Saturday, May 26, 2012

துக்கம்

---------- 




பூர்வீகத்துக்கும் 
பிழைக்க வந்த பூமிக்குமான
ஒரு நீண்ட இடைவெளி 
நிலவிய காலம் அது. 

அண்ணன் தம்பிகளாகப் இறந்த 
ஆறு தாத்தாக்களில் 
ஐந்தாவது தாத்தாவின் பேரன் 
அகால மரணமடைந்த தகவலறிந்து

பணி அரக்கனின் 
கொடும் கரத்திலிருந்து விடுபட்டு 
பூர்வீக பூமிக்குள் வந்து வீழ்ந்தபோது,

கடைசியாக 
அலங்கரித்த குங்குமம் 
அணிவிக்கப்பட்ட கை வளைகளோடு 
எதிர்காலம் சூனியமாய் 
வாழ்வைத் தொலைத்து நிற்கும் 
முப்பதைக் கடந்த அண்ணி, 

கலர்சோடா வாங்கி வந்து 
குடிக்கச் சொல்லி காத்து நிற்கும் 
வளர்ச்சி குறைந்த அண்ணன் மகள், 

தன் பரம்பரையில் இறந்துபோன 
அண்ணனின் சாயலில் நானிருப்பதாய் 
அங்கலாய்க்கும் பெரியப்பா, 

தலைமகனை பறிகொடுத்து 
துவண்டு கிடந்தவள் எழுந்து வந்து 
சாப்பிட்டு செல்ல வலியுறுத்தும் பெரியம்மா 

பாசவலையறுத்து பணிக்குக் கிளம்புகையில், 

"காரியத்தன்னிக்கு நேரமிருந்தா மட்டும் வா. 
மெனக்கெட வேண்டாம். 
வண்டியில மெதுவா போ!". 

மண்வாசனை வீசும் வாஞ்சையோடு 
எல்லோரும் வாசல் நின்று வழியனுப்ப,

வராமலிருந்தால் 
தவறாக நினைக்கக்கூடுமென்று 
தலையைக் காட்ட வந்தவனோ 
இதயம் கனத்துப் போனேன். 
---------------------------------------------------------------------------- 

துயரம் 
மகிழ்ச்சி 
இவ்விரு நிகழ்வுகளின் 
உச்சத்தையும் தீர்மானிப்பது 
அவரவர்க்குள் இறங்கும் 
சரக்கின் அளவை பொறுத்தது. 
-------------------------------------------------- 

சாமி கும்பிடும் சதிகாரர்களே ! 
உம் வேண்டுதல் நிறைவேற 
எம்தலையில் கத்தி வைப்பது 
அநியாயம். 
------------------------------------------------ 

விடுமுறைக்கு மல்லுக்கட்டி 
சம்பளப் பணம் செலவழித்து 
நேர்த்திக் கடன் நிறைவேற்றி 
கோவிலிலிருந்து வெளிவருகையில் 
கைப் பணமும், 
கால் செருப்பும் 
களவாடப் பட்டிருந்தன. 

கோவில்களில் கடவுள் இல்லை 
என்பது நிதர்சனம்.  
------------------------------------------------------ 

அரசு சரக்கின் நெடி 
நுகராத ஒரு பொழுதையே 
சிறந்த பொழுதென்பேன். 
----------------------------------------- 














No comments:

Blogger Widgets