ஈழம்

              போர் என்றார்கள். சமாதானம் என்றார்கள். புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றார்கள்.அப்புறம் சமாதானத்திற்கான போர் என்றார்கள். சமாதானமும், போரும் நேர்முரணான சொற்பதங்கள் இரவையும் பகலையும் போல. துர்தேவதையின் பார்வை சுட்டெரித்ததில் வெண்புறாக்கள் வெந்து மடிந்தன புனைவுகள் உண்மையை வீழ்த்துவதைப் போல. உலோகப் பறவையின் எச்சங்கள் வீழ்ந்த வனங்களும், நகரங்களும் பற்றி எரிந்தன. சாவகச்சேரி சாவுகளின் கச்சேரியானது. யாழ் பாழானது. கிளிநொச்சியும், முல்லைத்தீவும் ஆக்கிரமிப்பாளனின் வசமாயின. உலகின் மிகப்பெரும் இடப்பெயர்வு அப்போது தான் நிகழ்ந்தது. வன்னித் தாய் குழந்தைகளை வாரி அணைத்துக் கொண்டாள் பருந்திடமிருந்து கோழி குஞ்சுகளைக் காப்பது போல. தமிழகத்திற்கு வெண்மணியும் தமிழீழத்திற்கு செம்மணியும் ஒடுக்குமுறையின் ரத்தச் சாட்சிகளாகின. செம்மணி புதைகுழிகளில் எண்ணெய் வளம் கொழிக்கும் என்ற கொக்கரிப்புகள் தேசபக்தியாயிற்று. வஞ்சிக்கப்பட்ட இனம் வெஞ்சினத்தோடு பரணி பாடியதில்  மதயானைகள் மாண்டன. உலோகபபறவைகள் குப்பைக் கூளங்கள்ஆயின. கொழும்பு தீப்பிழம்பானது.  சுற்றுலாப் பறவைகளின் வரத்துகள்  நின்றன. பன்னாட்டு வணிகர்களின் கூடாரங்கள் காலியாகின. கண்டி தேயிலைகள் சுண்டி வாடின. ரத்தக்கறை படிந்த புத்தனின் பல் ஆட்டம் கண்டது. புலிகளின் முற்றுகையில் சிக்குண்டு சிறுநீர் கழித்த சிங்கங்களை நரிகளின் நாட்டாமை காப்பாற்றியது. நரிகளுக்கு கிடையே கையளிக்கப்பட்டது. 


        மீளவும் வானில் வெண்புறாக்கள் சிறகசைத்து வட்டமடித்தன. புலிகள் வேகம் குறைத்து விவேகத்தை கைக்கொண்டன. நரிகளின் நாட்டாமையை வரிப்புலிகள் நம்பின. பேச்சுவார்த்தைகள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், அபிவிருத்திப் பணிகள், விவசாயம், கல்வி, நீதி, நிர்வாகம், கண்ணிவெடிகளை அகற்றுதல், போரினால் சிதைந்த வாழ்வை மீட்டெடுப்பது, கடலோரப் பகுதிகளில் மீன்பிடி உரிமை, புகலிடங்களில் அந்நியக் காற்றை சுவாசிக்கும் சொந்தங்களின்  மீள்குடியேற்றம் என இருண்ட வானில் ஒளிக்கீற்றுகள். பேச்சுவார்த்தை காலங்கள் மலைப்பாம்பாய் நீண்டு நெளிந்தது. மக்கள் வாழிடங்களில் இராணுவ ஆக்கிரமிப்பு அகற்றம், போருக்கு முந்தைய பகுதிகளுக்கு அரச படைகள் பின்வாங்குதல், பொருளாதாரத் தடைநீக்கம், எதுவும் அமலுக்கு வரவில்லை. தாயகபகுதிகளில் கண்காணிப்பிலிருந்த கடல் புலிகள் தாக்குதலுக்காளாகினர். அரசபடைகளின் ஆயுத கொள்வனவு, ஆயுதபலம் அதிகரித்திருந்தது. பேச்சுவார்த்தை வெறும் பேச்சுவார்த்தையா ? உளவுபுலிகள் சுதாரித்தபோது  காலம் கையை மீறியிருந்தது. உலகின் மிகப்பெரிய அதிருப்தி இராணுவம் மீள ஒருதடவை ஏமாற்றப்பட்டிருந்தது. உலகின் மிகக் கட்டுப்பாடான இராணுவத்தின் முக்கிய கண்ணி எதிரியின் கையில் உருண்டு கொண்டிருந்தது. உலகைப் புரட்டிப் போட்ட, பெரும் எண்ணிக்கையில் மக்களைத் தின்று தீர்த்த ஆழிப் பேரலைக்கு மாவீரர் இவர்கள், மக்கள் இவர்கள் என பகுக்கத் தெரியவில்லை.


