Friday, December 23, 2011

இந்த வார காமெடி பீஸ் .........
செய்தி - பொது விவாதத்திற்கு தயாரா சோனியாவிற்கு ஹசாரே சவால்

பாமரன் - தயார்தான் ஆனால் லோக்பால் , 2 ஜி பற்றியெல்லாம் பேசக்கூடாது சரியா
------------------

செய்தி - பிரதமருக்கு கருப்புகொடி விஜயகாந்த் அதிரடி

பாமரன் - காவேரி,மீனவர் பிரச்சனைகளில் வாய் திறக்காதவர் கருப்புகொடிக்காக முல்லை பெரியார் பிரச்சனை பற்றி பேசவா போகிறார் ,அப்படியே வெள்ளை சிவப்பு வண்ண கொடிகளையும் சேர்த்து காட்டினால் கூட்டணி பற்றியாவது வாய் திறக்கட்டும்
------------------

செய்தி - தமிழகத்திற்கு மத்திய அரசு அநீதி பிரதமருக்கு வைகோ கடிதம்

பாமரன் -  அது காலங்காலமாக நடக்கிறதுதானே புதுசா என்ன சொல்லவரீங்க அதை சொல்லுங்க
---------------

இந்த வார காமெடி பீஸ்
-----------------------------

கருணாநிதி -  முல்லை பெரியாறு அணை சம்மந்தமாக நடந்த மனித சங்கிலியில் கலந்து கொள்ளாததற்கு அவர் மத்திய அமைச்சர் என்பதுதான் காரணம் பார்லிமென்டில் வரும் கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டிய பொறுப்பு இருப்பதால் அதை தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அழகிரி வரவில்லை . என்று வெட்கப்படாமல் பேட்டி அளித்ததற்கு ..........

அய்யோ ... அய்யோ ....Wednesday, December 14, 2011

கிராமம் நோக்கி ( Village)இயந்திர வாழ்க்கையில்
இடிந்த நம் வாழ்வை
காண்போமா !!

ஓய்வு கிடைத்தால்
ஒதுங்கி போவோம்
நகரம் விட்டு
நகர்ந்து போவோம்
கிராமம் நோக்கி !!

கொட்டும்  மழைநீர்
புகாத தார் சாலை –
நிலமேன்றால் காரை

மண் கூட பூந்தொட்டியாய்
மரமெல்லாம் நம்
சிந்தனை போல்
போன்சாய்

இந்நகர வாழ்வை விட்டு
எப்போதேனும்....

உச்சி உருகும்
வெயில் போதும்
குடில் நுழைந்தால்
உயிர் குளிரும்
தரை குளிரும்

தாய் மெழுகிய
சாணத் தரை
போவோமா ஏதேனும் ஒரு நாளில்

மழையின்றி தவிப்போமே !
ஓர் நாளில்
ஒதுங்கி போவோம் கிராமம் நோக்கி !!

கிராம இலக்கணம்
அறிவாய் நீயும் !
குடும்ப வாழ்கை
குழைந்து போகா அன்பு வாழ்க்கை
ஊரார் முகம் ஒருவனறிவான்

கிராமம் கிழிந்து போகா
பழைய துணி

இன்றோ நாளையோ
மாறிப்போகும்
கான்கிரிட் வாழ்வு
கலந்து போகும்

“ நகரம் வெறுத்த  ஒரு நாளில்
நெய்த வேதனை நெசவு இது “


          - அகரத்தான் 

Sunday, December 11, 2011

விடியல்

உனக்காகத்தான்
காத்திருக்கிறது - என்
ஒவ்வொரு இரவுகளுக்கான
விடியலும் .....Saturday, December 10, 2011

ஒரு வரலாற்று தருணம் (oru varalaatru tharunam)                                வரலாற்றில் சில தருணங்கள் விரும்பத்தக்கதாகவும், சில தருணங்கள் விரும்பத்தகாததாகவும் மக்களால் உற்று நோக்கப்படுகின்றன. முக்கியமான தருணங்களை மக்கள் கொண்டாட்டங்களின் வழி வரவேற்கிறார்கள். விரும்பத்தகாத நிகழ்வுகளைக் கண்டு கொதிப்படைந்து உள்ளுக்குள் எரிமலைகளாக குமுறிக் கொண்டிருக்கிறார்கள். வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தோமானால் இப்படியான நிகழ்வுகளின் தொகுப்பாகவே அது இருக்கும். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சனத்திரளை ஒருங்கிணைத்து போராட்ட களத்திற்கு அழைத்து வருபவர்களை அதிகாரத்திலிருப்பவர்கள் கைது செய்து சிறைக் கொட்டடியில் அடைத்து போராட்ட உணர்வை நீர்த்துப் போக வைக்க முயலும்போது, அத்தகைய மக்கள் விரோதச் செயல்பாடுகள் சமூகத்தால் கண்டிக்கப் படக்கூடியதாகவும், கடும் எதிர்வினைகளை உண்டாக்கக்கூடியதாகவும் வரலாற்றை திருத்தி எழுதக் கூடியனவாகவும் உருமாற்றம் கொள்கின்றன. சிலவேளைகளில் இத்தகைய கொண்டாட்டங்கள் மக்களை பொதுவெளிக்கு கொண்டு வராவிட்டாலும் கூட உள்ளுக்குள்ளேயே மவுனமாக ஆசுவாசப் பெருமூச்சு விட வைப்பதாகவும் இருக்கின்றன.  


                                            தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக் கொள்கையைக் கண்டித்து கறுப்பின மக்கள் தலைவர் நெல்சன் மண்டேலா (nelson mandela) கறுப்பின மக்களைத் திரட்டி வெள்ளை அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்தி நெருக்குதலை கொடுத்தபோது, வெள்ளை அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டபோது ஓட்டு மொத்த உலக நாடுகளும் பதறின. உலக நாடுகள் எல்லாம் தென்னாப்பிரிக்காவைத் தனிமைப் படுத்தியதன் வாயிலாக அந்நாடு கால்நூற்றாண்டு சிறைவாசத்திற்குப் பிறகு மண்டேலா அவர்களை விடுதலை செய்தது. சிறைக் கொட்டடியிலிருந்து வெளியே வந்தவுடன் தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபராகப் பதவியேற்ற போது வரலாறு திருத்தி எழுதப்பட்டது. அப்போது அவருக்குப் பின்னால் மக்கள் இருந்தார்கள்.                          


                  அயல்நாடு வாழ் இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி(salman rushdie) தனது சாத்தானின் கவிதைகளில் இசுலாமிய மதக் கட்டுப்பாடுகளை கேள்விக்குட்படுத்தி கட்டுடைப்பு செய்தபோது, உலகம் முழுதும் வாழும் தீவிர அடிப்படைவாதிகளையும் கோபமூட்டுவதாக இருந்தது. மத அடிப்படிவாதிகள் அவரை கைது செய்து இசுலாமிய சட்டப்படி தண்டிக்கத் துடித்தார்கள். இரானின் அயத்துல்லா கோமேனி அவர்கள் அவருடைய தலையை வெட்டி எடுத்து வருபவர்களுக்கு பரிசுத் தொகை வழங்குவதாக பத்வா அறிவித்தார். அதன் பிறகு சல்மான் ருஷ்டி பொது நிகழ்ச்சிகளிலும், வெளி உலகத்திலும் வெளிவராமல் இங்கிலாந்து நாட்டில் தஞ்சமடைந்து கமுக்க வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவருக்குப் பின்னால் மக்களும், கலை இலக்கியவாதிகளும் இருந்தார்கள்.                        


                    பன்னாட்டு முதலைகளுக்கு சொக்கபூமியான உலகின் மிகப்பெரிய சனநாயாகம் தந்தேவாடா வனப்பகுதியின் பூர்வப் பழங்குடிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை செய்து வருபவரும், மனித உரிமைப் போராளியுமான பினாயக்சென் (binayak sen) அவர்களை தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவான துண்டறிக்கைகளையும், சில புத்தகங்களையும் வைத்திருந்ததாக குற்றம் சாட்டி கைது செய்து பிணையில் வர முடியாத பிரிவுகளின் கீழ் சிறைக் கொட்டடியில் அடித்தபோது, உலகம் முழுதும் வாழும் நோபெல் பரிசு பெற்ற மனிதை உரிமை செயற்பாட்டாளர்கள் அவரை விடுதலை செய்யச் சொல்லி தங்களின் கண்டனங்களின் வாயிலாக புற அழுத்தங்களை கொடுத்ததாலும், மக்கள் வீத்துக்கு வந்து போராடியதாலும் வேறு வழியின்றி பிணையில் விடுதலை செய்யப்பட்டார். சிறை மீண்ட மனித உரிமைப் போராளி மக்கள் சேவையை தொடருகிறார். அவருக்குப் பின்னால் மக்களும், மனித உரிமைச் செயல்பாட்டாளர்களும் இருந்தனர்.                                              சமூக சேவகரும், புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளருமான அருந்ததிராய் அவர்கள் காஷ்மீர மக்கள் குறித்த ஒரு கருத்தை முன் வைத்தபோது அது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. (உலகிலேயே அதிக ராணுவ நெருக்கடி மிகுந்த நகரம் காஷ்மீர் தான். 10 இலட்சம் மக்கள் வசிக்கும் மிகக்குறுகிய நிலப்பரப்பிற்குள் 7 இலட்சம் ராணுவவீரர்கள் நிலை கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு மக்களும் ராணுவ வீரர்களின் கை கவுட்டு சந்துக்குள் நுழைந்து செல்வதைப் போல் அவர்களுடைய இயல்பு வாழ்க்கை நடக்கிறது என்பதை கவனிக்க.) இந்தியாவின் தேசப் பற்றாளர்கள் என சொல்லிக்கொண்டு வயிறு பிழைத்தவர்களும், மதத்தை அடிப்படையாகக் கொண்டு கட்சி நடத்தியவர்களும் அவரை தேசத்துரோகி என தூற்றி அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வலியுறுத்தினார்கள். அவர் தன் கருத்துகளில் இருந்து பின் வாங்கவே இல்லை. வழக்கு தொடுத்து கைது செய்யவும் முயற்சித்தார்கள். உலகம் முழுவதும் இருந்து சமூக சேவகர்கள் கண்டனக் குரல்களை எழுப்பினர். அதனால் சனநாயகம் தன் வாலை சுருட்டிக் கொண்டது. அப்போது அவர் பின்னால் சமூக ஆர்வலர்களும், நடுநிலை மக்களும் இருந்தனர்.                            காஷ்மீரத்திலும், வடகிழக்கு மாநிலங்களிலும் ஆயுதப்படை சிறப்புக்காவல் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி  மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். காந்தி தேசம் தன் பிள்ளைகளின் இயல்பு வாழ்க்கையை பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொன்று வீசியபோது, இளைஞர்களை வீடு புகுந்து கொன்று வீசியபோது,  மணிப்பூர் மாநிலத்தில் எந்த அரசியல் பின்புலமுமில்லாமல் தனியொரு பெண்ணாக மேற்படி ஆயுதப்படை சிறப்பு காவல் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி காந்தியவழியில் காந்தி தேசத்தை வலியுறுத்தி தனது 28 வது வயதில் உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கினார். இன்று அந்த உண்ணாநிலை போராட்டம் பதினோரு ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவருடைய போராட்டம் தீவிரமடைந்து கவன ஈர்ப்பை ஏற்படுத்துவதைக் கண்டு அவரைக் கைது செய்து முடக்க நினைத்தபோது அவர் முன்பைக் காட்டிலும் தீவிரம் காட்டினார். அப்போது அவருக்குப் பின்னால் மக்கள் இருந்தனர். 


