
எல்லோராலும் கைவிடப்பட்டதொரு தேசத்தில்
வாழ்வோமென்ற நம்பிக்கையையும்,
வாழ்ந்தோம் என்ற நினைவுகளையும் கைவிடாமல்
சிலுவை சுமக்கும் இயேசுவாய்
சுமந்து அலைந்து திரிவது
இறையாண்மை மீறலெனில்,
அதைத் தொடர்வது
நமது சனநாயகக் கடமையாகிறது.
-------------
காதலர் தினத்தில்
உன்னிடம் கையளிக்க
என்னிடம் ஏதொன்றுமில்லை
காதலைத் தவிர.
-------------
உள்ளே வெளியே ஆட்டத்திற்கு
நான் தயார் இப்போது.
அதிகாரம் வலியுறுத்தும்
கொடும் சனநாயகச் சட்டங்களின்
சட்டகங்களுக்குள் நின்று
வசந்தத்தின் இடி முழக்கமென முழங்குவேன்.
அதிகாரத்தின் உறக்கம் கலைக்கும்
கொடும் கனவென நானிருப்பேன்.
---------------
மனுசன் கும்புடறதுக்கும் சாப்புடறதுக்கும்
ஆயிரம் கண்டு புடிச்சிருக்கான்.
வயித்துக்கு வழி செய்யுற
விவசாயத்தைக் காக்குறதுக்கு தான்
ஒரு மயிரையும்
கண்டு புடிக்க மாட்டேங்கறான்.
---------------
நான் நல்லவனாகவோ,
கெட்டவனாகவோ மாறுவது
என் கையில் ஒன்றுமில்லை.
எல்லாம் வல்ல மக்கள் நல அரசின்
கையில் தானிருக்கிறது.
-------------
பறவைகளுக்கும் விலங்குகளுக்கும்
தப்பியதே மனுசனுக்கு.
சிங்களப் பேரினவாதத்துக்கு
தப்பியதே தமிழீழத்துக்கு.
------------
தாஜ்மகால் ஒன்றும் உலக அதிசயமில்லை.
தாஜ்மகாலை நான் காண நேர்ந்தது தான்
உலக அதிசயம்.
-------------
புகை வண்டியில்
நடந்தே சாக முடிவெடுத்தவர்களை
காப்பாற்ற முடியாது போலிருக்கிறது.
-------------
புகைவண்டி நிலையத்தில்
இருக்கைகள் அமர்ந்துகொண்டும்
மனிதர்கள் நின்று கொண்டும்
புகை வண்டிக்காகக் காத்திருக்கிறார்கள்.
-----------
பழுதடைந்த தள்ளுவண்டியில்
பழுதில்லாமல் ஓடுகிறது வாழ்க்கை.
----------
கையில் காசில்லாமல்
காய்ந்து நிற்கையில் தான்
கோவில் திருவிழா
களை கட்டும் போலிருக்கிறது.
----------
நாட்டுக்காகவும்,
நாட்டு மக்களுக்காகவும்,
தங்கள் இன்னுயிரை கொடுப்பேன் என்று
சூளுரைத்து அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள்
தமிழக மீனவர் படுகொலை,
தமிழீழப் படுகொலை,
மூன்று தமிழருக்கு தூக்கு,
முல்லை பெரியாறு,
தண்டகாரன்யப் படுகொலை என்று
எங்கள் உயிரை எடுக்கத் தானே
திட்டமிடுகிறார்கள்?
3 comments:
good post thala
good post thala
வலிமிகுந்த பதிவுகள் நண்பா!
Post a Comment