Thursday, May 31, 2012

trb answer key


TRB ANSWER KEY IN BELOW LINK


http://appolosupport.com/trb.php
Tuesday, May 29, 2012

PG TRB exam 2012 Keys and solutions

TRB PG முதுகலை பட்டய ஆசிரியர் தேர்வு பொதுஅறிவு விடைகள் கீழே உள்ள லிங்க் மூலம் பெற்றுக்கொள்ளலாம்

http://trbstudymaterials.blogspot.in/2012/05/pg-trb-exam-2012-keys-and-solutions.html

Saturday, May 26, 2012

துக்கம்

---------- 
பூர்வீகத்துக்கும் 
பிழைக்க வந்த பூமிக்குமான
ஒரு நீண்ட இடைவெளி 
நிலவிய காலம் அது. 

அண்ணன் தம்பிகளாகப் இறந்த 
ஆறு தாத்தாக்களில் 
ஐந்தாவது தாத்தாவின் பேரன் 
அகால மரணமடைந்த தகவலறிந்து

பணி அரக்கனின் 
கொடும் கரத்திலிருந்து விடுபட்டு 
பூர்வீக பூமிக்குள் வந்து வீழ்ந்தபோது,

கடைசியாக 
அலங்கரித்த குங்குமம் 
அணிவிக்கப்பட்ட கை வளைகளோடு 
எதிர்காலம் சூனியமாய் 
வாழ்வைத் தொலைத்து நிற்கும் 
முப்பதைக் கடந்த அண்ணி, 

கலர்சோடா வாங்கி வந்து 
குடிக்கச் சொல்லி காத்து நிற்கும் 
வளர்ச்சி குறைந்த அண்ணன் மகள், 

தன் பரம்பரையில் இறந்துபோன 
அண்ணனின் சாயலில் நானிருப்பதாய் 
அங்கலாய்க்கும் பெரியப்பா, 

தலைமகனை பறிகொடுத்து 
துவண்டு கிடந்தவள் எழுந்து வந்து 
சாப்பிட்டு செல்ல வலியுறுத்தும் பெரியம்மா 

பாசவலையறுத்து பணிக்குக் கிளம்புகையில், 

"காரியத்தன்னிக்கு நேரமிருந்தா மட்டும் வா. 
மெனக்கெட வேண்டாம். 
வண்டியில மெதுவா போ!". 

மண்வாசனை வீசும் வாஞ்சையோடு 
எல்லோரும் வாசல் நின்று வழியனுப்ப,

வராமலிருந்தால் 
தவறாக நினைக்கக்கூடுமென்று 
தலையைக் காட்ட வந்தவனோ 
இதயம் கனத்துப் போனேன். 
---------------------------------------------------------------------------- 

துயரம் 
மகிழ்ச்சி 
இவ்விரு நிகழ்வுகளின் 
உச்சத்தையும் தீர்மானிப்பது 
அவரவர்க்குள் இறங்கும் 
சரக்கின் அளவை பொறுத்தது. 
-------------------------------------------------- 

சாமி கும்பிடும் சதிகாரர்களே ! 
உம் வேண்டுதல் நிறைவேற 
எம்தலையில் கத்தி வைப்பது 
அநியாயம். 
------------------------------------------------ 

விடுமுறைக்கு மல்லுக்கட்டி 
சம்பளப் பணம் செலவழித்து 
நேர்த்திக் கடன் நிறைவேற்றி 
கோவிலிலிருந்து வெளிவருகையில் 
கைப் பணமும், 
கால் செருப்பும் 
களவாடப் பட்டிருந்தன. 

கோவில்களில் கடவுள் இல்லை 
என்பது நிதர்சனம்.  
------------------------------------------------------ 

அரசு சரக்கின் நெடி 
நுகராத ஒரு பொழுதையே 
சிறந்த பொழுதென்பேன். 
----------------------------------------- 


Thursday, May 24, 2012

பெரு வாழ்வு

-------------------- அயல்நாட்டில் உழைத்து சேர்த்த
சிறுவாடு பெரும்பணம்
தண்ணீராய் செலவழிந்தும்
உள்ளாட்சி தேர்தலில்
மண்ணை கவ்வியதால்
மனமுடைந்தவோர்
மதுப் புட்டி கயிற்றிலாடியது.

