Monday, August 29, 2011

செங்கொடி


 தோழியே ..!            

மூவர் தூக்குக்கு எதிர்த்து
முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டாய் ,
முகமறியாத தோழி நீ  .! 
உன் இறப்புசாதரணமல்ல

தமிழ் உணர்வாளர்களை உலுக்குகின்ற  ஓர் இழப்பு..!
இனியும் தொடரவேண்டாம்  ..!   
உன்   போன்ற இழப்பு ..!     நீ இறந்துவிட்டதாய் 
எல்லா செய்தித்தாள்களும் தெரிவிக்கின்றன..! 

அது தவறு
உன்னைப்போன்றவர்கள் 
இறந்தாலும் இருந்தாலும் 

தமிழ் உணர்வாளர்கள் மனதில்
வாழ்ந்து கொண்டுதான்  
இருப்பாய் கடைசி தமிழன் உயிருடன் 
இருக்கும்வரை..!
உன்னைப்போலவே
நாங்களும் காத்திருக்கிறோம் இருக்கிறோம் ..!
நாளை நல்லதொரு
தீர்ப்பு வருமென ..!


                                                     - பாலமலை சித்தர் 

வீரவணக்கம்


Sunday, August 28, 2011

தீபிளம்பான செங்கொடி


அதிர்ச்சி செய்தி

தீபிளம்பான செங்கொடி


3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி,
பெண் தீக்குளிப்பு - காஞ்சிபுரத்தில் மக்கள் மன்றத்தை சேர்ந்த
 செங்கொடி என்ற பெண் தீக்குளித்து சாவு...
.3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி தீக்குளிப்பு...
பேரறிவாளனுக்காக தீக்குளித்ததாக செங்கொடியின் சகோதரர் தகவல்

காற்றில் கரைந்தவர்கள்


உலகின் எந்த ஒரு இனமும்
கருணைக்காக
இவ்வளவு காலமும்
ஏங்கி இருக்காது .


உலகின் எந்த ஒரு இனமும்
சுதந்திரத்திற்காக
இவ்வளவு வாதைகளை
தாங்கியிருக்காது.


உலகின் எந்த ஒரு இனமும்
வாழ்தலின் பொருட்டு
இவ்வளவு இழப்புகளை
எதிர்கொண்டிருக்காது.


உலகின் எந்த ஒரு இனமும்
சர்வதேசத்தால்    
இவ்வளவு தூரம்
புறக்கணிக்கப் பட்டிருக்காது.


உலகின் எந்த ஒரு இனமும்
தன் இனத்துரோகிகளால்
இவ்வளவு அபத்தமாக
காட்டிக் கொடுக்கப்பட்டிருக்காது.


உலகின் எந்த ஒரு இனமும்
இறையாண்மையின் பெயரால்
இவ்வளவு கொடூரமாக
கொன்றொழிக்கப் பட்டிருக்காது. .
பக்கத்தை வெளியிடு 
உலகின் எந்த ஒரு இனமும்
நியாயத்தின் வழி நின்றதால்
இவ்வளவு மோசமாக
கை விடப்பட்டிருக்காது.
.
உலகின் எந்த ஒரு இனமும்
நிராகரிப்பின் வலி சுமந்து
இவ்வளவு நெடுந்தூரம்
பயணப் பட்டிருக்காது.


உலகின் எந்த ஒரு இனமும்
தன் மரணத்தை
இவ்வளவு அருகாமை சென்று
தரிசித்திருக்காது.


உலகின் எந்த ஒரு இனமும்
அழிவின் விளிம்பில் நின்று  
மட்டை பந்து போட்டியை
இவ்வளவு ஆர்வமாக
வேடிக்கைப் பார்த்திருக்காது.


உலகின் எந்த ஒரு இனமும்
தன் இனம் நசுக்கப்படுகையில்
இவ்வளவு கடிதங்களை
எழுதித் தள்ளியிருக்காது.


உலகின் எந்த ஒரு இனமும்
தான் அழித்தொழிக்கப்படுகையில்   
இவ்வளவு நீண்ட  உண்ணாவிரதத்தை
நிகழ்த்திக் காட்டி இருக்காது.


உலகில் எந்த ஒரு இனமும்
தன் இனம் துடைத்தெறியப்பட்டதை      
இவ்வளவு பெரிய மாநாடு   
நடத்திக் கொண்டாடி இருக்காது.  
உலகின் எந்த ஒரு இனமும் 
தன் இனத்தைத் தானேக் கொன்று  
சடலத்தின் சட்டைப் பையில் 
காசு தேடி இருக்காது.                                                                                                                                                                                                                                                     
                           -  அகரத்தான்  


