Monday, October 31, 2011

ஆறாம் அறிவு ...



நூறு ரூபாய் கொடுத்தால் 
மனித மலமே 
செரிக்கப்படும் காலத்தில், 
ஓட்டுப் போடவும், 
கோசம் போடவும் 
ஆள் கிடைக்காதா? 
---------------------------------------- 

அறுபதாண்டுகளுக்குப் பின்   
அண்ணலின் கனவு 
நிறைவேறுகிறது.  
இளைய காந்தி பரப்புரை 
செய்த இடங்களிலெல்லாம் 
காங்கிரசு கரைகிறது. 
---------------------------------------------------------- 

ரத்தத்தைக் கொடு 
சுதந்திரத்தை நான் வாங்கித் தருகிறேன் 
நேதாசி முழக்கமும், 

சுதந்திரம் எனது பிறப்புரிமை 
அதை நான் அடைந்தே தீருவேன் 
திலகர் அறைகூவியதும் 
சுதந்திரப் போராட்டமானது. 

எம் இனம் சுதந்திரமாகவும், 
பண்பாட்டு விழுமியங்களுடன் 
வாழ போராடித்தான் ஆகவேண்டும்.  
இந்த வரலாற்றுப் பொறுப்பிலிருந்து 
இன்றைய இளைஞர்கள் 
விலகி நிற்க முடியாது. 
தம்பி அழைத்தது 
பயங்கரவாதமானது. 

நமக்கு வந்தா இரத்தம். 
அடுத்தவனுக்கு வந்தா 
தக்காளிச் சட்டினி தானே? 
----------------------------------------------------------- 

நதிகளில் 
மனிதன் 
குளிக்கிறான். 
துவைக்கிறான். 
கழுவுகிறான். 
கலக்குகிறான். 
வாருகிறான். 

நதிக்கரைகளில் தான் 
நாகரிகங்கள் அழிகின்றன. 
---------------------------------------- 

காவலனாக 
கேவலனாக  
வாழ்வதை விடவும், 
எருமை மாடாக வாழ்தல் 
ஒன்றும் 
அவ்வளவு இழிவானதல்ல. 
------------------------------------------- 

புகைவண்டிகளில் 
விற்கப்படும் பண்டங்கள் 
வாங்குபவனுக்காக அல்ல, 
விற்பவனுக்காகத் தான். 
--------------------------------------------- 

என் தனிமையை யாரும் 
கேள்விக்குட்படுத்தாதீர். 
மதில் மேல் பூனையான 
என் சைத்தானின் வரம்பு மீறல்களை, 
அவை பொதுமைப் படுத்திவிடும் 
அபாயமே அதிகம். 
அடுத்தவனின் நாட்குறிப்பில் 
அறிந்துகொள்ள ஒன்றுமில்லை. 
சிதம்பர இரகசியங்கள் 
வெளிச் சொல்வதற்கில்லை. 
--------------------------------------------------------- 

யானைகள் புகுந்த 
கரும்புக் காடானது 
அரசியல் மாநாடு 
முடிந்த நகரம். 
----------------------------- 

ஆயுள் காப்பீட்டு முகவர்கள் 
அடுத்தவனின் சம்பளத்திலேயே 
தங்களின் வரவு செலவை 
தீர்மானிக்கிறார்கள். 
-------------------------------------------------- 


சில்லறைச் சலம்பல் செய்யும் 
அரசு குடிமகன்களும்,   
கவனக்குறைவாய் குழந்தைகளை 
கையாளும் பெண்களும் 
என்னை மட்டும் தான் 
பதறவைக்கிறார்கள். 
---------------------------------------------------- 

தலைவனின் பிறந்த தினத்தை 
கொண்டாடும் தொண்டரடி பொடிகள், 
இந்த தலைவர்கள் 
ஏன் தான் பிறந்தார்களோ 
என மக்களை 
எண்ண வைத்து விடுகிறார்கள். 
---------------------------------------------------------- 

அரசு கையகப்படுத்திய 
நிலத்திலிருந்து வெளியேறியவனின் 
நிவாரணத் தொகையுடன் 
சேர்ந்தே தொலைந்தன 
அவனுடைய முகமும், 
முகவரியும். 
--------------------------------------------------------- 

தன் மகன்களின் 
வயதைப் பார்த்தே 
தன் வயதை 
உணரும் தகப்பன்கள். 
---------------------------------------------- 

சாலை நடுவே 
சிலை வைத்து, 
சிலையைச் சுற்றி 
வலை வைத்து 
சாதியம் காக்கிற 
சனநாயகமே போற்றி! 
---------------------------------- 

