Tuesday, September 27, 2011

அகரத்தான் குறும் பூக்கள்

குழந்தைகளோடு
இல்லத்திலிருக்கையில் தவழவும்,
வெளியேறுகையில் நடக்கவும்
கற்று வைத்திருக்கிறேன்.
-------------------------------------------------------

இல்லத்தில் நிறைந்திருக்கும்
வண்ணம் தோய்ந்த
சுவர்ச் சித்திரங்களும்,
குழந்தை எழுத்துக்களும்,
கரிக் கோடுகளும்,
கை, காலுடைந்த பொம்மைகளும்
பால்யத்தின் கதவை
திறந்து விடுகின்றன.
------------------------------------------------------

என்னை வரைந்து
கை, கால் உடைத்து
மகிழ்கிறான் பெரியவன்.

கன்னத்தில்
முத்தம் பதித்து
நெகிழ்கிறாள் சிறியவள்.

வீட்டிற்குள் நுழைந்ததும்
என்ன குறை சொல்வானோ,  
கவலையடைகிறாள் மன்னவள்.

மாதச் சம்பளம் வாங்கிய கையில்
எல்லோருக்கும்  
என்ன வாங்கி வருவதென
அடுமனை வாசலில்
குழப்பத்தில் நிற்கிறேன் நான்.
------------------------------------------------------

                      - அகரத்தான். 

தீராத விளையாட்டுப் பிள்ளை

பள்ளி விளையாட்டு மைதானங்கள் 
எல்லா காலங்களிலும்
எல்லோருடனும் அலுக்காமல் 
விளையாடிக் கொண்டிருக்கின்றன.  
நாம் தாம் களைத்து விடுகிறோம்.
                                                            - அகரத்தான்.   

Monday, September 26, 2011

குறும் பாசன் லோக்பால் மசோதாவை
சனங்களை மட்டும்
தண்டிப்பதாக திருத்தினால்
நாளையே நிறைவேற்றி விடலாம்.                                - அகரத்தான்

Sunday, September 25, 2011

அர்ப்பணிப்பு

அர்ப்பணிப்பு 
-----------------------------------
இல்லாதவர் என்று எவரும்
இல்லாத தேசம் செய்யவே, 
கூடங்குளத்தில் அணு உலையை
அர்ப்பணிக்க வேண்டியதாயிற்று.
வேறொன்றும் நோக்கமில்லை.
நம்பக் கடவீராக!   
----------------------------------------------------

இல்லம்
----------------------

நம் ஒவ்வொருவருக்கும் 
மனப் பிறழ்வு இருக்கக்கூடும்.
இல்லையெனில்,
ஒரே வீட்டிற்குள்
இவ்வளவு காலம்
நாம் சேர்ந்து
வாழ்ந்து கொண்டிருக்க முடியாது.
--------------------------------------------------------

மேய்ப்பன் ----------------------------

பணத்தைக் கட்டி
மேய்க்க முடியாதென்பதால், 
இவர்கள்
ஆடு, மாடுகளை கட்டி
மேய்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

அகரத்தான் கவிதைகள்-2

எரியும் வீட்டில்...
------------------------------------------------ 
கொலை நிகழ்ந்த வீட்டில்
தடயம் தேடுகிறான் காவலன்.
புகைப்படம் எடுக்கிறான் பத்திரிக்கையாளன்.
ஓட்டு பொறுக்குகிறான் அரசியல்வியாதி.
கண்ணீர் விடுகிறான் கடன்காரன்.
சரக்கு கேட்கிறான் குடிகாரன்.
கவிதை தேடும் சைத்தானை
கட்டிவைத்து உதைக்கிறேன் நான்.
----------------------------------------------------------------------

குழந்தைகளிடம்
புத்திசாலித்தனம் சுடர்விடுகையில்
அவளைப் போலிருப்பதாகவும்,
அசட்டுத்தனம் வெளிப்படுகையில்
என்னைப் போலிருப்பதாகவும்
எப்போதும் சொல்லித் திரிவாள்
என் வீட்டுப் பத்தினி.
--------------------------------------------------------

இன்றோ நாளையோ
திருந்தக்கூடும் என்ற நம்பிக்கை
முழுமையாக பொய்த்தபின்
தண்ணீர் தெளித்தாயிற்று.