                                             மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக சனநாயகத்தை வலியுறுத்தி போராடும் எதிர்க் கட்சி தலைவி ஆங் சாங் சூயி (aung san suu kyi) என்பவரின் பின் திரளும் மக்கள் எழுச்சி கண்டு ராணுவ ஆட்சியாளர்கள் அவரைக் கைது செய்து வீட்டுச் சிறையில் அடைத்தனர். 20 ஆண்டுகளாக சிறைக்காவலில் இருக்கும் அவரை பத்திரிக்கையாளர்களோ, மக்களோ, கட்சிப் பிரதிநிதிகளோ சந்திக்க விடாமல் தடை செய்தனர். உலக நாடுகள் எவ்வளவோ வலியுறுத்தியும் ராணுவ ஆட்சியாளர்கள் கேட்பதை இல்லை. இருந்தும் அந்த இரும்புப் பெண்மணி தன் உறுதி குலையவில்லை.  அப்போது அவர் பின்னால் மக்களும், சர்வ தேசமும் இருந்தது.                                                தஸ்லிமா நசுருதீன் (taslima nasrin) என்ற வங்கதேச பெண் எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை போன்றே இசுலாமிய மதக்கட்டுப்பாடுகளை கேள்விக்குட்படுத்தும் விதமாக கதை எழுதியதால், அவருக்கு எதிராக அந்நாட்டு அரசாலும், மதவாதிகளாலும் கடுமையான எச்சரிக்கை விடப்பட்டு அவருக்கு எதிராக பத்வா அறிவிக்கப்பட்டு தேடப்பட்டார். அவர் வங்கதேசத்திலிருந்து தப்பி வந்து இந்தியாவில் அடைக்கலம் கோரி ஓராண்டுகாலம் வரை இருந்தவரை இந்திய ஆட்சியாளர்கள் இந்தியாவை விட்டு வெளியேற்றியபோது, அவர் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் சென்று தஞ்சம் புகுந்தார். அப்போது அவர்கள் பின்னால் கலை இலக்கியவாதிகளும், மக்களும் இருந்தனர்.                           


                 மும்பையைச் சேர்ந்த பெருமதிப்பிற்குரிய எம்.எப். ஹுசைன் ( m f husain )என்ற உலகப்புகழ் ஓவியக் கலைஞர் தன்னுடைய அசாதாரணக் கோட்டோவியங்களின் வாயிலாக காண்போரின் மனங்களில் வித விதமான சித்திரங்களை வரைந்தவர். இவர் திரைப்படத் துறையிலும் கால் பதித்தவர். இசுலாமியர்களுக்கும், இந்துக்களுக்கும் உற்ற தோழனாக இருந்தவர். அவருடைய காளிதேவி குறித்த நிர்வாணச் சித்திரம் அனைத்து ஓவியர்களாலும், கலாரசனை மிக்கவர்களாலும் பாராட்டை குவித்தது. நிர்வாணம் என்பது சிற்பக்கலை, ஓவியக்கலையில் புனிதமான அங்கம் என்பது எத்தனை பேருக்கு சொல்லி புரிய வைக்க முடியும்? அன்று சாதியையும், மதத்தையும் வைத்து வயிறு பிழைப்போரின் எண்ணிக்கை மிக சொற்ப அளவிலேயே இருந்திருக்கக் கூடும். (அதற்கு முந்தைய காலகட்டங்களில் பெரியார் ஐயா அவர்கள் பிள்ளையார் சிலை உடைப்பை நிகழ்த்த முடிந்தது. இன்று அவர் உயிரோடு இருந்தாலும் சிலை உடைப்பை நிகழ்த்தாமல் இருக்க மாட்டார். இப்போது மத அடிப்படை வாதிகளின் எதிர்ப்பை அதிகம் சந்திக்க வேண்டி இருந்திருக்கும். இன்று பெரியாரின் தொண்டன் என சொல்லிக் கொண்டவர்கள் எல்லாம் மஞ்சள் துண்டுக்குள் புதைந்து விட்டனர்.) 25 ஆண்டுகளுக்கு முன் வரைந்து பாராட்டைப் பெற்ற சித்திரம் இன்று சர்ச்சையாக்கப்பட்டு மதவாதிகளைத் திருப்திப் படுத்த, காந்திகள் அவரை இந்தியாவிலிருந்து வெளியேறச் சொல்லி கட்டாயப்படுத்தப் பட்டனர். வழக்கம்போல, இங்கிலாந்து நாடு அவருக்கு அடைக்கலம் கொடுத்தது. தன்னுடைய இறுதிக் காலத்தை மனம் வெதும்பிய நிலையில் கழித்த அந்த உலகப் புகழ் பெற்ற கலைஞன் லண்டனிலேயே தன்னுடைய இறுதி மூச்சை இழந்தார். இறந்தபோது அவரை நல்லடக்கம் செய்ய தயாராக இருப்பதாக இந்திய ஆட்சியாளர்கள் உரைத்தபோது, அன்னாரின் விருப்பப்படி அவருடைய உடல் லண்டன் நகரிலேயே அடக்கம் செய்யப்பட்டது. எப்போதும் அவருக்குப் பின்னால் மக்களும், கலைஞர்களும், சமூகமும் இருந்தது.                              


                தமிழீழத்தில் அமைதிப்படை வீற்றிருந்த காலத்தில் போர் நிறுத்தம் அமலில் இருந்த காலத்தில் சர்வதேச கடல் எல்லையில் நிராயுதபாணியாக படகில் சென்று கொண்டிருந்த பன்னிரு தமிழீழப் போராளித் தளபதிகளை இந்திய அமைதிப்படை கைது செய்தனர். தகவலறிந்த போராளித் தலைவர்கள் எவ்வளவோ கேட்டுக்கொண்டும் அவர்களுடைய வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டு, சிங்கள ராணுவம் வசம் ஒப்படைக்க கொழும்பு கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டனர். போராளிகளை காக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணான நிலையில், அரசியற் செயற்பாட்டாளர் அன்ரன் பாலசிங்கம் 
anton balasingham )  அவர்கள் கனத்த இதயத்தோடு அவர்களுக்கு குப்பி கொடுத்து தமிழீழ தேசத்திற்கு வித்தாகச் சொன்னார். அந்த தளபதிகளும் தங்கள் இன்னுயிரை தமிழீழத்திற்கு உரமாக்கினர். அப்போது மட்டுமல்ல, தமிழீழ வரலாற்றில் எப்போதும் அந்த மாவீரர்களுக்கு தனித்த இடமுண்டு.                              தமிழர் தலைவர் பெரியார் சமூக நீதி காக்கவும், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், தீண்டாமைக்கு எதிராகவும், பெண்ணடிமைக்கு எதிராகவும், பெண் விடுதலையை வலியுறுத்தியும், மது விளக்கை வலியுறுத்தியும், தலித் மக்களுக்கு ஆதரவாக கோவில் நுழைவுப் போராட்டங்களையும், பொதுக் கிணற்றில் குடிநீர் எடுக்க வேண்டியும், கடவுள், சாதி, மூடநம்பிக்கைக்கு எதிராக மக்கள் திரளை விழிப்புணர்வூட்டவும், மக்கள் விரோத அரசியலமைப்பு சட்டங்களை நீக்கக் கோரியும், சுதந்திரத்தின் பெயரால் மக்களை மகுடிக்கு மயங்கும் பாம்புகளாய் ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் காந்திய பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும் எண்ணற்ற போராட்டங்களை முன்னெடுத்து தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த உன்னத மனிதர். அவர் அன்று கொளுத்திய விழிப்புணர்வுத் தீ மக்களின் மனங்களில் கனன்று எரிவதாலேயே இன்றும் தமிழகத்தில் போலி காந்தியவாதிகளின் காங்கிரசும், மதவாதிகளும் காலூன்ற முடியவில்லை என்பதை மனதில் கொள்க. எப்போதும் அவர் பின்னால் மக்கள் இருக்கிறார்கள். 


                             அண்மைக்காலமாக காந்தி தேசத்தில் மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகளை கண்ணுறுகையில், இந்த அயோக்கியர்கள் வாழும் சம காலத்தில் ஏன் நாம் பிறந்தோம் என்ற குற்ற உணர்ச்சியையே ஏற்படுத்துகிறார்கள். நில அபகரிப்பு வழக்கு, வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கு, பாலியல் வழக்கு, அரசு பொதுத்துறை நிறுவனச் சொத்துக்களை அதிகாரத்தைப் பயன்படுத்தி கையகப் படுத்துதல், சுரங்க ஊழல், தொலைத்தொடர்பு ஊழல், ஆதர்ஷ் ஊழல், மட்டைப் பந்துப் போட்டியில் ஊழல், சவப்பெட்டி ஊழல், இலவச வண்ணத் தொலைகாட்சி ஊழல், சுடுகாட்டு ஊழல், இலவச செருப்பு ஊழல், மணற்கொள்ளை, கல்வி நிறுவன மோசடிக்கு உடந்தையாக இருந்து அங்கீகாரம் கொடுத்தது, ராணுவ ஒதுக்கீட்டில் ஊழல், அடுத்தவர் சொத்தை அபகரிக்க நினைத்து கொலை மிரட்டல் விடுத்தது, தான் எடுத்துக்கொண்ட சத்திய பிரமாணத்திற்கு எதிராகவே நடந்து கொள்ளுதல், பன்னாட்டு முதலைகளோடு இணைந்து கொள்ளை இலாபநீட்ட அரசை இழப்பிற்கு உள்ளாக்குதல் போன்ற அயோக்கியத்தனங்களை செய்ததற்காக கைது செயாப்படும் மக்கள் காவலர்கள் நாட்டிற்கு சுதந்திரம் வாங்க தியாகம் செய்த பேராண்மையாளரைப் போல கொஞ்சம் கூட வெட்கப்படாமல் மக்களையும், ஊடகங்களையும் சந்திக்கும்போது அவர்களுக்கும் சேர்த்து நாம் தான் வெட்கப் படவேண்டியுள்ளது. 