கூப்பிடு தூரத்தில் மயானம்...
------------------------------
-------------
அந்த சபிக்கப்பட்ட தேசத்தில்    
 உறுப்புகளை இழந்தவர்களும்   
சித்தம் கலங்கியவர்களும் 
குடிகளாக இருந்தனர். 
அவர்கள் 
தங்கள் வீட்டுக் கூரைகளை 
தாங்களே தீக்கிரையாக்கினர். 
தங்கள் வசிப்பிடங்களை 
தாங்களே குண்டு வைத்து 
தகர்த்தனர். 
சிறுவர்கள் 
சிலேட்டுக் குச்சிகளை 
செலட்டின் குச்சிகளாக்கி 
தங்கள் பள்ளிகளை     
தாங்களே தரைமட்டமாக்கினர். 
தங்களுக்கான உணவை 
தாங்களாகவே  
கடலில் கொட்டிவிட்டு 
கடும்பசியினால் 
உயிர் துறந்தனர். 
கொடும் ஆயுதம் கொண்டு  
தங்கள் கபாலங்களை 
தாங்களே பிளந்தனர். 
புல்டோசர் இயந்திரங்களை 
தங்கள்மேல் ஏற்றி 
தாங்களாகவே பூமிக்குள் புதைந்தனர். 
உயிர்கொல்லி ஆயுதங்களை 
தங்கள் மேல் பரவவிட்டு 
தணலில் வெந்து தணிந்தனர். 
தங்கள் வயிற்றை 
தாங்களே  கிழித்து 
குழந்தைகளை 
வீதிகளில் வீசிஎறிந்தனர். 
தங்களருமை குழந்தைகளின் 
கால்களைப் பிடித்து 
தாங்களே சுவற்றிலறைந்தனர். 
கந்தகக்காற்றை சுவாசித்த 
தாய்மார்கள் 
தாய்ப்பாலில் நஞ்சூட்டி 
தங்கள் சிசுக்களை 
தாங்களே கொன்றழித்தனர். 
தங்கள் குழந்தைகளின் 
குடல்களை மாலையாக்கி 
எருக்கம்பூச் சூடி 
எருமைமேல் வந்தனர். 
தங்களை தாங்களே 
வல்லுறவுக்குட்படுத்தியும் 
பிணங்களை புணர்ந்தும் 
இச்சைகளை தீர்த்தனர். 
வீதியெங்கும் விரவிக் கிடந்த    
உருக்குலைந்த உடல்களையும் 
வெந்து தணிந்த சுடலைகளையும் 
நரிகளுக்கு தின்னக் கொடுத்தனர். 
வளர்ப்பு பூனைகள் குடிக்க  
தங்கள் குருதியை கொட்டியும் 
வளர்ப்பு நாய்கள் பசியாற 
தங்கள் அவயங்களை வெட்டியும் 
வீசினர்.          
மருத்துவமனைகளின் மீது 
ஏவுகணைகளை வீசி 
கட்டிட இடிபாடுகளுக்குள் 
தங்கள் பிணங்களை 
தாங்களே ஒளித்துக்கொண்டனர். 
அம்மணம் அணிந்து 
கண்களை, கைகளைப்
பின்புறம் கட்டி 
யுவன்களும் யுவதிகளும் 
தங்கள் பின்னந்தலையில் 
தாங்களே சுட்டு சிதறினர். 
சொந்த தேசத்தில் அன்னியமாகி   
புகலிடம் தேடியவர்கள் 
வருத்தப்பட்டும் 
விருப்பப்பட்டும் 
பாரம் சுமந்தனர். 
உயர் பாதுகாப்பு வலையங்களை 
உயிர்குடிக்கும் நிலையங்களாக 
மாற்றியிருந்தனர். 
வழிபாட்டுத் தலங்களை       
வலிகளின் களங்களாக 
வைத்திருந்தனர். 
வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்கள் 
தங்களை தாங்களே 
சிகப்பாக்கி வீழ்ந்தனர். 
தங்கள் இனத்தின் சுவடுகளை 
தாங்களே அழித்து ?
வரலாற்றின் வழிநெடுக 
தீராப்பழியைச் சுமந்தவர்கள்,
அண்டையில்  வாழ்ந்த  குற்றத்திற்காக 
பாவம்! 
அகிம்சா மூர்த்தி புத்தனை  
குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவும் 
அகிம்சா மூர்த்தி காந்தியை  
சாட்சி கூறவும்   
அழைப்பது தான் 
அபத்தமாக இருக்கிறது.                                 
 
                               - அகரத்தான்.
                                 ------------------

Saturday, August 27, 2011

தமிழக அரசு செய்யுமா


            இன்று உலகம் எந்திர மயமாகிவிட்டது
மரங்களில் குடியிருக்கும் குருவிகளை காணவில்லை
புதர்களில் விளையாடும் பாம்புகளை பார்க்கமுடியவில்லை
ஓணான்களை பிடித்து விளையாடிய காலம்
திரும்ப வரப்போவதில்லை  -     வருங்காலங்களில்
மனிதனை தவிர பூமியில் வேறு எதுவும் இருக்கபோவதில்லை


 இன்று மத்திய அரசின் நுறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 
கிராமபுற மக்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகின்றனர் 
இவர்கள் பெரும்பாலும் செய்வது சாலை ஓரத்தில் இருக்கும் புல்களை 
சீவியும் மரங்களை வெட்டியும் சாலைகளை சீர் செய்கிறோம் என்று 
ஒரு மண் அரிப்பிரிக்கான வழியை செய்து கொண்டுள்ளனர் 
மேலும் விவசாயத்திற்கு ஆட்கள் கிடைக்காத நிலையில் இத் திட்டத்தை
 அரசு கொண்டு வந்துள்ளது . இத் திட்டத்தில் மக்கள் வேலை செய்வது
என்பது ஒரு நாளைக்கு வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே இதனால்
மக்களை சோம்பேறிகளாக்கி உள்ளது நடுவண் அரசு சாலை
ஓரத்தில் இருக்கும் புல்களை சீவினால் மழை காலத்தில்
மண் அரிப்பு ஏற்படுகிறது இதனால் மீண்டும் மீண்டும்
செய்த வேலையே செய்து கொண்டுள்ளனர் 
இதன் காரணமாக  அரசுக்கு பண விரயமமும் கால விரயமும்
 ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது இனிமேலாவது
 தமிழக அரசு சாலை ஓரங்களில் மரங்களை நட்டு தண்ணீர்
ஊற்றி வளர்க்க உத்தரவிடுமானால் கூடிய
விரைவில் தமிழகம் பசுமையடையும் என்பது நிதர்சனம் 

                                                                                                                Prakash
                                                                            

Wednesday, August 24, 2011

சாதியச் சமூகம்.


பாரதியை அய்யராகவும்
தந்தை பெரியாரை நாய்க்கராகவும்
அம்பேத்கரை தலித்தாகவும்
காமராசரை நாடாராகவும்
வ.உ.சிதம்பரத்தை,
பிரபாகரனை பிள்ளையாகவும்
சாதியக் கட்சிகளின்
விளம்பரத் தட்டிகளில் நிறுத்தி
வாக்கு கொள்ளையடிக்கிறார்கள்
உள்ளூர் திருடர்கள். 
சாதி, மத விடுதலைக்குப் பிறகே
இன விடுதலை எனில்
அது இன்று
அத்தைக்கு மீசை
முளைத்த கதையோ?    
               