மனசை
வேறென்ன தான் செய்ய?
வேறெதைக் கொண்டு தான் அடிக்க?  
--------------------------------------------------------------

எல்லோரும் வேண்டுமெனக்கு.
பகிர்ந்து கொள்ளும் பக்குவம்
யாருக்குமில்லை.
இருக்கும் ஒரு வாக்கை
யாருக்கென தருவேன்?
யாரையென பகைப்பேன்?

-------------------------------------------------

மனித உடலுக்கு
மிருக முகம் பொருத்தி
கடவுள் என்கிறாய்.
கடவுளைப்போல்
குழந்தை பிறந்தால்
ஏன் அலறிப் புடைக்கிறாய்?
-------------------------------------------

தற்கொலைக்கு முயற்சித்தவனை
செருப்பாலடிக்கச் சென்றவன்
சபை நாகரிகம் கருதி
வார்த்தையாலடித்து வந்தேன்.
பேசாமல் செருப்பாலடித்திருக்கலாம்.
மனசுக்காவது ஆறுதலா இருந்திருக்கும்.
----------------------------------------------------------------

குடிக்கு நான் அடிமையில்லை.
எப்போதென்றாலும் நிறுத்த இயலும்.
ஆனால் எப்போதென்பதை
மாதக் கடைசியில் தான்
முடிவு செய்வேன்.
அதை நிறுத்த இயலாது என்னால்.
------------------------------------------------------

                                         - அகரத்தான். 

அகரத்தான் கவிதைகள்

காத்திருப்பு
-----------------------------------------------
சொத்துப் பிரச்சினைக்காக
மூன்று கொலைகள் நிகழ்ந்த
ஓட்டுப்புரை வீட்டின்
மாமரக் கொல்லையில்
விளையாட்டை பாதியில் நிறுத்தி
உயிர் தப்பியோடிய
குழந்தையின் வரவுக்காக
காலடிச் சுவடுகளைப் பார்த்தவாறு
காத்திருக்கின்றன மரப்பாச்சிகள்.
-------------------------------------------------------------------------------------
வாழ்தலின் நிமித்தம்
--------------------------------

காந்திகள் வன்மம் கொண்டு
கையில் தூக்குக் கயிற்றோடு
திரிவதால்

வேறு வழியில்லை தோழா!

தலைமுறைக் கோபம் தேக்கி
சொக்கப் பனைக் கொளுத்து!

தூக்குக் கயிற்றையும்,
மகாத்மா என்ற வெற்றுப் பட்டத்தையும்,
சனநாயகம் என்ற கறிக்குதவாச் சொல்லையும்,
இன்ன பிற இத்தியாதிக்களையும்.
-----------------------------------------------------------------------------
பிள்ளையார் சதுர்த்தி
-----------------------------------------------------------
பிள்ளையாரை
சிறுமைப் படுத்தி விட்டதாக 
கூப்பாடு போட்ட
சிறுமூளை பாதித்த ஓருடல்
பிரச்சினையின் தோளில்  
நின்று கொண்டிருந்தது.
-----------------------------------------------------------
பார்வதிக்குடி
------------------------------------
சாதியப் பேரணி.
கலவரம்.
துப்பாக்கிச் சூடு.
சில மது புட்டிகள் உடைந்தன.
குறிப்பிட வேறொன்றுமில்லை.  

