Thursday, May 24, 2012

பெரு வாழ்வு

-------------------- அயல்நாட்டில் உழைத்து சேர்த்த
சிறுவாடு பெரும்பணம்
தண்ணீராய் செலவழிந்தும்
உள்ளாட்சி தேர்தலில்
மண்ணை கவ்வியதால்
மனமுடைந்தவோர்
மதுப் புட்டி கயிற்றிலாடியது.

------------------------------------------------- 

நேற்றிரவு வரை
வீட்டுக்குதவா பெரும்குடிகேடன்
அதிகாலை குளித்து முடித்து
ஐயப்பசாமி அவதாரமெடுத்தான்.
பக்தகோடிகள் பாதம் பணிந்தனர்.
-------------------------------------------------- 

புற அழுத்தம் அதிகரித்தால்
வெடித்து சிதறும் மிதிவெடி நான்.
அழுத்தத்தையும் பிரயோகித்து
எனது இயல்பையும்
குறை கூறுவதென்பது
என்னை சிதறடிப்பதை விடவும்
கொடுமையானது.
-------------------------------------------------- 

அடிதடி கை கலப்பில்
காவல் நிலையம்
பஞ்சாயத்திற்கு வந்த பகையாளிகள்
சமாதானம் அடைந்தனர்.
பேரம் படியாததால்
காவல் ஆய்வாளர் தான்
சமாதானம் அடைந்தனர்.
----------------------------------------------------- 

எது நடந்ததோ
அது மிகு கொடூரமாக
மனித உரிமை மீறல்களாக நடந்தது.
எது நடக்கிறதோ
அது வெகு திட்டமிடலோடு
நேர்த்தியாக நடக்கிறது.
எது நடக்குமோ
அது கால தாமதமாக என்றாலும்
ஓர்நாள் நடக்கும்.
அது நிச்சயம் கிடைக்கும்.
-------------------------------------------------------- 

வேலைவாய்ப்பு அழைப்பு
வரும் வேளைகுழிக்குள் சென்று
படுத்துக் கொண்டால்
அதற்கெல்லாம்
அரசு பொறுப்பாக முடியாது.
------------------------------------------------- 

தன் தேவையைகூட தானே
பூர்த்தி செய்ய இயலாத கடவுளா
கோவில்களில் நிரம்பி வழியும்
மடமைகளின் தேவையை
பூர்த்தி செய்யப் போகிறான்?
------------------------------------------------- 

ஆயுதமில்லா உலகை
நிறுவவதாக சொன்னவன்
ஆயுதபூசையை கோலாகாலமாக 
கொண்டாடுகிறான்.
--------------------------------------------------- 

புதிய கட்டிடத்தில்
லாபம் என்றெழுதி துவக்கப்பட்ட
காவல் நிலையம்
வசூலை வாரிக் குவிக்குமா?
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-------------------------------------------------------------- 

பிழைப்பின் நிமித்தம்
பிறந்த நிலத்திலிருந்து
வேருடன் பிடுங்கி
வேற்று நிலத்தில் நடப்பட்டவர்கள் குறித்த
பிரதிபலன் எதிர்பாராத
உமது
விசாரிப்புகள்,
கரிசனங்கள்,
தேடல்கள்
விலை மதிப்பற்றவை.
------------------------------------------------------------------ 

பகுத்தறிவு பகலவனை
தலைவன் என்ற ஒரு வாக்குப் பொறுக்கி
வளர்பிறை நாளில்
நல்ல நேரம் பார்த்து
புரோகிதம் முழங்க 
தன் புதியக் கட்சியை துவங்கினான்.
------------------------------------------------------------

சாமியக் கும்புட்டவனுக்கும் தொல்லை.
சாமியக் கும்புடாதவனுக்கும் தொல்லை.
ஆளை விடுங்கடா சாமி!
------------------------------------------------------------ 

அரசியல் செய்ய விடயமேதும்
இல்லாத நிலையில்
எதற்கும் இருக்கட்டுமென
ஈழத்தமிழர் நலன் குறித்து
கவலைப் படுகின்றன அற்ப பதர்கள்.
------------------------------------------------------- 

அயோக்கியன் என்று
ஒப்புக் கொண்டதாலேயே
அவனை நல்லவனென்று
நம்பி விடாதீர்கள்!
--------------------------------------- 

தீவிரவாதம் என்பது
நிகழ்காலத்தை மட்டும்
பணயம் வைத்து
எதிர்காலத்தைக் கட்டமைக்கும்.
அரச பயங்கரவாதமோ
எல்லா காலத்தையும்
நிர்மூலமாக்கும்.
-------------------------------------------------- 

அயோக்கியன் தன் அன்றாடப் பணியை
கடவுளுக்கு தீபாரதனையோடு துவங்குகிறான்.
அலைபேசியின் அழைப்புக்குரலாக
கடவுளின் பாடல்களே ஒலிக்கின்றன.
பதப்படுத்தப்பட்ட பசுந்தோலும்
பன்னீரில் தோய்த்த நீறும்,
சந்தனமும், சவ்வாதும்
அவனுடைய தோற்றத்திற்கு
மேலும் மெருகூட்டுவதால்
அவனே ஓர்நாள் கடவுளாகிறான்.
அப்புறம் ஓர்நாள்
கடவுள் அகதியாகிறான்.
----------------------------------------------------------

No comments:

Blogger Widgets