                           

Kanimozhi arrives inChennai
               
               அண்மையில் ஒரு கட்சியின் மகளிரணித் தலைவியும், பெண்ணியப் போராளியும், கலை இலக்கியத்தைக் கரைத்துக் குடித்தவரும், நாட்டுப்புற இசைக் கலைஞர்களைச் சங்கமிக்க வைப்பவரும், கருத்து சுதந்திரத்தை மீட்டு எடுப்பவருமான அவரைப் பற்றி தனியாக சொல்ல ஏதுமில்லை. ஊரும், உலகமும் அறிந்த செய்தி தான். உலகின் இரண்டாவது இமாலய ஊழலான இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல் புரிந்து அந்தக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, ஆறுமாத சிறைவாசம் முடித்து வெளி உலகை காண வெட்கப்படாமல் வரும் அந்த தமிழச்சியை வரவேற்க அவர் சார்ந்த கட்சியின் தலைமையும், தொண்டரடி பொடிகளும் தாரை, தப்பட்டைகள், செண்டை மேளங்கள் முழங்க சென்னை விமான நிலையத்திலிருந்து பல மைல் தொலைவிற்கு கட்சி பதாகைகளுடன் வேலை வெட்டியற்ற வேட்டிகள் மதுப்புட்டிக்காகவும், சோற்றுப் போட்டலத்திர்காகவும், காந்தி நாட்டுக்காகவும் வெயிலில் நின்று கோசம் போட்டு தங்கள் தலைவர்களின் இந்த செயற்கரிய செயலை அங்கீகரிக்கிறார்கள். உலகம் இதுவரை பல ஊழல்களை சந்தித்து இருக்கலாம். ஆனால், உலகிலேயே முதன் முறையாக கையூட்டுத் தொகையை வங்கி வரைவோலையாக பெற்றுக் கொண்ட உலகின் மிகத் துணிச்சலான பெண்மணி இவர். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாய்கிறது. மத்தியில் செல்வாக்கோடு இருந்ததால் (என்ன பெரிய செல்வாக்கு, தன் குட்டியைத் தானே விழுங்கும் பாம்புகளைப் போல தன் இனத்தை தானே அழிக்க உதவி புரிந்ததற்காக காந்தியின் நன்றி கடன் தான்.) நம்மை யாருமே ஒன்றும் செய்ய இயலாதென்ற அசட்டுத் துணிச்சல். சிறுபிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது என்பது இது தான் போலிருக்கிறது. யானைக்கு அடி சறுக்கி இருக்கிறது. 

                      மனித குலம் தழைக்கவும், அறியாமையின் பிடியிலிருக்கும் மக்களை தலையிலிருந்து விடுவிக்கவும், இனவிடுதலைக்காகவும், நிறவெறிக்கு எதிராகவும், தீண்டாமைக்கு எதிராகவும், தலித் மக்களுக்கு ஆதரவாக பொதுக்கிணற்றில் குடிநீர் எடுக்க போராட்டம் மேற்கொள்ளவும், தலித் மக்களை கோவில் நுழைவுப் போராட்டத்தில் அழைத்துச் சென்றாரா? கடவுள், மதம், மூடநம்பிக்கை போன்றவற்றிலிருந்து மக்களை விழிப்புணர்வூட்ட போராட்டம் நடத்தினாரா? பெண்ணடிமைத்தனத்தை ஒழிக்கப் பாடுபடவும், மக்கள் கலைக்கு ஆதரவாகவும், அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும், பூர்வகுடிகளை வாழ வைக்க அவர்களுக்கு ஆதரவாகவும், சர்வாதிகாரம் நீக்கி சனநாயகம் தழைக்கவும், கருத்து சுதந்திரத்திற்காகவும் போராடி சிறை சென்றிருந்தால் அவை மதிக்கப்படக் கூடியதாக இருந்திருக்கும். 
                              நாடறிந்த, உலகறிந்த கொள்ளைக்காக கைது செய்யப்பட்ட போலி பெண்ணியவாதிக்கு வழங்கப்படும் தியாகிப் பட்டங்கள் கண்டு உலகம் காறித் துப்புகிறது. வரலாற்றின் வழி நெடுக மக்கள் காறித் துப்பிய எச்சிலில் நீந்தியே தன் வாழ்நாளைக் கழித்து வரும் போலித் தமிழனின் வாரிசு எப்படி இருக்கும்? இப்படித் தான் இருக்கும். அரசியலுக்கு வருவதற்கு நால்வகைக் குணங்களும் இல்லாதிருப்பது தான் அடிப்படை தகுதியோ?  சிறை வாழ்க்கை சிலரை பக்குவப்படுத்தும். நிறை, குறைகளை எடை போட்டுப் பார்க்க வைக்கும். வரலாறு நிறையப் படிப்பினைகளைக் கொடுக்கும். ஆனால் மேற்படி நபர் தன்னுடைய செயலுக்கு வருந்தியர் போல தெரியவில்லை. சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும். நெல் போட்டால் நெற்பயிர் தானே வரும். கொள் பயிரா வரும்? பிணையில் வெளி வருவதற்காக பிரதானமாக முன் வைக்கப்பட்ட வாதமானது குற்றம் சாட்டப்படும் நபர் ஒரு பெண் என்பதாலும், ஒரு குழந்தைக்கு தாய் என்பதாலும் பிணையில் விடுவிக்க வேண்டுமாம். குற்றவாளி ஒரு பெண் என்பதால் விடுவிக்கப்பட வேண்டுமெனில், இவர்களால் பெங்களூரு நீதி மன்றத்தில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தமிழக முதல்வரும் ஒரு பெண் என்பதால் விட்டு விடலாமா? எதற்கு வழக்கு? எதற்கு விசாரணை? பெண் என்றால் பேயும் இரங்கும். சட்டம் இறங்காதா என்ன? மேற்படி கட்சியில் சீட் வாங்க நினைப்பவர்கள், தன் சக்திக்கு உட்பட்டு அடுத்தவர் பணத்தை எவ்வளவு கொள்ளையடித்து கட்சிக்கு கொண்டு வந்து கொட்டமுடியும் என்பது தான் தகுதியாக இருக்கும் போலிருக்கிறது. செய்த அற்பத் தனத்திற்கு ஏனிந்த ஆர்ப்பாட்டம்? தியாகச் சுடரே! எட்டாவது வள்ளலே! உலகின் எட்டாவது அதிசயமே! போன்ற தமிழகராதியில் தேடினாலும் கிடைக்காத பட்டங்கள் எதற்காக? 


                              நீங்கள் என்ன அயோக்கியத்தனங்களை செய்தாலும் கண்டுகொள்ள மாட்டான் தமிழன். சில அடுக்குமொழி வார்த்தை ஜாலங்களால் இவர்களை எளிதில் வீழ்த்து. மதுப்புட்டி கொடுத்து அவர்களை மயக்கு. திரைப்பட நடிகனைக் கொண்டு இந்த பன்னாடைத் தமிழர்களை மனங்களை முடக்கு. ஆனால், என் போன்ற பெரியாரின் தொண்டர்கள் சார்பாக ஒரே ஒரு தாழ்மையான கோரிக்கை. இனி வரும் காலங்களில் நான் பெரியாரின் வழி வந்தவன், நான் அவருடைய தம்பி என்று சொல்லி அவரையும், அவருடைய 96 வருட மனித குலம் செழிக்க நடத்திய போராட்டங்களையும், தியாகங்களையும் அசிங்கப்படுத்தாதே! 


                                                                                                  ---------------------------------------------
                                                                                                     - அகரத்தான்.கலை உலகில் தலை நுழைத்தால் 
தலைவர் ஆகலாம் 
தடையில்லாமல் 
தமிழகத்தின் முதல்வர் ஆகலாம் 
நடன, பாடல் கேட்டுகொண்டே 
நாட்டை ஆளலாம் 

      கவிஞர் ஜெய பாஸ்கரன் .Wednesday, December 7, 2011

ஏ... தாழ்ந்த தமிழகமே!


மழை பெய்கிறது.
ஊர் முழுக்க ஈரமாகி விட்டது.
தமிழ் மக்கள், எருமைகளைப் போல்
எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள்.
ஈரத்திலேயே உட்காருகிறார்கள்.
ஈரத்திலேயே நடக்கிறார்கள்.
ஈரத்திலேயே படுக்கிறார்கள்.
ஈரத்திலேயே சமையல்
ஈரத்திலேயே உணவு.
உலர்ந்த தமிழன் மருந்துக்குக் கூட அகப்பட மாட்டான்.

                               
                                  - மகாகவி. பாரதி. (Mahakavi.Bharathi)

                         முல்லை பெரியாறு(Mullaiperiyaru) பிரச்சினையில் கேரளாவிடமும், பாலாறு பிரச்சினையில் ஆந்திராவிடமும், காவிரியில் தமது பங்கு தண்ணீருக்காக கர்நாடகாவிடமும் மண்டியிட்டு மண்டியிட்டே, மன்றாடி மன்றாடியே தன் உரிமைகளை யாசகமாகப் பெற்றுக் கொண்டிருக்கிறான் தமிழகத் தமிழன். சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஒன்றுபட்ட இறையாண்மை என்ற சொத்தை வாதத்தை ஏற்றுக் கொண்டதே இல்லை. இந்திய இறையாண்மை மாநிலத்திற்கு மாநிலம் வேறு வேறு முகத்தைக் கொண்டிருப்பது தெரியாமல், முகத்தில் மூவர்ணம் பூசிக் கொண்டு மட்டைப் பந்து வேடிக்கை பார்த்து இந்தியன் என்று மார்தட்டி தன் இருப்பை தானே அழித்துக் கொண்டிருக்கிறான். தமிழன் தன் உயிராதாரப் பிரச்சினைக்கு பங்கம் வரும்போது மட்டுமே பிரச்சினையின் தீவிரம் கழுத்தை நெருக்கும்போதே கும்பகர்ண உறக்கம் கலைகிறான். தன் பிரச்சினைகளை தீர்க்க வானத்திலிருந்து எந்த ரட்சகனாவது குதித்து வந்து இடர் களைவான் என்று மழையில் நனையும் சுரணையற்ற எருமைகளைப் போல நின்று கொண்டிருப்பான். அந்த சமயத்தில் மழை நேர காளான்களாக உருவாகும் அரசியல் பிணந்தின்னிகள் அவனுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதைப் போல் வந்து தன்னுடைய அரசியல் செல்வாக்கையும், தன் இருப்பையும் மக்களிடம் உறுதி படுத்திக் கொள்வான். தமிழகத் தமிழனுக்கு உணர்வுகள் போர்மேகமென திரள்வதும், பொசுக்கென காணாமல் போவதும் எந்த நிபுணனாலும் கணிக்க இயலாத விடயமாகவே இருக்கிறது. தமிழன் முக்கிய பிரச்சினைக்காக வீறு கொண்டு எழுவதை கண்டு புறநானூற்று தமிழன் திரும்பி விட்டானென பிரமிக்கையில், அடுத்த சில கணங்களில் அரசு மதுபானக் கடை வாசலில் மயங்கி சரிந்து கொண்டிருப்பான். இது மலை மாடு, இதனிடம் என்ன சுரணையை எதிர்பார்ப்பது என கவலையுறும் வேளையில் திகு திகுவென பற்றி எரிவதுமென தமிழகத் தமிழனை ஒரு வரையறைக்குள் அடைக்க இயலாது. 