--------------------------------------------------
விசித்திரங்கள் 
-----------------------------------------

உடைபடும் ஓசை.
வீட்டிற்குள் சண்டையையும்,
காயலான்கடையில் சந்தோசத்தையும்
ஒருங்கே கொண்டு வருகிறது.
-------------------------------------------------------------

கூத்து மேடை.
ராசா குடிகளுக்கும், 
குடிகள் ராசாவுக்கும்
படியளக்கின்றனர்.
---------------------------------

ஆக்கிரமிப்பு அகற்றம்.
கோயில் இடிபாடுகளுக்குள்  
கடவுளின் அழுகுரல்.
யார் யாரைக் காப்பாற்ற?
-------------------------------------------

கல்லைக் காசாக்குவர்.
மண்ணை நீறாக்குவர்.
காகிதத்தை பணமாக்குவர்.
பிறகெதற்கு கையேந்துவர்?
------------------------------------------ 

சேரி கருமாரியம்மனுக்கு
குட முழுக்கு விழா.
அவர்கள் தீர்த்தம் வழங்கினர்.
இவர்கள் மோட்சம் பெற்றனர்.
-----------------------------------------------

உறங்குமுன் உடமையாளனும்,
தொழிலுக்கு கிளம்புமுன் திருடனும்
கடவுளை மனமுருக வேண்டினர்.
---------------------------------------------------------


தற்கொலைக்கு முயன்று தோற்றுப்போன நண்பனுக்கு அர்ப்பணம். 
-------------------------------------------------------------------------------------------------------
கருமாயப்பட்ட வாழ்க்கை 
-------------------------------------------------------------------------
அவனுக்கு வாய்த்த வாழ்க்கை
இளம் காளையிடம்
இரவலுக்கு சிக்கிய
இரு சக்கர வாகனமாய்
இருப்பு அழிகிறது.      
------------------------------------------------------------------------

இறுதி தீர்மானம்
-----------------------------------------------
வாழ்வோடு போராடும் வலுவிழந்து
அம் முடிவெடுத்தபோதே,
அவனைச் சார்ந்திருந்த
அப்பனையும், ஆத்தாளையும்
பெண்டாட்டியையும்,
மூன்று பிள்ளைகளையும்
மற்றும்
சில கடன்காரர்களையும்
கொலை செய்வதென
தீர்மானித்திருந்தான். 
--------------------------------------------------------

காற்றினில் வரும் கீதம்
-------------------------------------------------------------------

இறப்பதற்கு சில கணங்களும்
வாழ்வதற்கு பல யுகங்களும்
கோப்பைகளில் ஊற்றி
மேசையின் மீது வைக்கப் பட்டன. 

வாழ்ந்து களிக்க சிலர் வாழ்வையும்,
வாழ்ந்து சலித்த பலர் இறப்பையும்
தெரிவு செய்து பருகினார்கள்.

காற்றில் மிதந்து வரும்
இசைக் குறிப்புகளில்
தாள லயங்கள் மட்டும்
சற்றே மாறுபட்டிருந்தன.

அவ்வளவு தான்.
------------------------------------------------------- 
 
   
         
                                                                                                                      - அகரத்தான்.  

சாகாவரம் பெறும் தெரு நாய்கள்

  கால காலமாக
வளைந்து குழைந்து வாலாட்டி
பாசாங்கு செய்கின்ற தெரு நாய்கள்
நமது பாதுகாவலர்களாகவும்
தீவிர விசுவாசிகளாகவும் இருப்பதாக 
கட்டியம் கூறுகின்றன.

கால காலமாக
நம் கைவசம்
ஒரேயொரு ரொட்டித்துண்டு இருக்கிறது.

அது
தேவலோக அமிர்தம் போலவும்,
அனுமன் கொணர்ந்த சஞ்சீவிவேர் போலவும்,
நாரதர் பெற்ற ஞானப்பழம் போலவும்,
அவ்வைக் கிழவிக்கு கிடைத்த நெல்லிக்கனி போலவும்
அபூர்வ சக்தி வாய்ந்ததாய் இருக்கிறது.

அந்த அபூர்வ ரொட்டித்துண்டை
தெரு நாய்களுக்கு வீசுகிறோம்.   