                            - அகரத்தான்

Saturday, August 20, 2011

காந்தியம்

 கண்ணுக்கு கண்
பல்லுக்கு பல்
கூடாதென்ற காந்தி 
இருபது யுகங்கள்
காத்திருந்து
கருவறுத்தான்

ஒரு தேன் கூட்டையும்,

இரண்டு லட்சம்
தேனீக்களையும்.

                 - அகரத்தான்   




Sunday, August 14, 2011


எங்கள் அருமை புலம் பெயர் தமிழர்களே, உங்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வேண்டுகோள்

வணக்கம். உங்களிடத்தில் முதல் முறையாக மே பதினேழு இயக்கம் கோரிக்கையும், வேண்டுகோளையும் வைக்கிறது. தமிழர்களின் மீதான தாக்குதலை இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் அரசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தனது தமிழர் எதிர்ப்பு நிலையை எந்த விலையை கொடுத்தேனும் காட்டுகிறது இந்திய அரசு. தமிழீழத்தின் மீதான இன அழிப்பு போரை நடத்தி கிட்டதட்ட ஒருலட்சத்தி நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை அழிப்பதற்கு துணை நின்று பிறகு அந்த கொலையாளிகளை உலக அரங்கில் காப்பற்ற செயல் பட்டுக் கொண்டு இருக்கும் இந்திய அரசு தமிழக மீனவர்கள் உட்பட அனைவரின் மீதும் தனது எதிர்ப்பு நிலையை தீவிரப்படுத்தியிருக்கிறது. தமிழர்களின் இந்த இக்கட்டான வரலாற்று சூழலில் தனது அரசியல், சமூக போராட்ட கட்டமைப்புகளை பிஞ்சு நிலையில் பெற்று இருக்கும் தமிழர்கள், தங்கள் மீது திணிக்கப்படும் இந்த அடக்குமுறைகள், கொலைகள் நம்மை எவ்வாறு கையறு நிலைக்கு கொண்டு சென்றுள்ளது என்பதை கவனிக்க முடியும். இந்த முறையில் இன்று தமிழக அரசியல் போராளிகளின் மீது கடும் தாக்கத்தையும் துயரத்தையும் ஏற்பட்டுத்தி இருப்பது தோழர்.பேரறிவாளன், தோழர்.முருகன், தோழர்.சாந்தன் ஆகியோர் மீது திணிக்கப்பட்டு இருக்கும் மரணதண்டனை. 

கொலை செய்யப்பட்டவர் முன்னாள் பிரதமர் என்கிற ஒரே காரணத்திற்காக நீதியை மறுத்து இருக்கிறது இந்த அரசு. சோடிக்கப்பட்ட இந்த வழக்கில் முதலில் தூக்கில் இடப்படுவதற்காக கைது செய்யப்பட்டவர்களில் 13பேர் ஈழத்தமிழர்களாகவும் 13 பேர் இந்திய-தமிழகத் தமிழ்ழர்களாகவும் இருக்கும் படி பார்த்துக் கொண்டது அரசு. பிறகு தூக்குத் தண்டனை உறுதிசெய்யப்பட்ட 4 பேரில் இருவர் தமிழகத் தமிழர்களாகவும், 2 பேர் தமிழீழத்தமிழர்களாகவும் இருக்குமாறு பார்த்துக் கொண்டது. செய்யாத குற்றத்திற்காகவும், நிரூபணம் ஆகாத குற்றச்சாட்டு ஒன்றிற்காகவும் இந்த அப்பாவிகள் தமிழர்கள் என்கிற ஒரே காரணத்திற்காக இந்தியாவின் மத்திய அரசால் அவர்களது உயிர் பறிக்கபட இருக்கிறது.

எந்த ஒரு அடிப்படை சட்ட வழிமுறையும் பின்பற்றப்படாமல் மெளனமாக்கப்பட்ட இந்த அப்பாவிகள், கதவிடுக்கில் சத்தமில்லாமல் பலியிடப்படும் சுவர் பல்லிகளாய், பலியிடப்பட காத்து இருக்கிறார்கள். எந்தவித கவனமும் இல்லாமல் விபத்தாய் இந்த படுகொலை நடக்கப் போகிறது. ஆனால் இது விபத்து அல்ல, மிகக் கவனமாய் திட்டமிடப்பட்டு நடத்தப்பட இருக்கிற படுகொலை. நம் கண்முன்னே நமது சகோதரர்கள் எந்தவித முகாந்திரமுமின்றி படுகொலை செய்யப்பட 21 வருடங்களாய் காக்க வைக்கப்பட்டு, விடுதலை கிடைக்கும் என நம்பிக்கை கொடுக்கப்பட்டு, இறுதியில் தூக்குக் கயிறை தழுவப்போகிறார்கள்.
தமிழர்கள் எந்த ஒரு சமயத்திலும் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கக் கூடிய வலிமை உள்ளவர்கள் அல்ல என்று நம்பும் இந்த இந்திய அரசை தமிழர்களாகிய நாம் வெல்லவேண்டும். ஆசியாவிலேயே யூத இனத்திற்கு அடுத்தபடியாக சர்வதேச அளவில் விரிந்து நிற்கக் கூடிய தமிழ்ச் சமூகம் தன் இனத்திற்கு நடக்ககூடிய அநீதியை தட்டிக் கேட்க வீதிக்கு உலகம் முழுவதும் வந்து நிற்கும் என்பதை புரிய வைக்க வேண்டும்.தமிழர்களுக்கு இன்னல் விளைவித்தால் சர்வதேசச் சமூகத்தில் அவமானத்தை பரிசாக பெற்றுக்கொள்ளும் நிலை இவர்களுக்கு வரும் என்பதை முகத்தில் அறைந்து உரைக்கவேண்டும். திரு. பேரறிவாளன் , திரு. முருகன் , திரு. சாந்தன் அவர்களின் விடுதலை பெற்றுத்தரக் கூடிய ஒரு போராட்டத்தை நாம் எடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். இந்தப் போராட்டம் தமிழத்தினை விட்டு வெளியேவும் நடக்க வேண்டும்.

