Tuesday, March 27, 2012

எல்லாம் உனக்காக...


-----------------------------------------------------------------------------------------





-








அதிகாரத்தை அண்டி பிழைப்பவர்கள்     
அன்றாடம் திணிக்கும் செய்திகள் 
நம்மை கழுதையாக்கி விடுகின்றன. 


-----------------------------------------------

பன்றிகள் தின்று செரிக்கும் தினமலம் 
மனிதனிடமிருந்து அப்புறப்படுத்துதல்  
ஆரோக்கியத்திற்கு நலம். 
---------------------------------------------------------- 

சனநாயக தேசத்தில் 
சனநாயகமில்லை. 
--------------------------------

எதுவும் இல்லாதவர்களிடம் 
மூர்க்கம் காட்டும் சட்டம் 
இருப்பவர்களிடம் மட்டும் 
வாலை ஆட்டுகிறது. 
----------------------------------------- 

மின்தடை காலங்களில் மனிதர்கள் 
உயிரை இழப்பதை விடவும், 
தூக்கம் இழப்பதொன்றும் மோசமில்லை. 
------------------------------------------------------------ 

அரசியல், சனநாயகம் 
இரண்டும் தரித்திரத்தின் 
இரு சட்டாம்பிள்ளை குழந்தைகள். 
இரண்டையும் திருத்தவே முடியவில்லை. 
-------------------------------------------------------------- 

சித்தாந்தம் பேசி சீரழிவதை விட 
சிவனே என்று வேடிக்கைப் பார்த்தல் 
உங்களுக்கு சிங்கிள் டீக்கோ, 
சிங்கிள் கட்டிங்குக்கோ 
உத்தரவாதம் தரக்கூடும். 
----------------------------------------------------- 

நீங்கள் கற்பனை செய்ய இயலாத 
அனைத்து விடயங்களிலும் 
அவர்கள் அரசியல் செய்யலாம். 
கவனம் தோழா! 
----------------------------------------------------

என்ன தேசமோ?


-------------------------------------------------------- 



கொலையாளியின் சம்மதத்துடன் 
பாதித்தவனுக்கு மறுவாழ்வென்ற  
திருத்தப்பட்ட தீர்மானம் 
நிறைவேற்றப் படாமலிருக்க,  
தீர்மானம் திருத்தியவனுக்கு 
மறுவாழ்வு கொடுக்கலாம்.   
------------------------------------------------------ 

குரல்வளையும் முதுகெலும்புமற்ற 
உனக்கும் சேர்த்து 
களமாடுபவனை வேட்டையாடிவிட்டு, 
பலனை அனுபவிக்க நீ 
பாய்ந்தோடி வருவது நியாயமா? 
----------------------------------------------------------------- 

இடிந்தகரை போராட்டத்தால் 
மக்களின் வரிப்பணம் வீணாகிறதென  
ஓலமிடும் தேசப்பற்றாளன் 
அயலக வங்கிகளில் 
பதுக்கிய ஊழல் பணமோ 
எண்ணிக்கையில் அடங்காதது. 
---------------------------------------------------------------- 

நீ உன் குடும்பமே உலகமென்று 
வாழ்ந்துகொண்டே  சாகிறாய். 
களமாடுபவனோ 
உலகையே தன் குடும்பமென்று 
வரலாற்றில் நடுகல்லாகி, 
மரணித்த பின்னும் வாழ்கிறான். 
--------------------------------------------------------- 

ஆளும் கட்சி 
எதிர் கட்சி 
உதிரி கட்சி 
ஏன் வாக்காளன் மீதும் 
விமர்சன சாட்டை சொடுக்குவேன். 
யார்தான் நல்லவனென 
நீங்கள் வினவுவது புரியாமலில்லை. 
வைத்துக் கொண்டு யாரும் 
வஞ்சனை செய்வதில்லை. 
இருந்தால் சொல்லாமலா போவேன்? 
எப்போதென வினவினால் 
விடையொன்றும் பகராமல் 
விட்டகலுவேன் அவ்விடம். 
வேறென்ன செய்ய தோழா? 
---------------------------------------------------------------- 

சரக்கு இல்லாமல் 
கல்யாணமுமில்லை. 
கருமாதியுமில்லை. 
----------------------------------- 

செல்வந்தர்களுக்கு நாய்களும் 
அதிகார வர்க்கத்திற்கு காவல்படைகளும் 
விசுவாசமான ஏவலாளிகள். 
இரண்டுக்குமே 
அச்சுறுத்தும் தோற்றமுண்டு. 
சிந்திக்கும் மூளைதான் இல்லை. 
--------------------------------------------------------------------- 