                காவிரி (Kaveri)பாய்ந்து வளம் கொழித்த கன்னி தமிழ் நாட்டில் பருவமழை பொய்த்து சோழநாடு சோறுடைத்த தஞ்சையின் கழனிகளில் வறட்சி கோரதாண்டவமாடும்போது மட்டுமே காவிரி நீரில் தமது பங்கு குறித்தும்தேசிய நதி நீர் இணைப்பு பற்றியும் போர்க்குரலெழுப்புவான். சாகுபடி அறிவற்றிருந்த கன்னடர்களுக்குமுப்போகம் நெல்சாகுபடி குறித்த அறிவை புகட்டி, கர்நாடகாகாவை இன்று விவசாயம் கொழிக்கும் மாநிலமாக மாற்றியதில் தமிழனின் விவசாய அறிவே மூலமாகஇருந்திருக்கிறதுதமிழைச் சொல்லியே வயிறு பிழைத்தவனின் ஆட்சிக் காலத்தில் தான் காவிரியின் குறுக்கே நிறைய தடுப்பணைகளும்விவசாய நில விரிவாக்கமும்தங்கு தடையில்லாமல் அரங்கேறினஅப்போதெல்லாம் திரைப்பட உரையாடல் எழுதவே அவனுக்கு நேரம் சரியாக இருந்திருக்கும்தமிழனின் கும்பி கருகும்போதும்அவனுடைய அறியாமையை வைத்து அரசியல் வயிறு பிழைப்பவனை அடையாளம் காண இயலாது அவனிடம் ஏமாந்து போவான்அவனை தலையில் வைத்துக்கொண்டாடி மகிழ்வான்

           
    

                      உச்சநீதி மன்ற காவிரி நடுவர் மன்றம் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு 204 டி.எம்.சி தண்ணீரை வழங்கவேண்டுமென கர்நாடகா அரசிற்கு வலியுறுத்திய தீர்ப்பின் நகலை, கர்நாடகா அரசு வெள்ளரியில் பின்பக்கம் துடைத்த குரங்கை போல் தான் பயன்படுத்தியது. கபினியும், கிருஷ்ண ராஜசாகர் அணை நிரம்பி வழியும்போது வடிநிலமாகத் தான் கர்நாடக அரசு தமிழகத்தை பயன்படுத்தியது. 204 டி.எம்.சி தண்ணீர் என்பது பருவமழை காலங்களில் கிடைக்கும் உபரி நீரை தவிர்த்து பிற காலங்களில்  கிடைக்கும் தண்ணீரின் அளவாக எடுத்துக் கொள்வதில்லை தமிழகத் தமிழனும். தமிழன் தன் பாரம்பரிய விவசாய நிலங்களை மத்திய அரசுக்கு தாரை வார்த்து, நெய்வேலி அனல் மின் நிலையத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்து கர்நாடகாவுக்கும், தமிழகத்தைக் கொள்ளையடிக்க வந்திருக்கும் பன்னாட்டு முதலாளிகளின் நிறுவனங்களுக்கும் தடையற்ற மின்சாரத்தை வழங்கி, தான் மட்டும் இருளில் வசித்துக் கொண்டிருக்கிறான். எஞ்சிய தமிழன் அண்டை மாநிலங்களிலும், அண்டை மாவட்டத்திலும், அயல் நாடுகளிலும் வேலை தேடி, கால்களில் ஆணி முளைக்க அலைந்து திரிந்து கொண்டிருக்கிறான். 

                    கர்நாடக சட்டசபை முன் திருவள்ளுவர்(Thiruvalluvar) சிலை திறந்தால் தான் பெங்களூருவுக்கு செல்வேனென அரசியல் பிழைப்புவாதிகள் தன் அடுத்த நாடகத்தை அரங்கேற்றியபோது, அந்த அறிவிப்பின் பின்னாலிருக்கும் அரசியல் தெரியாமல் அவன் பின்னே அணி திரளும் மடமையாளனாகவே தமிழன் இருக்கிறான். பெங்களூருவில் வள்ளுவன் சிலை திறந்ததால் தமிழன் வயிறும், தமிழகத்தில் சர்வக்ஞர் சிலை திறந்ததால் கன்னடனின் வயிறும் உறுதியாக நிரம்பியிருக்காது. அவனவன் சரிந்துபோன செல்வாக்கை தூக்கி நிறுத்துகிறான் வாய்ப்புகளை இழந்த திரைநாயகியைப் போல. இதுவரை மத்தியிலும், மாநிலத்திலும் ஆண்டு கொழுத்த வெண்ணைகள் காவிரியில் தமிழர் உரிமை குறித்து உருப்படியாய் எந்த ஒன்றையும் நிறைவேற்றவில்லை என்பது தான் கசக்கும் உண்மையாக இருக்கிறது. தன்னுடைய உரிமைக்காக போர்க்குரல் எழுப்பவேண்டிய தமிழனை, திரைப்பட தமிழன் தான் உசுப்பி எழுப்ப வேண்டியிருக்கிறது. அதுவரை திரைப்படத்திற்குள் மூழ்கி தன்னை ஆள அடுத்த முதல்வனை தேடிக்கொண்டிருப்பான். 

                    ரஷ்ய, ஜப்பான், சீனா போன்ற முன்னேறிய நாடுகளில் தாய் மொழிக் கல்வி தான் செயல்படுத்தப் படுகிறது. அந்நிய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அவர்கள் அதி வேகமான வளர்ச்சியைத் தான் பெற்றிருக்கிறார்கள். வீழ்ந்து விடவில்லை. ஆனால், தமிழக மெட்ரிக் தமிழனோ தன் தாய் மொழிக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து 
உச்ச நீதி மன்றத்தால் குட்டு வாங்குபவனாகவும் தமிழகத் தமிழன் இருப்பதற்கு வெட்கப் படாதவனாகவும் இருப்பது வேதனையளிக்கிறது. 

                   தன்னுடைய உணவுத் தேவையை பூர்த்தி செய்ய ஏதுவான சூழ்நிலை கேரளா நாட்டில் இல்லை. கேரளா மலையாளிகளுக்கு தாய்மொழி முதல் சீவ ஆதாரத்திற்கான உணவு தானியங்கள், இறைச்சி, அரிசி மற்றும் காய்கறிகள் என அனைத்தையும் தமிழகத்திலிருந்தே தமிழன் அனுப்பிக் கொண்டிருக்கிறான். தமிழன் கொடுக்க மறுத்தால் மலையாளி தன்னை கெடுப்பார் யாருமில்லாமல் தானாகவே கெடுவான். சிவசங்கர் மேனன், கே.ஆர். நாராயணன், விஜய் நம்பியார் மற்றும் சதீஷ் நம்பியார் போன்ற தமிழின விரோதிகள் உலகின் மிகத் தொன்மையான இனத்தையும், அவர் தம் இறையாண்மை மிக்க தேசத்தையும் வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எரிய தம் சக்தியெல்லாம் திரட்டி வாள் சுழற்றியபோதும் கூட, ஏ.கே. அந்தோணி, சசிதரூர் போன்ற அரசியல் அபத்தங்களை மத்திய அமைச்சர்களாக்கி அழகு பார்த்த சுரணையற்றவன் தான்  தமிழன். சசிதரூர் என்ற அரசியல் அபத்தம் தன்னுடைய மூன்றாவது மனைவிக்கு ரூ.70 கோடி மதிப்பிலான வைரமோதிரத்தை ஐ.பி.எல் மோசடிப் பணத்தில் வாங்கி பிறந்த நாள் பரிசாக வழங்கியபோதும்கூட நாடாளுமன்றத்தில் தனது எதிர்ப்பை பதிவு செய்யாத இளிச்சவாயனாகவே தமிழன் இருந்தான். 

                       


                    தமிழவன் அய்யா அவர்கள் சொல்வதைப் போல, உலகம் முழுவதும் மலேசியத் தமிழன், சிங்கப்பூர் தமிழன், கனடா தமிழன், அமெரிக்க தமிழன், ஜெர்மன் தமிழன், ஆசுதிரேலிய தமிழன் மற்றும் ஈழத் தமிழன் என வாழ்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தான் புதியவகைத் தமிழன், அதாவது சினிமாத் தமிழன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவன், தான் தெருக்கோடியில் புரண்டு, சினிமா என்னும் மாயையில் மூழ்கி திளைத்து கேரளாவிலிருந்து வரும் இறக்குமதிப் பண்டங்களை கோடிகளில் புரளவைத்து புளகாங்கிதமடைந்து கொண்டிருக்கிறான். 

