Monday, July 23, 2012

கவிதை செய்!


 


 


 மருத்துவ பரிசோதனைக்கு
வந்த ஏனையோர்
மருத்துவர் என்ன சொல்லி விடுவாரோ
என்ற பயத்திலேயே
பாதி இறந்து விடுகின்றனர்.

------------------------------

--------------------------------------

ஹார்ட்  அட்டாக்கில்  மீண்டவன்
சிகிச்சைக் கட்டணத்தைக் கேள்வியுற்று
ஹார்ட் அட்டாக்கில் உயிரிழந்தான்.
-------------------------------------------------------------

குடித்து விட்டு தகராறு செய்தவனை
மிக வன்மையாக
கண்டித்துக் கொண்டிருக்கிறான்
குடிநோயாளி.
-------------------------------------------------------

மருத்துவ மனையில் நோயாளியை
கவனித்துக் கொள்ள வந்தவன்
மன நோயாளியானான்.
-------------------------------------------------------

விபத்தில் இறந்தவனை
சற்று முன் தான்
பார்த்துப் பேசியதாக சொல்லியே
உயிரோடிருப்பவர்களை
கொன்று விடுகிறார்கள்.
--------------------------------------------------

அந்த நால்வரும்
உடன் வரப் போவதில்லை.
பணமில்லாதவர்
தான் வெட்டிய குழியில்
தானே சென்று படுக்கக் கடவீர்.
------------------------------------------------

இன்று
ஒடுக்கப்பட்டோரின்
மிக வலிமையான ஆயுதமாக
அழுது வீங்கிய கண்கள் மட்டுமே இருக்கின்றன.
எப்போதும் அவ்வாறே இருக்க முடியாது.
---------------------------------------------------------------------- 

நிலாவைக் காட்டி
குழந்தைக்கு சோறூட்டியவர்கள்
இன்று
நடிகனைக் காட்டி
பொருளீட்டுகிறார்கள்.
------------------------------------------------ 

கண்களை மூடி
கடவுளை நிந்தித்து
அணிகலனை பறிகொடுத்தவள்,
கடவுளிடம் முறையிட்டாள்.
எப்போதும் போலவே
கடவுள் சிரித்துக் கொண்டிருந்தார்.
---------------------------------------------------

இலவசத்தை ஏற்கிற சபலத்தை
மாற்றுப் பெயரில்
பிச்சை யென்றும்  சொல்லலாம்.
-----------------------------------------------

சாராயத்தை நிறுத்தியவனை
அடுத்த தடவை பார்த்த போது
வெண் சுருட்டு பிடிக்கப் பழகியிருந்தான்.

வெண்சுருட்டை நிறுத்தியவனை
அடுத்த தடவைப் பார்த்தபோது
பாக்கைக் குதப்பிக் கொண்டிருந்தான்.

பாக்குக் குதப்புவதை நிறுத்தியவனை
அடுத்த தடவைப் பார்த்த போது
புகையிலையை திணித்துக் கொண்டிருந்தான்.

இவர்கள் எல்லோருமாக சேர்ந்து
நம் மூச்சைத் தான்
நிறுத்தி விடுவார்கள் போலிருக்கிறது.
-------------------------------------------------------------------

மழைக் கஞ்சி எடுப்பாரும்
மழைக் கஞ்சி பிழைப்பாரும்
ஒரு தராசின்
இரு தட்டுகளென
நிறுத்துப் பார்க்கிறது வாழ்க்கை. 
-----------------------------------------------

மனைவியை சந்தேகித்தவனையும்,
ஒருத்தியை பெண்டாண்ட ஐவரையும்,
மனைவியை அடகு வைத்து சூதாடியவர்களையும்,
கோபியர்களிடம் வரம்பு மீறுபவனையும்,
தீராக் காமத்தோடு
பிறன் மனையாளை நோக்குபவனையும்,
அறுபதினாயிரம் மனைவிகளைக் கொண்டவனையும்
கொண்டாடுகிற சமூகம்,
அதே செயலை
நீயும், நானும் செய்தால்
ஒப்புக்கொள்ளுமா?
---------------------------------------------------------------------------------

ஓவாப் பிணியை,
உறுபசியை,
சமூக அவலங்களை,
அரசியல் தின்று செரித்த சனங்களின் வாழ்வை,
இயற்கையின் பேரனர்த்தங்களை,
எம் அபிலாசைகளை நிர்மூலமாக்கும்
அந்நியத் தலையீட்டை,
இன ஒடுக்குமுறையை,
போர் பிய்த்தெறிந்த எம் கனவுகளை
பாடாமல்
காதலின் கொண்டாட்ட மனநிலையையும்,
இழப்பின் வலிகளையும்,
இயற்கையின் தரிசனங்களையும் மட்டுமே
பாடுதல் கவியாகுமோ?

