------------------------------

தொலைதூர பயணங்களுக்கான
இடைநிறுத்த உணவகங்கள்
பயணிகளைத் தின்று செரிக்கின்றன.
------------------------------
அடுத்த நிறுத்தத்தில் இறங்குவதற்குள்
பக்கத்து இருக்கை அழகியுடன்
ஒரு நெடுந்தூர பயணம்.
------------------------------
மக்கள் விரோதிகள்
சக்கர நாற்காலியில் நகர்ந்தாவது
மக்கள் பணியாற்றுவது கண்டு
நாம் தான் அற்ப ஆயுளில்
போய் சேர வேண்டியிருக்கிறது.
------------------------------
பிறக்கின்றபோதே இறப்போமெனத் தெரிந்தும்
கல்யாணம், வளைகாப்பு, காதுகுத்து,
குழந்தை பேறு, சொத்து சேகரம்,
சண்டை சச்சரவு, போட்டி பொறாமையென
பிசிறி எடுக்கிற மனிதன் தான்
படைப்பின் விசித்திரம்.
------------------------------
ஒவ்வொரு காலத்திலும்
யாரோ ஒரு முதிர்பருவ
அனுபவக் கதைசொல்லியின்
தேன் தடவிய வார்த்தைகளால்
இளந்தளிர்கள்
பாதை மாறிப் பயணிக்கிறார்கள்.
------------------------------
பெற்றோர் சம்பாத்தியத்தில்
பெற்றோர் இணை தேடி
உற்றார், உறவுகள் கூடி வாழ்த்த
திருவிழா உற்சவமாய்
திருமணம் நிகழ்ந்தது அதுவொரு காலம்.
அவரவர் சம்பாத்தியத்தில்
அவரவர் இணை தேடி
உற்றார், உறவுகளற்று
சம்பிரதாயக் குழுமத்திடையே
திருமணம் நிகழும்
இதுவுமொரு காலம்.
------------------------------
கற்பித்தலுடன் எந்தத் தொடர்புமற்ற
சமூக விரோதிகளை சேவையாற்ற அனுமதித்து
கல்வியை வணிகப் பண்டமாக்கியவன்
நாளை மருத்துவத் துறையின் மீதும்
கவனம் திருப்பக் கூடும்.
வேடிக்கைப் பார்த்த குற்றத்திற்காக
இந்த நாடும்,
இந்த நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்.
------------------------------
பதின் பருவக் காதலியைப் போலவே
முற்பகலின் நம் பிரமிப்புகள்
பிற்பகலில் அபத்தமென உணர்வது
உலக நியதி போலிருக்கிறது.
------------------------------
கொலையாளிகளும், களவாணிகளும்
ஒரு பக்கம் நில்லுங்கள்.
பாதிப்பிற்குட்பட்டவர்களும்,
கையறுநிலை சாட்சிகளும்
மற்றொரு பக்கம் நில்லுங்கள்.
நியாயத் தராசு
எந்தப் பக்கமாவது சாய்ந்து தொலைக்கட்டும்.
------------------------------
தங்க நாற்கரச் சாலைகள்
சாலையோரச் சோலைகளை
விழுங்கி ஏப்பம் விட்டிருக்கின்றன.
------------------------------
உலகத்தீரே! சுதந்திரத்திற்குப் பிந்தைய
முப்பது ஆண்டுகள் மிதவாதியாய் நின்றதால்
பேரினவாதியால் வன்கொலை செய்யப்பட்டபோது
எவனும் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.
ஆயுதத்தின் துணைகொண்டு
எங்களை அடித்தவனைத் திருப்பியடித்ததும்
தீவிரவாதமென
நீங்கள் திரிபுவாதம் செய்வது நியாயமா?
------------------------------
வாக்காளப் பெருங்குடி மகன்
அவனை ஆட்சிப் பீடத்தில் அமரவைத்தது
சொந்த மக்களின் பெருவிருப்பை நிறைவேற்றவா?
அண்டை தேசக் கொடுங்கோலனின்
மனித உரிமை மீறல்களைப் பாராட்டி மகுடம் சூட்டவா?
------------------------------
என் அப்பா நல்லவரா? கெட்டவரா?
சரியாக சொல்லத் தெரியவில்லை.
அவர் அடிக்கடி இப்படி சொல்வார்.
அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படாதே!
யாரிடமும் வம்பு தும்புக்குச் செல்லாதே!
எல்லோரிடமும் இணக்கமாக இரு!
சேர்ந்து வாழு!
கெட்ட நடத்தையாளருடன் சேராதே!
திருடன், கொலைகாரன், போக்கிரி,
சட்டாம்பிள்ளைகளுடன் நட்புறவு கொள்ளாதே!
அந்த நட்பு உன்னை படுகுழியில் தள்ளிவிடும் என்பார்.
மேற்சொன்ன கூற்றை உற்று நோக்குகையில்
அவர் நல்லவராகத்தான் இருக்கக் கூடும்.
இதற்கு நேர்மாறாக இப்போது ஒரு குரல் ஒலிக்கிறது.
என் அண்டை வீட்டான்
கொலைகாரன்.
கொள்ளைக்காரன்.
தன் சகோதரியை தானே வன்புணர்பவன்.
இருக்க இடம் கொடுத்தவனை விரட்டியடித்து
அதிகாரத்தைக் கைப்பற்றியவன்.
எந்த உலகப் பொதுநியதிக்கும் கட்டுப்படாதவன்.
அவனுடைய கொடும்செயலின் பொருட்டு
பாதிக்கப்பட்டவன் குற்றம் சாட்டுவதையோ,
மக்கள் மன்றம் தண்டிப்பதையோ
ஆதரிக்க மாட்டேன் என்கிறான்.
இவனும் தன்னை நல்லவன் என்று சொல்லித் திரிகிறான்.
கொல்லைக்குப் போனாலும் கூட்டு சேர்ந்து போகாதே என்பார்கள்.
கொலைக்குக் கூட்டு சேர்ந்து போனவன்
கூட்டாளியை கொலையாளி என்று சொல்லிவிட்டுத் தப்ப இயலுமா?
------------------------------
No comments:
Post a Comment