வீசியதை விழுங்கிய நாய்கள்
சாகாவரம் பெற்றதும்,
மிகுபசியால் வரம்புமீறி
நம் வட்டிலிலும் வாய் வைக்கின்றன.

விபரீதம்  உணர்ந்து 
விரட்டவென காற்றில்  
வீசிய நம் கைகளை 
வெறியோடு பாய்ந்து கவ்வுகின்றன.

அபயக் குரலெழுப்பும் வேளையில்
தாவி மேலே விழுந்து நம்மை
குப்புறத் தள்ளி குரல்வளையை
கடிக்கத் தொடங்குகின்றன.

ஆப்பசைத்த குரங்கின்
நிலையிலிருந்து நாம்,  
நம்மை நொந்து கொள்ளவா?
நாய்களை நொந்து கொள்ளவா?
                                                                                                                                                      - அகரத்தான்.                                                                                                             

பரமக்குடி துப்பாக்கி சூடு பற்றிய என் கருத்து


                                       மாலை வணக்கம். சாதியையும், மதத்தையும் வைத்து யார் கடை பரப்பினாலும் அதை நாம் வேடிக்கை பார்த்து கொண்டு வாளாதிருக்க முடியாது. முதலில் இந்த மாதிரி பேரணிகளுக்கு அனுமதி வழங்குவதென்பது கூடாது. அது சனநாயக மறுப்பு என சொன்னாலும் அந்த மறுப்பை வரவேற்க வேண்டிய நிலையிலேயே நாம் உள்ளோம். மனிதத்தின் அடிப்படையில் அணி திரண்டு ஒடுக்கப்பட்ட இனத்தின் நியாயங்களை, போர்குரலை பதிவு செய்ய வேண்டுமே அன்றி சாதியத்தின், மதத்தின் பின் நின்று கொண்டு அறைகூவலிடக் கூடாது. அப்புறம், ஆதிக்க சாதி பேரணி, ஒடுக்கப்பட்ட சாதி பேரணி என்று எதையுமே இனம் பிரித்து பார்க்க தேவை இல்லை என்பதே என் கருத்து. சாதியால், மதத்தால் நாம் பிரிந்து கிடைப்பதாலேயே நம் இன விடுதலை இன்னுமொரு நூற்றாண்டுக்கு பின்னுக்குத் தள்ளப் பட்டிருக்கிறது.                                                                           ஒரு கொலைக்கு தண்டனையாக இன்னொரு கொலையை அரசாங்கம் என்ற பெயரில் செய்வதை நாம் வரவேற்க முடியாது. கொலைக்கு தண்டனையாக இன்னொரு கொலை செய்யும் அரச பயங்கரவாதத்தை வேரறுக்க கிளம்பும் எதிர்வினையை நாம் நியாயப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகிவிடும்.                                                     சாதியை வைத்து வயிறு பிழைக்க யார் கிளம்பினாலும், அவன் பின்னால் அணி திரளும் யாரும் உயிரோடு வீடு திரும்ப முடியாது என்ற நிலையை உருவாக்குவதன் மூலம் மட்டுமே இந்த குடிகேடர்களை திருத்த முடியும். அப்பொழுது தான் தான் உண்டு, தன் வேலை உண்டு  என்று குடும்பத்தை கவனிப்பான். இல்லையெனில் தினம் ஒரு மாநாட்டுக்கு சென்று வருவதையே பிழைப்பாக வைத்துக் கொள்வான். மதுப் புட்டியும், கோழி பிரியாணியும், காந்தி படம் பொறித்த காகிதமுமே  ஒரு இனத்தின் தேசிய அடையாளமாவதை சகித்துக் கொள்ளமுடியாது.  உறுதியான நடவடிக்கையை எடுப்பதன் மூலம் மட்டுமே சமூக மாற்றத்தை மேற்கொள்ள முடியும். இன்றைய ஆட்சியாளர்கள் என்ன மன நிலையில் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தினார்களோ தெரியவில்லை. ஆனால், எனது மனநிலை இது தான். 