கவிதை என்பது எம் மொழி.
கவிதை என்பது எம் வாழ்வு.
கவிதை என்பது எம் போர்முரசு.
கவிதை என்பது எம் போர்வாள்.
கவிதை என்பது எம் கேடயம்.
கவிதை என்பது எம் காலக்கண்ணாடி.

உலகெங்கும் சிதறிக் கிடக்கும்
எம் சனங்களை இணைக்கும்
இணைப்புக் கண்ணி.

யாம் அன்றாடம்
எதிர்கொள்ளும் அவலங்களை
உலகத்தோரிடம் கொண்டு சேர்க்கும்
தொடர்பு ஊடகம்.

இப்போது நீங்களும் கவி நெய்யலாம்.

Thursday, July 19, 2012

தூக்கு கயிறு
புதிய சட்டங்கள் அமலாகுமுன் 
மாற்றுக் கருத்துக்களுக்கு 
மதிப்பளிக்கும் சனநாயகம் 
ரோம் செனட்டில் இருந்தது. 

மாற்றுக் கருத்தாளர்கள் 
தங்கள் முன்னிருக்கும் 
மேசையின் மீதேறி நின்று 
தலைக்கு மேலாக தொங்கும் 
சுருக்குக் கயிற்றில் 
கழுத்தை நுழைத்துக் கொண்டு 
தங்கள் கருத்தை 
சபையில் முன் வைப்பார்கள். 

சபையோர் ஏற்றுக் கொண்டால் 
கயிறு அகற்றப்படும். 

சபையோர் ஏற்க மறுத்தால் 
மேசை அகற்றப்படும். 

உலக வரைபடத்தில் 
மற்றுமோர் ரோம் 
தன்னைத் தானே 
வரைந்து கொண்டிருக்கிறது. Wednesday, July 18, 2012

தவசி

------------------- 

கானல் அலையடிக்கும் வேகாத வெயிலுல
காலுல செருப்பில்லாம
காத்துல கைகளை வீசி
எட்டு மேல எட்டு வச்சி
பூமியோட நடுவகிடுல பேனைப் போல
ஊர்ந்து போவா பெரிச்சி கிழவி. 


இட்டேரிக் கரையெங்கும் 
உன்னி புதர்ச் செடியும், 
பிச்சிப் பூ வாசனையும், 
பனம்பழ வாசனையும், 
மஞ்சணத்தி மரத்துல 
தவுட்டுக் குருவிகளோட கெச்சட்டமும் 
கை புடிச்சு வழித் துணையா 
சக்கலாக் கரடு வரை வந்து போகும். 

சக்கலா கரட்டோரம் 
கொல்லிமலை பார்த்து விரிஞ்சிருக்கும் 
வாக்கப்பட்ட பூமியை 
குண்டாங்கல்லு மேல நின்னு 
கண்ணுக்கு மேல கைவச்சு நோட்டமிடுவா. 

சம்பா நெல்லு அறுவடை 
சக சோதியா தொடங்கியிருக்கும். 
பண்ணையாளு தவசி 
நெற் தாளுங்களை 
பாய்ஞ்சு பாய்ஞ்சு கட்டிட்டிருப்பான். 

தவசிக்கு வயிரம் பாய்ஞ்ச உடம்பு. 
கழனியிலிருக்கும் போது கோவணமும், 
பண்ணாடியைப் பார்க்க 
ஊருக்குள் வரும்போது 
இடுப்பில் வேட்டியும், 
தலையில் முண்டாசுமா வருவான். 
மேலாடையாக புழுதிப் பூத்திருக்கும்.
பக்கம் வரும்போது வியர்வை கசகசப்பு
புளிச்ச வாடை கொண்டு வரும். 


கழனிக்குப் போனாக்க 
தென்னை மரமேறி 
இளநீ போட்டு தாகமாத்துவான். 

மரவள்ளிக் கிழங்கு புடுங்கி 
தீயில வாட்டி தின்னக் கொடுப்பான். 

பப்பாளிப் பழம் பறிச்சு 
பாளம், பாளமா கீத்திட்டு 
பசியாத்துவான். 

இடையிடையே 
நெல்லி, கொய்யா, கடலை, 
மாங்காய், தட்டக்காய், 
வெள்ளரிப் பழமுன்னு, 
வகை வகையாப் பறிச்சு வந்து  
தின்னுறதை வஞ்சையோடப் பார்த்திருப்பான். 

வேகாத வெயிலுல 
வெந்து தணியுறவன் 
தீவாளி, பொங்கலு, 
மாரியாத்தா நோம்பின்னா மட்டும் 
வெட்டி, துண்டு வேண்டி நிப்பான். 