உயிர் ஆபத்துக்கு 
உதவ மறுத்தவன்  
மதுவருந்தச் சொல்லியோ 
மல்லுக்கட்டுகிறான். 
----------------------------------------- 

ஆளும் வர்க்கத்தை 
எதிர்க்கும் யானைகளை 
அடக்கும் அங்குசம் 
சொத்துக்குவிப்பு வழக்கின் 
வடிவில் காத்திருக்கிறது. 
----------------------------------------- 

ஆண்டவனும்,  
ஆள்பவனும் 
பிய்ந்த செருப்பைவிட 
நைந்த வாழ்க்கையை 
வாழ்பவனாகத் தான் 
வைத்திருக்க வேண்டும் 
என் செருப்பை 
எடுத்துச் சென்றவனை. 
------------------------------------- 

இன உணர்வாளனின் 
மகிழுந்தை உடைத்தான். 
அலுவலகத்தை 
அடித்து நொறுக்கினான். 
விளம்பரத் தட்டிகளை 
கிழித்து நாசப்படுத்தினான். 
பணத்திற்காக இனத்தை 
காட்டிக் கொடுத்தவன் 
தன்னை அகிம்சாவாதி என்றான். 

தன்னையேக் கொளுத்தி 
தன் இனத்தின் அறியாமை 
இருள் நீக்கியவனையோ 
பயங்கரவாதி என்றான். 

வல்லான் வகுத்ததே 
சட்டமானது 
அந்த தேசத்தில். 
---------------------------------------------------- 

அரசு வாடிக்கையாளனின் 
முத்த மழையில் 
நனைந்த குழந்தை 
போதையேறி 
மயங்கிச் சரிந்தது. 
---------------------------------------- 

வயது வித்தியாசமின்றி 
'அண்ணே' என வாஞ்சையோடு 
அழைக்கும் எம் சனங்களை, 
மூர்க்கமாக முட்டி  
மோத வைப்பது 
சாதியா? 
மதமா? 
அரசியலா? 
------------------------------------------------ 


                             - அகரத்தான்.

Sunday, October 30, 2011

துளிகள்




பிழைப்புக்காக 
பட்டணம் போனவர்கள் 
தங்கள் மண்ணையும், 
பழகிய மக்களையும் 
பத்தமடைப் பாய்க்குள் 
சுருட்டி கையோடு  
எடுத்து செல்கிறார்கள். 
------------------------------------ 

முதல் நாள் இரவில் 
குடை சாய்ந்த வண்டிகள் 
மறுநாள் காலை 
பரப்புரை வாகனங்களாகி 
விடுதல் இயல்பே. 
---------------------------------------- 

குழந்தைகளே 
ஏமாந்தது போதும்! 
பெரிய வெடிகளை 
வெடிக்கக் கூடாதென 
நமக்குச் சொல்லிவிட்டு 
இந்த அப்பாக்கள் மட்டும் 
வெடித்து மகிழ்வது 
எவ்வளவு பெரியத் துரோகம். 
---------------------------------------------- 

                          - அகரத்தான். 
                           --------------------   

Saturday, October 29, 2011

அநீதிகளை நீதியென வழங்கும் தேசத்தில்...




அது திருவாளர் தூய்மையின்
பொற்கால ஆட்சி காலம் .

நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாக
குடிகளின் முறையீடுகளால் 

கோட்டை வீட்டின் கதவுகள் 
பெயர்ந்து கொண்டிருந்தன.

கொடுங்கனவுகள் நனவாகி
குடிகளின் வாழ்வை
அச்சத்தில் ஆழ்த்தின.

வயல்வெளிகளில் மேய்ந்துகொண்டிருந்த
ஆடுகள் களவு போயின.

குடிகளின் முறையீடுகள்
கோட்டை வீட்டின்
கதவுகளைப் பெயர்த்தன.


குடிகளின் முறையீட்டை
புறந்தள்ளியபின்
அவன் சொன்னான்.
"எனக்கு தெரியாது.
அது நடந்திருக்காது."

அப்போது தூய்மையின் தோழர்கள்
ஆட்டிறைச்சியை ஊதி ஊதிப் புசித்தனர்.


மற்றொரு நாள்
மலையில் மேய்ந்துகொண்டிருந்த
கறவைமாடுகள் களவு போயின.

புறந்தள்ளப்பட்ட முறையீடுகளும்
பதில்களும் வேறுபடவில்லை.

அப்போது அவர்கள்
நுரை பொங்கிய கலயங்களில்
பாலருந்தி கொண்டிருந்தனர்.

பிறிதொருநாளில்
ஏர் கலப்பைகள் கழனிகளிலிருந்து
களவு போயின.


