Sunday, September 25, 2011

சாகாவரம் பெறும் தெரு நாய்கள்

  கால காலமாக
வளைந்து குழைந்து வாலாட்டி
பாசாங்கு செய்கின்ற தெரு நாய்கள்
நமது பாதுகாவலர்களாகவும்
தீவிர விசுவாசிகளாகவும் இருப்பதாக 
கட்டியம் கூறுகின்றன.

கால காலமாக
நம் கைவசம்
ஒரேயொரு ரொட்டித்துண்டு இருக்கிறது.

அது
தேவலோக அமிர்தம் போலவும்,
அனுமன் கொணர்ந்த சஞ்சீவிவேர் போலவும்,
நாரதர் பெற்ற ஞானப்பழம் போலவும்,
அவ்வைக் கிழவிக்கு கிடைத்த நெல்லிக்கனி போலவும்
அபூர்வ சக்தி வாய்ந்ததாய் இருக்கிறது.

அந்த அபூர்வ ரொட்டித்துண்டை
தெரு நாய்களுக்கு வீசுகிறோம்.   

வீசியதை விழுங்கிய நாய்கள்
சாகாவரம் பெற்றதும்,
மிகுபசியால் வரம்புமீறி
நம் வட்டிலிலும் வாய் வைக்கின்றன.

விபரீதம்  உணர்ந்து 
விரட்டவென காற்றில்  
வீசிய நம் கைகளை 
வெறியோடு பாய்ந்து கவ்வுகின்றன.

அபயக் குரலெழுப்பும் வேளையில்
தாவி மேலே விழுந்து நம்மை
குப்புறத் தள்ளி குரல்வளையை
கடிக்கத் தொடங்குகின்றன.

ஆப்பசைத்த குரங்கின்
நிலையிலிருந்து நாம்,  
நம்மை நொந்து கொள்ளவா?
நாய்களை நொந்து கொள்ளவா?
                                                                                                                                                      - அகரத்தான்.                                                                                                             

No comments:

Blogger Widgets