பண்ணைக்காரிச்சி பேரனுங்க எல்லாம் 
வாடா, போடான்னுவாங்க. 
கிச்சு கிச்சு மூட்டுனாப்புல 
சிரிச்சே தான் கிடப்பானே ஒழிய 
கோவிக்கத் தெரியாது. 

அப்பா வயசு ஆளாச்சே, 
வாடா, போடான்னு சொல்லுறது 
தப்பில்லையான்னு கேட்டா, 
பள்ளு, பறைக்கு எல்லாம் 
பவிசு ஒண்ணும் தேவையில்லை. 
அப்புடித் தான் கூப்பிடனும்னு 
வியாக்கியானம் பேசுவா பெரிச்சி. 

அறுவடை முடிஞ்சு 
அடுக்கடுக்கா மூட்டையடுக்கி 
ரெட்டை மாட்டு வண்டி பத்தி 
ஊஞ்சலாடும் லாந்தரு வெளிச்சத்துல 
கோம்பை தடத்து சல்லி எல்லாம் 
நொறு நொறுங்க சாமமுன்னு பாராம 
சளைக்காம வந்து நிப்பான். 

மரவள்ளிக் கிழங்கு புடுங்கி 
நெறபாரம் ஏத்தி வச்சி 
ரெட்டை மாட்டு வண்டி பத்தி 
புதன்சந்தை போய் வருவான். 

பண்ணக்காரி வெறகு எரிக்க 
மரவள்ளிக் கிழங்கு குச்சியடுக்கி 
ரெட்டை மாட்டு வண்டியில 
கண்ணசந்து படுத்திடுவான். 

பழகுன தடத்து வழி 
பாவிப் பய மாடுங்க ரெண்டும் 
பாதி ராவுலயும் பதவிசா வந்து சேரும். 

காலுக்கு செருப்பாக 
உழைச்சு களைக்கிறவன் 
வீட்டுக்கு வெளியவே தான் 
ஒத்தக்காலு கொக்காக நின்னுருப்பான். 

தவசியை வீட்டுக்குள்ளப் பாக்குறது 
குதிருக்குள்ள 
மூட்டையடுக்கும்போது மட்டும் தான். 

"அம்மாயி, தவசி வீட்டுக்குள்ள வரான். 
இப்ப வீடு தீட்டாகாதா?"
பேரனுங்க கேட்கும்போது 
வெளக்க மாரெடுத்து வெரட்டுவா. 

கொண்டு வந்த மூட்டையெல்லாம் 
ஒத்தையாளா இறக்கி வச்சு 
ரொம்ப பசியா இருந்தாக்க, 
"பண்ணைக்காரிச்சி, 
ரெண்டு உருண்டை கம்மஞ்சோறு 
கரைச்சு ஊத்து ஆத்தா, 
வயிறெல்லாம் பத்துது"ம்பான். 

வெங்காயம் கடிச்சு 
வெறுங்கையால வாங்கி குடிச்சவன் 
வந்த சுவடே தெரியாம 
வண்டி பத்தி போயிடுவான். 

தாளறுப்பு, 
தாள் கட்டு சொமக்குறது, 
தாளடிப்பு, 
தாள தூத்தி வாருறது, 
சாணி மொழுகுன களத்துல 
நெல்மணிய பரத்தறதுன்னு 

தவசியும், 
தவசி பொண்டாட்டியும், 
மூணு பிள்ளைகளும் 
சொடுக்கிவிட்ட பம்பரமா 
சொழன்று சொழன்று வாருவாங்க. 

கானல் வெயிலுல 
காலுக்கு செருப்பில்லாம வந்ததுல 
வெந்துபோன பாதத்துக்கு 
கத்தாழைச் சோறெடுத்து கட்டி விடுவான். 

நெற்குவியல் பக்கத்துல 
கயித்துக் கட்டில போட்டு 
பெரிச்சி கிழவி தூங்குறப்ப, 
நெல்லுக் குத்தேறிப் பக்கத்துல 
வேட்டிய விரிச்சிப் போட்டு 
கண்ணயர்வான். 

முணுக்குன்னு சத்தம் கேட்டா 
கண்ணை முழிச்சுப் பார்த்து 
"ஊய்.. ஊய்..னு காத்துலக் கை வீசுவான். 

தூங்குன நேரம் தவிர்த்து 
எஞ்சுன நேரமெல்லாம் 
உழைச்சுக் களைப்பான். 

கதிரறுப்பு முடிஞ்சதுமே 
நெல் அளப்பு நடக்கையில 
பகலுல சூரியனாகவும், 
ராவுல சந்திரனாகவும் 
கழனியிலையே காஞ்சு கெடந்த 
புள்ளக்குட்டிக்காரனுக்கு 
ஒரு வல்லம் நெல்லுமணி சேர்த்தளக்க 
மனசில்லாதவ பெரிச்சி. 

