Saturday, May 19, 2012

ஓரங்க நாடகமும், பலியாடுகளும்.

---------------------------------------------------------------------------------------------------------------------- 

   




எல்லோராலும் 
கைவிடப்பட்டதொரு தேசத்திற்கு
அபத்த நாடகத்தின்
அடுத்த காட்சியாய்
அவர்கள் சென்றார்கள்.

அங்கு பலிகளின் திருவிழாவை
வெற்றிகரமாய் நிகழ்த்தியிருந்த
கசாப்புக்காரனோடு கை குலுக்கினார்கள்.

அவனோடு விருந்துண்ண அமர்ந்தவர்கள்
கேட்பாரற்று கொட்டடியில் வாடும்
பலியாடுகளை ஒசைஎழாமல்
கழுத்தருப்பதைக் கற்றுத் தரச் சொன்னார்கள்.

மேனியெங்கும் தெறித்து வழிந்த
குருதி சிதறல்களை
வழித்தெரிந்தவனின் ஏளனச் சிரிப்பு
சனநாயகத்தை விட
சிறந்தக் கழுத்தறுப்பு
வேறென்ன இருக்கிறது
என்பதைப் போலிருந்தது.

வனங்களில்
தன்னியல்பாக சுற்றி திரியும்
ஆடுகளைப் பிடித்து அறுக்கையில்
முகத்தில் பீய்ச்சியடிக்கும் குருதி
நெஞ்சை உறையச் செய்யுமெனவும்
அதற்கடுத்தடுத்த அறுப்புகள் எல்லாம்
பழகி விடுமெனவும்,

அறுப்பைத் தொழிலாகக் கொண்டவன்
குட்டி ஆடுகள்
குட்டியை வயிற்றில் சுமக்கும் ஆடுகள்
வயது முதிர்ந்த ஆடுகளென
பேதம் பார்க்கக் கூடாதெனவும்,

ஆடுகளை அறுக்காமல்
அனுதாபத்துடன் வேடிக்கைப் பார்ப்பது
ஆடுகள் பெருகி
உயிர்ச்சமநிலை குலைந்து
மனிதர்களின் இருப்பைக்
கேள்விக்குள்ளாக்கும் எனவும்,

அறுபட்ட ஆடுகள் தவிர்த்து
அகப்பட்ட ஆடுகளனைத்தையும்
கை காலுடைத்து
பட்டினியில் உழல வைத்து
முள்வேலிக்குள் அடைக்கையில்
தானாகவே வழிக்கு வருமெனவும்,

வழியும் பசியும் மிகுந்து
எழும்பும் ஆடுகளின் கதறல்களை
பொருட்படுத்தத் தேவையில்லை எனவும்
ஆடுகளின் படைப்பே
அறுப்பதற்குத் தானெனவும்,

தன் வெற்றி இரகசியத்தை
பெரும் கர்ச்சிப்போடு விவரித்தான்.

ஆடுகள் புதையுண்ட தேசத்தின்
மயானங்கள் எல்லாம்
அழகு மிளிர்வதாக சிலாகித்தார்கள்.

புதையுண்ட ஆடுகளை தோண்டியெடுத்து
முன்னமே முடிவு செய்து வைத்திருந்த
கேள்விக் கணைகளை தொடுத்ததாகவும்,

கற்றுக்கொண்ட பாடங்கள்
மற்றும் நல்லிணக்கத்துடன்
தேசம் திரும்பிய நடிகர்கள்
பன்றிகளின் தொழுவத்தில் நின்று
வசிக்க வனமோ,
புசிக்க மேய்ச்சல் நிலமோ
தேவையில்லை என்பதே
ஆடுகளின் பெரு விருப்பென்றார்கள்.

ஓரங்க நாடகத்தின்
திருப்புமுனைக் காட்சியை
கூற்றுவனான கசாப்புக்காரனும்,
ஓரங்க நாடகத்தில் நடித்தவர்களும்,
ஓரங்க நாடகத்தை நடத்தியவர்களும்,
எஞ்சிய சிலரும் ரசித்தார்கள்.

எனினும்,
எதிர்பார்த்ததைப் போலன்றி
அவ் ஓரங்க நாடகம் அபத்த நாடகமென
பார்வையாளர்களால் புறந்தள்ளப்பட்டதையும்
அவர்கள் உணர்ந்தே இருந்தார்கள்.

ஆடுகளின் மீதான
அவர்களின் கரிசனங்களும்,
கண்ணீரும் போலியானவை என
ஆடுகளும் அறிந்திருந்தன.
---------------------------------------------------------------------    














  

No comments:

Blogger Widgets