து
காலடியில் சர்க்கரையைக் கொட்டி
எறும்புகளுக்கு விருந்தாக்கிய
இந்திய சனநாயகப் படையைக்
கேட்கத் தோன்றவில்லையா?


மடு தேவாலயத்தில்
தஞ்சம் புகுந்த தமிழர்களை
விமான குண்டு வீச்சில்
ரத்தச் சகதியாக்கியவர்களை
கேட்கத் தோன்றவில்லையா?


செஞ்சோலையில் பூத்துக் குலுங்கிய
அறுபது இளந்தளிர்களை
விமான குண்டுவீச்சில் சிதறடித்து
செஞ்சோலையை
செம்மணியாக்கியவர்களை
கேட்கத் தோன்றவில்லையா?


எம் சமாதான முகம்
தமிழ்ச் செல்வத்தை
குண்டு வீச்சில்
குலைத்து போட்டபோது
கேட்கத் தோன்றவில்லையா?


காந்திதேசக் காட்டுமிராண்டிகள்
தந்தையின் கண்முன் மகளையும்
மகனின் கண்முன் தாயையும்
வல்லுறவுக்குட்படுத்தி
உயிர் துவாரத்தினுள்
நாட்டுவெடிகளைத் திணித்து
வெடிக்கச் செய்தபோது
கேட்கத் தோன்றவில்லையா?


எம் சகோதரி இசைப்பிரியாவை
துகிலுரித்து வன்புணர்ந்து
கொன்று வீதியில் வீசியவர்களை
கேட்கத் தோன்றவில்லையா?


போர்க் களத்தில்
களச் சாவடைந்த
போராளிச் சகோதரியின்
இறந்த உடலைப் புணர்ந்து
கொக்கரித்தவனைக்
கேட்கத் தோன்றவில்லையா?


இறுதிப் போர்க்களத்தில்
எதிரியிடம் சிக்குண்ட தளபதியை
சூழ்ந்து நின்று
சித்திரவதை செய்து
கொன்றழித்தவர்களை
கேட்கத் தோன்றவில்லையா?


மூன்று தசாப்தங்களுக்கு மேல்
கடல் அளந்து
இனம் காத்த சூசையின்
மனைவி, மகளை
எதிரி சிறைபிடித்தபோது
கேட்கத் தோன்றவில்லையா?


சித்தாந்தப் புலி
அன்ரன் பாலசிங்கம்
சிறுநீரகச் சிகிச்சைக்கு
தமிழகம் வரவேற்றபோது
தடுத்தவர்களை
கேட்கத் தோன்றவில்லையா?


தமிழீழதேசியக் கவி
புதுவை இரத்தினத்துரையை
எதிரி என்ன செய்திருப்பானோ?
கேட்கத் தோன்றவில்லையா?


தளபதி ரமேஷை
சித்திரவதைக் கூடத்தில்
அணுவணுவாக கொன்றழித்தபோது
கேட்கத் தோன்றவில்லையா?


வெள்ளைக் கோடி சுமந்து
வெளி வந்தவர்களை
சிவப்பாக்கிக் களித்தவர்களை
கேட்கத் தோன்றவில்லையா?


தமிழீழத் தாய்
பார்வதி அம்மாள்
மருத்துவச் சிகிச்சைக்காக
தமிழகம் வந்தபோது
தென்னகத்து சிங்களனாகி
விமான நிலையத்திலேயே
விரட்டியடித்தாயே,
கேட்கத் தோன்றவில்லையா?


தன்மானத்தோடு
தன் இனம் வாழ
தமிழீழக் கனவு சுமந்து
தமிழீழம் சமைத்த
தேசியத் தலைவனின் குடும்பம்
நிர்மூலமாக்கபட்டபோது
கேட்கத் தோன்றவில்லையா?


இரண்டு இலட்சம் குடிகளின்
உயிர் குடித்ததை,
குற்ற உணர்வு ஏதுமற்று
வெற்றியெனக் கொண்டாடுபவனை
கேட்க தோன்றவில்லையா?


மேனன்களும்
முகர்சிக்களும்
இந்திய தேயிலையின்
சுவையைக் காட்டிலும்
தமிழ் மீனவனின்,
தமிழீழவனின்
இரத்தம் சுவைப்பதாக  
யுத்த தேச ரத்த விருந்தில்
கலந்துகொள்ளும்போது
கேட்கத் தோன்றவில்லையா?


புதைக்கப் பட்டவர்களும்,
சிதைக்கப் பட்டவர்களும்,
எரிக்கப் பட்டவர்களும்
எழுந்து வந்து கேட்கிறோம்.


சொல்!


உனக்கு 
ஒரு மகளிருந்து,
ஒரு மகனிருந்து

செய்யாத தவறுக்கு
தண்டனை அனுபவித்தால்
உன் மனம்
என்ன பாடுபடும்?

       
                               - அகரத்தான்.

No comments:

Blogger Widgets