வெயிற் காலத்துல தான் 
கெணறு ஈரமில்லாம வறண்டிருக்கும். 
பேரு பெத்த பெரிச்சிக்கோ 
மனசு எப்பவுமே வறண்டிருக்கும். 

பேரு பெத்த பெரிச்சிக்கு 
மனசெல்லாம் சாதியக் கட்டு. 

சந்தைக்குப் போய் வந்தாலே 
சனங்களைத் தொட்டுருப்போமுன்னு 
கூடையை திண்ணையில வச்சுட்டு 
தலையோட தண்ணி ஊத்தி 
தீட்டுக் கழுவி வீட்டுல நுழையுறவ, 
தவசி கொட்டகையிலையா 
சோத்துக் கஞ்சி குடிப்பா? 

"பண்ணைக்காரிச்சி நல்லாயிருந்தாத் தான் 
நாங்க எல்லாம் நல்லாயிருப்போம். 
கோவமிருக்குற எடத்துல தான் 
கொணமிருக்கும்"னு சொல்லுறவன் 
தான் கஞ்சிக் குடிச்சாலும், 
குடிக்காட்டினாலும், 

பெரிச்சிக் கிழவிக்கு பசியாற 
பெரிய தென்னை மரமேறி 
பிள்ளையாருக்கு அணிலைப் போல 
இளநீ சீவிக் கொடுக்குறப்ப, 
குடுக்கையில நிரம்பி வழியறது 
இந்த பள்ளனோட வியர்வை தான்னு 
ஒரத்து சொல்லத் தோணும். 

சொன்னா குடிக்காம வச்சிடுவான்னு 
எதுவும் சொல்லாம 
இளநீ குடிக்கிற பெரிச்சிய 
தாயைப் போல பார்த்திருப்பான். 

தன்னை வெட்டும் மனுசனுக்கும் 
நீரையே வார்க்கும் பாளைக்கு 
வேறொன்றும் தெரியாது

Friday, July 13, 2012

வினை

------------------------------  

சனங்களின் பிரச்சினைகளுக்காக 

சிறைக்குள் சென்றவர்கள் 
தத்தம் சொந்த பிரச்சினைகளில் 
மூழ்கிப் போயினர் . 

---------------------------------------------  

உன்னுடைய சொல்லை 
உண்மையென நம்பித்தான் 
உன்னை ஆதரித்தோம். 
உன் பின்னே அணிவகுத்தோம். 
உனக்கு வாக்களித்தோம். 

பிரதி பலனாக, 
என் மீது கிளர்ச்சியைத் திணித்தாய். 
ஏற்றுக் கொண்டு வினையாற்றியபோது, 
தற்காக்க நகங்களைக் கூர் தீட்டியபோது 
தீவிரவாதம் என்றாய். 
தீவிரவாதத்தை தூண்டிய நீயோ 
பாதுகாப்புடன் வலம் வருகிறாய். 

நீ முன்னமே தீர்மானித்திருந்த 
மோதல் சண்டையில் 
நான் உயிரிழந்தான பொய்யை  
கட்டவிழ்த்து விடுகிறாய். 

இறையாண்மைச் சாயம் 
பூசப் பட்டிருக்கும் பொய்யை 
என்னைப் போல் ஒருவன் 
பின்தொடருகிறான். 

உனது அடுத்த ஆட்டத்தை 
நீ துவங்கத் தொடங்குகிறாய். 
-----------------------------------------------------  Thursday, July 12, 2012

தற்கொலை....
குழந்தையுடன் தாய் 
தற்கொலை  செய்தியை 
கேள்வியுற்ற ஏனைய கணவன்மார்கள் 
தத்தம் மனைவிகளுடன் 
அலைபேசியில் 
அன்புமழை பொழிகிறார்கள். 
----------------------------------------------------------- 

கொஞ்சம் காகிதங்களையும் 
நிறைய எழுத்துக்களையும் 
அடுத்த தலைமுறைக்கு 
கையளிக்கவிருக்கும் 
என்னை என் பிள்ளை 
எப்படி எதிர்கொள்வானோ? 
-------------------------------------------- 

உயிரையும் (அ), 
மெய்யையும் (ம்) 
கொடுத்தவள் 
உயிர்மெய்யாகி (மா)  
நிற்கிறாள். 
-------------------------------- 

மக்களாட்சி ஈன்றெடுத்த மன்னர்களே! 
நீங்கள் ஒன்றும் செய்யாதிருந்தால் 
நாங்கள் பிழைத்து விடுவோம். 
நல்லது செய்கிறேன் பேர்வழியென 
நீங்கள் கிளம்புவது தான் 
வயிற்றில் புளியைக் கரைக்கிறது. 
------------------------------------------------------------ 

