Tuesday, March 27, 2012

என்ன தேசமோ?


-------------------------------------------------------- 



கொலையாளியின் சம்மதத்துடன் 
பாதித்தவனுக்கு மறுவாழ்வென்ற  
திருத்தப்பட்ட தீர்மானம் 
நிறைவேற்றப் படாமலிருக்க,  
தீர்மானம் திருத்தியவனுக்கு 
மறுவாழ்வு கொடுக்கலாம்.   
------------------------------------------------------ 

குரல்வளையும் முதுகெலும்புமற்ற 
உனக்கும் சேர்த்து 
களமாடுபவனை வேட்டையாடிவிட்டு, 
பலனை அனுபவிக்க நீ 
பாய்ந்தோடி வருவது நியாயமா? 
----------------------------------------------------------------- 

இடிந்தகரை போராட்டத்தால் 
மக்களின் வரிப்பணம் வீணாகிறதென  
ஓலமிடும் தேசப்பற்றாளன் 
அயலக வங்கிகளில் 
பதுக்கிய ஊழல் பணமோ 
எண்ணிக்கையில் அடங்காதது. 
---------------------------------------------------------------- 

நீ உன் குடும்பமே உலகமென்று 
வாழ்ந்துகொண்டே  சாகிறாய். 
களமாடுபவனோ 
உலகையே தன் குடும்பமென்று 
வரலாற்றில் நடுகல்லாகி, 
மரணித்த பின்னும் வாழ்கிறான். 
--------------------------------------------------------- 

ஆளும் கட்சி 
எதிர் கட்சி 
உதிரி கட்சி 
ஏன் வாக்காளன் மீதும் 
விமர்சன சாட்டை சொடுக்குவேன். 
யார்தான் நல்லவனென 
நீங்கள் வினவுவது புரியாமலில்லை. 
வைத்துக் கொண்டு யாரும் 
வஞ்சனை செய்வதில்லை. 
இருந்தால் சொல்லாமலா போவேன்? 
எப்போதென வினவினால் 
விடையொன்றும் பகராமல் 
விட்டகலுவேன் அவ்விடம். 
வேறென்ன செய்ய தோழா? 
---------------------------------------------------------------- 

சரக்கு இல்லாமல் 
கல்யாணமுமில்லை. 
கருமாதியுமில்லை. 
----------------------------------- 

செல்வந்தர்களுக்கு நாய்களும் 
அதிகார வர்க்கத்திற்கு காவல்படைகளும் 
விசுவாசமான ஏவலாளிகள். 
இரண்டுக்குமே 
அச்சுறுத்தும் தோற்றமுண்டு. 
சிந்திக்கும் மூளைதான் இல்லை. 
--------------------------------------------------------------------- 

வேலைக்காரர்கள் எசமானர்களை 
காந்தியின் 
மூன்று குரங்குகளாக்கி விட்டார்கள். 
-------------------------------------------------------------- 

மாற்றுக் கருத்துக்களை 
குழி தோண்டி புதைத்தும், 
கொட்டடிக்குள் அடைத்தும் 
சனநாயகம் பேணுபவனுக்கு தெரிவதில்லை 
சுதந்திர வெளியில் உலவும் 
புலிகளை விடவும்,  
சிறைபட்டிருக்கும் 
புலிகள் மூர்க்கமானவை என்று. 
---------------------------------------------------------------------------- 

மக்கள்நலனை சிந்திப்பவர்கள் 
மக்கள் விரோதிகளாய் 
சித்தரிக்கப்படும் தேசத்தில் 
வாழ்வதென்பது வெட்கக்கேடானது. 
--------------------------------------------------------------- 

சகோதர சண்டை பற்றியே 
எப்போதும் அங்கலாய்ப்பவன்,  
தன் வீட்டுக்குள் நடக்கும் 
சகோதர சண்டையை தீர்த்து விட்டு 
வந்து பேசினால் நன்றாகயிருக்கும். 
-------------------------------------------------------------- 

ஒடுக்குபவனின் நேர்மையைக்
கேள்விக்குட்படுத்தாமல் 
தேசப்பற்று, 
இறையாண்மை, 
சனநாயகம், 
வளர்ச்சிஎனும் 
மந்திர வார்த்தைகளின் பின் 
புல்லாங்குழல் கலைஞனைத் தொடரும் 
எலிக் கூட்டமாக நீயிருப்பது 
உன்னை நீயே 
நதியில் மூழ்கடித்துக்கொள்ளும் 
கண்மூடித்தனம். 
-------------------------------------------------------------------- 

குடிநீர், மின்சாரம், பால், காய்கறிகள், 
உணவுப்பொருட்கள் முடக்கம், 
போக்குவரத்து துண்டிப்பு, 
இராணுவ முற்றுகை, 
களப்போராளிகளை சிறைப்பிடித்தல், 
அகப்பட்டவர் மீது 
அத்தனைப் பிரிவுகளிலும் வழக்குப் பதிதல், 
பள்ளிகள், நூலகங்கள் மீது தாக்குதல். 
கூடங்குளம் பற்றி பேசும்போது 
முள்ளிவாய்க்கால் நினைவுக்கு வந்தால் 
அதற்கு நான் பொறுப்பாக முடியாது தோழா!
---------------------------------------------------------------------------- 

உதயகுமாரர்களின்  
அஸ்தமனச் சாம்பலின் மீது   

கார்பரேட்டுகளும் 
மக்கள் பிரதிநிதிகளும் 
கரன்சிகளை வாரிக் குவிக்கட்டும். 

அணு உலைப் பூங்கா 
மலர்ந்து பூமியைப் பொசுக்கட்டும். 

வல்லரசு நாட்டில் 
தானியங்களுக்குப் பதில் 
ஆயுதங்கள் முளைக்கட்டும். 

நாராயண மந்திரம் உங்களை 
நடுத்தெருவில் நிறுத்தட்டும்.  

வாழ்க பாரதம்! 
வாழ்க சனநாயகம்! 
------------------------------------------------------------

பூனையைப் போல் 
பதுங்கி நடக்கையில் தான்
பேரோசை எழுந்து விதிர்க்க வைக்கிறது. 
--------------------------------------------------------------------- 





No comments:

Blogger Widgets