குடிகளின் முறையீடுகளும்
திருவாளரின் பதில்களும்
மாற்றமில்லாமல் தொடர்ந்தன.

அப்போது அவர்கள் தொழுவத்தில்
சாய்த்து வைக்கப்பட்டிருந்த
ஏர் கலப்பைகளுக்கு வண்ணம்
பூசிக்கொண்டிருந்தனர்

சிறிது கால இடைவெளியில்
குடிகளின் காணிகள்
களவு போயின.

குடிகளின் முறையீடுகளும்
திருவாளரின் பதில்களும்
மாற்றமில்லாமல் தொடர்ந்தன.

கோட்டை வீட்டு
காணிகளின் பரப்பெல்லை
விரிவாக்கம் கண்டிருந்தன.

பின்னொரு நாளில்
கிணறுகள் களவு போயின.

குடிகளின் முறையீடுகளும்
திருவாளரின் பதில்களும்

மாற்றமில்லாமல் தொடர்ந்தன.


இப்போது கிணறுகள்
கோட்டை வீட்டு காணிகளின்
நடுவே கிடந்தன.

அப்புறம் வீடுகள்
களவு போயின.


குடிகளின் முறையீடுகளும்
திருவாளரின் பதில்களும்
மாறுபாடில்லாமல் தொடர்ந்தன.


இப்போது வீடுகள்
கோட்டை வீட்டின் ஆளுகைக்குள்

அடக்கமாகி இருந்தன.

சற்று இடைவெளிக்கு பின்
களங்களில் காய்ந்த
தானியங்கள் களவு போயின.

பின் அவைகள்

கோட்டை வீட்டின் குதிர்களை
நிறைத்து வழிந்து கொண்டிருந்தன.

புறந்தள்ளப்பட்ட குடிகளின்
முறையீடுகள் எல்லாம்
ஓர் நாள் அம்புகளாகி நின்றன.

அப்போது
இலக்குக்கு நாள்குறித்து,

குடிகள் தீர்க்கமாக
உரத்து முழங்கினர்.

"அது எங்களுக்கு தெரியும்.
அது நடந்தே தீரும்."

அது என்பது
எது என்று
அவர்களும் சொல்லவில்லை.

நானும் கேட்கவில்லை.
------------------------
- அகரத்தான்.



Friday, October 28, 2011

கவிதைக்காரன் நாட்குறிப்பிலிருந்து...

இரவல் புத்தகங்கள் 
-------------------------------------------------------

எச்சில் தொட்டு
பக்கங்களைப் புரட்டுவதும்,
படித்த பக்கத்தை
மடித்து வைப்பதும்,
தலைக்கு வைத்து படுப்பதும்,
பிஞ்சுக் கரங்களில் கொடுத்து
வேடிக்கைப் பார்ப்பதையும் காட்டிலும்,
புத்தகத்தை புத்தகமாகவே
வைத்திருப்போர் பரவாயில்லை தான்.
-------------------------------------------------------------

உயிர் எழுத்து 

--------------------------------------

காதலைப் பற்றி கோடி பேரும்,
வாழ்வைப் பற்றி சிலநூறு பேரும்
எழுதியும் தீரவில்லை.
காதல் வாழ்வின்
ஒரு அங்கமேயாதலால்,
சிறுபான்மைக்கு ஆதரவாக
வாழ்வை எழுத
களமிறங்க வேண்டியாயிற்று.
-----------------------------------------------

                              - அகரத்தான்
                             --------------------- 

Thursday, October 27, 2011

தத்து பித்து

சுயம்பு
 -------------------

கடவுளைக் கண்டால் அழைத்து வா
பேசுவதற்கு ஏராளம் உள்ளன.

புராண, இதிகாசக் கற்பனைகளை
குப்பையில் தூக்கி எறி.  

இறையாண்மையின் அளவுகோல் 
மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுமா?

சுதந்திர தினம் முட்டாள்களின் தினம்.
அதைப் புறக்கணியுங்கள் என்றால்

நீங்கள் கேட்கவாப் போகிறீர்கள்?

தானாகத் தெளிவீர்கள்.
அதுவரைக் காத்திருக்கிறேன்.
-------------------------------------------------------------

அளவுகோல் 

 -----------------------------------

தாத்தா வெகுளி,
எறும்புக்கும் தீங்கிழைக்காதவர்.
அதிர்ந்தும் பேசாதவர்.

அப்பா குடிநோயாளி. 
சீட்டு, குடிக்கு அடிமையாகி,
நாற்பதுச் சொச்சத்தில்
ஆயுளை தொலைத்தவர்.

