Sunday, May 6, 2012

உலகம்

------------- 


உன் நண்பன் யாரெனச் சொல்! 
உன்னை யாரென்று சொல்கிறேன் என்றவர் 
இனக் கொலையாளியை நண்பனெனும்   
கற்பூரம் சுமக்கும் கழுதையை   
அடையாளம் காட்டப் போவதில்லை. 
------------------------------------------------------------------- 

எங்கோ ஒரு மூலையில் 
யாரோ ஒருவன் 
யார் ஈன்ற குட்டியையோ 
கவர்ந்து செல்ல வியூகம் வகுக்கிறான். 
------------------------------------------------------------ 

அதிகாரத்தின் அன்றாட 
அதிர்ச்சிகளால் உறைந்தவர்கள் 
ஒன்று சேர்ந்து அளித்த 
அதிர்ச்சி வைத்தியத்தில் 
நாற்காலிகள் ஆட்டம் கண்டன. 
--------------------------------------------------- 

ஓடியவளை எண்ணி 
வியந்த காலம் நேற்றிருந்தது. 
ஓடாதவளை எண்ணி 
வியக்கின்ற காலம் இன்றிருக்கிறது. 
------------------------------------------------------ 

அலைக்கற்றை, 
விண்வெளி, 
ஆயுதபேரம், 
நிலக்கரி, 
சவப்பெட்டி, 
மட்டைப் பந்து ஊழலென 
குட்டிப் பூதங்களை ஈன்ற பெரும்பூதம் 
வேடிக்கைப் ஆர்த்துக் கொண்டிருந்த 
அலாவுதீங்களை 
சீசாவுக்குள் அடைத்து விட்டது. 
--------------------------------------------------------- 

இராசா வீட்டுக் கன்றுக்குட்டி 
சொந்தக் காணியிலும் மேயலாம். 
ஊரார் காணியிலும் மேயலாம். 
கட்டிப்போட எத்தனித்த நீ 
அதிகாரத்தின் கருணையிருந்தால் 
உயிர் தப்பிப் பிழைக்கலாம். 
பிரதி கடனாக 
அரண்மனை உன்னிடமிருந்து 
எதிர்பார்ப்பது எல்லாம் 
உன் நாக்கு 
உன் சொல் 
உன் குரல்வளை 
உன் முதுகெலும்பு 
உன் மன்னிப்பு 
உன் ஒப்புக்கொடுத்தல் 
உன் சரணாகதி! 
யோசிக்காதே! 
ஒருமுறை விழுந்து எழுந்தால் 
எல்லாம் சரியாகி விடும். 
---------------------------------------------













No comments:

Blogger Widgets