Monday, October 3, 2011

குமுறல்கள்




அணு உலை குறித்த
அச்சம் தேவையில்லை. 
நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும்,
மின் பற்றாக்குறையை சமாளிக்கவும்  
நாடாளுமன்ற,
சட்டமன்ற வளாகங்களில்
அணு உலைகளை நிறுவி 
நாட்டை வளப்படுத்துவோம்.
ஜெய் சங்கர்!
(ஜெய் ஹிந்த் யாருன்னு தெரியாது.
எனக்கு ஜெய் சங்கரை தான் தெரியும்)
-----------------------------------------------------

கந்தன் காய்ச்சியத்தை
குடித்தால் காலமாகிடுவாய். 
கவர்ன்மென்ட் காய்ச்சியத்தை
குடித்தால் வாழ்நாள் நீடித்திடுவாய்.
--------------------------------------------------------

தங்கள் பிறந்த தினத்தில் மட்டுமே 
மதுவிலக்கை அமல்படுத்த,       
எந்த தலைவனும் வலியுறுத்தவில்லை.            

இது சத்தியம்.
---------------------------------------------------------------

அணு உலையால்
உலகுக்கு ஆபத்தில்லையா? 

ஆபத்து தான்...
ஆனால் ஆபத்தில்லை. 

நதிகளில் அளவுகடந்து
மணல் வாருவது, 
மாசுபடுத்துவது
தவறில்லையா?

தவறு தான்...
ஆனால் தவறில்லை.

நெடிதுயர்ந்த மலைகளை
உடைத்து காசு பண்ணுவது
இது இயற்கை மீறலில்லையா?

மீறல் தான்...
ஆனால் மீறலில்லை.  

கனிம வளங்களைக்
கொள்ளையடிக்க வனங்களையும், பழங்குடியினரையும்
காலிசெய்வது தான் வளர்ச்சியா?  

வளர்ச்சியின்மை தான்...
ஆனால் வளர்ச்சி.   
 
நிலத்தடி நீரை 
புட்டிகளில் அடைத்து
வணிகப் பயன்பாட்டிற்கு விற்க
அனுமதிப்பது சரியா?

சரியில்லை தான்...
ஆனால் சரி.

விவசாயத்தை புறக்கணித்து, 
விவசாய நிலங்களை கூறுபோடுவதை
தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது
அரசுக்கு நல்லதாக தெரிகிறதா?  

நல்லதில்லை தான்... 
ஆனால் நல்லது  .

மது விற்பனையால்
அரசுக்கு இத்தனை கோடி
லாபம் என்பது பெருமையா?

சிறுமை தான்..
ஆனால் பெருமை.   

பூர்வகுடிகளை பூண்டோடு அழிக்க
வெட்டுக்கத்தி கொடுப்பது தான்
உனது இறையாண்மையா?

இறையாண்மை இல்லை தான்...
ஆனால் இறையாண்மை.

சொந்த தேசத்து வளத்தை
தானே சுரண்டி கொழுக்க,
மக்களிடம் அங்கீகாரம்
வாங்குவது தேர்தல் சனநாயகமா?

சனநாயகம் இல்லை தான்...
ஆனால் சனநாயகம்.

என்ன மக்கா,
கிருத்திரியம் பிடிக்குதா? 

நல்லா புரிஞ்சுக்க,

எதுவுமே நீ செய்தால் தான் தவறு. 
அரசாங்கம் செய்தால் சரி தான்.   
-------------------------------------------------------- 

                                  - அகரத்தான். 

No comments:

Blogger Widgets