என்னை எடுத்துக்கொள்.  
அயோக்கியத் தனங்கள்
அத்தனையும் அத்துப்படி.
மகானாவதற்கான வாய்ப்பு
எனக்கு அதிகம்.

பரம்பரைப் பெருமை பேசி
உங்களை ஆளும் வாய்ப்புக்காக
வாசற்படி வந்து நிற்பவனை,   
எந்த அளவுகோலை வைத்து
அளவிடுவீர்கள் என் மக்களே!
----------------------------------------------------

                          - அகரத்தான். 

Wednesday, October 26, 2011

யோசிச்சா செத்தா போயிடுவ?



மக்கள் மனதில்
தன் பெயரை எழுதாதவன் 
அடுத்தவன் சுவற்றில்
எழுதிப் பார்க்கிறான்.
----------------------------------------

குதிரை பேரம் முடித்து 
ஆட்சியில் அமர்ந்த கழுதைக்கு 
மனிதனைப் பற்றி
யோசிக்கக்கூட நேரமில்லை.
-----------------------------------------------
    
ஒவ்வொரு ஓட்டுக்கும்
உசுரு முக்கியம்.
அரசு சாராயக் கடையை
தேர்தல் முடியுமட்டுமாவது
மூடுனா தேவலை.
--------------------------------------------

திருடுவான்னு தெரிஞ்சும்
வீட்டு சாவியை திருடன்
கையிலக் கொடுப்பது தான் 
உலகப் பெரும் சனநாயகம்.
-------------------------------------------    

மட்டைப் பந்துப் வேடிக்கை பார்.  
கொடியேற்றி மிட்டாய்
கொடுத்தால் வாங்கிச் சாப்பிடு.
பாரத் மாதாகி ஜே ,
ஜெய் ஹிந்த் சொல்லு.
வாழ்வாங்கு வாழ்வாய்! 
------------------------------------------------

யாழ்ப்பாணத்தில் 
எண்ணெய் வளம் இல்லை.
அதனால் தான்
அவர்களுக்கு எதுவுமே இல்லை.
----------------------------------------------------

எண்ணெய் வளம்
இல்லாத தேசத்தில் 
உரிமைக்குரல் எழுப்ப
யார் அனுமதித்தது?
அடக்கு.
அழித்தொழி.
-----------------------------------     
                                           - அகரத்தான்.  




Tuesday, October 25, 2011

தீபத் திருநாள் - அலையடிக்கும் நினைவுகள்.




தீபாவளிப் பண்டிகைக்கு  
ஒரு வாரம் முன்பிருந்தே  
மத்தாப்பு பொறி பறக்கும்.   
மனசெல்லாம் தீ புடிக்கும். 


புதுத்துணி பத்துன கனவுல  
அணிஞ்சிருக்கும் பழந்துணிய   
எப்படா கழத்தி வீசுவோமுனு 
மனசு நாள் குறிக்கும். 


இட்லி, தோசை, 
இனிப்பு, பலகாரம் நெனச்சாலே 
நாவெல்லாம் எச்சிலூறும். 


வெளையாட்டுத்தனம் ஒதுக்கி வச்சு 
மாவாட்டும் அம்மாவுக்கு 
மறு பேச்சில்லாம தலையாட்டி 
ஏண்டதைச் செஞ்சு நிப்பேன்.        


வகை வகையா பட்டாசு 
வாங்க வக்கில்லேன்னாலும் 
ஊருக்குள்ள பெரிய வெடி 
யாரெல்லாம் வெடிப்பாங்கன்னு 
தெரிஞ்சி வச்சிருந்து தேடி போய் 
வேடிக்கை பார்த்து கெக்கலிப்பேன். 


நாலணாவோ, எட்டணாவோ 
நாணயத்தைக் கண்டுப் புட்டா, 
செட்டியாரு பட்டாசுக்கடை வாசலில 
செட்டு செட்டா கனவோட 
செம்மாந்து நின்னுருப்பேன்.      


அது ஊருக்குள்ள 
எழவுப் பெட்டி வராத காலம்.    
எங்க சனங்களெல்லாம் 
மனுச உறவுகள மதிச்ச காலம். 


டெண்டு கொட்டகையில் 
பழைய படம் மாத்தியிருப்பான். 
புதுப் பட சுவரொட்டியிலேயே 
பாதிப்படம் பாத்துடுவோம்.  
மீதிப் படத்த பார்த்து தீர்க்க 
மத்தியானச் சினிமாவுக்கு 
காலையிலேயே நின்னுருப்போம். 