வேலைக்காரர்கள் எசமானர்களை 
காந்தியின் 
மூன்று குரங்குகளாக்கி விட்டார்கள். 
-------------------------------------------------------------- 

மாற்றுக் கருத்துக்களை 
குழி தோண்டி புதைத்தும், 
கொட்டடிக்குள் அடைத்தும் 
சனநாயகம் பேணுபவனுக்கு தெரிவதில்லை 
சுதந்திர வெளியில் உலவும் 
புலிகளை விடவும்,  
சிறைபட்டிருக்கும் 
புலிகள் மூர்க்கமானவை என்று. 
---------------------------------------------------------------------------- 

மக்கள்நலனை சிந்திப்பவர்கள் 
மக்கள் விரோதிகளாய் 
சித்தரிக்கப்படும் தேசத்தில் 
வாழ்வதென்பது வெட்கக்கேடானது. 
--------------------------------------------------------------- 

சகோதர சண்டை பற்றியே 
எப்போதும் அங்கலாய்ப்பவன்,  
தன் வீட்டுக்குள் நடக்கும் 
சகோதர சண்டையை தீர்த்து விட்டு 
வந்து பேசினால் நன்றாகயிருக்கும். 
-------------------------------------------------------------- 

ஒடுக்குபவனின் நேர்மையைக்
கேள்விக்குட்படுத்தாமல் 
தேசப்பற்று, 
இறையாண்மை, 
சனநாயகம், 
வளர்ச்சிஎனும் 
மந்திர வார்த்தைகளின் பின் 
புல்லாங்குழல் கலைஞனைத் தொடரும் 
எலிக் கூட்டமாக நீயிருப்பது 
உன்னை நீயே 
நதியில் மூழ்கடித்துக்கொள்ளும் 
கண்மூடித்தனம். 
-------------------------------------------------------------------- 

குடிநீர், மின்சாரம், பால், காய்கறிகள், 
உணவுப்பொருட்கள் முடக்கம், 
போக்குவரத்து துண்டிப்பு, 
இராணுவ முற்றுகை, 
களப்போராளிகளை சிறைப்பிடித்தல், 
அகப்பட்டவர் மீது 
அத்தனைப் பிரிவுகளிலும் வழக்குப் பதிதல், 
பள்ளிகள், நூலகங்கள் மீது தாக்குதல். 
கூடங்குளம் பற்றி பேசும்போது 
முள்ளிவாய்க்கால் நினைவுக்கு வந்தால் 
அதற்கு நான் பொறுப்பாக முடியாது தோழா!
---------------------------------------------------------------------------- 

உதயகுமாரர்களின்  
அஸ்தமனச் சாம்பலின் மீது   

கார்பரேட்டுகளும் 
மக்கள் பிரதிநிதிகளும் 
கரன்சிகளை வாரிக் குவிக்கட்டும். 

அணு உலைப் பூங்கா 
மலர்ந்து பூமியைப் பொசுக்கட்டும். 

வல்லரசு நாட்டில் 
தானியங்களுக்குப் பதில் 
ஆயுதங்கள் முளைக்கட்டும். 

நாராயண மந்திரம் உங்களை 
நடுத்தெருவில் நிறுத்தட்டும்.  

வாழ்க பாரதம்! 
வாழ்க சனநாயகம்! 
------------------------------------------------------------

பூனையைப் போல் 
பதுங்கி நடக்கையில் தான்
பேரோசை எழுந்து விதிர்க்க வைக்கிறது. 
--------------------------------------------------------------------- 





Wednesday, March 21, 2012

இது மட்டும் போதுமா?

 



-----------------------------------------------------  

பாலையின் முக்கியத் தொழில் களவு. 
ஆம், தேசம் பாலையாகிவிட்டது. 
குடிகள் களவுக்குத் தான் 
தயாராக வேண்டும் போலிருக்கிறது. 

-------------------------------------------------- 

மரணம் அழையா விருந்தாளியாக 
வந்து தான் நம்மை அழைத்துச் செல்கிறது. 
-------------------------------------------------------------- 

கொத்து குண்டுகளையும்
நச்சு வாயுக்களையும் 
தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும் 
தாங்கி உயிர்த்திருக்கும் எங்களுக்கு 
உன்னுடைய உண்ணாவிரத நாடகத்தைத் 
தாங்கும் சக்தி மட்டும் இல்லவே இல்லை. 
-------------------------------------------------------------- 

ஒரு மணித்துளி இருளை திணித்தவனை 
ஆட்சி மாற்றம் செய்து பழி தீர்க்கிறீர்கள். 
தலைமுறைக்கும் இருளையும், 
கொடும் துயரையும் 
எம் மீது திணித்தவர்களை 
என்ன செய்ய போகிறீர்கள்? 
--------------------------------------------------------------- 

வறண்ட பூமியில் 
வற்றாமல் ஓடுகிறது வாழ்க்கை.
------------------------------------------------- 

கூடங்குளத்தில் 
காந்தியின் ஊன்றுகோல் 
குண்டாந்தடியானது கண்டு 
மிதவாதிகள் 
மிரண்டு போய்க் கிடக்கிறார்கள். 