Tuesday, September 6, 2011

படித்ததில் பிடித்தது - கீற்றுவில்அம்மாயி பாலனோட style.

காந்திதேசத்தில்
கருணைக்கு கதவடைப்பா...?
சனநாயக வல்லரசில்
சத்தியத்திற்கு சவக்குழியா...?
மனிதநேயத்திற்கு
மரணஅறிவிப்பா...?

இருபதாண்டுகாலங்கள்
இருண்ட நாட்களாய் உருண்டோடியும்
எஞ்சியுள்ள உயிரும் வேண்டுமா...?

நீதிதேவனின் நிழலும்கூட
தமிழனுக்கு நெருப்பாய்... ஏன்?

எம் சகோதரா
உன்னை உள்வாங்கியுள்ள
சிறைகம்பிகளுக்கும் நாங்கள்
சிம்மசொப்பனமாவோம்...

எம்
கழுத்தறுபட்டாலும்
உன் கைவிலங்கறுக்காமல்
ஓயமாட்டோம்...

சாவைக்கண்டு அஞ்சும் கூட்டமல்ல நாம்
சத்தியத்தைக் காத்திடவே போராட்டம்...
சத்தியம் சத்தியமாக வெல்லும்
சத்தியம் சத்தியமாக வென்றே தீரும்...

அரசே
எங்கள் உணர்வுகளை உணர்ந்து
எம் உறவுகளுக்கு உயிர்கொடு...

உன்
கோரப்பசிக்கு மூவரின் உயிர்தான் வேண்டுமானால்...
தொங்கட்டும் உனது தூக்குக்கயிறு...
மூன்றாய் அல்ல
ஆறரைக்கோடியாய்...

- வேங்கை.சு.செ.இப்ராஹீம்


Monday, September 5, 2011

தலைவர்கள்


இனத்திற்காக                                 பணத்திற்காக


மொழிக்காக                               கனி மொழிக்காக

கொள்கைக்காக                            கொள்ளைக்காக

இனத்திற்காக குடும்பத்தை                குடும்பத்திற்காக இனத்தை
இழந்தவர்                                 கொன்றவர்

அயராது சமர் செய்து                     நாத்திகம் பேசியே ஆத்திகத்தை
வெற்றி கொடி நாட்டியவர்               தொடர்பவர்

தோழர்களது உழைப்பில்                  தொண்டர்களது உழைப்பில்
இன விடுதலையை வளர்த்தவர்          குடும்பத்தை வளர்த்தவர்

இன விடுதலைக்காக தன்                பதவிக்காக எதுவும் செய்பவர்..??  
இன்னுயிரையும் கொடுப்பவர்            

தேசிய தலைவர் , தம்பி என                 தமிழின தலைவர் , கலைஞர் என
உலக தமிழர்களால் கொண்டாடபடுபவர்      தாமே பட்டம் சூட்டி கொண்டவர்


நீ இருந்தாலும்                        நீ இருந்தாலும் இல்லை என்றாலும்     
 இல்லைதான் என்றாலும்               நாட்டுக்கு ஆகபோவதில்லை
என்றும் எங்கள் நெஞ்சினில்            ஒன்றும்


                        
          

                

Friday, September 2, 2011

வீடு திரும்புதல்


வீடு திரும்புதலின் 
வழித் தடத்தில் 
கடன்காரர்களிடம் தப்பியவர்கள் 
குடிகாரர்களிடம் 
சிக்கிக் கொள்கிறார்கள்.

மனித புழங்கு வெளிகளின் 
மூலை முடுக்குகளில் நின்று
அரைக் கோப்பை மதுவுக்காக 
சிறுமையடையும் யானைகளோ 
ஒரு காலத்தில் 
பிரம்மாண்டமானவைகளாய்     
வாழ்ந்து கெட்டவை தாம்.

                        - அகரத்தான். 
Blogger Widgets