சர்வதேச அரங்கில் இந்த அநீதிக்கான போராட்டம் நடக்கும் பட்சத்தில் இந்திய அரசு நெருக்கடிக்கு உள்ளாகும். தமிழர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி தன்னையும், சிங்களத்தையும் காக்க நினைக்கும் இந்தியம், நமது ஒருங்கிணைந்த போராட்டத்தினால் நிலைகுலையும். இந்தியாவின் தன் மரியாதையை உலக அரங்கில் இழக்கும் இந்த சமயத்தில், அதன் நேர்மையும் காந்திய முகமூடியும் கிழிக்கப்படும். இது நமக்கு இந்த சமயத்தில் அவசியமானதும், தேவையானதுமான ஒன்று. உலகெங்கும் உள்ள தமிழர்கள் தம் இனம் காக்க ஒன்று கூடி நிற்பார்கள் என்பதை உணர்த்தும் விதமாக புலம் பெயர் உறவுகளே உங்களுடைய போராட்டத்தினை பதிவு செய்யங்கள். இவர்களின் நியாயங்களை உலகெங்கும் உள்ள பத்திரிக்கைகளில், ஊடகங்களில் பதிவு செய்யுங்கள். நிறைவு பெறாத விசாரணை, பாதியில் முடிக்கப்பட்ட கமிசன்கள், ஒத்து ஊதும் ஊடகங்கள் ஆகியவற்றால் தவறாக முடிவுற்ற இந்த வழக்கினையும், இந்திய அரசின் நேர்மையின்மையையும் காட்டுங்கள். இந்தப் பஞ்சமா பாதகத்தினை செய்ய முனையும் இந்திய காங்கிரஸ் அரசின் தூதரகத்தின் முன்போ அல்லது முக்கியப் பகுதிகளையோ தேர்ந்தெடுத்து போராடலாம். இந்தப் போராட்டத்தின் அவசியம் நம் தமிழ் நிரபராதிகளை தூக்கில் போடப்பட கூடாது, இந்த அப்பாவிகள் தமிழர்கள் என்கிற ஒரே காரணத்திற்காகவே தூக்கிலேற்றப்படுகிறார்கள். 


தமிழனுக்கு உலகில் எம்மூலையில் துன்பமும், அநீதியும் விளைவிக்கப்பட்டால் தமிழர்கள் நாம் ஒன்றாய் நிற்போம். புலம் பெயர் தமிழர்களே களம் காணுங்கள் நம் பேரறிவாளன், முருகன், சாந்தனுக்காக. அனைத்து அமைப்புகளும், உணர்வாளர்களும் இணைந்து வரும் ஆகஸ்டு 20 ம் தேதி நாங்கள் சென்னையில் பாரி முனை அருகில், கலெக்டர் ஆட்சியகம் முன்னால் லட்சம் தமிழர்களாய் ஒன்று கூடுகிறோம். வரும் 18ம் தேதி வியாழன் 2000 இருசக்கர வாகனங்களில் வேலூரை நோக்கிய பிரச்சாரப் பயண்ம். நீங்களும் கை கோருங்கள்.உங்கள் புலம் பெயர் நாடுகளில் இந்த அப்பாவிகளுக்காய் ஒன்று கூடி உரக்கக் குரல் கொடுங்கள்.. மேற்கத்திய எழுத்தாளர்கள், அறிஞர்கள், போராளிகள், அரசியல் அறிஞர்கள் என அனைவரின் ஆதரவினையும் சேகரித்துக் கொடுங்கள். தமிழராய் ஒன்று கூடுவோம். நாம் வெல்வோம்.

நன்றி.

மே பதினேழு இயக்கம்.
9444146806, 9600781111, 9884877487, 9094817952.

Wednesday, August 10, 2011

குறுங் கவிதைகள்.



ஒரு வாய் சுடுதண்ணிக்கு
ஆசைப்பட்டு
அதிகாலை உறக்கத்தை
பறிகொடுக்கிற அபத்தமே
சம்சாரிக்கு
வரமாய் வாய்த்திருக்கிறது.
                -------

கொடுப்பதற்கும்
பெறுவதற்கும்
அன்பு மட்டுமே இருக்கிறது
வண்டி வண்டியாய்.
               -------

ஓடுகால் திருமணமோ
நிச்சயிக்கப்பட்ட திருமணமோ
முதல் தினமே
வருகை புரிந்தாலும்
தாலிக்கட்டு பார்க்க மட்டும்
கொடுப்பினையில்லை.
கவிழ்த்துவிட்டு
வேடிக்கைப் பார்ப்பதே
வாடிக்கையாயிருக்கிறது
நெப்போலியனுக்கு.    .     
             -------

சுழித்து ஓடும்
நதியின் பாதையில்
இழந்தது குறித்த
ஏக்கங்களும்
நிராசைகளும்
கூழான்களாகவும்,
அடைந்தது குறித்த
பெருமிதங்களும்
உன்னதங்களும்  
கிளிஞ்சல்களாகவும்
விரவிக் கிடக்கின்றன.

            -------                        
       
                         --அகரத்தான். 
குறுங் கவிதைகள்.
 --------------------------------------------

தாய் பட்டினி.
குழந்தை குடிக்கிறது
மனப் பால்.
        -----

கருப்பண்ணசாமி
கடுங்காவல்.
காலியானது
உண்டியல்.
       ------

நேர்த்திக் கடன்.
வெட்டப்பட்ட ஆடு
உலையில் கொதிக்கிறது.
       ------

காங்கிரசு உட்கட்சி கூட்டம்.
வேட்டிகள் கிழிந்தன.
மண்டைகள் உடைந்தன.
சனநாயகம் செயித்தது.
       -------

கந்துவட்டி சட்டம்
கழுத்தை நெருக்கியதால்
கல்வி தந்தையானார்
நவீன காமராசர்.
        -------

காமராசர் ஆட்சியமைக்க
காமராசரை வீழ்த்தியவர்கள்
கம்பி எண்ணுகிறார்கள்.
கம்பிக்குள் வெளிச்சங்கள்
?
         -------
                                --அகரத்தான். 