                    மராட்டிய மண்ணில் கை துப்பாக்கியோடு பேருந்தில் ஏறியமர்ந்த பீகாரி ஒருவன் பயணிகளை சுட முயற்சி செய்தபோது, மராட்டிய காவல்துறையால் சுட்டு வீழ்த்தப்பட்டு மக்கள் காப்பாற்றப்பட்டனர். அப்போது பீகாரின் எதிரும், புதிருமான அரசியல் தலைவர்களான ராம்விலாஸ் பஸ்வான், நிதீஷ்குமார், லல்லு பிரசாத் யாதவ் முதலானோர் தங்களது அரசியல் இலாப நட்டங்களை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரே மேடையில் தோன்றி, பீகாரி ஒன்றும் அனாதை இல்லை. என் மாநிலத்தவனை கொல்ல நீங்கள் யார்? நடந்த செயலுக்கு மன்னிப்பு கேட்கவில்லையெனில், மராட்டியத்திற்கு புகைவண்டி சேவையை நிறுத்துவோம் என முழங்கினார்கள். 90 களின் இறுதியில் மத்திய அமைச்சராக இருந்தபோது மாட்டு தீவன ஊழலில் 980 கோடி வரை கொள்ளையடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர் தான் லல்லு பிரசாத் யாதவ் என்பது கவனிக்க. தன் மாநிலத்தவன் தவறே செய்திருந்தாலும் போனது ஒரு உயிர் தானே என அவன் அலட்சியம் காட்டவில்லை. இதே இடத்தில், ஒரு தேசிய இனம் ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் அழித்து ஒழிக்க்ப்பட்டபோதும், இலவச இணைப்பாக மேலும் மூன்று தமிழரின் உயிர் குடிக்க புத்தனும், காந்தியும் துடிக்கும்போதும், 3 லட்சம் தமிழர்களையும் ஒரே சிறைச் சாலையில் அடைக்க முடியாதென்பதால், (அதில் 80000 பேர் விதவை தமிழச்சிகள்) திறந்த வெளி முள்வேலி முகாமிலடைத்து வைத்து உளவியல் போரை எதிரிகள் தொடுத்த போதும் எந்த பிணந்தின்னி அரசியல் ஓநாய்களும் ஓரணியில் திரண்டு வந்து எம்மினத்திற்காக குரல் கொடுக்க முன்வரவில்லை. 

                       அண்டை தேசமான பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷாரப்பை படுகொலை செய்யத் திட்டமிட்டு குண்டுவைத்த வழக்கில் சரப்ஜித் சிங் என்ற சீக்கியன் கைது செய்யப்பட்டு அந்நாட்டு நீதி மன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்டு, தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. அந்த குற்றவாளியின் தூக்கு தண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைக்கக் கோரிய கருணை மனுவும் அந்நாட்டு முதல் குடிமகனால் நிராகரிக்கப்பட்டது. இறையாண்மையை குத்தகைக்கு எடுத்த, எப்போதும் கொல்லைப் புறம் வழியாகவே நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பொருளாதார எலி இந்தியாவில் இருந்துகொண்டே அந்த சீக்கியனை காப்பாற்ற அடுத்த நாட்டின் இறையாண்மைக்குள் மூக்கை நுழைக்கிறான். பிரான்ஸ் தேசம் தன்னுடைய இறையாண்மை காக்க டர்பனுக்கு தடை விதித்தபோது, இங்கிருந்தே சீக்கிய இனத்திற்கு விதிவிலக்காக தனிச்சட்டம் இயற்றச் சொல்கிறான். பாகிஸ்தானில், ஆஸ்திரேலியாவில், அமெரிக்காவில் சீக்கிய இனம் தாக்கப்பட்டால் நாங்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம் என்கிறான். (அது ஏன் இந்தியன் என்று சொல்லிக்கொண்டு எந்த நாட்டுக்குப் போனாலும் துரத்தி துரத்தி அடிக்கரானுங்கன்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க!). 

         
                

                ஆபரேசன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையை சீக்கியப் பொற்கோவிலுக்குள் நடத்தியதற்கு பதிலடியாக, இந்திய தேசத்தின் முன்னாள் பிரதமர் திருமதி. இந்திராகாந்தி அவர்களை அவருடைய சீக்கிய  மெய்க்காப்பாளன் சுட்டுக் கொன்றான். உடனே ஜகதீஸ் டைட்லர் என்ற காங்கிரஸ் எம்.பி தலைமையில் காங்கிரசு குண்டர்களால் நடத்தப்பட்ட வெறியாட்டத்தில் 3000 க்கும் மேற்பட்ட அப்பாவிச் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். (அப்போது இந்திராவின் மண் ராஜீவிடம் சீக்கியப் படுகொலை குறித்து ஊடகங்கள் கேள்வி கேட்டதற்கு அவர் அளித்த பதில் மனித குலத்தை வெட்கி தலை குனிய வைத்தது. ஒரு பெரிய ஆலமரம் வீழும்போது, மரத்தின் கீழுள்ளவை சேதமடையத்தான் செய்யும் என்று பதிலளித்தார்). சீக்கியப் படுகொலை குறித்து நியமிக்கப்பட்ட ஒரு நபர் கமிஷன் 25 ஆண்டுகள் கழித்து ஜகதீஸ் டைட்லர் குற்றவாளி இல்லையென தனது தட்டையானத் தீர்ப்பை வழங்கி நீதியை எதிர்நோக்கி இருந்த சீக்கியர்களின் முகத்தில் கரியைப் பூசியது. மேலும் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியதை போல ஜகதீஸ் டைட்லரை 2009 ம் ஆண்டு அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தியது. வெகுண்டெழுந்த சீக்கியர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போதும், தேர்தல் பிரச்சார மேடைகளிலும் கொல்லைப்புற நாயகர்களின் மீது தங்கள் காலணிகளை வீசி தங்களின் கால் நூற்றாண்டுக் கோபத்தை வரலாற்றில் பதிவு செய்தபோது மக்கள் ரட்சகர்கள் புன்முறுவலோடு ஏற்றுக் கொண்டார்கள். (கொல்லைப்புற சீக்கியப் பொருளாதாரப் புலி தான் அப்போது இந்தியப் பிரதமர் என்பதைக் கவனிக்க). 

                         நான்காம் கட்ட ஈழப் போரில் ஈழத் தமிழர்கள் முழுமையாக அழித்தொழிக்கப்பட்டபோது அதிகாரத்திலிருந்தவர்கள் அதிகார அத்துமீறல் செய்து தமிழின எழுச்சியை அடக்கி ஒடுக்கியபோது, முத்துக்குமார் உட்பட 17 தியாகத் திருமகன்கள் தங்களையே தீபமாக்கி தமிழனின் அறியாமை இருள் விரட்டியபோது குடித்து விட்டு இறந்தான், குடும்பப் பிரச்சினையில் இறந்தான், கடன் பிரச்சினையில் இறந்தானென அவர்களின் தியாகத்தை கொச்சைப் படுத்தியவனும் தமிழன் தான். 

                        தமிழகச் சட்டமன்றத்தில் கண்டனத் தீர்மானம், ஐயகோ! தமிழினம் அழிகிறதே!-தீர்மானம், நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா, மனித சங்கிலி போராட்டம், போரை நிறுத்த வலியுறுத்தி போராடிய தமிழ் உணர்வாளர்களை கூட்டணிப் பாதுகாப்புச் சட்டத்தில் (தேசியப் பாதுகாப்புச் சட்டம்) கைது செய்து சிறையிலடைத்தது, ஈழத் தமிழர்க்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை கையில் எடுத்ததும் அதிகாரத்தில் இருந்த போலித் தமிழினத் தலைவன் கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டு போராட்ட உணர்வை நீர்த்துப் போகச் செய்தது, வழக்கறிஞர்கள் சமரசமில்லாமல் ஈழத் தமிழர்க்கு ஆதரவான  போராட்டத்தை முன்னெடுத்ததைக் கண்டு, போராட்டத்தை காவலர்-வழக்கறிஞர் சண்டையாக மாற்றி போராட்ட உணர்வை திசை திருப்பியது,  உலகப்புகழ் மூன்று மணி நேர உண்ணாவிரதம், போரை நிறுத்த வலியுறுத்தி தமிழின உணர்வாளர்கள் போராடியபோது உணவு, மருந்துப் பொருட்களை ஈழத்தமிழர்களுக்கு அனுப்புவதாகக் கூறி விட்டு, சிங்கள ராணுவத்திற்கு அனுப்பி வைத்தது, (தமிழர்கள் உயிரோடு இருந்தால் தானே இவர்கள் அனுப்பும் உணவையும், மருந்துப் பொருட்களையும் அனுபவிக்க முடியும்? தனியொரு மனிதனாக இதே உதவியை மானமிகு. பழ. நெடுமாறன் அய்யா அவர்கள் செய்தபோது தடுத்தவனும் இந்த போலித்தமிழன் தான் ) 

                       

         தமிழனின் வரிப் பணத்தில் தமிழனைக் கொல்ல எதிரிகளுக்கு ஆயுதம் வாங்கிக் கொடுத்தது, எதிரிக்கு ராடார் வாங்கிக் கொடுத்து ஈழத் தமிழனின் நடமாட்டத்தைச் சிங்களனுக்கு காட்டிக் கொடுத்தது, தப்பிக்கின்ற வழியெல்லாம் அடைத்துவிட்டு பட்டி ஆடுகளைப் போல் தமிழனை அடைத்து வைத்து விட்டு எதிரியின் விமானத் தாக்குதலுக்கு உதவியது, போர் மிகக்கடுமையாகி தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்று வீசப்பட்டபோது மழை விட்டும் தூவானம் விடவில்லை என்று இலக்கிய நையாண்டி செய்து உலகம் முழுதும் வாழும் பனிரெண்டரை கோடி தமிழர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, மே 18 - 2009 அன்று புகையும் நெருப்புமாக ஈழப்போர் முடிவுற்றதாக இருபத்தொன்றாம் நூற்றாண்டின் இணையற்ற இனப் படுகொலையாளன்  இராசபக்சே கொக்கரித்தபோது, சிங்கள இராணுவம் கொல்லப்பட்ட தமிழ் தேசியத் தலைவர் மேதகு.வே. பிரபாகரன் அவர்களின் உடலென ஓர் உடலை செய்தி ஊடகங்களுக்குக் காண்பித்தபோது இந்தியா-இலங்கை மட்டைப் பந்து போட்டியையும், சின்னத்திரைகளில் மானாட மயிலாட நிகழ்ச்சியையும் கண்டு களித்திருந்த இன மான உணர்வற்ற தமிழகத் தமிழனின் நிலையை கண்ணுற்றபோதும், தமிழீழத்தாய் பார்வதி அம்மாள் கொடுங்கோலன் ராசபக்சே அனுமதியின் பேரில் தமிழகம் வந்தபோது கார்பொரேட் காந்திகளைத் திருப்தி படுத்த வேண்டி, விமான நிலையத்திலேயே அவரை திருப்பி அனுப்பியது, (ஒரு தேசத்தையே ஒரு தசாப்தத்திற்குமேல் அடைகாத்துப் பாதுகாத்த தாய்க்கு நேர்ந்த அவலம் பார்த்தீர்களா?), பார்வதி அம்மாளின் உடலை எரித்த சிதையில் சிங்களக் காடையர்கள் நாய்களை தூக்கிப் போட்டு அவமரியாதை செய்தபோது தமிழகத்திலிருந்து தமிழ் உணர்வாளர்கள் தவிர யாரும் எதிர்வினையாற்றாமல் இருந்தது என்று தமிழகத்தின் சுரணையற்ற நிலை உதிரத்தை உறைய வைத்தது. 

