Sunday, August 28, 2011

காற்றில் கரைந்தவர்கள்


உலகின் எந்த ஒரு இனமும்
கருணைக்காக
இவ்வளவு காலமும்
ஏங்கி இருக்காது .


உலகின் எந்த ஒரு இனமும்
சுதந்திரத்திற்காக
இவ்வளவு வாதைகளை
தாங்கியிருக்காது.


உலகின் எந்த ஒரு இனமும்
வாழ்தலின் பொருட்டு
இவ்வளவு இழப்புகளை
எதிர்கொண்டிருக்காது.


உலகின் எந்த ஒரு இனமும்
சர்வதேசத்தால்    
இவ்வளவு தூரம்
புறக்கணிக்கப் பட்டிருக்காது.


உலகின் எந்த ஒரு இனமும்
தன் இனத்துரோகிகளால்
இவ்வளவு அபத்தமாக
காட்டிக் கொடுக்கப்பட்டிருக்காது.


உலகின் எந்த ஒரு இனமும்
இறையாண்மையின் பெயரால்
இவ்வளவு கொடூரமாக
கொன்றொழிக்கப் பட்டிருக்காது. .
பக்கத்தை வெளியிடு 
உலகின் எந்த ஒரு இனமும்
நியாயத்தின் வழி நின்றதால்
இவ்வளவு மோசமாக
கை விடப்பட்டிருக்காது.
.
உலகின் எந்த ஒரு இனமும்
நிராகரிப்பின் வலி சுமந்து
இவ்வளவு நெடுந்தூரம்
பயணப் பட்டிருக்காது.


உலகின் எந்த ஒரு இனமும்
தன் மரணத்தை
இவ்வளவு அருகாமை சென்று
தரிசித்திருக்காது.


உலகின் எந்த ஒரு இனமும்
அழிவின் விளிம்பில் நின்று  
மட்டை பந்து போட்டியை
இவ்வளவு ஆர்வமாக
வேடிக்கைப் பார்த்திருக்காது.


உலகின் எந்த ஒரு இனமும்
தன் இனம் நசுக்கப்படுகையில்
இவ்வளவு கடிதங்களை
எழுதித் தள்ளியிருக்காது.


உலகின் எந்த ஒரு இனமும்
தான் அழித்தொழிக்கப்படுகையில்   
இவ்வளவு நீண்ட  உண்ணாவிரதத்தை
நிகழ்த்திக் காட்டி இருக்காது.


உலகில் எந்த ஒரு இனமும்
தன் இனம் துடைத்தெறியப்பட்டதை      
இவ்வளவு பெரிய மாநாடு   
நடத்திக் கொண்டாடி இருக்காது.  
உலகின் எந்த ஒரு இனமும் 
தன் இனத்தைத் தானேக் கொன்று  
சடலத்தின் சட்டைப் பையில் 
காசு தேடி இருக்காது.                                                                                                                                                                                                                                                     
                           -  அகரத்தான்  


கூப்பிடு தூரத்தில் மயானம்...
------------------------------
-------------
அந்த சபிக்கப்பட்ட தேசத்தில்    
 உறுப்புகளை இழந்தவர்களும்   
சித்தம் கலங்கியவர்களும் 
குடிகளாக இருந்தனர். 
அவர்கள் 
தங்கள் வீட்டுக் கூரைகளை 
தாங்களே தீக்கிரையாக்கினர். 
தங்கள் வசிப்பிடங்களை 
தாங்களே குண்டு வைத்து 
தகர்த்தனர். 
சிறுவர்கள் 
சிலேட்டுக் குச்சிகளை 
செலட்டின் குச்சிகளாக்கி 
தங்கள் பள்ளிகளை     
தாங்களே தரைமட்டமாக்கினர். 
தங்களுக்கான உணவை 
தாங்களாகவே  
கடலில் கொட்டிவிட்டு 
கடும்பசியினால் 
உயிர் துறந்தனர். 
கொடும் ஆயுதம் கொண்டு  
தங்கள் கபாலங்களை 
தாங்களே பிளந்தனர். 
புல்டோசர் இயந்திரங்களை 
தங்கள்மேல் ஏற்றி 
தாங்களாகவே பூமிக்குள் புதைந்தனர். 
உயிர்கொல்லி ஆயுதங்களை 
தங்கள் மேல் பரவவிட்டு 
தணலில் வெந்து தணிந்தனர். 
தங்கள் வயிற்றை 
தாங்களே  கிழித்து 
குழந்தைகளை 
வீதிகளில் வீசிஎறிந்தனர். 
தங்களருமை குழந்தைகளின் 
கால்களைப் பிடித்து 
தாங்களே சுவற்றிலறைந்தனர். 
கந்தகக்காற்றை சுவாசித்த 
தாய்மார்கள் 
தாய்ப்பாலில் நஞ்சூட்டி 
தங்கள் சிசுக்களை 
தாங்களே கொன்றழித்தனர். 
தங்கள் குழந்தைகளின் 
குடல்களை மாலையாக்கி 
எருக்கம்பூச் சூடி 
எருமைமேல் வந்தனர். 
தங்களை தாங்களே 
வல்லுறவுக்குட்படுத்தியும் 
பிணங்களை புணர்ந்தும் 
இச்சைகளை தீர்த்தனர். 
வீதியெங்கும் விரவிக் கிடந்த    
உருக்குலைந்த உடல்களையும் 
வெந்து தணிந்த சுடலைகளையும் 
நரிகளுக்கு தின்னக் கொடுத்தனர். 
வளர்ப்பு பூனைகள் குடிக்க  
தங்கள் குருதியை கொட்டியும் 
வளர்ப்பு நாய்கள் பசியாற 
தங்கள் அவயங்களை வெட்டியும் 
வீசினர்.          
மருத்துவமனைகளின் மீது 
ஏவுகணைகளை வீசி 
கட்டிட இடிபாடுகளுக்குள் 
தங்கள் பிணங்களை 
தாங்களே ஒளித்துக்கொண்டனர். 
அம்மணம் அணிந்து 
கண்களை, கைகளைப்
பின்புறம் கட்டி 
யுவன்களும் யுவதிகளும் 
தங்கள் பின்னந்தலையில் 
தாங்களே சுட்டு சிதறினர். 
சொந்த தேசத்தில் அன்னியமாகி   
புகலிடம் தேடியவர்கள் 
வருத்தப்பட்டும் 
விருப்பப்பட்டும் 
பாரம் சுமந்தனர். 
உயர் பாதுகாப்பு வலையங்களை 
உயிர்குடிக்கும் நிலையங்களாக 
மாற்றியிருந்தனர். 
வழிபாட்டுத் தலங்களை       
வலிகளின் களங்களாக 
வைத்திருந்தனர். 
வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்கள் 
தங்களை தாங்களே 
சிகப்பாக்கி வீழ்ந்தனர். 
தங்கள் இனத்தின் சுவடுகளை 
தாங்களே அழித்து ?
வரலாற்றின் வழிநெடுக 
தீராப்பழியைச் சுமந்தவர்கள்,
அண்டையில்  வாழ்ந்த  குற்றத்திற்காக 
பாவம்! 
அகிம்சா மூர்த்தி புத்தனை  
குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவும் 
அகிம்சா மூர்த்தி காந்தியை  
சாட்சி கூறவும்   
அழைப்பது தான் 
அபத்தமாக இருக்கிறது.                                 
 
                               - அகரத்தான்.
                                 ------------------
Blogger Widgets