------------------------------------------------- 

நேற்றிரவு வரை
வீட்டுக்குதவா பெரும்குடிகேடன்
அதிகாலை குளித்து முடித்து
ஐயப்பசாமி அவதாரமெடுத்தான்.
பக்தகோடிகள் பாதம் பணிந்தனர்.
-------------------------------------------------- 

புற அழுத்தம் அதிகரித்தால்
வெடித்து சிதறும் மிதிவெடி நான்.
அழுத்தத்தையும் பிரயோகித்து
எனது இயல்பையும்
குறை கூறுவதென்பது
என்னை சிதறடிப்பதை விடவும்
கொடுமையானது.
-------------------------------------------------- 

அடிதடி கை கலப்பில்
காவல் நிலையம்
பஞ்சாயத்திற்கு வந்த பகையாளிகள்
சமாதானம் அடைந்தனர்.
பேரம் படியாததால்
காவல் ஆய்வாளர் தான்
சமாதானம் அடைந்தனர்.
----------------------------------------------------- 

எது நடந்ததோ
அது மிகு கொடூரமாக
மனித உரிமை மீறல்களாக நடந்தது.
எது நடக்கிறதோ
அது வெகு திட்டமிடலோடு
நேர்த்தியாக நடக்கிறது.
எது நடக்குமோ
அது கால தாமதமாக என்றாலும்
ஓர்நாள் நடக்கும்.
அது நிச்சயம் கிடைக்கும்.
-------------------------------------------------------- 

வேலைவாய்ப்பு அழைப்பு
வரும் வேளைகுழிக்குள் சென்று
படுத்துக் கொண்டால்
அதற்கெல்லாம்
அரசு பொறுப்பாக முடியாது.
------------------------------------------------- 

தன் தேவையைகூட தானே
பூர்த்தி செய்ய இயலாத கடவுளா
கோவில்களில் நிரம்பி வழியும்
மடமைகளின் தேவையை
பூர்த்தி செய்யப் போகிறான்?
------------------------------------------------- 

ஆயுதமில்லா உலகை
நிறுவவதாக சொன்னவன்
ஆயுதபூசையை கோலாகாலமாக 
கொண்டாடுகிறான்.
--------------------------------------------------- 

புதிய கட்டிடத்தில்
லாபம் என்றெழுதி துவக்கப்பட்ட
காவல் நிலையம்
வசூலை வாரிக் குவிக்குமா?
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-------------------------------------------------------------- 

பிழைப்பின் நிமித்தம்
பிறந்த நிலத்திலிருந்து
வேருடன் பிடுங்கி
வேற்று நிலத்தில் நடப்பட்டவர்கள் குறித்த
பிரதிபலன் எதிர்பாராத
உமது
விசாரிப்புகள்,
கரிசனங்கள்,
தேடல்கள்
விலை மதிப்பற்றவை.
------------------------------------------------------------------ 

பகுத்தறிவு பகலவனை
தலைவன் என்ற ஒரு வாக்குப் பொறுக்கி
வளர்பிறை நாளில்
நல்ல நேரம் பார்த்து
புரோகிதம் முழங்க 
தன் புதியக் கட்சியை துவங்கினான்.
------------------------------------------------------------

சாமியக் கும்புட்டவனுக்கும் தொல்லை.
சாமியக் கும்புடாதவனுக்கும் தொல்லை.
ஆளை விடுங்கடா சாமி!
------------------------------------------------------------ 

அரசியல் செய்ய விடயமேதும்
இல்லாத நிலையில்
எதற்கும் இருக்கட்டுமென
ஈழத்தமிழர் நலன் குறித்து
கவலைப் படுகின்றன அற்ப பதர்கள்.
------------------------------------------------------- 

அயோக்கியன் என்று
ஒப்புக் கொண்டதாலேயே
அவனை நல்லவனென்று
நம்பி விடாதீர்கள்!
--------------------------------------- 

தீவிரவாதம் என்பது
நிகழ்காலத்தை மட்டும்
பணயம் வைத்து
எதிர்காலத்தைக் கட்டமைக்கும்.
அரச பயங்கரவாதமோ
எல்லா காலத்தையும்
நிர்மூலமாக்கும்.
-------------------------------------------------- 

அயோக்கியன் தன் அன்றாடப் பணியை
கடவுளுக்கு தீபாரதனையோடு துவங்குகிறான்.
அலைபேசியின் அழைப்புக்குரலாக
கடவுளின் பாடல்களே ஒலிக்கின்றன.
பதப்படுத்தப்பட்ட பசுந்தோலும்
பன்னீரில் தோய்த்த நீறும்,
சந்தனமும், சவ்வாதும்
அவனுடைய தோற்றத்திற்கு
மேலும் மெருகூட்டுவதால்
அவனே ஓர்நாள் கடவுளாகிறான்.
அப்புறம் ஓர்நாள்
கடவுள் அகதியாகிறான்.
----------------------------------------------------------

Saturday, May 19, 2012

ஓரங்க நாடகமும், பலியாடுகளும்.

