
கார்பரேட் காந்திகளின் ஆட்சியில்
தங்கள் பால்யங்களை
கனவுகளில் தேடும் பெரியவர்கள்
தங்கள் குழந்தைகளின்
குழந்தைமையை சாகடித்து
எந்திரத்தை வார்க்கிறார்கள்.
தொழில் வளம் பெருக
கொல்லைப்புறம் நுழைந்த கடவுள்
குடிகளின் குடுமியை
கார்ப்பரேட்டுகளின் கையில்
சிக்க வைக்கிறான்.
விளை நிலங்களை விற்ற விவசாயிகள்
பன்னாட்டு முதலாளிகளின் அங்காடிகளில்
விற்பனைப் பிரதிநிதிகளாக
வேலை வாய்ப்புத் தேடுகிறார்கள்.
காந்தியவாதம்
பிழைப்புவாதமானதொரு காலத்தில் தான்
கசாப்புக்கடை காந்திகள்
மரண தண்டனையை வலியுறுத்தி
உண்ணாநிலை மேற்கொள்கிறார்கள்.
கண்ணுக்கு கண்
பல்லுக்கு பல் என்றவர்கள்
காந்தியம் பேசுகிறோம்.
இங்கு காந்திகள் தவறானவர்களா?
காந்தியவாதம் தவறானதா?
---- அகரத்தான்
No comments:
Post a Comment