Monday, August 8, 2011


சாலை விபத்தில்லா பயணத்தை உறுதி செய்வோம்

வாகனம் ஓட்டும்போது கவனிக்க வேண்டிய விதிகள் : அவசர உலகம் ., வாகனத்தின் பெருக்கம், இப்படி பல தடைகளை தாண்டி நாம் வீட்டை விட்டுச் சென்றால் திரும்பி வந்தால் போதும் என்கிற அளவில் சாலை விபத்துக்கள் நம் மனதை கரைக்கின்றன.எத்தனையோ படித்த இளைஞர்களை சாலை விபத்துக்களில் பறிகொடுத்து மனித வளத்தை இழக்கலாமா? சரி தனிமனிதனாக நம்மால் விபத்து ஏற்படுத்தாமல் எப்படிச் செல்வது ...? செய்ய வேண்டியது :1. வாகனத்தை எடுக்கும் போது டயரில் போதுமான காற்று ,எரிபொருள் உள்ளதா என பரிசோதிப்பது 2.ஹெல்மெட் போட்டுக்கொண்டு ஓட்டுவது 3.வாகனத்தின் இடப்புறம் வலப்புறம் திருப்பும் போது இன்டிக்கேட்டர்,கை சிக்னல் பயன்படுத்துவது.4.முன்னால் செல்லும் வாகனத்தை முந்த நினைக்கும் போது நம் பின்னால் வரும் வாகனத்தை கண்ணாடியில் (side mirror ) கவனித்து முந்துவது 5.தரமான டயர் ,பிரேக் ஷுக்களை பயன்படுத்தல் 6.நல்ல தரமான ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் ஓட்டிப் பழகி ஓட்டுநர் உரிமம் வைத்துக்கொள்வது 7.சாலைவிதிகள் போக்குவரத்து காவலர் சைகை சிக்னல்களை மதிப்பது, அறிந்து கொள்வது 8.மிதவேகம் 9.இன்சூரன்ஸ் எப்போதும் நடப்பில் இருக்குமாறு வைத்துக்கொள்வது 10.இரவு பயணத்திற்கு ஏற்றவாறு நல்ல தரமான வெளிச்சம் தரும் பல்புகள்,பேட்டரிகளை பயன் படுத்துதல் செய்யக்கூடாதது :1.செல்போன் பேசியபடி பணிப்பது நம் கவனத்தை சிதறவைக்கும் 2 மதுபோதையில் பயணம் செய்வது 3. அதிகப்படியான எடை,நிர்ணயிக்கப்பட்ட நபர்களை விட அதிகமான நபர்களை ஏற்றிக்கொண்டி செல்வது அல்லது இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் செய்வது 4.வாகன ஓட்டும்போது சாகசம் செய்வது 5.நிர்ணயிக்கப்பட்ட வேகத்திற்கு மேல் செல்வது 6.அதிக ஒலி,ஒளியை பயன்படுத்துவது 7. சரியான தூக்கம் இல்லாமல் பயணிப்பது 8. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டுமென எண்ணுவது 9.நீண்ட பயணம் ஓய்வு எடுத்துக்கொள்ளாத பயணம்10.வாகனத்தை நிறுத்தும் போது இடப்பக்கம் ஒரமாக நிறுத்தாமல் நடுரோட்டில் நிறுத்துவது இப்படி செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும் நிறைய இருந்தாலும் முக்கியமான வற்றை மற்றும் உங்களிடம் பகிர்ந்துள்ளேன். ஓரே அடிப்படையான விஷயம் என்ன வென்றால் 40கி.மீட்டர் வேகத்தில் மிதமான வேகத்தில் பயணித்தால் கண்டிப்பாக சாலை விபத்து ஏற்படாது.மெடிக்கிளைம், மெடிக்கேர் பாலிசிகளை எடுத்து வைத்துக்கொள்வதும், அறிந்து கொள்வதும் சாலச்சிறந்தது. நாம் பயணிக்கும் சாலையில் விபத்து ஏற்பட்டால் எல்லோரையும் போல் வேடிக்கை பார்க்காமல் 108 க்கோ ,அவசர உதவி ஆம்புலன்ஸ்க்கும் முடிந்தால் அடிபட்டவரின் வீட்டிற்கும் தகவல் தாருங்கள். எத்தனையோ மனித உயிர்கள் உரிய நேரத்தில் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் இறக்கிறார்கள். தனிமனிதனாக விபத்தில்லாமல் வாகனம் ஓட்ட உறுதி கொள்வோம். வாழ்க்கை பயணத்தை இனிதே தொடர்வோம். குத்தம் குறையிருந்தா குட்டி சொல்லுங்க. நன்றி

                          நன்றி http://www.kavithaimathesu.blogspot.com/

இலங்கையில் அத்துமீறிய அமெரிக்க விமானங்கள்

கொழும்பு: இலங்கை வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க விமானப்படை விமானங்களால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான 10 போர் விமானங்கள் கடந்த வாரம் அத்துமீறி இலங்கை வான்பரப்பில் பறந்தன. இது இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள ரேடாரில் பதிவானது. இதையடுத்து உஷாரான இலங்கை அதிகாரிகள், தங்களது வான்பரப்பில் இருந்து விலகிச்செல்லுமாறு உத்தரவிட்டும், அதையும் மீறி அந்த விமானங்கள் இலங்கையினுள் புகுந்து சென்றன. இதனால் இலங்கை பெரும் கவலையடைந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அரசாங்கத்திடம் தனது ஆட்சேபத்தை இலங்கை தெரிவிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Friday, August 5, 2011