            
       

             ஈழப்போரை முடிவுக்குக் கொணர்ந்து தமிழர்களைக் கொன்று புதைத்துவிட்டு ரத்தக்கறை படிந்த கரங்களோடு வாக்குக் கேட்டு தமிழனின் வாசற்படி வந்த கொலைகார காந்தியவாதிகளிடம் மதுபானம், கோழி பிரியாணி, காந்தி நோட்டை பெற்றுக்கொண்டு வாக்களித்து ஆட்சிப் பீடத்தில் அமர வைத்து அக மகிழ்ந்தவன் தான் தமிழகத் தமிழன். ஈழப்போர் முடிவுக்கு வந்த பிறகு ஓராண்டுக்கு பிறகு, அங்கு என்ன தான் நடக்கிறதென்பதை வெளியுலகத்துக்கு சொல்ல இந்தியாவின் தமிழகத்திலிருந்து ஒரு கைக் கூலி குழு ஈழம் சென்று முள்வேலி முகாம்களைப் பார்வையிட்டு வந்து, கிளிகள் தங்கக் கூண்டில் இருக்கின்றன என அறிவித்தனர்.   

                    விஞ்ஞான முறையில் ஊழல் செய்யப் பட்டிருக்கிறது என நீதிபதி சர்க்காரியாவினால் குற்றம் சாட்டப்பட்ட தமிழினத் துரோகி ஊழல் விசாரணையில் இருந்து தப்பிக்க வேண்டி, அப்போதைய இந்தியப் பிரதமர் திருமதி. இந்திராகாந்தி அம்மையார் மீனவப் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்காமல் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தபோது பேசா மடந்தையாகியதாலேயே இன்று இந்திய இறையாண்மையை ஏற்றுக் கொண்டு வரி கட்டி கட்டியே, வாக்களித்து வாக்களித்தே வாழ்க்கையைத் தொலைத்த 580 -க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை நட்பு நாடு இலங்கை காக்கை, குருவியைப் போல் சுட்டுக் கொல்ல அனுமதிக்கிறது. தமிழக மீனவர்கள் பேராசை காரணமாக கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி செல்வதாலேயே சிங்களக் கடற்படை சுட்டுக் கொல்கிறது என அபத்தக் களஞ்சிய வெளியுறவுத்துறை அமைச்சர் உளறியபோது சுரணையற்று கேட்டுக் கொண்டிருந்தவன் தமிழகத் தமிழன். பாகிஸ்தான் கடல் பகுதிகளில் எல்லை தாண்டி மீன் பிடிக்கச் செல்லும் குஜராத், ராஜஸ்தான் மீனவர்களை இந்தியாவால் ஜென்ம விரோத நாடு என சுட்டப்படுகிற பாகிஸ்தான் கைது செய்து, பிறகு விடுவிக்கிறதே தவிர சுட்டுக் கொல்வதில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தியா-சீனா போர், இந்தியா-பாகிஸ்தான் போர், இலங்கையில் வாய்ஸ் ஆப் அமெரிக்கா தளமமைத்து, இந்தியாவை கண்காணிக்க அமெரிக்காவிற்கு இடம் கொடுத்தது, (இந்தியாவிற்கு இயற்கையாகவே மூன்று பக்கம் கடலும், ஒரு பக்கம் இமயமலையும்  பாதுகாப்பு அரணாக உள்ளதால் எளிதில் அந்நியர்கள் இந்தியாவை நெருங்க முடியாது) பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் சீனா போன்ற அணு ஆயுத எதிரிகளை இலங்கையில் கால் பதிக்க வைத்து, எதிரிகளின் கைக்கெட்டும் தொலைவில் கல்பாக்கம், கூடங்குளம் அணு உலைகளை வேவு பார்க்க அனுமதித்த தேசத்தை இந்தியாவின் மிகவும் நெருங்கிய நட்பு நாடு என்று அதிகாரத்திலிருப்பவர்கள் சொல்கிறார்கள். நாமும் கேட்டுக் கொள்வோம். (என்ன கொடுமை சார் இது?) 

                       பஞ்சாப். கேரளா, கர்நாடகா, மராட்டியம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் அம்மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு எதாகிலும் ஆபத்தென்றால் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமில்லாமல் திரண்டு வந்து அவர்களுக்கு ஆதரவாக போர்க்குரல் எழுப்புகிறார்கள். மத்திய அரசை ஆட்டம் காணச் செய்கிறார்கள். ஆனால், தமிழனுக்கு ஏதாகிலும் ஆபத்தென்றால் மட்டும் மத்திய, மாநில, அண்டை மாநிலங்கள் மற்றும் அண்டை நாடுகள் என வரிந்து கட்டிக்கொண்டு தமிழனை அழிக்கக் கிளம்பி விடுகிறார்களே? தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அதற்கோர் குணமுண்டு! என பாவேந்தர் முழங்கியது தமிழகத் தமிழனின் துரோக குணத்தை தான் சொல்லி இருப்பார் போலிருக்கிறது.  

                        ஒட்டு மொத்த மனித குலத்திற்கு ஆபத்தான கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தென் கோடித் தமிழன் போராட்டத்தில் இறங்கி வாழ்வா, சாவா என களத்தில் நிற்கும்போது, அந்த போராட்டம் பூமிப் பந்தில் ஏதோ ஓர் மூலையில் வேலை வெட்டி இல்லாதவர்களாலும், மதபோதகர்களாலும், அந்நிய நாட்டு கைக்கூலிகளாலும் திட்டமிட்டு நடத்தப்படுவதாக சித்தரித்து போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய அதிகாரத்திலிருக்கும் பன்னாட்டு கைக்கூலிகள் முயற்சித்தாலும் இது கூடங்குளம் மக்களின் ரத்தமும், சதையுமான உணர்வுபூர்வமான போராட்டமென்பதை உணராமல் அந்த போராட்டத்திற்கும், தனக்கும் எந்த தொடர்புமே இல்லையென மத்திய, வடக்குப் பகுதி வாழ் தமிழர்கள் தாமரை இல்லை தண்ணீராகவே விலகி நிற்கிறார்கள். தமிழகத் தமிழனின் இந்த சோரம்போன நிலை கண்டு கார்பரேட் காந்திகள் போராட்டக் குழுவினர் மீது காவல் துறையை கொண்டு வழக்குகளைப் போட்டு, போராட்டத்தை சீர்குலைக்க அச்சுறுத்துகிறார்கள். 

                        மத்தியில் ஆளும் கார்பொரேட் காந்திகள் எப்போதுமே தமிழர் விரோத நடவடிக்கையில் அதி தீவிர வேகம் காட்டுபவர்கள் என்பதை வரலாற்றை புரட்டி பார்த்தாவது தெரிந்து விழிப்புடன் நடந்துகொள்ள தமிழகத் தமிழன் தயாராக இல்லை. ஈழத் தமிழரை படுகொலை செய்து ரத்தம் குடித்த ஓநாய் இராசபக்சே இந்தியாவிற்குள் ராஜமரியாதையோடு வருகிறான். ராசபக்சே உடன் இந்தியாவின் தேடப்படும் கொலைக் குற்றவாளி டக்ளஸ் தேவானந்தா வருகிறான். அவனை கைது செய்யாமல் வல்லரசு என தனக்குத் தானே கூறிக்கொள்ளும் தேசம் அரசு மரியாதை செய்கிறது. கேட்டால் இரு நாடுகளின் நல்லுறவு பாதிக்கும் என்கிறான். (இவர்கள் ஈழத்தின் மீது போர் தொடுத்தால் மட்டும் தமிழகத் தமிழனுக்கும், ஈழத் தமிழனுக்கும் தொப்புள்கொடி உறவில் பாதிப்பு ஏற்படாதாம்). 

                   

    ராசபக்சே உலகக்கோப்பை மட்டை பந்து போட்டியை கொலைகார காந்திகளோடு அமர்ந்து வேடிக்கை பார்க்கிறான். திருப்பதிக்கு தரிசனம் செய்கிறான். கார்பொரேட் காந்தி இந்தியாவிலிருந்து இலங்கைக்கு 135 ஆண்டுகளுக்குப் பிறகு கப்பல் போக்குவரத்து தொடங்குகிறான். கூடங்குளத்தில் மின்சாரம் எடுத்து இலங்கைக்கு அனுப்புகிறான். ஈழத் தமிழனைக் கொன்று புதைத்துவிட்டு புனரமைப்பு, கடல்வழி கேபிள்கள் அமைத்தல், கடல்வளம் கொள்ளையடித்தல் மற்றும் எண்ணெய் நிறுவனங்களை நிறுவி லாபமீட்டல் போன்ற வணிக ஆதாயங்களை அடைய சிங்களனோடு ஒப்பந்தம் செய்து ஒரு தொன்ம இனத்தின் விடுதலைப் போராட்டத்திற்கு சமாதி கட்டியிருக்கிறார்கள். அந்த படுகொலைக்கு தமிழகத்தில் காத்திரமான எதிர்வினைகள் எழாததால் முந்தைய படுகொலைகளின் தொடர்ச்சியாகவே, எஞ்சியுள்ள தமிழகத் தமிழினத்தையும் சோதனைக்கூட எலிகளாக பாவித்து, மரண வியாபாரிகள் கூடங்குளத்தில் அணு உலைகளை நிறுவுகிறார்கள். 

