Monday, July 23, 2012

கவிதை செய்!


 


 


 மருத்துவ பரிசோதனைக்கு
வந்த ஏனையோர்
மருத்துவர் என்ன சொல்லி விடுவாரோ
என்ற பயத்திலேயே
பாதி இறந்து விடுகின்றனர்.

------------------------------

--------------------------------------

ஹார்ட்  அட்டாக்கில்  மீண்டவன்
சிகிச்சைக் கட்டணத்தைக் கேள்வியுற்று
ஹார்ட் அட்டாக்கில் உயிரிழந்தான்.
-------------------------------------------------------------

குடித்து விட்டு தகராறு செய்தவனை
மிக வன்மையாக
கண்டித்துக் கொண்டிருக்கிறான்
குடிநோயாளி.
-------------------------------------------------------

மருத்துவ மனையில் நோயாளியை
கவனித்துக் கொள்ள வந்தவன்
மன நோயாளியானான்.
-------------------------------------------------------

விபத்தில் இறந்தவனை
சற்று முன் தான்
பார்த்துப் பேசியதாக சொல்லியே
உயிரோடிருப்பவர்களை
கொன்று விடுகிறார்கள்.
--------------------------------------------------

அந்த நால்வரும்
உடன் வரப் போவதில்லை.
பணமில்லாதவர்
தான் வெட்டிய குழியில்
தானே சென்று படுக்கக் கடவீர்.
------------------------------------------------

இன்று
ஒடுக்கப்பட்டோரின்
மிக வலிமையான ஆயுதமாக
அழுது வீங்கிய கண்கள் மட்டுமே இருக்கின்றன.
எப்போதும் அவ்வாறே இருக்க முடியாது.
---------------------------------------------------------------------- 

நிலாவைக் காட்டி
குழந்தைக்கு சோறூட்டியவர்கள்
இன்று
நடிகனைக் காட்டி
பொருளீட்டுகிறார்கள்.
------------------------------------------------ 

கண்களை மூடி
கடவுளை நிந்தித்து
அணிகலனை பறிகொடுத்தவள்,
கடவுளிடம் முறையிட்டாள்.
எப்போதும் போலவே
கடவுள் சிரித்துக் கொண்டிருந்தார்.
---------------------------------------------------

இலவசத்தை ஏற்கிற சபலத்தை
மாற்றுப் பெயரில்
பிச்சை யென்றும்  சொல்லலாம்.
-----------------------------------------------

சாராயத்தை நிறுத்தியவனை
அடுத்த தடவை பார்த்த போது
வெண் சுருட்டு பிடிக்கப் பழகியிருந்தான்.

வெண்சுருட்டை நிறுத்தியவனை
அடுத்த தடவைப் பார்த்தபோது
பாக்கைக் குதப்பிக் கொண்டிருந்தான்.

பாக்குக் குதப்புவதை நிறுத்தியவனை
அடுத்த தடவைப் பார்த்த போது
புகையிலையை திணித்துக் கொண்டிருந்தான்.

இவர்கள் எல்லோருமாக சேர்ந்து
நம் மூச்சைத் தான்
நிறுத்தி விடுவார்கள் போலிருக்கிறது.
-------------------------------------------------------------------

மழைக் கஞ்சி எடுப்பாரும்
மழைக் கஞ்சி பிழைப்பாரும்
ஒரு தராசின்
இரு தட்டுகளென
நிறுத்துப் பார்க்கிறது வாழ்க்கை. 
-----------------------------------------------

மனைவியை சந்தேகித்தவனையும்,
ஒருத்தியை பெண்டாண்ட ஐவரையும்,
மனைவியை அடகு வைத்து சூதாடியவர்களையும்,
கோபியர்களிடம் வரம்பு மீறுபவனையும்,
தீராக் காமத்தோடு
பிறன் மனையாளை நோக்குபவனையும்,
அறுபதினாயிரம் மனைவிகளைக் கொண்டவனையும்
கொண்டாடுகிற சமூகம்,
அதே செயலை
நீயும், நானும் செய்தால்
ஒப்புக்கொள்ளுமா?
---------------------------------------------------------------------------------

ஓவாப் பிணியை,
உறுபசியை,
சமூக அவலங்களை,
அரசியல் தின்று செரித்த சனங்களின் வாழ்வை,
இயற்கையின் பேரனர்த்தங்களை,
எம் அபிலாசைகளை நிர்மூலமாக்கும்
அந்நியத் தலையீட்டை,
இன ஒடுக்குமுறையை,
போர் பிய்த்தெறிந்த எம் கனவுகளை
பாடாமல்
காதலின் கொண்டாட்ட மனநிலையையும்,
இழப்பின் வலிகளையும்,
இயற்கையின் தரிசனங்களையும் மட்டுமே
பாடுதல் கவியாகுமோ?

கவிதை என்பது எம் மொழி.
கவிதை என்பது எம் வாழ்வு.
கவிதை என்பது எம் போர்முரசு.
கவிதை என்பது எம் போர்வாள்.
கவிதை என்பது எம் கேடயம்.
கவிதை என்பது எம் காலக்கண்ணாடி.

உலகெங்கும் சிதறிக் கிடக்கும்
எம் சனங்களை இணைக்கும்
இணைப்புக் கண்ணி.

யாம் அன்றாடம்
எதிர்கொள்ளும் அவலங்களை
உலகத்தோரிடம் கொண்டு சேர்க்கும்
தொடர்பு ஊடகம்.

இப்போது நீங்களும் கவி நெய்யலாம்.

2 comments:

s suresh said...

சமூக அவலங்களை சாடும் வரிகள்! கவிதைகள் அருமை!

Agarathan said...

நன்றி சுரேஷ் ...

Blogger Widgets