 சீனா - கடலில் விரியும் அதிகார வலை



சீனாவைக் குறித்த தகவல்களை அடுக்குவதில் உலக ஊடகங்கள் கடந்த சில வருடங்களாக விசேஷ கவனம் செலுத்துகின்றன. சீனாவின் அசுர வேக பொருளாதார வளர்ச்சி, மனித உரிமை மீறல்கள், பெருகி வரும் சமூக ஏற்றத்தாழ்வுகள், அதிகார மட்ட ஊழல்கள் குறித்த பல தகவல்களை - குறிப்பாக மேற்கத்திய ஊடகங்களில் -அதிகம் காணமுடியும். இந்த தகவல்களை வைத்து நடத்தப்படும் விவாதங்களின் ஒரு அடியோட்டத்தை நாம் எளிதாக ஊகிக்க முடியும். உலக அரங்கில் மேற்கத்திய நாடுகள் - குறிப்பாக அமெரிக்கா - கொண்டிருக்கும் இரும்புப் பிடியைத் தளர்த்தும் சாத்தியங்களை சீனாவின் வளர்ச்சி உறுதி செய்கிறது. இந்த வளர்ச்சி அவர்களை அச்சுறுத்துகிறது. குறிப்பாக சீனாவின் பொருளாதார வளர்ச்சியை விட, அதன் புவி-சார் அரசியல் (geo-political) நடவடிக்கைகள் மேற்கத்திய நாடுகளின் பீதியை அதிகரித்துள்ளன. மேற்கத்திய அரசியல் நிபுணர்கள் சீனாவின் இந்த நடவடிக்கைகளின் நோக்கங்கள் குறித்தும், உலக அரசியலில் அதன் தாக்கங்கள் குறித்தும் பேசத் துவங்கியுள்ளனர்.
சீனா கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் பத்து சதவீதத்திற்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை சாத்தியப்படுத்தியிருக்கிறது. இதன் விளைவாக அதன் சமூகம் மிகுந்த துடிப்புடனும், ஆரோக்கியத்துடனும் திகழ்கிறது. ஒரு நாடு வளர வளரத் தனக்கான புதிய தேவைகளை உருவாக்கிக் கொள்ளும். இந்தத் தேவைகள் தம்மைப் பல வடிவங்களில் விரிவாக்கிக் கொள்ளத் துடிக்கும். கடந்த 30 வருடங்களாக தன்னுடைய எல்லைக்குள் தன் ஆளுமையை பலப்படுத்திக் கொண்ட சீனா, தற்போது உலகளவில் தனக்கான ஆளுமையை நிறுவ எத்தனிக்கிறது. இதன் முதல் கட்டமாக தன்னை முழுதாக தொகுத்துக் கொண்டு, தன் பார்வையை மொத்த உலகத்தின் மீதும் திருப்பியிருக்கிறது.
—oooOOOooo—
பொருளாதாரத்தையும், அதோடு சேர்ந்து உயரும் மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் பாதுகாக்க வேண்டி சீனா தனக்கான கனிமம் மற்றும் எரிபொருள் வளங்களை சேகரிக்க சீனா உலகின் பல நாடுகளுடன் நெருக்கமான உறவு வைத்துக் கொண்டுள்ளது. கொடுங்கோல் ஆட்சி நிலவும் மியன்மர், சூடான் கூட இதில் அடக்கம். இந்த வளங்களை தன்னுடைய நாட்டிற்குக் கொண்டு வந்து சேர்ப்பதில் கடல் வழி போக்குவரத்து மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பயங்கரவாத தாக்குதல்களும், கடற் கொள்ளையர்களின் அட்டகாசங்களும் அதிகரித்து வரும் சூழலில் தன்னுடைய சரக்கு கப்பல்களை எந்த வித ஆபத்தும் இல்லாமல் பாதுகாக்க முயலும் சீனா, உலகின் முக்கியமான கடல் வழிகளையும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களையும் கைப்பற்ற முயன்று வருகிறது. இந்த நடவடிக்கைகளின் இன்னொரு முக்கியமான விளைவாக, உலக நாடுகள் மீதான மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தை சற்றே தளர்த்தி தனக்கான அதிகாரத்தை நிறுவ சீனா முயல்கிறது. அதிவேக விமானங்களும், தகவல் தொடர்பும் நிறைந்த இந்த யுகத்திலும், உலக வர்த்தகத்தில் 90 சதவீதமும், உலகத்தின் மொத்த எண்ணெய் போக்குவரத்தில் 65 சதவீதமும் கடல் மூலமாகவே நடைபெறுகின்றன. ஆகவே உலகின் முக்கிய துறைமுகங்களை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதின் மூலம் மொத்த உலகத்தின் செயல்பாட்டை கண்காணிப்பதோடு, அந்நாடுகளின் சந்தையை மறைமுகமாக சீனாவால் கட்டுப்படுத்த முடியும்.
இந்நடவடிக்கைகளுக்கான திட்டத்தைப் பல வருடங்களாகவே வைத்திருந்தபோதும் அதை வெளிப்படையாக சீனா ஒப்புக்கொண்டதில்லை. கடந்த வருடத்தின் துவக்கத்திலிருந்து சீனா மேற்கொள்ளும் பல நடவடிக்கைகள், உலகக் கடற் போக்குவரத்தைக் கைப்பற்றும் அதன் திட்டத்தை கொஞ்ச கொஞ்சமாக வெளிப்படுத்துகின்றன. எல்லைப்புறக் கடல் பகுதிகள் (கிழக்கு மற்றும் தெற்கு சீனக் கடல்) மட்டுமல்லாமல், தன் எல்லையை விட்டு விலகியுள்ள கடல் பகுதிகள் (பசிபிக், இந்திய பெருங்கடல்) மீதான அதிகாரத்தை நிறுவவும் சீனா முயல்கிறது. தனது புவி எல்லைகளைத் தாண்டிய அதிகார எல்லைகள் மூலமாக, எல்லைகளைத் தாண்டிய தன்னுடைய அதிகாரத்தை நிலைநிறுத்த முயலும் சீனாவின் செயல்பாடுகள், மிகத் துல்லியமாக வடிக்கப்பட்ட, தொலை நோக்குப் பார்வை கொண்ட, புவிசார்-அரசியல் கொள்கைகளை அடிப்படையாக கொண்டவை.