                          பாதுகாப்பான அணு உலை என்று உலகத்தில் எதுவுமில்லை. உலகின் 23 % யுரேனியத்தை கைவசம் வைத்துள்ள ஆஸ்திரேலியா தன்னுடைய நாட்டில் அணு உலைகளை வைத்திருக்கவில்லை. உலகின் அதிக அணு உலை பயன்பாடுகளை அனுபவித்த பிரான்ஸ் அணுக்கழிவுகளை அழிக்க என்ன செய்வதென தெரியாமல் கண்டைனர் லாரியில் வைத்துக்கொண்டு நகரை சுற்றி வருகிறான். ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வெடிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்கு இலட்சம் பேர் என கணக்கெடுப்பு சொல்கிறது. தலைமுறை தாண்டி மனித குலம் அங்கு சபிக்கப்பட்டவர்களின் பூமியாகவே இருக்கிறது. அமெரிக்காவின் மூன்று மைல் தீவில் ஏற்பட்ட அணுஉலை விபத்திற்குப் பிறகு அங்கு அணுஉலைகள் எதுவும் நிறுவப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவின் உக்ரைன் செர்னோபில்லில் 1986 இல் நிகழ்ந்த அணுஉலை வெடிப்பில் கிட்டத்தட்ட பிரிட்டன் அளவு அதாவது, சுமார் 50 கி.மீ. சுற்றளவு மண் பயனற்றதானது. 1000 கி.மீ. தாண்டி காற்றில் கதிர்வீச்சின் அளவு அதிகரித்ததை கண்டுபிடித்து ஸ்வீடன் எச்சரித்தபோதே இரும்புத்திரை நாடு அணு விபத்து நடந்ததை ஒப்புக் கொண்டது. ஜப்பானின் புகுஷிமோ அணுஉலை விபத்திற்குப் பின் ஜப்பான் கடல்நீரில் கதிர்வீச்சின் அளவைக் குறைக்கப் படாதபாடு பட்டு வருகிறது. கடல் நீரில் கதிர்வீச்சின் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் மீன்வளம் பாதிக்கப்படும். மீன்களை உணவாக உட்கொள்ளும் மக்களுக்கு அணுக்கதிர் பாதிப்பு ஏற்பட்டு பலவகையான புற்றுநோய்கள் ஏற்பட்டு மயான பூமியை உருவாக்கி விடும். 

                           ஒரு ஏரோநாட்டிகல் என்ஜினியரை அழைத்து அணு உலை பற்றி கருத்துக் கேட்டால் அவர் என்ன சொல்வார்? கூடங்குளத்தை அணு உலை பூங்காவாக மாற்றுவதே தன்னுடைய இலட்சியம் என முத்துக்களை உதிர்த்துவிட்டு தான் போவார். அவர் போராட்டக் குழுவினரை சந்திக்கும் திட்டம் இல்லை என்கிறார். அபத்தக் களஞ்சியமாக, பேருந்தில் செல்லும்போது விபத்து ஏற்படும் என்று நினைத்து யாரும் பயணம் செய்யாமல் இருப்பதில்லை என கேள்வி வேறு கேட்கிறார். பேருந்து விபத்து நிகழ்ந்தால் அதில் பயணம் செய்பவர்கள் மட்டுமே இறக்க நேரிடும். விபத்து நிகழ்ந்த 50 கி.மீ. தொலைவுக்கு அதில் பயணம் செய்யாதவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அந்த அறிவுக் களஞ்சியத்திற்கு யார் எடுத்துச் சொல்வது? சொன்னால் கேட்டுக் கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை. போராட்டக் குழுவினரின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்து சென்று இருந்தாலாவது மக்களை சந்திக்க வந்திருக்கிறார் என நம்பி இருப்பார்கள். 

                      இந்த அறிவுஜீவி அணுஉலையை பார்வையிட எதற்கு வந்தார் என்று அவருடைய மனசாட்சிக்கு தான் தெரியும். அணு உலையை சுற்றி பார்க்கவே ஒரு நாள் தேவைப்படும் சூழலில், இந்த அறிவுஜீவி ஒரு சில மணித்துளிகளில் எப்படி, என்ன ஆராய்ச்சி செய்திருப்பார்? முன் தீர்மானத்தோடு அணு உலைக்கு வந்து சென்றவர் மக்களின் உயிருக்கு உலை வைக்கும் தீர்மானத்தோடு  வந்திருக்கிறார் என மக்களுக்கு புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பை வழங்கிவிட்டு சென்றிருப்பதால் அவருக்கு தமிழர்கள் நன்றி கடன் பட்டிருக்கிறார்கள். என்ன செய்ய, கருங்காலித் தமிழர்கள் சிலர் பதவி ஆசைக்காகவும், பணத்தாசைக்காகவும் இந்த மனிதகுல விரோத செயலுக்கு துணை போவதாலேயே இந்த நாதியற்ற தமிழினம் கேட்பாரற்று அல்லலுறுகிறது. இது போன்ற அறிவுஜீவி தமிழர்களை முன் மாதிரியாக சொல்லித் தான் தன் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குகிறான் தமிழன். அந்த சமூகம் ஒரு சிறந்த அடிமைச் சமூகமாகவே உருவாகும். இவர் முதல் குடிமகனாக இருந்தபோது தன் இனம் அழித்தொழிக்கப்படுவதை தடுக்க ஒரு துரும்பையும் கூட எடுத்துப் போடவில்லை. 

                         அதேபோல், திரைப்பட இசைக்கலைஞன் ஆஸ்கர் புகழ் ஏ.ஆர். ரகுமான் ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் உலகமே உற்று கவனித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்த உலகப் புகழ் விருதை வாங்கும்போது என் மனம் உவகையடையவில்லை. என் மொழி பேசியதாலேயே என் இனத்தான் அரைநூற்றாண்டுகளுக்கு மேல் கொடும் துன்பம் அனுபவிக்கிறான். அவன் துன்பப்படும் வேளையில் நான் புன்னகைக்க முடியாது. என் தட்டில் உணவிடும்போது அது என் சகோதரனின் சதையாகவும், குழம்பிடும்போது என் தமிழனின் ரத்தமாகவும், குழம்பில் மிதக்கும் காய்கறிகள் அவனுடைய உடல் உறுப்புகளாகவும் இருக்கும்போது நான் மகிழ்ச்சியடைய முடியவில்லை என உரைப்பதன் வாயிலாக உலகத்தின் கவனத்தை ஈழத் தமிழர் பிரச்சினையின் பக்கம் திருப்ப கிடைத்த பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டு, சுய கொண்டாட்டத்தில் பொழுதைக் கழித்து வந்தார். மேலே சொன்னவரும், அடுத்தவரும் இன உணர்வற்ற தமிழகத் தமிழர்கள் தானே! அவர்கள் வேறு என்ன செய்வார்கள்? அவர்களிடம் வேறு என்ன எதிர் பார்க்க முடியும்? 

                          முல்லை பெரியாறு அணையின் குறுக்கே இரு மலைகளுக்கு இடையில் பென்னிகுக் என்ற தன்னலமில்லா வெள்ளைக்காரன் வெள்ளை மனதோடு பொதுநலம் கருதி கட்டியெழுப்பிய அணைக்கு பணமுடை வந்தபோது தன் சொந்த நாட்டிலுள்ள தன் சொத்துக்களை எல்லாம் விற்றுக் கிடைத்த பணத்தைக் கொண்டே அணையின் இறுதிக் கட்ட பணிகளை நிறைவேற்றி முடித்தான். இந்த அணை கட்டியதால் பென்னிகுக்கிற்கு எந்த பொருளாதாரப் பயனுமில்லை. அவன் அன்று கட்டிய அணையினால் குமரி முதல் ராமநாதபுரம் வரை 2 லட்சம் ஹெக்டேர் விவசாய பாசனப் பரப்புகளும், அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தியடைந்து வருகிறது. அம்மாமனிதனின் செயற்கரிய செயலுக்கு நன்றி செலுத்தும் விதமாக, அப்பகுதி வாழ் மக்கள் தங்கள் குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு பென்னிகுக் பெயரை வைத்து நாளெல்லாம் உச்சரித்து அக மகிழ்கிறார்கள். 


                        


            முல்லை பெரியாறு(Mullai periyaru) அணை கட்டி நீண்ட காலமாகி விட்டதால் அணை பழுது பட்டு பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும், அந்த அணையை இடித்துவிட்டு கேரளத்தின் தாழ்வான பகுதிகளில் புதிய அணையை கட்டுவதன் மூலம் தமிழகத்திற்கு தண்ணீர் வரும் அளவை தடுத்து நிறுத்த கேரளா அரசியல்வாதிகள் முனைப்போடு கட்சி பேதமின்றி ஒற்றுமையாக போராடக் கிளம்பி விட்டார்கள். முல்லை பெரியாறு பிரச்சினை தொடர்பாக உச்ச நீதி மன்றம் அமைத்த வல்லுனர்க்குழு அறிக்கையில் முல்லை பெரியாறு அணை நல்ல திடத்துடன் இருப்பதாகவும், அணையின் உயரத்தை 142 அடி வரை உயர்த்தலாம் எனவும் பரிந்துரைத்து இருக்கிறது. ஆனால், அந்த வல்லுனர்க்குழுவின் பரிந்துரையின்படி நடக்க வேண்டிய அவசியமில்லை என்பதாக கேரளத்தின் அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து போராட்டத்தை தொடங்கியுள்ளார்கள். இங்கே தமிழனின் நிலையை காணும்போது நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கிறது. தமிழக அரசியல் வியாதிகள் தனித் தனியே நின்று தேரிழுக்க கிளம்பி விட்டார்கள். தமிழகத்திலுள்ள 74 லெட்டர் பேட் கட்சிகளும் தனி ஆவர்த்தனம் செய்து, தமது ஒற்றுமையின்மையை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி மலையாளிக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி விடுவார்கள் என நம்புவோம். வேறு என்ன செய்ய? தமிழன் தமிழகத்தில் ஆட்சி செய்தால்  குடிமக்களுக்கு நல்லது நடக்கும். இவர்கள் அரசியல் தானே செய்கிறார்கள். வேறு என்ன இவர்களிடம் எதிர் பார்க்க முடியும்? 

                         அயல்நாடு வாழ் மலையாளி கேரளாவின் மற்றும் அரபு அமீரக உதவியுடன் சத்தமில்லாமல் கமுக்கமாக பெரும் முதலீட்டில் டேம்-999(Dam-999) என்ற பெயரில் ஆங்கிலத் திரைப்படம் எடுத்து (999 என்பது முல்லை பெரியாறு அணையின் 999 வருட ஒப்பந்தத்தை குறிப்பதாகும்), அந்த திரைப்படத்தில் ஊழல் அரசியல்வாதிகள் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் கட்டி எழுப்பிய அணை பழுது பட்டு உடைந்து சிதறும்போது பெருக்கெடுக்கும் வெள்ளத்தில் சிக்கி, அணையின் கீழ் வசிக்கும் மக்களும், மிருகங்களும், நீர்பாசன வயல்களும் எவ்வாறெல்லாம் பேரழிவை சந்திக்கின்றன என்பதை மையப் படுத்தி மக்களை பீதியுற வைக்கும் வகையில் பிரம்மாண்டமாக எடுத்து தன்னுடைய தரப்பை நியாயப் படுத்தி பொதுவெளிக்கு கொண்டு வருகிறான். ஆனால் தமிழ் நாட்டிலோ நானே தனியாக கிழித்து விடுவேன், தைத்து விடுவேன் என அரசியல் பிசாசுகள் கூடையை தமிழன் தலையில் கவிழ்த்தப் போகின்றன. 