மூணுச் சீட்டு, ரங்கரக்கட்டை, 
சினிமாப் பாட்டுப் புத்தகம், 
சவ்வு மிட்டாய்,  
வறுத்த வேர்க்கடலையோட    
கடை விரிச்சிருக்கும் 
கொல்லிமலைச் சாமியாரு கூடவே 
எனக்கு வலயவும் விரிச்சிருப்பாரு. 


அவரப் பார்க்காம தாண்டிட்டன்னா 
சினிமாவப் பாத்துடுவேன். 
பார்த்துத் தொலச்சிட்டன்னா           
மனசத் தொலைச்சிடுவேன். 


சினிமா கொட்டகைல  
அகரத்தானா தான் நுழையுவேன். 
வெளிய வரும்போது 
படத்தோட நாயகனாதான் வருவேன். 


தீபாவளி பண்டிகையில வெந்து தீஞ்சு 
வீட்டுப் பாடம் செய்யாம 
மறுநாள் பள்ளி வகுப்பறையில நுழைஞ்சி   
பெருமாளு வாத்தியாரப் பார்க்கையில, 
அந்த பெருமாளைத் தான் வேண்டிக்குவேன்.    


அவரு நம்ம வாத்தியாரா 
மாறிக் கொடுப்பாரு. 
நானு நம்பியாரா 
மாறி வாங்கிக்குவேன். 


அது ஒரு கனாக்காலம்.   
                ------------------------


                           - அகரத்தான். 

கலிகாலம்.....



பேய்கள் அரசாண்டால்
சாத்திரங்கள் 
பிணம் தின்னுகின்றன.


பிசாசுகளுக்கு 
தரித்திரம் பிடித்தால்
அகோர பசிக்கு, 


பாவம் !


தார்சாலைகளையும்
கான்கிரீட் வீதிகளையும் 
வானுயர்ந்த பாலங்களையும் 
விழுங்கி ஏப்பம் விடுகின்றன.
               -------------------               
                       - அகரத்தான்.



Monday, October 24, 2011

மனிதாபிமானம்





சுட்ட மரத்தினுள்

கருகிய குஞ்சுக்காக

வட்டமிடும் பறவையின்

சிறகெல்லாம் சிதறுது

பொறுக்கு!! பொறுக்கு!!

காது குடையலாம்......!!!




Sunday, October 23, 2011

இது காந்தி தேசமா?