---------------------------------------------------------------------------------------------------------------------- 

   
எல்லோராலும் 
கைவிடப்பட்டதொரு தேசத்திற்கு
அபத்த நாடகத்தின்
அடுத்த காட்சியாய்
அவர்கள் சென்றார்கள்.

அங்கு பலிகளின் திருவிழாவை
வெற்றிகரமாய் நிகழ்த்தியிருந்த
கசாப்புக்காரனோடு கை குலுக்கினார்கள்.

அவனோடு விருந்துண்ண அமர்ந்தவர்கள்
கேட்பாரற்று கொட்டடியில் வாடும்
பலியாடுகளை ஒசைஎழாமல்
கழுத்தருப்பதைக் கற்றுத் தரச் சொன்னார்கள்.

மேனியெங்கும் தெறித்து வழிந்த
குருதி சிதறல்களை
வழித்தெரிந்தவனின் ஏளனச் சிரிப்பு
சனநாயகத்தை விட
சிறந்தக் கழுத்தறுப்பு
வேறென்ன இருக்கிறது
என்பதைப் போலிருந்தது.

வனங்களில்
தன்னியல்பாக சுற்றி திரியும்
ஆடுகளைப் பிடித்து அறுக்கையில்
முகத்தில் பீய்ச்சியடிக்கும் குருதி
நெஞ்சை உறையச் செய்யுமெனவும்
அதற்கடுத்தடுத்த அறுப்புகள் எல்லாம்
பழகி விடுமெனவும்,

அறுப்பைத் தொழிலாகக் கொண்டவன்
குட்டி ஆடுகள்
குட்டியை வயிற்றில் சுமக்கும் ஆடுகள்
வயது முதிர்ந்த ஆடுகளென
பேதம் பார்க்கக் கூடாதெனவும்,

ஆடுகளை அறுக்காமல்
அனுதாபத்துடன் வேடிக்கைப் பார்ப்பது
ஆடுகள் பெருகி
உயிர்ச்சமநிலை குலைந்து
மனிதர்களின் இருப்பைக்
கேள்விக்குள்ளாக்கும் எனவும்,

அறுபட்ட ஆடுகள் தவிர்த்து
அகப்பட்ட ஆடுகளனைத்தையும்
கை காலுடைத்து
பட்டினியில் உழல வைத்து
முள்வேலிக்குள் அடைக்கையில்
தானாகவே வழிக்கு வருமெனவும்,

வழியும் பசியும் மிகுந்து
எழும்பும் ஆடுகளின் கதறல்களை
பொருட்படுத்தத் தேவையில்லை எனவும்
ஆடுகளின் படைப்பே
அறுப்பதற்குத் தானெனவும்,

தன் வெற்றி இரகசியத்தை
பெரும் கர்ச்சிப்போடு விவரித்தான்.

ஆடுகள் புதையுண்ட தேசத்தின்
மயானங்கள் எல்லாம்
அழகு மிளிர்வதாக சிலாகித்தார்கள்.

புதையுண்ட ஆடுகளை தோண்டியெடுத்து
முன்னமே முடிவு செய்து வைத்திருந்த
கேள்விக் கணைகளை தொடுத்ததாகவும்,

கற்றுக்கொண்ட பாடங்கள்
மற்றும் நல்லிணக்கத்துடன்
தேசம் திரும்பிய நடிகர்கள்
பன்றிகளின் தொழுவத்தில் நின்று
வசிக்க வனமோ,
புசிக்க மேய்ச்சல் நிலமோ
தேவையில்லை என்பதே
ஆடுகளின் பெரு விருப்பென்றார்கள்.

ஓரங்க நாடகத்தின்
திருப்புமுனைக் காட்சியை
கூற்றுவனான கசாப்புக்காரனும்,
ஓரங்க நாடகத்தில் நடித்தவர்களும்,
ஓரங்க நாடகத்தை நடத்தியவர்களும்,
எஞ்சிய சிலரும் ரசித்தார்கள்.

எனினும்,
எதிர்பார்த்ததைப் போலன்றி
அவ் ஓரங்க நாடகம் அபத்த நாடகமென
பார்வையாளர்களால் புறந்தள்ளப்பட்டதையும்
அவர்கள் உணர்ந்தே இருந்தார்கள்.