கழனிக்கு சென்றிருந்த 
அம்மாக்களின் வருகைக்காக 
காத்திருந்த பிள்ளைகள் 
எல்லாம் வளர்ந்து,  
பள்ளியிலிருந்து வீடு திரும்பும் 
பிள்ளைகளுக்காக காத்திருக்கிறார்கள். 
-----------------------------------------------------------

Sunday, July 8, 2012

நாளை தாக்குமா வைரஸ் ??? தப்பிக்க வழிகள்

       உலகெங்கும் உள்ள கம்ப்யூட்டர்களில் இணைய தளம் மூலம் , டி.என்.எஸ் ..,எனப்படும் புதிய வைரஸ் நாளை தாக்க போவதாக தகவல்கள் வெளியாகின்றன .புதிய வைரஸ் தாக்குதலில் இருந்து தப்ப , ஆன்- லைன் சோதனை வசதிகளும் அறிமுகமாகி உள்ளன

       டி .என் . எஸ் .,(டொமைன் நேம் சிஸ்டம் ) என்பது இணைய தளத்தின் முகவரியை கணினிக்கு புரியும் வகையில் ஐ .பி ., எண்ணாக மாற்றி அந்த தளங்கள் திறக்க உதவுகிறது தற்போது டி.என்.எஸ் , சேஞ்சர் (அலுரியன் மால்வேர் ) என்ற வைரஸ் உருவாக்கி இதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டரை செயலிழக்க செய்யும் நாச வேலையில்  வெளிநாடுகளை சேர்ந்த 7 பேர் ஈடுபட்டுள்ளதாக கடந்தாண்டு தகவல் பரவியது .
   
        இதன் மூலம் பல கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் , பாதிப்புகளை தவிர்க்க அமெரிக்கா உளவு பிரிவான எப்.பி. ஐ.., மாற்று சர்வர் நிறுவியது இந்த சர்வர் நிறுத்தப்பட உள்ளதால் , வைரஸ் நாளை (9 ம் தேதி )மீண்டும் பரவ துவங்கிவிடும் என தற்போது தகவல்கள் வெளியாகின்றன
    
        திறன் வாய்ந்த ‘ ஆண்டி வைரஸ்’ சாப்ட்வேர் இல்லாதவர்கள் , ஆன் – லைன் மூலம் , டி.என்.எஸ் , சேஞ்சர் வைரசை கண்டறிய புதிய வசதி அறிமுகமாகி உள்ளது
      
         கம்ப்யூட்டர்களில் ‘வைரஸ்’ பாதிப்பு உள்ளதா என கண்டறிய www.dns-ok.us என்ற தளத்துக்கு செல்ல வேண்டும் . தளத்தில் நுழைந்த உடன் பச்சை நிறத்தில் ஐபி ஓகே  என தென்பட்டால் உங்கள் கம்ப்யூட்டரில் டி.என்.எஸ் வைரஸ் தாக்கவில்லை . வைரஸ் பாதிக்கப்பட்டிருந்தால் , சிவப்பு நிறத்தில் எச்சரிக்கை தகவல் காணப்படும்
வைரசை அழிக்க
     
        சோதனையில் உங்கள் கம்ப்யூட்டரில் ‘வைரஸ்’ பாதித்திருப்பது உறுதியானால் முதலில் இந்த படிவத்தை forms.fbi.gov/dnsmalware பூர்த்தி  செய்யவும் உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து அந்த வைரசை நீக்குவது எப்படி என இங்கே விளக்கம் தரப்பட்டுள்ளது .
விண்டோஸ் XP, Vista,7 கணினிகளுக்கு
  
          டி.என்.எஸ் , சேஞ்சர் வைரசை கணினியில் இருந்து நீக்க பிரபல ஆண்டி வைரஸ் நிறுவனமான ‘அவிரா’ புதிய மென்பொருளை உருவாக்கி உள்ளது ‘Avira DNS Repair என்ற லிங்க் மூலம் , மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளலாம்
  
        கம்ப்யூட்டர் பாதுகாப்பாக இருந்தால் இந்த மென்பொருள் இன்ஸ்டால் ஆகாது . ஒருவேளை பாதிகப்பட்டிருந்தால் வைரசை கண்டறிந்து உங்கள் கணினியில் இருந்து அழித்துவிடும் .
Saturday, July 7, 2012

டூரிங் டாக்கீசு

---------------------------------------------- அது ஒரு கனாக்காலம். 

மழைக் காலங்களில் 
நனையாமல் விளையாட 
தட்டாங் கல், தாயக்கரம், 
பல்லாங்குழி, பரமபதம், 
ஆடு, புலி ஆட்டம், கிளித்தட்டு. 

வெயிற் காலங்களில் 
வெளியில் ஓடி விளையாட 
கில்லி, அணிலா ஆடா, 
நீச்சல், நொண்டி ஆட்டம், 
கபடி, கண்ணாமூச்சி, 
உப்பு மூட்டை, எறிபந்து, 
சில்லி ஆட்டம், கோலி ஆட்டம். 