நிறுவன சனநாயகம் 



ஒரு உசிர அழிச்சாக்க கொலைங்கறான்.
ஒரு லட்சம் உசிருகள
அழிச்சாக்க தேசப் பற்றுங்கறான்.
ஒரு ரூபா அபகரிச்சா திருட்டுங்கறான்.
ஒண்னே முக்கால் லட்சம் கோடி
அபகரிச்சா ரைட்டுங்கறான்.
ஊழலுக்கு எதிரா மக்களை
அணி திரளச் சொல்லுறான்.
விதிவிலக்கா பிரதமர மட்டும்
விட்டுறச் சொல்லுறான்.
அந்நியச் செலாவணி மோசடிய 
தடுக்கறேங்கறான்.
கொள்ளையடிச்ச பணத்தை எல்லாம்
சுவிசுல பதுக்கி வைக்கிறான். 
அயல் நாட்டு வங்கியில
கறுப்புப் பணப் பட்டியல
வாங்கிட்டேங்கறான்.
ஆனா பட்டியலுல யாரிருக்கான்னு
சொல்ல மறுக்குறான்.
(திருடனா இருந்தவன்தான் 
அரசியலுக்கு வரானுகளா?
அரசியலுக்கு வந்தப்புறம் தான்
திருடப் பழகுறானுகளா?)
எல்லை தாண்டிய பயங்கரத்தை
ஒடுக்குறேங்கறான்.
ராமேசுவரத்துல மீனவனைக் கொல்ல
சிங்களவனுக்கு ஆயுதம் கொடுக்குறான்.
மும்பை கடலோரக் காவற்படைய
தமிழக கடலோரம் குவிச்சு
தமிழனோடத் தொடர்புகளை
துண்டிச்சு கொல்லுறான்.
மும்பைத் தாக்குதலுக்கு 
ரத்தினக் கம்பளம் விரிக்குறான்.
கொத்து கொத்தா
செத்தவங்களக் காட்டி
அரசியல் வயிறு பிழைக்கிறான்.
வசதியாக தன் தவறுகளை
மூடி மறைக்குறான்.      
போபால் விசவாயு படுகொலைக்கு
நீதி வேணுங்கறான்.
முதலமைச்சரு தனி விமானத்துல
எதிரி தப்பிச்சுப் போகுறான்.
கால் நூற்றாண்டு கழிஞ்ச பிறகும் 
மக்களுக்கு அநீதிய வழங்குறான்.
உடந்தையா இருந்தவனெல்லாம்
அபராதத்த கட்டி ஓடிப் போகுறான்.
நாட்டோட பாதுகாப்புல
சமரசம் இல்லேங்கறான்.
ஆனா ஆயுத பேர ஊழலுல
அங்கம் வகிக்கிறான்.
மழையில நனைஞ்சு
வீணாகும் தானியங்களுக்கு 
கிடங்கு கட்ட மறுக்குறான்.
தனியார் கிடங்குல வைக்க 
ஏலம் கூவுறான்.
வீணாகும் விளைபொருளை
கடலுல கொட்டுனாலும்
விவசாயிக்கு கொடுக்க மறுக்கிறான். 
வருசத்துக்கு பத்துமுறை
எண்ணெய் விலைய ஏத்துறான்.
முதலாளி வாழ்வாங்கு வாழ
வழி வகுக்குறான்.
சிறப்பு பொருளாதார மண்டலங்கறான்.
விமான நிலையங்கறான்.
அணு உலைங்கறான்.
இன்னும் என்னென்னமோ சொல்லி
விளைநிலங்களை ஆக்கிரமிக்கிறான்.
யாருக்கும் சூடு இல்லை.
யாருக்கும் சொரணை இல்லை.
யாருக்கும் வெட்கமில்லை.
யாருக்கும் மானமில்லை. 
அடுத்த தலைமுறை
சோறுதான் திங்குமா? 
எம்மதமும் சம்மதமுன்னு
சொல்லி திரியுறான்.
டெல்லியில சீககியனக்
கொன்னு வீசுறான். .  
பாபர் மசூதிய இடிக்க விட்டு
வேடிக்கை பாக்குறான்.
இடிச்சவனுக்கு தண்டனை இல்லேங்குறான்.
இடி பட்டவனுக்கு கொஞ்சூண்டு
கருணை பிச்சை போடுறான்.
கண்ணால் காண்பதும் பொய்.
காதால் கேட்பதும் பொய்.
தீர விசாரிப்பதே மெய்ங்கறான்.
ஆனா, நம்பிக்கைகளின் அடிப்படையில
தீர்ப்ப வாசிக்குறான்.
குசராத்த மத கலவரத்துல
தகிக்க வைக்கிறான்.
ஒரிசாவுல கிறிஸ்தவன
ஒழிச்சு கட்டுறான்.  
காஷ்மீர் முதல் குமரிவரை
சிறுபான்மையரக் தீர்த்துப் போடுறான். .
இனப் படுகொலைய நடத்திட்டு
நாற்காலில இருக்கறான்.
கருங்காலித் தமிழனால
நாட்டை ஆளுறான்.
இனக் கொலையாளனோடு
கொஞ்சிக் குலவுறான்.
பிரதமர சீக்கியன் கொன்னா  
பிரதமர் பதவி கொடுக்குறான்.
சீககியனக் கொன்னவனுகள
மொன்னக் கமிசன வச்சு
நிரபராதிங்கறான்.
கைம்மாறா தேர்தல்ல
சீட்டும் கொடுக்குறான்.
கொந்தளித்த சீக்கியனோ
நரகல் மிதிச்ச
பிஞ்ச செருப்பாலடிக்கிறான்.
பழைய ஷூவாலடிக்கிறான்.
பதவி படுத்தும் பாட்டுனால
எல்லாம் மறந்து போகுறான்.
உடனே மன்னிப்பும் கேக்குறான்.
பார்வையாளர்களக் கண்டதுமே
"தே..யா" சிரிப்பு சிரிக்குறான்.
ஒவ்வொரு நாட்டுக்கும்
இறையாண்மை இருக்குதுங்கறான்.
ஆனா அடுத்த நாட்டுல
டர்பனுக்கு தடை விதிச்சா
துடிச்சுபோகுறான்.
தனியா சட்டம்
இயற்றச் சொல்லுறான்.
அடுத்த நாட்டு அதிபரைக் கொல்ல
சீக்கியன் குண்டு வைக்கிறான்.
அவனோட மரணதண்டனைய
இங்கிருந்தே நிறுத்தச் சொல்லுறான்.
அவனப் போலவே நானும்
பாழும் தேசத்துக்கு
வரி கட்டுறேன்.
வட்டி கட்டுறேன்.
திரை கட்டுறேன்.
கிஸ்தி கட்டுறேன்.
கட்டுன வரிய ஆயுதமாக்கி
என் கண்ணையே குத்துறான்.
அவன் மசுரக் கூட
உசுராக நெனக்கறேங்கறான்.
ஆனா, நம்ம உசுரக் கூட
மசுராக நெனக்க மறுக்குறான்.
அடுத்த நாட்டு பிரச்சினைல
உள்ள நுழையறான்.
நுழைஞ்சு வங்க தேசத்தை
பிரிச்சு கொடுக்குறான்.
அப்ப எல்லாம் இறையாண்மை
அவன் பேசுனதே இல்லை.
இனக்கொலைய நிறுத்தச் சொன்னா
இறையாண்மைய மீறுறேங்கறான். .
என் இனத்தை வேரறுத்தவனோட 
நட்பு பாராட்டுறான்.
என் வீட்ட
பிணக் காடாக்கி, 
செத்த வீட்டுல அழுததுக்கு
கைது செய்யுறான்.
எவனோ கனா கண்டாப்புல
அமர்ந்திருக்கனும்னு
ஆர்டர் போடுறான்.
காந்தி ஆர்டர் போடுறான்.
இது காந்தி தேசமாம்.
ஐயா,
இது காந்தி தேசமா?
    