Tuesday, March 20, 2012

என்னமோ நடக்குது!


------------------------------------------------- 





கூடங்குளம் 
மின்வெட்டு 
சங்கரன்கோவில் 
முல்லை பெரியாறு 
தமிழக மீனவன்
ஈழத் தமிழன் 
ஐ .நா தீர்மானம் 
பெங்களூரு நீதி மன்றம் 

கண்ணுக்குத் தெரியாத கண்ணி ஒன்று 
அறிவுக்கு மட்டும் தெளிவாகத் தெரிகிறது. 
--------------------------------------------------------------------------

ஒருவன் மட்டும் 
உன்னைக் குற்றம் சாட்டினால் 
அவன் அயோக்கியனாக இருக்கக்கூடும். 

ஒவ்வொருவனும் 
உன்னைக் குற்றம் சாட்டினால் 
நிச்சயம் நீ தான் 
அயோக்கியனாக இருக்கக் கூடும்.  
------------------------------------------------------------------------

சாலையில் எதிர்ப்படும் பெண்டிரிடம் 
அழகை எதிர்நோக்கும் சைத்தான் 
ஒருமுறையேனும் தன் முகத்தை 
கண்ணாடியில் பார்த்திருப்பதில்லை. 
------------------------------------------------------------------- 

அறுப்பவனை நம்பிய 
அறுபட்ட ஆடுகளுக்காக 
அனுதாபப் படாதவன் 
கசாப்புக்காரனுக்காக கரிசனம் 
காட்டுவது தான் 
ஏனெனப் புரிந்தால் சொல்லுங்கள்!  
-------------------------------------------------------- 

மனசாட்சியின் ஆட்சி எனில் 
நடவடிக்கை எடுக்கலாம். 
சட்டத்தின் ஆட்சி என்பதால் தான் 
பிராது வரும்வரை 
காத்திருக்க வேண்டியிருக்கிறது. 
---------------------------------------------------------- 







Sunday, March 18, 2012

வாயத் திறந்தா வம்பு வந்து சேர்ந்திடும்!


--------------------------------------------------------------------------------------------- 

 


தொலைதூர பயணங்களுக்கான 
இடைநிறுத்த உணவகங்கள் 
பயணிகளைத் தின்று செரிக்கின்றன. 
-------------------------------------------------------------- 

அடுத்த நிறுத்தத்தில் இறங்குவதற்குள் 
பக்கத்து இருக்கை அழகியுடன் 
ஒரு நெடுந்தூர பயணம். 
----------------------------------------------------------------- 

மக்கள் விரோதிகள் 
சக்கர நாற்காலியில் நகர்ந்தாவது 
மக்கள் பணியாற்றுவது கண்டு 
நாம் தான் அற்ப ஆயுளில் 
போய் சேர வேண்டியிருக்கிறது.  
-------------------------------------------------------- 

பிறக்கின்றபோதே இறப்போமெனத் தெரிந்தும் 
கல்யாணம், வளைகாப்பு, காதுகுத்து, 
குழந்தை பேறு, சொத்து சேகரம்,
சண்டை சச்சரவு, போட்டி பொறாமையென 
பிசிறி எடுக்கிற மனிதன் தான் 
படைப்பின் விசித்திரம். 
------------------------------------------------------------------------------- 

ஒவ்வொரு காலத்திலும் 
யாரோ ஒரு முதிர்பருவ 
அனுபவக் கதைசொல்லியின் 
தேன் தடவிய வார்த்தைகளால் 
இளந்தளிர்கள் 
பாதை மாறிப் பயணிக்கிறார்கள். 
----------------------------------------------------- 

பெற்றோர் சம்பாத்தியத்தில் 
பெற்றோர் இணை தேடி  
உற்றார், உறவுகள் கூடி வாழ்த்த 
திருவிழா உற்சவமாய் 
திருமணம் நிகழ்ந்தது அதுவொரு காலம். 