ஆண்டுக்கு ஒருமுறை 
திருவிழாவில் தெருக்கூத்தும், நாடகமும் 
கோலோச்சுனக் காலத்துல 
தினசரிப் பொழுதுபோக்குக்கு டூரிங் டாக்கீசு. 

அப்பன், ஆத்தா அடிச்சுட்டாங்கன்னு 
ஆத்த மாட்டாம  அழுதவங்களும், 
புருஷன், பொஞ்சாதிக்குள்ள 
பொணக்கிருந்தாலும், 
சேக்காளிகளுக்குள்ள 
சண்டை, சச்சரவுன்னாலும் 

சாயந்திரம் ஆகட்டும். 
சினிமாவுக்குப் போகலாம்னா 
பகையெல்லாம் பறந்து போகும். 
பாசம் தானாக் கூடிப் போகும். 

வறுத்த வேர்க்கடலை, 
நடமாடும் சுக்குத்தண்ணீ, 
சினிமாப் பாட்டுப் புத்தகம், 
சீமெண்ணத் திரிவிளக்கு, 
பார்வையாளர் மனசு ஊஞ்சலாட  
ரங்கர்க் கட்டை. 

பனைமர உச்சியிலிருந்து 
கூம்பு ஒலிபெருக்கியில  
மருதமலை முருகனும், 
வினைதீர்த்த விநாயகனும் 
கூப்பாடு போடுவாங்க. 

அப்போதெல்லாம் 
கம்பீரம் காட்டி நிற்கும் 
கருத்த யானை டூரிங் டாக்கீசு.  

ராத்திரி முதலாம் ஆட்டத்துக்கு 
வண்டி கட்டி வந்தவங்க 
வாத்தியார நம்பியாரு அடிக்கையில 
மண்ணாப் போயிடுவான்னு 
மண்ண வாரித் தூத்துரப்ப 
முன்னால உக்காந்திருந்து 
நான் மண்ணாப் போயிருக்கேன். 

மதுரை வீரனோட 
மாறு கை, மாறு கால் வாங்குறப்ப 
வாயிலும், வயித்திலும் அடிச்சு 
சனங்க அழுதரற்றுகையில 
நானும் கண் கலங்கியிருக்கேன். 

பாசமலர் பார்த்து 
சனங்களோட சேர்ந்தழுது 
கோவைப் பழம் கணக்கா 
கண்கள் செவந்திருக்கேன். 

அதே கண்கள் 
அதே இடம் 
அசையாம கொள்ளாம திகிலடிச்சு 
ஆணி அடிச்சாப்புல 
அப்படியே அமர்ந்திருக்கிறேன். 

செகன்மோகினியக் கண்டுட்டு 
தனியே மூத்திரம் பெய்ய பயந்து 
உக்கார்ந்த இடத்துலயே 
பூனை போல குழிபறிச்சு 
உச்சா போயிருக்கேன். 

சல்லிக்கட்டுக் காளையெல்லாம் 
துள்ளிக்கிட்டு ஆடுற 
அலங்காநல்லூர் வாடிவாசலுல 
காளையனோட சேக்காலியா 
முரட்டுக் காளையடக்க 
முண்டாத் தட்டியிருக்கேன். 

ஆறாப்பு படிக்கையில 
சூரிக்கோனார் உசுரிழந்ததா பொய் சொல்லி 
உசுருள்ளவரை உஷாவைப் பார்த்துட்டு  
உசுரு போக உதைவாங்குன அறிவழகனை 
பெருமித்தோடப் பார்த்திருக்கேன். 

முள்ளும் மலருமான 
காளியோடவும், வள்ளியோடவும் 
மலை, காடு மேடெல்லாம் 
வளைஞ்சு நெளிஞ்சு 
அலைஞ்சு திரிஞ்சிருக்கேன்.  

டவுசருக்கும், 
முழுக்கால் சட்டைக்குமான 
இடைப்பட்ட அரும்புமீசை 
அபாய வயசுல 
மௌனமான நேரத்துல 
சலங்கை ஒலி கேட்டு நெகிழ்ந்திருக்கேன். 

பதினாறு வயதினிலே 
ஒருக்களிச்சு ஒயிலாப் படுத்த மயிலு 
உள்ளுக்குள்ள உறங்கிட்டிருந்த சைத்தானை 
உசுப்பி விட்டுட்டா. 

நாகரிகம் எட்டிப் பார்க்கா 
மலைநாட்டு கிராமத்துல 
வட்டுக் கருப்பட்டியும், 
வாசமுள்ள ரோசாவுமாயிருந்த 
அப்புராணி செம்பட்டையோட
குடும்பச் சிதைவைக் கண்டு 
அதிர்ந்து போயிருக்கேன். 