காமம் (kamam)

புரிந்து கொள்!
இல்லை,
புணர்ந்து கொல்.
--------------------------


பிறக்காத தலைமுறைக்கும்
சேர்த்தே
புதைகுழி வெட்டியவனை
கொண்டாடியது ஒரு தேசம்
முதல் குடிமகனாய்...
--------------------------------------------

பால் விலையை விட
தண்ணீர் விலை கூட,
ஆட்சிப் பீடத்தில்
பொருளாதாரப் புலி.
-------------------------------

மகனாய் மட்டுமே
வளர்க்கிறார்கள் குழந்தைகளை
எல்லா தகப்பன்களும்.
------------------------------------
                             


தேர்தலில்
வெற்றி பெற்றவனின்
கொண்டாட்டத்தை விடவும்,     
வெற்றுப் பயலின்
வரம்புமீறல் தான்
முகம் சுழிக்க வைக்கிறது. 
----------------------------------------------

நாலு ரவுண்டுக்கு
செலவழிக்க முடியாதெனில்,
அப்புறம் என்னடா
நல்ல தலைவன்?  
------------------------------------

நரிகளுக்குத் தேவை
கொஞ்சம் இரத்தமும்
சில எலும்புத் துண்டுகளும்.

வாக்காளனுக்கு
காந்தி நோட்டும்
கவர்ன்மென்ட் சரக்கும்
கோழிப் பிரியாணியும்.
-----------------------------------------

அரைச் சாண் வயிற்றுக்காக 
அந்தர் பல்டி அடிக்கும்
குரங்குகளின் நிலையை விடவும்,  
அரைப் புட்டி மதுவுக்காக
அலைந்து திரியும்
மனிதக் குரங்குகளின் நிலை
பேரவலம் தான்.
--------------------------------------

இவ்வளவு பெரிய மனுசனை
இத்தனூண்டு கிளி தான்
சம்பாதித்துக்
காப்பாற்ற வேண்டியிருக்கிறது.
-------------------------------------------------

அணு அணுவென
அலைந்தவன்
அணு அணுவாய்
அழிவான்.
-----------------------------
                  - அகரத்தான். 

Saturday, October 22, 2011

இதனால் தெரிவிப்பது என்னவென்றால்...


இங்கு
சிறுநீர் கழிக்காதீர்
வாகனம் நிறுத்தாதீர்
எச்சில் துப்பாதீர்
குப்பை போடாதீர் என
எழுதிப் போட்டால் மட்டுமே
கேட்பேன் எனும் பிறவிகளுக்கு
சொல்வதற்கு ஒன்றுமில்லை.
--------------------------------------------------

கவனம் தமிழர்களே!
தமிழ்ச் சமூகத்திற்கு கேடு
இலக்கியம் படைக்கிறேன்
பேர்வழி என்று
கருணாநிதி வடிவிலும் வரலாம்.
அகரத்தான் வடிவிலும் வரலாம்.
----------------------------------------------------

பாலுக்குப் பூனையை
காவல் வைக்காதீர்!
தவறினால்
நீங்களுமாச்சு, 
பூனையுமாச்சு!
---------------------------------

குரங்கையும் அவனையும் 
தனித் தனியாக
பார்க்கத் தேவையில்லை.
அவ்வளவு அழகு.
------------------------------------------------------

                         - அகரத்தான்.     

