Saturday, October 29, 2011

அநீதிகளை நீதியென வழங்கும் தேசத்தில்...




அது திருவாளர் தூய்மையின்
பொற்கால ஆட்சி காலம் .

நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாக
குடிகளின் முறையீடுகளால் 

கோட்டை வீட்டின் கதவுகள் 
பெயர்ந்து கொண்டிருந்தன.

கொடுங்கனவுகள் நனவாகி
குடிகளின் வாழ்வை
அச்சத்தில் ஆழ்த்தின.

வயல்வெளிகளில் மேய்ந்துகொண்டிருந்த
ஆடுகள் களவு போயின.

குடிகளின் முறையீடுகள்
கோட்டை வீட்டின்
கதவுகளைப் பெயர்த்தன.


குடிகளின் முறையீட்டை
புறந்தள்ளியபின்
அவன் சொன்னான்.
"எனக்கு தெரியாது.
அது நடந்திருக்காது."

அப்போது தூய்மையின் தோழர்கள்
ஆட்டிறைச்சியை ஊதி ஊதிப் புசித்தனர்.


மற்றொரு நாள்
மலையில் மேய்ந்துகொண்டிருந்த
கறவைமாடுகள் களவு போயின.

புறந்தள்ளப்பட்ட முறையீடுகளும்
பதில்களும் வேறுபடவில்லை.

அப்போது அவர்கள்
நுரை பொங்கிய கலயங்களில்
பாலருந்தி கொண்டிருந்தனர்.

பிறிதொருநாளில்
ஏர் கலப்பைகள் கழனிகளிலிருந்து
களவு போயின.


குடிகளின் முறையீடுகளும்
திருவாளரின் பதில்களும்
மாற்றமில்லாமல் தொடர்ந்தன.

அப்போது அவர்கள் தொழுவத்தில்
சாய்த்து வைக்கப்பட்டிருந்த
ஏர் கலப்பைகளுக்கு வண்ணம்
பூசிக்கொண்டிருந்தனர்

சிறிது கால இடைவெளியில்
குடிகளின் காணிகள்
களவு போயின.

குடிகளின் முறையீடுகளும்
திருவாளரின் பதில்களும்
மாற்றமில்லாமல் தொடர்ந்தன.

கோட்டை வீட்டு
காணிகளின் பரப்பெல்லை
விரிவாக்கம் கண்டிருந்தன.

பின்னொரு நாளில்
கிணறுகள் களவு போயின.

குடிகளின் முறையீடுகளும்
திருவாளரின் பதில்களும்

மாற்றமில்லாமல் தொடர்ந்தன.


இப்போது கிணறுகள்
கோட்டை வீட்டு காணிகளின்
நடுவே கிடந்தன.

அப்புறம் வீடுகள்
களவு போயின.


குடிகளின் முறையீடுகளும்
திருவாளரின் பதில்களும்
மாறுபாடில்லாமல் தொடர்ந்தன.


இப்போது வீடுகள்
கோட்டை வீட்டின் ஆளுகைக்குள்

அடக்கமாகி இருந்தன.

சற்று இடைவெளிக்கு பின்
களங்களில் காய்ந்த
தானியங்கள் களவு போயின.

பின் அவைகள்

கோட்டை வீட்டின் குதிர்களை
நிறைத்து வழிந்து கொண்டிருந்தன.

புறந்தள்ளப்பட்ட குடிகளின்
முறையீடுகள் எல்லாம்
ஓர் நாள் அம்புகளாகி நின்றன.

அப்போது
இலக்குக்கு நாள்குறித்து,

குடிகள் தீர்க்கமாக
உரத்து முழங்கினர்.

"அது எங்களுக்கு தெரியும்.
அது நடந்தே தீரும்."

அது என்பது
எது என்று
அவர்களும் சொல்லவில்லை.

நானும் கேட்கவில்லை.
------------------------
- அகரத்தான்.



No comments:

Blogger Widgets