ஊரடங்கும் சாமத்துல 
மூத்த தலைமுறை கண்ணுலப் படாம 
பலானப் படம் இரண்டாம் ஆட்டத்துக்கு 
முள்ளுப் புதரோரம் மூத்திர நாத்தத்துல 
பதுங்கிப் பாய்ந்து சீட்டு வாங்கி 

மண்ணைக் குவிச்சு வச்சு 
மலைமேலக் குமரனைப் போலமர்ந்து 
பெண்மையின் 
வெயிற் படாத அவயமெல்லாம் 
வெட்ட வெளிச்சத்துல 
பேருருவாப் பார்த்துப் பூத்திருக்கேன்.  

கொல்லிமலை அடிவாரம் 
கோம்பைக்காட்டுல வெறகெடுத்ததுக்கு 
அம்மா கொடுத்த அம்பது பைசா 
தங்கைக்காக வாழ்ந்து மடிஞ்ச 
தாடிக்கார அண்ணனை 
அடையாளம் காட்டுனுச்சு. 
 
மண்வாசனை மணத்தோட  
மாமன் மேல உசுரவச்சு 
மாமாங்கம் காத்திருந்து 
சருகா உதிர்ந்துபோன 
முத்துப்பேச்சிக் காதலுக்காக 
மாஞ்சு அழுதிருக்கேன்.  

கடலைக்கா தொலியுளிச்சு 
கைக்கு கெடச்ச காசுல 
ஓடுற தண்ணியில ஒரசுன 
சந்தன வாசம் புடிச்சிருக்கேன். 

அலிபாபாவோட அண்ணன் 
பொக்கிசங்களை வாரிச் சுருட்டையில 
கொள்ளைக்குப் போயிருந்த நாற்பது திருடர்களும் 
குகைக்குள்ள திரும்புறப்ப 
சூறைக் காத்துல இடுப்பொடிஞ்சு 
விழுந்துடுச்சு டூரிங் டாக்கீசு. 

இளைய தலைமுறை தலையெடுக்கிறப்ப 
மூத்த தலைமுறை மதிப்பிழந்து 
செல்லாக் காசாவது மாதிரி 

கால ஓட்டத்துல 
எங்க கதைசொல்லிகள் எல்லாம் 
எழவுப் போட்டியில 
கதைப் பார்க்கத் தொடங்குனதும் 
டூரிங் டாக்கீசு காணாமல் போயிடுச்சு. 

சுவரொட்டி ஓட்டுன இரட்டைத் தலையன் 
சரக்குந்துக் கிளீனராகவும், 

சீட்டுக் கிழிச்சிட்டிருந்த குறவன் 
உதிரிப் பூ விக்கவும், 

மொதலாளியும், குத்தகைதாரரும் 
மரவள்ளிக் கிழங்கு தரகிலும், 
கட்டிட ஒப்பந்தத்திலும் 
வண்டியை ஓட்டுறாங்க. 

சாய்ந்துகொள்ள தோள் கொடுத்து 
எவ்வளவோ சுகங்களை 
எவ்வளவோ துக்கங்களை 
எவ்வளவோ ஆறுதல்களை 
எவ்வளவோ அனுபவங்களை 
எவ்வளவோ பாடல்களை 
எவ்வளவோ பாடங்களை 
எவ்வளவோ கதைகளை 
எவ்வளவோ வாழ்க்கைகளை 
வாரிக் கொடுத்து 
எங்களைப் பிரமிக்கச் செய்த டூரிங் டாக்கீசு, 

அரிசி ஆலையாகவும், 
கல்யாண மண்டபமாகவும் உருமாற 
இடிபடுறத இடிஞ்சுபோய் 
இதயத்துல ரத்தம் கசிய 
சொல்லாத சோகத்தோட 

தொண்டைக்குள்ள 
எலும்பு சிக்குன நாயைப் போல 
விக்கிச்சு வேடிக்கைப் பாக்குறேன். 
-------------------------------------------------------------------------------------- Monday, July 2, 2012

காலப் பெட்டகம்

-------------------------------------------------------- 
நான்கு பக்கச் சுவர்கள் 
ஒழுகும் மேற்கூரை 
ஒரு சிதைந்த கரும்பலகைக்குள் 
அழியாமல் பாதுகாக்கப்பட்ட 
காலாதிகால நினைவுக்குறிப்புகளை 
மனக்கோழிக் கிளறிக் கலைக்கிறது. 
----------------------------------------------------- 

எல்லா ஊரிலும் கிடைக்குமெனினும்
தானே செய்த அரிசி முறுக்கை 
அசலூரில் தங்கிப் படிக்கும் 
தன் செல்லக்குட்டிக்கு 
யார் தலையிலேனும் 
சுமத்தியனுப்பும் அம்மாக்கள் 
இன்னுமிருக்கவே செய்கிறார்கள். 
---------------------------------------------------------------- 

