வீட்டுக்கு வந்ததும் கும்மாளமிடும்
Tweet
தீராத விளையாட்டுப் பிள்ளைகள்
வகுப்பறையில் ஆசிரியரின் முகம் கண்டு
களைத்து மயங்கிச் சரிகின்றன.
---------------------------------------------------------------
எல்லோரையும் சிரிக்க வைக்கும்
எங்களூர் குதிரைக்கார பூச்சியண்ணன்
பூச்சி மருந்தை உட்கொண்டதில்,
பெருக்கெடுத்த மல சலத்தில்
வயிற்றிலிருந்த
பூச்சிகளெல்லாம் செத்து மிதந்தன.
-------------------------------------------------------------------
ஊழல் வழக்கில் உள்ளேயிருக்கும்
எதையும் தாங்கும் இதயங்கள்,
கொசிக்கடி தாள இயலாமல்
கதறுவதாக கொசுறுத் தகவல்.
------------------------------------------------------
தேர்தலுக்கு முன்
கொள்ளைப் பணத்தில்
கொஞ்சம் கிள்ளிக் கொடுத்தார்கள்.
கறுப்புப் பணத்தில் கொஞ்சம் கரைந்தது.
தேர்தலுக்குப் பின்
கருவூல வெள்ளைப்பணத்தில்
அள்ளிக் கொடுத்தார்கள்.
கறுப்புப் பணம் மலைபோல உயர்ந்தது.
முன்னது சட்டப்படிக் குற்றமாம்.
பின்னது மக்கள் நலத் திட்டமாம்.
வாழ்க சனநாயகம்!
-------------------------------------------------------------
ஒரு துறையின் நிபுணத்துவம் பேண
தகுதியும் தேர்வுமுறைகளும் தேவை.
மேலாண்மை செய்யவோ
ஒரு மயிரும் தேவையில்லை.
வாழ்க சனநாயகம்!
----------------------------------------------------
தார்ச்சாலைக் கதகதப்பில்
வாகனங்களுக்கு இரையாகும்
அரவங்களும்,
நடமாடும்
அரசுக் கருவூலங்களும்.
-----------------------------------------------
எல்லோரும் கவிதை எழுதுவதால்
வாக்கியங்களை மடக்கிப் போட்டு
நானும் உரை எழுதி,
கவிதை என்கிறேன்.
பழகிய பாவத்திற்காக பொறுத்தருள்வீர்.
--------------------------------------------------------------
- அகரத்தான்.
No comments:
Post a Comment