Sunday, September 25, 2011

அகரத்தான் கவிதைகள்

காத்திருப்பு
-----------------------------------------------
சொத்துப் பிரச்சினைக்காக
மூன்று கொலைகள் நிகழ்ந்த
ஓட்டுப்புரை வீட்டின்
மாமரக் கொல்லையில்
விளையாட்டை பாதியில் நிறுத்தி
உயிர் தப்பியோடிய
குழந்தையின் வரவுக்காக
காலடிச் சுவடுகளைப் பார்த்தவாறு
காத்திருக்கின்றன மரப்பாச்சிகள்.
-------------------------------------------------------------------------------------
வாழ்தலின் நிமித்தம்
--------------------------------

காந்திகள் வன்மம் கொண்டு
கையில் தூக்குக் கயிற்றோடு
திரிவதால்

வேறு வழியில்லை தோழா!

தலைமுறைக் கோபம் தேக்கி
சொக்கப் பனைக் கொளுத்து!

தூக்குக் கயிற்றையும்,
மகாத்மா என்ற வெற்றுப் பட்டத்தையும்,
சனநாயகம் என்ற கறிக்குதவாச் சொல்லையும்,
இன்ன பிற இத்தியாதிக்களையும்.
-----------------------------------------------------------------------------
பிள்ளையார் சதுர்த்தி
-----------------------------------------------------------
பிள்ளையாரை
சிறுமைப் படுத்தி விட்டதாக 
கூப்பாடு போட்ட
சிறுமூளை பாதித்த ஓருடல்
பிரச்சினையின் தோளில்  
நின்று கொண்டிருந்தது.
-----------------------------------------------------------
பார்வதிக்குடி
------------------------------------
சாதியப் பேரணி.
கலவரம்.
துப்பாக்கிச் சூடு.
சில மது புட்டிகள் உடைந்தன.
குறிப்பிட வேறொன்றுமில்லை.  

--------------------------------------------------
விசித்திரங்கள் 
-----------------------------------------

உடைபடும் ஓசை.
வீட்டிற்குள் சண்டையையும்,
காயலான்கடையில் சந்தோசத்தையும்
ஒருங்கே கொண்டு வருகிறது.
-------------------------------------------------------------

கூத்து மேடை.
ராசா குடிகளுக்கும், 
குடிகள் ராசாவுக்கும்
படியளக்கின்றனர்.
---------------------------------

ஆக்கிரமிப்பு அகற்றம்.
கோயில் இடிபாடுகளுக்குள்  
கடவுளின் அழுகுரல்.
யார் யாரைக் காப்பாற்ற?
-------------------------------------------

கல்லைக் காசாக்குவர்.
மண்ணை நீறாக்குவர்.
காகிதத்தை பணமாக்குவர்.
பிறகெதற்கு கையேந்துவர்?
------------------------------------------ 

சேரி கருமாரியம்மனுக்கு
குட முழுக்கு விழா.
அவர்கள் தீர்த்தம் வழங்கினர்.
இவர்கள் மோட்சம் பெற்றனர்.
-----------------------------------------------

உறங்குமுன் உடமையாளனும்,
தொழிலுக்கு கிளம்புமுன் திருடனும்
கடவுளை மனமுருக வேண்டினர்.
---------------------------------------------------------


தற்கொலைக்கு முயன்று தோற்றுப்போன நண்பனுக்கு அர்ப்பணம். 
-------------------------------------------------------------------------------------------------------
கருமாயப்பட்ட வாழ்க்கை 
-------------------------------------------------------------------------
அவனுக்கு வாய்த்த வாழ்க்கை
இளம் காளையிடம்
இரவலுக்கு சிக்கிய
இரு சக்கர வாகனமாய்
இருப்பு அழிகிறது.      
------------------------------------------------------------------------

இறுதி தீர்மானம்
-----------------------------------------------
வாழ்வோடு போராடும் வலுவிழந்து
அம் முடிவெடுத்தபோதே,
அவனைச் சார்ந்திருந்த
அப்பனையும், ஆத்தாளையும்
பெண்டாட்டியையும்,
மூன்று பிள்ளைகளையும்
மற்றும்
சில கடன்காரர்களையும்
கொலை செய்வதென
தீர்மானித்திருந்தான். 
--------------------------------------------------------

காற்றினில் வரும் கீதம்
-------------------------------------------------------------------

இறப்பதற்கு சில கணங்களும்
வாழ்வதற்கு பல யுகங்களும்
கோப்பைகளில் ஊற்றி
மேசையின் மீது வைக்கப் பட்டன. 

வாழ்ந்து களிக்க சிலர் வாழ்வையும்,
வாழ்ந்து சலித்த பலர் இறப்பையும்
தெரிவு செய்து பருகினார்கள்.

காற்றில் மிதந்து வரும்
இசைக் குறிப்புகளில்
தாள லயங்கள் மட்டும்
சற்றே மாறுபட்டிருந்தன.

அவ்வளவு தான்.
------------------------------------------------------- 
 
   
         
                                                                                                                      - அகரத்தான்.  

1 comment:

Guru pala mathesu said...

அடுத்த தலைமுறை யோசிக்க வேண்டிய அறிய வேண்டிய கவிதைகள் ,தொடருங்கள் வாழ்த்துக்கள்

Blogger Widgets