குடும்பம், சமூகம் புறமொதுக்கி 
அறுபதும் முப்பதுமென 
தொண்ணூறு தினங்களையும் 
முயங்கி சுருண்ட நாய்க்காதல்கூட 
கடவுளின் காதலளவு குமட்டவில்லை. 
-------------------------------------------------------------------- 

என்ன தகிடுதத்தம் செய்தேனும் 
ஆட்சியதிகாரத்தை பிடிக்க தீர்மானித்தவன் 
மிகவும் பின்தங்கிய தொகுதி எதுவென 
பூதக்கண்ணாடி வழி தேடத் தொடங்குகிறான். 
------------------------------------------------------------------------------ 

தாழ் தளம், சொகுசு 
விரைவு, மிதவை என்பதெல்லாம் 
கட்டண உயர்வுக்காகத் தானன்றி 
சனங்களின் பயன்பாட்டுக்கு அன்று.  
-------------------------------------------------------------- 

துரியோதனர்கள் துகிலுரித்ததால் 
நதிப் பெண் 
அழவும் கண்ணீரின்றி 
அம்மணமானாள். 
-------------------------------------------------------- 

யாரையும் கேட்காமல் 
அமரும் இருக்கையினளவு குறைத்து 
தன் வருவாயைப் பெருக்கிய 
பேருந்தின் உரிமையாளன்,  
எல்லோரும் கேட்டுக்கொண்டும் 
பயணக் கட்டணத்தை  
குறைக்க மறுக்கிறான். 
----------------------------------------------------------------- 

எல்லோருக்கும் இரங்கற் பா எழுதி 
நீடூழி வாழ்பவனுக்கு 
ஒரு இரங்கற் பா எழுதவிழைந்த 
எனக்கும் ஒரு இரங்கற் பா 
எழுதி வைத்திருக்கிறான் 
தேதி மட்டும் குறிப்பிடாமல்.  
------------------------------------------------------------

வறுமைக்கோட்டின் வரம்பை 
முப்பத்தி இரண்டென வரையறுத்த 
மா பாவிகளுக்கு 
முப்பத்தி இரண்டு கொடுத்து 
ஆசுவாசம் அடையலாம். 
---------------------------------------------------- 

சாமானியனுக்குண்டான 
எல்லா பொறுப்புகளும் எனக்குமிருக்கிறது. 
சாலையில் எதிர்வரும் 
மாண்புமிகு. அரசு குடிமகன் 
மனம் வைத்தால் 
எச் சேதாரமும் இன்றி கூடடைவேன். 
எல்லாம் அவன் செயல். 
---------------------------------------------------------------- 

அதிகாரத்தின் மீதான 
ஊழல் வழக்குக் கோப்புகளை தின்று  
தன் கோரநாக்கை உள்ளிழுத்துக்கொண்ட  
மராட்டிய மாநிலக் கொடுந்தீயின் 
ஆதிமூலம் குறித்து ஆராய்வதை 
சமூகம் நிறுத்திக் கொண்டால், 
அக் கோரத் தாண்டவம் 
மாநிலம் முழுதும் பரவாமல்  
தலைமை செயலகத்தோடு நின்று கொள்ளும். 
------------------------------------------------------------------------- 

வெட்டுப்பட்ட கைக்கு 
சுண்ணாம்புக் கொடாத காவலதிகாரி 
முடிக்கப்படாத வழக்குகளுக்கு 
பழங்குற்றவாளிகளை 
பொறுப்பாளியாக்கும் போதும், 
வன்தாக்குதலைக் கட்டவிழ்க்கும் போதும் 
கர்ணப் பிரபுவை விஞ்சுகிறான். 
--------------------------------------------------------------------------------- 

ஒப்பீட்டளவில் 
குறைந்தபட்ச அயோக்கியத்தனங்கள் 
கடவுளுக்கு ஏற்புடையதல்ல. 
------------------------------------------------------- 

வாய்ப்புக் கிடைக்காததால் 
நல்லவனாக நீடிக்கிற அயோக்கியர்கள் 
மாபெரும் தலைவர்களாக வீற்றிருப்பது 
சனநாயகம் 
தேசத்திற்கு வழங்கிய வெகுமதி. 
---------------------------------------------------------- 

அடிதடி, கை கலப்பின் பொருட்டு  
காவல் நிலையம் வந்த 
வாதியும், பிரதிவாதியும் 
ஒரு வழியாகச் சமாதானமடைந்தனர். 

பேரம் படியாததால் 
காவலதிகாரி  
சமாதானமடையவில்லை. 
-------------------------------------------------------- 

Blogger Widgets