    மக்கள் விடுதலை இயக்கங்கள் மிகப்பெரும் பின்னடைவை, வீழ்ச்சியை சந்தித்த சோதனையான காலம். உலகின் எண்ணெய்வள தேசங்களெங்கும் சனநாயகத்தை நிலைநாட்டிய ஏகாதிபத்தியத்தின் இறுமாப்பு எதிர்வினையால் தகர்ந்திருந்ததாலும், உலகமயமாக்கலின் தாக்கத்தில் சுய இலாப, நட்ட கணக்குகளே முன்னிலை வகித்ததாலும், மக்கள் விடுதலைப் போராட்டங்கள் பயங்கரவாதங்களாக பார்க்கப்பட்டன. பயங்கரவாதத்திற்கெதிரான போர் ஆர்ப்பாட்டமாக தொடங்கியது. புதிய மொந்தையில் பழைய கள். எங்கெங்கு கிளர்ச்சிக்குரல்கள், ஆயுதப்போராட்டங்கள் நடத்தப்பட்டதோ அங்கங்கெல்லாம் நசுக்கப்பட்டன. பெரியண்ணனுக்கும், அவனைப்பின்பற்றும் ஏகாதிபத்திய அடிவருடிகளுக்கும் ஆயுத விற்பனை களைகட்டின. மக்கள் போராட்டங்கள் கொடூரமாக ஒடுக்கப்பட்டன. ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்வளைகள்  பூட்ஸ் கால்களால் ஏறி மிதித்து உடைக்கப்பட்டன. சர்வதேசப் போர்ச் சட்டங்கள் கால்களால் எத்தி வீசப்பட்டன. அரசபயங்கரவாத அமைச்சர் நான்காம் கட்ட ஈழ போருக்கு  30லட்சம் டன் எறிகணைகளை ஈழத்தின் மீது, நம் மக்களின் மீது வீசியே வெற்றிக்கனியை பறித்திருப்பதாக கொக்கரித்தான். ஈழகுழந்தை பிறக்க பேறு பார்க்க வந்த செவிலிகளே குழந்தையின் கழுத்தை துள்ள, துடிக்க கழுத்தை அறுத்து erinthirukkiraargal. குரல்வளை அறுக்கப்பட்டு புதைக்கப்பட்ட பூர்வகுடிகளின் புதைகுழிகளின் மேல் வணிகவளாகங்கள் கட்ட கைச்சாத்திடப்பட்டன. அதிகாரத்தின் கருணைக்காக தவமிருந்த அகிலத்தின் மனசாட்சிகள் மௌனித்தன.அதிகாரத்தில் இருப்பவனின் அநீதிகளை நீதிகள் என்றார்கள். அநியாயங்களை நியாயங்கள் என்றார்கள். கொலைகளைக் கருணை என்றார்கள்.  துப்பாக்கிமுனையிலிருந்து அதிகாரம் பிறப்பதாக சொன்னவர்கள் ரசாயன ஆயுதங்களின் தாக்குதலிலிருந்து அதிகாரம் பிறப்பதாகச் சொல்கிறார்கள். இந்த பின் நவீனத்துவ லெனின்களும், ஹோசிமின்களும், சே குவேரா, பிடேல் காஸ்ட்ரோக்களும், மாவோக்களும், சாவோச்களும், காந்திகளும் நிகழ்கால ஹிட்லரை மாவீரன் என்கிறார்கள். பாட்டாளி வர்க்க சுதந்திரம் பேசும் இவர்கள் கோர்போரட்டுகளின் கைக்கூலிகளாக இருந்து ஜெனிவா மனித உரிமை ஆணையத்துக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள். அமெரிக்காவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு இனப்படுகொலையை ஆதரித்திருக்கிறார்கள். கம்யுனிஸ்டு சித்தாந்தங்களை இந்த போலி கம்யுனிஸ்டுகளே அழித்துவிடுவார்கள்.