அவரவர் சம்பாத்தியத்தில் 
அவரவர் இணை தேடி 
உற்றார், உறவுகளற்று 
சம்பிரதாயக் குழுமத்திடையே 
திருமணம் நிகழும்  
இதுவுமொரு காலம். 
------------------------------------------------------------------

கற்பித்தலுடன் எந்தத் தொடர்புமற்ற 
சமூக விரோதிகளை சேவையாற்ற அனுமதித்து 
கல்வியை வணிகப் பண்டமாக்கியவன் 
நாளை மருத்துவத் துறையின் மீதும்  
கவனம் திருப்பக் கூடும்.
வேடிக்கைப் பார்த்த குற்றத்திற்காக 
இந்த நாடும், 
இந்த நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும். 
---------------------------------------------------------------------------------- 

பதின் பருவக் காதலியைப் போலவே 
முற்பகலின் நம் பிரமிப்புகள் 
பிற்பகலில் அபத்தமென உணர்வது 
உலக நியதி போலிருக்கிறது. 
-------------------------------------------------------------- 

கொலையாளிகளும், களவாணிகளும் 
ஒரு பக்கம் நில்லுங்கள். 
பாதிப்பிற்குட்பட்டவர்களும், 
கையறுநிலை சாட்சிகளும் 
மற்றொரு பக்கம் நில்லுங்கள். 
நியாயத் தராசு 
எந்தப் பக்கமாவது சாய்ந்து தொலைக்கட்டும். 
------------------------------------------------------------------------------ 

தங்க நாற்கரச் சாலைகள் 
சாலையோரச் சோலைகளை 
விழுங்கி ஏப்பம் விட்டிருக்கின்றன. 
----------------------------------------------------------- 

உலகத்தீரே! சுதந்திரத்திற்குப் பிந்தைய 
முப்பது ஆண்டுகள் மிதவாதியாய் நின்றதால் 
பேரினவாதியால் வன்கொலை செய்யப்பட்டபோது   
எவனும் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. 
ஆயுதத்தின் துணைகொண்டு 
எங்களை அடித்தவனைத் திருப்பியடித்ததும் 
தீவிரவாதமென 
நீங்கள் திரிபுவாதம் செய்வது நியாயமா? 
----------------------------------------------------------------------------------------- 

வாக்காளப் பெருங்குடி மகன் 
அவனை ஆட்சிப் பீடத்தில் அமரவைத்தது 
சொந்த மக்களின் பெருவிருப்பை நிறைவேற்றவா? 
அண்டை தேசக் கொடுங்கோலனின் 
மனித உரிமை மீறல்களைப் பாராட்டி மகுடம் சூட்டவா? 
----------------------------------------------------------------------------------------------- 

என் அப்பா நல்லவரா? கெட்டவரா? 
சரியாக சொல்லத் தெரியவில்லை. 
அவர் அடிக்கடி இப்படி சொல்வார். 
அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படாதே! 
யாரிடமும் வம்பு தும்புக்குச் செல்லாதே! 
எல்லோரிடமும் இணக்கமாக இரு! 
சேர்ந்து வாழு! 
கெட்ட நடத்தையாளருடன் சேராதே! 
திருடன், கொலைகாரன், போக்கிரி, 
சட்டாம்பிள்ளைகளுடன் நட்புறவு கொள்ளாதே! 
அந்த நட்பு உன்னை படுகுழியில் தள்ளிவிடும் என்பார். 
மேற்சொன்ன கூற்றை உற்று நோக்குகையில் 
அவர் நல்லவராகத்தான் இருக்கக் கூடும். 

இதற்கு நேர்மாறாக இப்போது ஒரு குரல் ஒலிக்கிறது. 

என் அண்டை வீட்டான் 
கொலைகாரன். 
கொள்ளைக்காரன். 
தன் சகோதரியை தானே வன்புணர்பவன். 
இருக்க இடம் கொடுத்தவனை விரட்டியடித்து 
அதிகாரத்தைக் கைப்பற்றியவன். 
எந்த உலகப் பொதுநியதிக்கும் கட்டுப்படாதவன். 
அவனுடைய கொடும்செயலின் பொருட்டு 
பாதிக்கப்பட்டவன் குற்றம் சாட்டுவதையோ, 
மக்கள் மன்றம் தண்டிப்பதையோ 
ஆதரிக்க மாட்டேன் என்கிறான். 
இவனும் தன்னை நல்லவன் என்று சொல்லித் திரிகிறான். 

கொல்லைக்குப் போனாலும் கூட்டு சேர்ந்து போகாதே என்பார்கள். 
கொலைக்குக் கூட்டு சேர்ந்து போனவன் 
கூட்டாளியை கொலையாளி என்று சொல்லிவிட்டுத் தப்ப இயலுமா? 







---------------------------------------------------------------------------------------------------------------------   
Blogger Widgets