Wednesday, April 18, 2012

நாவில் உலவும் பேய்கள்!

அழகா பொறக்கலைன்னு 
அழுது தீர்த்த அஞ்சலை 
மஞ்சக் கயித்துக்கு வக்கத்து 
தூக்கு கயித்த மாட்டுனதும் 
பேரழகியாகி கொம்மரிச்சம் போடுறாளாம். 

எம் சி ஆரு படம் பார்க்க 
என்ன உட்டுட்டு போயிட்டியேன்னு 
புருசனோட மல்லுக்கட்டி 
எலி மருந்தக் குடிச்சவளும் 
வெத்தலக்கி சுண்ணாம்பு கேட்டு 
தடத்த மறிக்கிறாளாம்.  

சட சடயாக் காச்சிருக்கும் 
சுடுகாட்டு புளியமரத்துக் கீழ 
மூத்திரம் பேஞ்சு நிமுந்தபய 
மூர்ச்சையாகி விழுந்து 
ரத்தம் கக்கி செத்துப் போனானாம். 

டூரிங் டாக்கிசு, கால்சட்டை வயசு  
மணல்குவிச்சு உட்கார்ந்து 
விட்டலாச்சார்யா படம் பார்த்து 
நடுசாமம் மூத்திரம் போக பயந்து
 கட்டிலுல புரண்டத  நெனச்சா 
என் மூத்திரப்பை இப்பக்கூட வலி எடுக்கும். 

பள்ளி வாதநாராயணன் மரத்துல 
கயித்தப் போட்டு 
கைலாசம் போன கப்பலத்தாரை 
அவரு வாரிசுங்ககூட மறந்திருக்கும். 
என்னால தான் மறக்க முடியல. 

அகால நேரத்துல அலஞ்சு திரியாதீங்க, 
அல்பாயுசுல போனதுங்க ஆயுள் முடியுமட்டும் 
ஆவேசமா அலைவாங்கலாம். 
எல்லோரும் சொல்லுவாங்க, 
எப்பத்தான் கேட்டிருக்கோம்?   

மோகினி தான் வாராதா? 
மோகமும் தான் தீராதான்னு 
அரைக்கால் சட்டை வயசோ 
மோகினியாட்டத்துக்கு காத்திருக்கும். 

அமாவாச இருட்டுல ஏத்தம் இறைக்கையில 
சின்னக் கொலுசொலியும், 
மல்லிகைப் பூ மணமும், 
விசும்பியழும் பெண் குரலும் 
விட்டு விட்டு கேக்குதாம்.  

கமலை பரிய கெணத்துல விட்டு 
இறைக்க மாட்டாம எருதுமாடுக திணறுறதும், 
தண்ணியில யாரோ தாவிக் குதிக்கிறதும், 
எட்டிப் போய் பார்க்கையில
எந்த சலனமும் இல்லாதிருக்கறதும்,  

இட்டேரிக் கரைமேல வழிகேட்டு 
மிதிவண்டி பின்னிருக்கைல ஏறுனவ, 
எடைக் கூடி கனக்குறதும், 
திரும்பி பாக்கையில 
கோரப் பல்லால சங்கக் கடிக்குறதும்,  

ஊருல பாதி பேரு உறக்கம் கலச்ச 
செஞ்சு வச்ச செப்பு செல செங்கமலம், 
ஊரோடி பொழக்க வந்த நோஞ்சான் டைலரு 
அளவெடுப்புல  அசந்துட்டதாகவும், 
மாங்கொல்லையில மயங்கி கிடக்கறானும், 
சோளக் கொல்லையில சொக்கிக் கிடக்கறானும், 
வாய்ப்பு கிடைக்காதவங்க வயிறெரிஞ்சு நின்னவுங்க 
வகை வகையா பேசுனாங்க. 
அவமானந் தாங்காம அரளிவெத 
அரச்சு குடிச்சு மாண்டவ 
அவள தூத்துனவுங்கள தூங்கவே உடறதில்லைனும்,  

நண்பனைப் போல உருமாறி 
நடுசாமம் அழைச்சி போயி 
ஏத்தம் இறைக்க வச்சு 
கெணத்து தண்ணி வடிஞ்சபிறகும் 
பொழுது மட்டும் விடியலன்னு 
ஐயம் வந்து பார்க்கையில 
பனை மர உச்சியிலேறி உலுப்பி 
கெச்சலாட்டம் போடுறதும்,

நெலத்துல வட்டக் கோடிழுத்து 
வட்டம் விட்டு வெளிவராம 
காலை வரை காத்திருந்து 
உசுரு பொழச்சத  
ஊருசனம் கதையா சொல்லுவாங்க. 

பேய்ங்க இல்லேன்னாலும் 
பேய் கதைகளாச்சும் இருக்கட்டுமே, 
சுவாரசியமில்லா கணங்களெல்லாம் 
உயிரில்லாத வெறும் பொணங்க தானே? 


பேய்கள் பற்றிய புனைவுகள் 
திகிலூட்டுபவை. 
சுவாரசியமானவை. 
மனதை பரவசத்தில் ஆழ்த்துபவை. 

சுவாரசியமற்ற கணங்கள் 
உயிரற்ற வெறும் பிணங்கள். 

நாவில் உலவும் பேய்களுக்கு 
தேவையெல்லாம் 
வெற்றிலைக்கு கொஞ்சம் சுண்ணாம்பும், 
மிதிவண்டி பின்னிருக்கையில் கொஞ்சமிடமும், 
மனிதர்களிடம் கொஞ்சம் விளையாட்டும், 
மல்லிகைப் பூச்சரமும், 
நெடி வீசும் சாராயமும், 
கவுச்சி மணமும் மட்டுமே. 

மண், பெண், பொன், பொருள் 
பேராசை, வன்மம்,வஞ்சனை, துரோகம் 
சுமந்தலையும் மனிதரை விடவும் 
மக்கள் நாவில் உலவும் பேய்கள் 
ஒன்றும் அத்துணை பயங்கரமில்லை. ......

3 comments:

Guru pala mathesu said...

பழைய நினைவுகளை புரட்டிப்போட்ட கவிதை.அருமையான பகிர்வு

Agarathan said...

நன்றி தல.....

s suresh said...

அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!

Blogger Widgets