     நம் எதிரி எப்படி பயங்கரவாதததிற்கு எதிரான போர் என்ற சொல்லாடலை பயன்படுத்தி நம் இனத்தை அழிதொழித்தானோ, அதேபோல மாறிவரும் காலசூழலில் மத்திய கிழக்கு ஆப்ரிக்கா நாடுகளில் நடந்து வரும் மக்கள் கிளர்ச்சிக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகளும், ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்புகளும் இசைந்துவரும் இந்த பொன்னான தருணத்தை தவற விடாது, நம் எதிரியை வீழ்த்த வேண்டும். அவனை குற்றவாளி கூண்டில் நிறுத்துவதன் மூலம் நம் கடமை முடிந்து விடவில்லை. அது ஒரு தொடக்கமே. அவனை நீதியின் முன் நிறுத்துவதன் மூலம் நம் போராட்டங்களுக்கான நேர்மையான காரணத்தை, அவர்களுடன் நாம் சேர்ந்து வாழ இயலாது என்ற நம் நிலைப்பாட்டுக்கு வலு சேர்க்க சர்வதேச நாடுகளின் ஆதரவை பெறவேண்டும். ஒவ்வொருவருக்குள்ளும் நீறு பூத்த நெருப்பாக உள்ள இந்த உணர்வை அணைந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும். இன உணர்வை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும். நமக்கு இருக்கும் மிக மோசமான ஒரு பழக்கம் எளிதில் எதையும் மறந்து விடுவது. அதனால் தான் நம் இந்த பலவீனத்தை அரசியல் வயிறு பிழைப்போர்கள்  தங்கள் பலமாக பயன்படுத்தி ஐந்து ஆண்டுகால அயோக்கிய தனங்களை மூடி மறைக்க சில கையூட்டுகள் மூலம் எளிதில் நம்மை வீழ்த்தி விடுகிறார்கள். அவர்களுக்கு தெரியும் நாய்களுக்கு தேவை சில எலும்பு துண்டுகளும், கொஞ்சம் ரத்தமும் என்று. பாலஸ்தீனத்தில் மக்கள் எப்படி தங்கள் போராட்டத்துக்கான காரணத்தை திருமணத்தின் ஒரு சடங்காக கண்ணாடி சீசாக்களை உடைத்து போட்டு , மணமக்கள் அதன் மீது ஏறி நின்று சீசாத் துண்டுகள் பாதத்தை கிழித்து குருதி வடிய அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறார்கள். நாமும் அவர்களைப்போல உறுதியான லட்சியவேட்கையுடன் இருப்போம். மாவீரன் என்று அவனை சொன்ன வாய்களை போர்க்குற்றவாளி என்று சொல்ல வைப்போம். 


         அதற்கு நாம் செய்ய வேண்டியது குறைந்தபட்சம், நாம் செல்லும் இடமெல்லாம் நம் எதிரியின் சனநாயக முகமூடியை கிழித்தெறியும் வண்ணம் நம் மக்களின் பிரச்சினைகளை பொது வெளியில் முன் வைத்து விவாதிப்போம்.  இது குறித்து தங்கள் கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்துகொள்ளலாமே!  
Blogger Widgets