                           மலையாள சகோதரர்களுக்கு ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன். இந்த மக்கள் ரட்சகர்கள் கார்கில் போரில் வீர மரணமடைந்த வீரர்களை அடக்கம் செய்ய செய்த சவப் பெட்டிகளில் ஊழல் செய்தவர்கள். இறந்து போன வீரர்களின் குடும்பங்களுக்கு கட்டி கொடுக்கப்பட்ட ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பிலும் ஊழல் செய்தவர்கள். உலகையே வாரிச் சுருட்டிய சுனாமி பேரழிவு நிவாரண நிதியிலும் ஊழல் செய்தவர்கள். ஐ.பி.எல், உலகக் கோப்பை மட்டை பந்து போட்டியிலும் கொள்ளை அடித்தவர்கள். ஊழல் விளையாட்டு வீரன் அசாருதீனுக்கு ஆயுள் தடை விதித்த இவர்கள் தான், இரண்டாண்டு இடைவெளியில் நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பு கொடுத்து எம்.பி ஆக்கி அழகு பார்த்தவர்கள். பாராளுமன்ற தாக்குதலில் இறந்து போன வீரர்களின் குடும்பம் பிழைக்க பெட்ரோல் பங்க் உரிமம் வழங்கியதிலும் ஊழல் செய்தவர்கள். போபர்ஸ் பீரங்கி, நீர்மூழ்கி கப்பல் வாங்கியதிலும் ஊழல் செய்தவர்கள். (இந்த ஊழலின் இடைத் தரகன் இத்தாலி குவாத்ரோச்சி கார்பொரேட் காந்திகளின் உறவினர் என்பதாலேயே, அவரை இத்தாலியில் இருந்து கைது செய்து கொண்டு வரமுடியவில்லை என வல்லரசின் சி.பி.ஐ வழக்கை முடித்து விட்டார்கள். வல்லான் வகுத்ததே சட்டம் என்பது இது தானோ?) 

                           இரண்டாம் அலைக்கற்றை(2G) வழங்கியதிலும் உலகின் இரண்டாவது மிகப் பெரிய ஊழலை செய்தவர்கள்.(உலகின் முதல் மிகப் பெரிய ஊழல் அமெரிக்காவின் வாட்டர் கேட் ஊழல். அதற்கு அடுத்த பெரிய ஊழல் இந்திய வல்லரசின் கார்பொரேட் காந்திகளின் ஆட்சியில் நடைபெற்ற இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல் என்பது குறிப்பிடத்தக்கது). கொல்லைப்புறப் பொருளாதாரப் புலி தலைமையில் எஸ் பேண்ட் ஊழல், தாண்தேவாடா வனப்பகுதிகளில் கனிம வளங்களைக் கொள்ளையடிக்க பன்னாட்டு நிறுவனங்களோடு கைக் கோர்த்துக் கொண்டு, அந்த மண்ணின் பூர்வ குடிகளை வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என சொல்லி உலகின் மிகப் பெரும் சனநாயகம் பச்சை வேட்டையாடி வருகிறார்கள். வடகிழக்கு மாநிலங்களிலும், காஷ்மீரத்திலும் சிறப்பு காவல் சட்டங்களை அமல் படுத்தி, அங்கு என்ன நடக்கிறதென்பதை வெளி உலகத்திற்கு தெரியாமல் மக்களின் குரல்வளைகளை நசுக்கி வருகிறார்கள். போபால் கார்பைடு நிறுவன நச்சு வாயு கசிவு விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு ரூ.12000 மட்டுமே சராசரி இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு பின் மொன்னைத் தனமான தீர்ப்பை வழங்கி கொலையாளிகளை ரூ.25000 அபராதத் தொகை கட்டி தப்பி போக வைக்கிறான். முதல் குற்றவாளி வாரன் ஆண்டர்சன் அம்மாநில முதல்வர் அர்ஜுன் சிங்கின் தனி விமானத்தில் அமெரிக்காவுக்கு தப்பி போன பின், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப் படுகிறான். 

                            உலகின் மிகப்பெரும் சனநாயக நாட்டின் சிறுபான்மையினர்களின் இதயத்தில் சம்மட்டி அடியாக இறங்கிய கொடும் துயரம் பாபர் மசூதி இடிப்பு நிகழ்வு. இடித்தவனுக்கு ஆட்சிக் கட்டில் வழங்கப்பட்டது. இடி பட்டவனுக்கு கொஞ்சம் போல கருணை பிச்சை. பாபர் மசூதியை இடிக்கவிட்டு வேடிக்கை பார்த்த கையாலாகாத அரசின் செயலால், சிறுபான்மையினரின் கோபம் நாடு முழுக்க பரவியது. குஜராத் கோத்ரா ரயில் எரிப்புக்கு பதிலடியாக மூன்று மாதங்களாக நரேந்திரமோடி ஆட்சியின் ஆசியோடு நடத்தப்பட்ட வெறியாட்டத்தில் 3000 க்கும் மேற்பட்ட இசுலாமிய சகோதரர்கள் கொன்று வீசப்பட்டார்கள். அதே ரத்த வெறிபிடித்த மோடி இன்று மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்றுநாள் உண்ணாவிரதம் இருப்பது சாத்தான் வேதம் ஓதுவதைப்போல இல்லையா? ஒரிஸ்ஸாவில் கிறித்தவர்களுக்கு எதிராக நடைபெற்ற மூன்று மாத கால தொடர் தாக்குதலுக்கு நவீன் பட்நாயக் ஆதரவு இருந்தது. வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கி வைத்திருப்போரின் பட்டியலை வாங்கி விட்டேன் என்கிறான். ஆனால் பெயர் சொல்ல மாட்டேன் என்கிறான். (கண்டிப்பாக நீங்களும், நானும் அந்த பட்டியலில் இருக்க மாட்டோம். பண முதலைகள் தான் இருக்கும். அதனால் அவர்கள் பெயர் வெளியே வராது.) அணுகுண்டு தயாரிக்கும் வல்லரசு நாட்டினால் உணவு தானியங்களை சேமித்து வைக்க கிடங்கு கட்ட முடியாதாம். தனியார் கிடங்கில் உணவு தானியங்களை வைத்து பாதுகாப்பதாகச் சொல்லி கமிசன் பார்க்கிறார்கள். 

                         பன்னாட்டு நிறுவன முதலைகளோடு ஒப்பந்தம் செய்து கொள்ளை லாபம் பார்க்க சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை 51% என்ற அளவிலிருந்து 100 % அளவுக்கு மடை திறந்து விட்டு, இந்தியக் குடிமக்களின் (ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டுப்போட்டு இவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்கிறவர்கள் இந்தப் பன்னாடைகள் தான்.) வாழும் உரிமையை கூட பறிக்கிறார்கள். அணு இழப்பீடு மசோதாவை நிறைவேற்றி அதில் அணு விபத்து ஏற்பட்டால், அரசாங்கப் பணத்தில் இருந்து ரூ.500 கோடி வரை மட்டு இழப்பீடு வழங்க தீர்மானம் போடுவார்கள். அணு விபத்தானது ரூ.500 கோடிக்குள் தனது அழிவை நிறுத்திக் கொள்ளும் போலிருக்கிறது. (சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இழப்பீட்டை பெறாமல் அது என்ன அரசாங்க இழப்பீடு?) இவர்களின் அயோக்கியத் தனங்களை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. சீனப் பெரும் சுவரையும் விட நீண்டு கொண்டே இருக்குமென்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். எல்லா அயோக்கியத் தனங்களையும் செய்து விட்டு, தேசம், தேசப் பற்று, இறையாண்மை என்று சொல்லி இவர்களின் அரசியலுக்கு, அயோக்கியத்தனத்துக்கு நம்மையும் துணைக்கு அழைத்துக் கொள்வான். கண்ணை மூடிக் கொண்டு இவர்களின் பின்னால் செல்லும் நாம், பைப்பர் பின்னால் செல்லும் எலிகளைப் போல் வாழ்வை இழப்பது நிதர்சனம். 

                            மலையாளித் தோழா! அரசியல்வாதிகள் சேவை செய்ய அரசியலுக்கு வருவதில்லை. ஊழல் செய்யவே வருகிறார்கள். அவர்களிடம் நல்லாட்சி, மக்கள் சேவையை எதிர்பார்ப்பது வீண் வேலை. பழைய அணையை உடைத்துவிட்டு புதிய அணை கட்டுவதாக இருந்தால், அந்தப் பொறுப்பு இந்த பாழும் அரசியல் வியாதிகளிடம் தான் ஒப்படைக்கப்படும். இந்த சனநாயகத்தின் அமைப்பு அதற்கான வாய்ப்பைத் தான் வழங்குகிறது. பெரிய திருடன் அல்லது அவனைவிட சற்று பெரிய திருடன். இதுதான் சனநாயகம் உங்களை ஆள உங்களுக்கு வழங்கும் வாய்ப்பு. சுத்தமான ஆவி என்பது உலகத்தில் குறிப்பாக, இந்தியாவில் இல்லை. இந்த அரசியல் அமைப்பு சட்டங்கள் எல்லாம் ஊழல் பெருச்சாளிகளின் நலனை முன்னிறுத்தியே எழுதப் பட்டிருக்கும் போலிருக்கிறது. அணையை இடித்துவிட்டு புதிய அணையை கட்டும் பட்சத்தில், உங்கள் படத்தில் வரும் அந்த பயங்கரக் காட்சிகளை மக்கள் நேரடியாக காணும் வாய்ப்பை விலை கொடுத்து வாங்குகிறீர்கள். ஊழல் அரசியல் வியாதிகளற்ற ஒரு நிலை வரும்வரை நீங்களும் காத்திருங்கள். அணை பழுதுபடும் வரை நாங்களும் காத்திருப்போம். மேட்டூரில் வெள்ளைக்காரன் ஸ்டேன்லி கட்டிய அணை இன்றும் உறுதியாக, கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. முல்லை பெரியாறு அணையும் வெள்ளைக்காரன் பென்னிகுக் கட்டியதால் உறுதியாக காலம் கடந்து நிற்கும். (கரூரில் அமராவதி நதியின் குறுக்கே தி.மு.க (D.M.K)ஆட்சியில் கட்டப்பட்ட பாலம் ஓராண்டு முடிவதற்குள் இடிந்து வீழ்ந்த காட்சிகள் உங்கள் கனவில் வருவதைத் தவிர்க்கவும்.) நம்பிக்கை கொள்!     
நல்லதே நடக்கும். 
                                                -----------------------------------
                           
                                                 - அகரத்தான். 

Blogger Widgets