பசிபிக் கடல் மற்றும் முதல் தீவுச் சங்கிலி(first island chain)
உலகின் முக்கிய கடல் வழிகளை இரண்டாக வல்லுநர்கள் வகைப்படுத்துகின்றனர்.
1. முதல் தீவுச் சங்கிலி - கொரிய தீபகற்பம், குரில் தீவுகள், ஜப்பான்(Ryukyu தீவுகள்), தைவான், பிலிப்பைன்ஸ், இந்தோனேஷிய மற்றும் ஆஸ்த்ரேலியா
2. இரண்டாம் தீவுச் சங்கிலி - குஆம்(Guam) தீவுகள் மற்றும் வடக்கு மரியானா(Northern Mariana) தீவுகள்
இரண்டாம் தீவுச் சங்கிலி அரசியல் ரீதியாகவும், புவியியல் ரீதியாகவும் அமெரிக்காவிற்கு நெருக்கமானது. ஆனால் முதல் தீவுச் சங்கிலி புவியியல் ரீதியாக சீனாவிற்கு மிகவும் நெருங்கியது. ஆனால் முதல் சங்கிலித்தீவு நாடுகள் அரசியல் ரீதியாக அமெரிக்காவின் நண்பர்கள். ஆகையால் பசிபிக் கடல் மீதான சீனாவின் அதிகார வேட்கையை அடைய முடியாத தடைகளாக இந்த தீவுகள் இதுவரை விளங்கிவருகின்றன. ஆனால், சீனாவின் தற்கால நடவடிக்கைகள், இந்தப் பகுதியை அமெரிக்காவின் பிடியில் இருந்து விடுவித்துத் தனதாக்கிக் கொள்ள முயல்வதாக இருக்கின்றன. தனது ராஜதந்திர மற்றும் பொருளாதார பலத்தின் மூலம் இத்தீவுகளுக்கு சீனா பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. தைவானுடனான அதன் பிணக்கை, கிழக்கு மற்றும் தெற்கு சீனக் கடல்களின் எண்ணைய் வளம் நிரம்பிய கடல் படுகைகள் மீதான அதிகார வேட்கையாக பார்க்க வேண்டும். Diaoyu/Senkaku தீவுகள் விஷயத்தில் ஜப்பானுடனும், ஸ்பார்ட்லி(Spartly) தீவுகள் விஷயத்தில் பிலிப்பைன்ஸுடனும் சீனா மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது.
இந்த தீவுகளை கைப்பற்றும் பட்சத்தில் பசிபிக் கடற்பகுதி மீதான சீனாவின் ஆதிக்கக் கனவு நனவாகும். குறிப்பாக, சீனா தைவான் மீதான நேரடியான ராணுவத் தாக்குதலை நடத்தாமல், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தாக்குதல் நடத்துகிறது. ஒவ்வொரு வாரமும் கிட்டத்தட்ட 270 விமானங்கள் இரு நாடுகளுக்கு இடையே இயக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட 7,50,000 தைவான் நாட்டினர் சீனாவில் வசிக்கின்றனர். மூன்றில் இரண்டு சதவீத தனியார் நிறுவனங்கள் சீனாவில் பெறுமளவு முதலீடு செய்துள்ளன. இந்த வகையில் ராணுவத்தின் துணையின்றியே தைவான் மீதான தன்னுடைய கட்டுப்பாட்டை விரிவாக்குவதில் சீனா வெற்றியடைந்துள்ளது.
தைவான் மீதான தன்னுடைய கட்டுப்பாட்டை அதிகரிக்கும் அதே சமயம், சீனக் கடல் பகுதியில் அமெரிக்காவின் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கக் கப்பல்களை இக்கடல் பகுதிகளுக்குள் அனுமதிக்காமல் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது சீனா. 2006-ல் அமெரிக்காவின் Kitty Hawk எனும் கப்பலைத் தாக்கும் வகையில் சீனாவின் கப்பற்படை செயல்பட்டது. நவம்பர் 2007-ல், அதே கப்பலுக்கு விக்டோரியா துறைமுகத்துள் நுழைய அனுமதி மறுத்தது. மார்ச் 2009-ஆம் ஆண்டு மற்றுமொரு அமெரிக்க கப்பாலான Impeccable White சீனாவின் ராணுவத்தால் துன்புறுத்தப்பட்டது. வருங்காலத்தில் அமெரிக்காவின் எந்தவித எதிர்ப்பையும் சமாளிக்க, தன்னுடைய கடற்படையின் பலத்தை அதிகரித்தபடி இருக்கிறது சீனா.
தைவான் நாட்டை சீனா அடையும் பட்சத்தில் அமெரிக்கா பெரும் இழப்பை சந்திக்கும். அத்தகைய ஒரு நிலை ஏற்பட்டால், மற்ற ஆசிய நாடுகள் (இந்தியா உட்பட) அமெரிக்கா மீது கொண்டுள்ள நம்பிக்கை சிதையும். இதன் விளைவாக, உலக அதிகார மையம் மிக வேகமாக சீனாவைச் நோக்கி சாயும் நிலை ஏற்படும். சீனாவின் நோக்கமும் இதுவே.
இந்தியப் பெருங்கடல்
சஹாரா பாலைவனம் முதல் இந்தோனேஷிய தீவுத் தொகுதிகள் (archipelago) வரை தன்னுடைய பரப்பை கொண்டது இந்தியப் பெருங்கடல். மத்திய காலக்கட்டங்களில் (Middle Ages) அரேபியர்களும் பெர்சியர்களும் இந்த கடல் வழியில் மிகுந்த தூரம் பயணம் செய்தனர். பருவக்காற்றின் திசை மாறுதல்களை நன்கு அறிந்திருந்த அவர்கள் நீராவி யுகத்திற்கு முன்பே இந்த பாதையின் பல்வேறு நாடுகளோடு தொடர்பு கொண்டிருந்தனர். இந்நாடுகளுடன் விலை உயர்ந்த கற்கள், நறுமண பொருட்கள், ஆடைகள், போன்ற பொருட்களின் வியாபாரத்தை மேற்கொண்டனர். கடல்-வழி வணிகத்தோடு நில்லாமல், தங்கள் மதத்தையும் இந்தப் பகுதி மக்களிடம் பரப்பினர். மேலோட்டமான பருந்துப் பார்வையிலேயே மொத்த வரலாற்றில் இந்தியப் பெருங்கடல் கொண்டிருந்த முக்கியத்துவத்தை நம்மால் உணர முடியும். கடல் வாணிபத்துக்குப் பெரும்துணையாக விளங்கிய இந்தியப் பெருங்கடல் தற்போது இரண்டு வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.
