Sunday, September 25, 2011

அகரத்தான் கவிதைகள்-2

எரியும் வீட்டில்...
------------------------------------------------ 
கொலை நிகழ்ந்த வீட்டில்
தடயம் தேடுகிறான் காவலன்.
புகைப்படம் எடுக்கிறான் பத்திரிக்கையாளன்.
ஓட்டு பொறுக்குகிறான் அரசியல்வியாதி.
கண்ணீர் விடுகிறான் கடன்காரன்.
சரக்கு கேட்கிறான் குடிகாரன்.
கவிதை தேடும் சைத்தானை
கட்டிவைத்து உதைக்கிறேன் நான்.
----------------------------------------------------------------------

குழந்தைகளிடம்
புத்திசாலித்தனம் சுடர்விடுகையில்
அவளைப் போலிருப்பதாகவும்,
அசட்டுத்தனம் வெளிப்படுகையில்
என்னைப் போலிருப்பதாகவும்
எப்போதும் சொல்லித் திரிவாள்
என் வீட்டுப் பத்தினி.
--------------------------------------------------------

இன்றோ நாளையோ
திருந்தக்கூடும் என்ற நம்பிக்கை
முழுமையாக பொய்த்தபின்
தண்ணீர் தெளித்தாயிற்று.

மனசை
வேறென்ன தான் செய்ய?
வேறெதைக் கொண்டு தான் அடிக்க?  
--------------------------------------------------------------

எல்லோரும் வேண்டுமெனக்கு.
பகிர்ந்து கொள்ளும் பக்குவம்
யாருக்குமில்லை.
இருக்கும் ஒரு வாக்கை
யாருக்கென தருவேன்?
யாரையென பகைப்பேன்?

-------------------------------------------------

மனித உடலுக்கு
மிருக முகம் பொருத்தி
கடவுள் என்கிறாய்.
கடவுளைப்போல்
குழந்தை பிறந்தால்
ஏன் அலறிப் புடைக்கிறாய்?
-------------------------------------------

தற்கொலைக்கு முயற்சித்தவனை
செருப்பாலடிக்கச் சென்றவன்
சபை நாகரிகம் கருதி
வார்த்தையாலடித்து வந்தேன்.
பேசாமல் செருப்பாலடித்திருக்கலாம்.
மனசுக்காவது ஆறுதலா இருந்திருக்கும்.
----------------------------------------------------------------

குடிக்கு நான் அடிமையில்லை.
எப்போதென்றாலும் நிறுத்த இயலும்.
ஆனால் எப்போதென்பதை
மாதக் கடைசியில் தான்
முடிவு செய்வேன்.
அதை நிறுத்த இயலாது என்னால்.
------------------------------------------------------

                                         - அகரத்தான். 

2 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தங்கள் கவிதையும் இதைவிட தங்கள் தளமும் மிக அழகாக இருக்கிறது...

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

எரியும் வீட்டில் கவிதை அருமை .தொடர்ந்து எழுதுங்கள் .வாழ்த்துக்கள்

Blogger Widgets