Sunday, October 16, 2011

உங்களின் ஆயுளின் கடைசி நாளை அறிய வேண்டுமா



தனது ஆயுளின் கடைசி நாளை அறிய அனைவர்க்கும் ஆசை இருந்தாலும் அது பயம் கலந்ததாகவே இருக்கும் நமது ஆயுளின் கடைசி நாளை அறிந்து சொல்லும் ஒரு இணைய தளம் உள்ளது www.deathclock.com என்ற முகவரியில் உள்ள இணையத்திற்கு சென்று பிறந்த நாள், பிறந்த மாதம், ஆண்டு , ஆணா பெண்ணா போன்ற மேலும் சில விவரங்களை கொடுத்து பட்டனை அழுத்தினால் உங்கள் ஆயுளின் கடைசி நாள் காண்பிக்கப்படும் இதை நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்

ஆனால் ஒன்று
    சாகின்ற நாள் தெரிந்தால் வாழ்கின்ற நாள் நரகமாயிடும் 

Saturday, October 15, 2011

வெட்ட வெளிதனில்...

வீட்டுக்கு வந்ததும் கும்மாளமிடும் 
தீராத விளையாட்டுப் பிள்ளைகள்  
வகுப்பறையில் ஆசிரியரின் முகம் கண்டு  
களைத்து மயங்கிச் சரிகின்றன. 
---------------------------------------------------------------
எல்லோரையும் சிரிக்க வைக்கும் 
எங்களூர் குதிரைக்கார பூச்சியண்ணன்   
பூச்சி மருந்தை உட்கொண்டதில்,  
பெருக்கெடுத்த மல சலத்தில்  
வயிற்றிலிருந்த 
பூச்சிகளெல்லாம் செத்து மிதந்தன. 
------------------------------------------------------------------- 

ஊழல் வழக்கில் உள்ளேயிருக்கும் 
எதையும் தாங்கும் இதயங்கள்,  
கொசிக்கடி தாள இயலாமல் 
கதறுவதாக கொசுறுத் தகவல். 
------------------------------------------------------ 

தேர்தலுக்கு முன் 
கொள்ளைப் பணத்தில் 
கொஞ்சம் கிள்ளிக் கொடுத்தார்கள். 
கறுப்புப் பணத்தில் கொஞ்சம் கரைந்தது. 

தேர்தலுக்குப் பின் 
கருவூல வெள்ளைப்பணத்தில்  
அள்ளிக் கொடுத்தார்கள். 
கறுப்புப் பணம் மலைபோல உயர்ந்தது. 

முன்னது சட்டப்படிக் குற்றமாம்.  
பின்னது மக்கள் நலத் திட்டமாம். 
வாழ்க சனநாயகம்! 
------------------------------------------------------------

ஒரு துறையின் நிபுணத்துவம் பேண 
தகுதியும் தேர்வுமுறைகளும் தேவை 
மேலாண்மை செய்யவோ    
ஒரு மயிரும் தேவையில்லை. 
வாழ்க சனநாயகம்! 
---------------------------------------------------- 

தார்ச்சாலைக் கதகதப்பில்  
வாகனங்களுக்கு இரையாகும்  
அரவங்களும், 
நடமாடும் 
அரசுக் கருவூலங்களும். 
----------------------------------------------- 

எல்லோரும் கவிதை எழுதுவதால்  
வாக்கியங்களை மடக்கிப் போட்டு 
நானும் உரை எழுதி, 
கவிதை என்கிறேன். 
பழகிய பாவத்திற்காக பொறுத்தருள்வீர். 
--------------------------------------------------------------  

                                  - அகரத்தான்.  

Wednesday, October 12, 2011

சுயமரியாதை


சுயமரியாதைக்காரர்கள்   
கௌரவப் பிச்சைக்கு 
மக்களைக் கையேந்த வைத்து  
சுயமரியாதையில்லாமல் 
வாழப் பழக்குகிறார்கள்.  
-------------------------------------------------------------- 

நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டம்

 ----------------------------------------------------------

கும்பலாகக் கூடையைப் போட்டு 
குப்புறத் தூங்கும் திட்டத்தால் 
ஏரிகளும் குளங்களும் 
மக்கள் வெள்ளத்தில் நிரம்பி, 
கோவனாண்டிகளின் குடிகள் மூழ்கின.   
----------------------------------------------------- 

இறையாண்மை

 --------------------------------------------- 

கவனம் மக்களே! 
இறையாண்மைக்குப் பிறந்த 
அரசியல் வியாதிகள் 
தேச பக்தியின் அகோரப் பசிக்கு 
உங்களை இரையாக்கும் 
வாய்ப்பிருக்கிறது.  
-----------------------------------------------    
  
                               - அகரத்தான். 
Blogger Widgets