1. உலகின் மொத்த பெட்ரோலிய பொருட்களின் போக்குவரத்தில் 70% இந்தியப் பெருங்கடல் வழியே நடைபெறுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் தொடங்கி பசிபிக் கடல் வரை.
2. சோமாலியா, யேமன், இரான், பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகள் இந்தக் கடற்பாதையால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த புவி அமைப்பு பயங்கரவாதம் மற்றும் போதை மருந்து கடத்தலில் ஈடுபடும் இயக்கங்களுக்கு பெரிதும் உதவுகிறது.
1995 முதல் 2005 வரையிலான ஆண்டுகளில் கச்சா எண்ணைய்க்கான சீனாவின் தேவை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. 2020-ல் அதன் தேவை ஒரு நாளைக்கு 7.3 மில்லியன் பேரல்களாக உயரும் என்று கணிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட சவுதி ஆரேபியாவின் ஒரு நாள் உற்பத்தியில் பாதி அடுத்த சில வருடங்களில் இந்திய பெருங்கடல் வழியாக சீனாவிற்கு பயணிக்கப் போகிறது. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை தன்னுடைய கட்டுப்பாடில் வைக்க சீனா கைக்கொண்டிருக்கும் திட்டம் : “முத்து மாலை” (String of pearls).
இந்தியப் பெருங்கடலை கைப்பற்றும் சீனாவின் திட்டம் 1990-களிலேயே வகுக்கப்பட்டுவிட்டது. 1993-ல், Zhao Nanqi எனும் சீன உயரதிகாரி, “இந்தியப் பெருங்கடல் இந்தியர்களுக்கு மட்டுமே உரியது என்பதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக, இந்திய பெருங்கடலின் இரு பெரும் விரிகுடாக்களை (அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா) கட்டுப்படுத்தும் விதமாக பாகிஸ்தான் (Pasni port), இலங்கை, சிட்டகாங்க், மியான்மர் போன்ற நாடுகளில் பெரும் துறைமுகங்களையும், இந்நாடுகளின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளில் பெரும் முதலீட்டையும் குவித்துள்ளது சீனா. இந்தத் திட்டத்தின் அறுவடை சீனாவிற்கு சாதகமாக அமையும் என்பதில் சந்தேகமே வேண்டாம். தனக்குத் தேவையான இயற்கை வளங்களை பத்திரமாக சீனா கொண்டுவருவதற்கும், இந்தியா போன்ற போட்டி நாடுகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்து, அதன் இயக்கத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்கவும் சீனாவின் இந்தத் திட்டம் உதவும்.
*****
கடல்வழிகள் மீது சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்க, தனது நிலம் மீது அது கொண்டிருக்கும் அதிகாரம் ஒரு முக்கிய காரணி. தன் எல்லைகளை மிக உறுதியாகத் தற்காத்து, அண்டை நாடுகளுடனான நல்லுறவுகளை வளர்த்துக் கொண்ட சீனா, தன்னை முழுதாகத் தொகுத்துக் கொண்டு கடல் மீதான அதிகாரப் பயணத்தை தொடங்கியுள்ளது. சீனாவின் நடவடிக்கைகளை எதிர்கொள்ளவும், அதன் அதிகார வலையில் சிக்கிக் கொள்ள விரும்பாத இந்தியாவும் தன்னால் இயன்ற அளவு கடற்பகுதி மீதான தனது அதிகாரத்தை நிலைநாட்ட முயல்கிறது. இருந்தும், தன் எல்லைகளில் நிலவும் குழப்பங்கள், உள்நாட்டில் நிலவும் குழப்பங்களால் இந்தியா செயலற்ற நிலையில் தவிக்கிறது. இந்தியா தனக்கான பாடத்தை இந்தப் புள்ளியில் இருந்து கற்க தொடங்க வேண்டும்.
—oooOOOooo—
அகண்ட சீனா வளர்ந்து வருகிறது. பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் மத்திய ஆசியாவிலும், இந்தியப் பெருங்கடலிலும், தென்-கிழக்கு ஆசியாவிலும், மேற்கு பசிபிக் பகுதிகளிலும் தன்னுடைய அதிகாரத்தைப் பரப்பி வருகிறது. இந்நிலையில், இந்தியா, ஜப்பான் போன்ற ஜனநாயக நாடுகள் தங்கள் நலனுக்காக அமெரிக்காவுடன் இணைந்து செயலாற்ற முனையும்.
உலக நாடுகளிடையே ஏற்படும் இந்த இருவேறு அணிகள், வருங்காலத்தில் சீனா-அமெரிக்கா இடையே நடைபெறப்போகும் அதிகாரப் போட்டிக்கு கட்டியம் கூறுவதாக அமையும்.
குறிப்பு
கீழே இருக்கும் இணைப்புகளில் சீனாவின் புவி-மைய அரசியல் நடவடிக்கைகளையும், அதன் வருங்கால திட்டங்களையும், உலக நாடுகளிடையே சீனாவின் செயல்பாடுகள் எழுப்பியிருக்கும் அதிர்வலைகளையும் அறியலாம்.
Blogger Widgets