Monday, October 31, 2011

ஆறாம் அறிவு ...



நூறு ரூபாய் கொடுத்தால் 
மனித மலமே 
செரிக்கப்படும் காலத்தில், 
ஓட்டுப் போடவும், 
கோசம் போடவும் 
ஆள் கிடைக்காதா? 
---------------------------------------- 

அறுபதாண்டுகளுக்குப் பின்   
அண்ணலின் கனவு 
நிறைவேறுகிறது.  
இளைய காந்தி பரப்புரை 
செய்த இடங்களிலெல்லாம் 
காங்கிரசு கரைகிறது. 
---------------------------------------------------------- 

ரத்தத்தைக் கொடு 
சுதந்திரத்தை நான் வாங்கித் தருகிறேன் 
நேதாசி முழக்கமும், 

சுதந்திரம் எனது பிறப்புரிமை 
அதை நான் அடைந்தே தீருவேன் 
திலகர் அறைகூவியதும் 
சுதந்திரப் போராட்டமானது. 

எம் இனம் சுதந்திரமாகவும், 
பண்பாட்டு விழுமியங்களுடன் 
வாழ போராடித்தான் ஆகவேண்டும்.  
இந்த வரலாற்றுப் பொறுப்பிலிருந்து 
இன்றைய இளைஞர்கள் 
விலகி நிற்க முடியாது. 
தம்பி அழைத்தது 
பயங்கரவாதமானது. 

நமக்கு வந்தா இரத்தம். 
அடுத்தவனுக்கு வந்தா 
தக்காளிச் சட்டினி தானே? 
----------------------------------------------------------- 

நதிகளில் 
மனிதன் 
குளிக்கிறான். 
துவைக்கிறான். 
கழுவுகிறான். 
கலக்குகிறான். 
வாருகிறான். 

நதிக்கரைகளில் தான் 
நாகரிகங்கள் அழிகின்றன. 
---------------------------------------- 

காவலனாக 
கேவலனாக  
வாழ்வதை விடவும், 
எருமை மாடாக வாழ்தல் 
ஒன்றும் 
அவ்வளவு இழிவானதல்ல. 
------------------------------------------- 

புகைவண்டிகளில் 
விற்கப்படும் பண்டங்கள் 
வாங்குபவனுக்காக அல்ல, 
விற்பவனுக்காகத் தான். 
--------------------------------------------- 

என் தனிமையை யாரும் 
கேள்விக்குட்படுத்தாதீர். 
மதில் மேல் பூனையான 
என் சைத்தானின் வரம்பு மீறல்களை, 
அவை பொதுமைப் படுத்திவிடும் 
அபாயமே அதிகம். 
அடுத்தவனின் நாட்குறிப்பில் 
அறிந்துகொள்ள ஒன்றுமில்லை. 
சிதம்பர இரகசியங்கள் 
வெளிச் சொல்வதற்கில்லை. 
--------------------------------------------------------- 

யானைகள் புகுந்த 
கரும்புக் காடானது 
அரசியல் மாநாடு 
முடிந்த நகரம். 
----------------------------- 

ஆயுள் காப்பீட்டு முகவர்கள் 
அடுத்தவனின் சம்பளத்திலேயே 
தங்களின் வரவு செலவை 
தீர்மானிக்கிறார்கள். 
-------------------------------------------------- 


சில்லறைச் சலம்பல் செய்யும் 
அரசு குடிமகன்களும்,   
கவனக்குறைவாய் குழந்தைகளை 
கையாளும் பெண்களும் 
என்னை மட்டும் தான் 
பதறவைக்கிறார்கள். 
---------------------------------------------------- 

தலைவனின் பிறந்த தினத்தை 
கொண்டாடும் தொண்டரடி பொடிகள், 
இந்த தலைவர்கள் 
ஏன் தான் பிறந்தார்களோ 
என மக்களை 
எண்ண வைத்து விடுகிறார்கள். 
---------------------------------------------------------- 

அரசு கையகப்படுத்திய 
நிலத்திலிருந்து வெளியேறியவனின் 
நிவாரணத் தொகையுடன் 
சேர்ந்தே தொலைந்தன 
அவனுடைய முகமும், 
முகவரியும். 
--------------------------------------------------------- 

தன் மகன்களின் 
வயதைப் பார்த்தே 
தன் வயதை 
உணரும் தகப்பன்கள். 
---------------------------------------------- 

சாலை நடுவே 
சிலை வைத்து, 
சிலையைச் சுற்றி 
வலை வைத்து 
சாதியம் காக்கிற 
சனநாயகமே போற்றி! 
---------------------------------- 

உயிர் ஆபத்துக்கு 
உதவ மறுத்தவன்  
மதுவருந்தச் சொல்லியோ 
மல்லுக்கட்டுகிறான். 
----------------------------------------- 

ஆளும் வர்க்கத்தை 
எதிர்க்கும் யானைகளை 
அடக்கும் அங்குசம் 
சொத்துக்குவிப்பு வழக்கின் 
வடிவில் காத்திருக்கிறது. 
----------------------------------------- 

ஆண்டவனும்,  
ஆள்பவனும் 
பிய்ந்த செருப்பைவிட 
நைந்த வாழ்க்கையை 
வாழ்பவனாகத் தான் 
வைத்திருக்க வேண்டும் 
என் செருப்பை 
எடுத்துச் சென்றவனை. 
------------------------------------- 

இன உணர்வாளனின் 
மகிழுந்தை உடைத்தான். 
அலுவலகத்தை 
அடித்து நொறுக்கினான். 
விளம்பரத் தட்டிகளை 
கிழித்து நாசப்படுத்தினான். 
பணத்திற்காக இனத்தை 
காட்டிக் கொடுத்தவன் 
தன்னை அகிம்சாவாதி என்றான். 

தன்னையேக் கொளுத்தி 
தன் இனத்தின் அறியாமை 
இருள் நீக்கியவனையோ 
பயங்கரவாதி என்றான். 

வல்லான் வகுத்ததே 
சட்டமானது 
அந்த தேசத்தில். 
---------------------------------------------------- 

அரசு வாடிக்கையாளனின் 
முத்த மழையில் 
நனைந்த குழந்தை 
போதையேறி 
மயங்கிச் சரிந்தது. 
---------------------------------------- 

வயது வித்தியாசமின்றி 
'அண்ணே' என வாஞ்சையோடு 
அழைக்கும் எம் சனங்களை, 
மூர்க்கமாக முட்டி  
மோத வைப்பது 
சாதியா? 
மதமா? 
அரசியலா? 
------------------------------------------------ 


                             - அகரத்தான்.

No comments:

Blogger Widgets