ஆடுகளின் மீதான
அவர்களின் கரிசனங்களும்,
கண்ணீரும் போலியானவை என
ஆடுகளும் அறிந்திருந்தன.
---------------------------------------------------------------------    


  

Friday, May 18, 2012

உலகம் அழித்த அவல குறியீடு முள்ளிவாய்க்கால்
உலகம் அழித்த அவல குறியீடு முள்ளிவாய்க்கால்காற்றையும் களவாடி 
கந்தகப் பொஸ்பரசுகளால் 
சுவாசத்தையும் நிறுத்திய
பிணக்காடே இந்த முள்ளி வாய்க்கால்
Sunday, May 13, 2012

சும்மா .... !!!!
சீனப் பெருஞ்சுவரை விடவும்
நீண்ட சாதனைப் பட்டியலுக்கு சொந்தக்காரனை
தலைமேல் வைத்து கூத்தாடக் காத்திருக்கும்
மக்கள் மந்தைகளை எதிர்கொள்கையில் 
மகேசர்கள் பாதுகாப்பை
பன்மடங்கு பலப்படுத்துகிறார்கள். 

--------------------------------------------------------------------------- 

மக்களின் தலைமுறைக் கோபத்திலிருந்து 
சிறு சேதமின்றி மீண்டு வந்ததை வைத்தே 
அந்த மாநில மாநாடு வெற்றி என்கிறான். 
------------------------------------------------------------------------ 

அரசு மருத்துவமனைகள் 
பிறப்பையும், இறப்பையும் 
உறுதி செய்கின்றன. 
-----------------------------------------------  

ஒருமுறை கடந்து செல்ல 
வேகத்தடை உடைத்து 
அவனுக்கு வழி செய்பவன் 
அன்றைய பொழுதேனும் 
விபத்து நடக்காதென 
உத்திரவாதம் அளித்தால் 
ஆசுவாசம் கொள்ளலாம். 
---------------------------------------------------- 

ஐந்து கோடி கொடுத்தால் 
நீயும் ஆதினம் ஆகலாம். 
முடியும் வச்சுக்கலாம். 
முடியரசியையும் வச்சுக்கலாம். 
------------------------------------------------------ 

சோற்றுப் பொட்டலத்திற்காக சிலநூறு பேரும், 
புட்டிகளிலிருந்து கண் சிமிட்டும் 
அரசு மதுவை அருந்த சிலநூறு பெரும், 
கையூட்டு பணத்தை கைக்கொள்ள சிலநூறு பேரும், 
கழுதை மூக்கின் நிறம் காண சில நூறு பெரும் 
என கூடியதில் மண்டல மாநாடு களை கட்டியது. 
--------------------------------------------------------------------------------------- 

கடவுள் இல்லை. 
அவ்வளவு தான். 
வேறொன்றுமில்லை. 
------------------------------------ 

ஒரு நாள் விடுமுறைக்குக் கூட உதவாத 
கடவுளைக் கட்டிக் கொண்டு நீயே அழு. 
எனக்கொன்றும் அவசியமில்லை. 
--------------------------------------------------------------------- 

ஒரு இலட்சம் கையூட்டு பெற்று 
ஊழலை சிறுமைப் படுத்தியவனுக்கு 
நான்கு ஆண்டுகள் கடுங்காவல். 
எண்ணவியலா கோடிகளை கையூட்டு பெற்று 
ஊழலைப் பெருமைப் படுத்தியவனுக்கு 
ஆட்சி அதிகாரத்தில் பங்கு. 
வாழ்க சனநாயகம்! 
------------------------------------------------------------------------------ 

எல்லா நதிகளையும் 
வனங்களையும் 
விலை நிலங்களையும் 
தின்று செரித்தவன் 
இனி, 
கல்லைத் தான் 
மண்ணைத் தான் 
தின்னத்தான் வேண்டும். 
------------------------------------------  

சனநாயக நாட்டில் கொலை 
செய்வது கூடவா குற்றம்? 
நீங்களே சொல்லுங்கள். 
------------------------------------------------- 

வாழ்தலுக்கான 
கணங்களையும் 
மனங்களையும் 
சேமித்து வைக்காதவன் 
பணங்களை மட்டும் 
சேமித்து வைத்திருக்கும் 
அபத்தத்தை என்னென்று சொல்ல?  
----------------------------------------------------------- 

கள்ள சாராயத்தை ஒழித்த நல்லவர்கள் 
நல்ல சாராயத்தை காய்ச்சி விற்கிறார்கள். 
வாங்கி ஊற்றிக் கொள்ளுங்கள். 
---------------------------------------------------------------------- 

பயணச் சீட்டெடுக்க தயங்கி 
குழந்தைகளின் வயதை 
குறைத்துச் சொன்ன தாய்மார்களை 
தங்களின் உண்மை வயதை உரக்கச் சொல்லி 
திக்கு முக்காட வைக்கின்றன குழந்தைகள். 
-----------------------------------------------------------------------------

Blogger Widgets