Friday, August 10, 2012

துரோக நாடகம் ( டெசோ மாநாடு )




உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு.
வீழ்வது நாமாக இருந்தாலும்
வாழ்வது தமிழாக இருக்கட்டும்.
இருப்பது ஓருயிர்.
போவது ஒருமுறை.
அது தமிழுக்காக போகட்டுமென்று
வாயால் வடை சுடுவார். 


ஊழலின் ஊற்றுக் கண்ணென 
அவரை உண்மைச் சுடுமானால், 
மீண்டுமோர் 
ஆரிய, திராவிடப் போர்  மூளும். 
இது 
அடிமைச் சாதியை ஒடுக்கும் 
ஆதிக்க சாதியின் கொடும்சதி என்பார். 

இன விடுதலைக்கு ஈகம் செய்த 
சித்தாந்தப் புலியின் சிகிச்சைக்கு மறுத்து   
மனிதத்தைக் குழி தோண்டிப் புதைப்பார். 

எம் சமாதான முகத்தை 
பேரினவாதி சிதறடிக்கையில் 
கவியெழுதி முதலைக் கண்ணீர் விடுவார். 
அச் செயலை இனப்பற்றாளர் செய்தால் 
பயங்கரவாதமென்று பதறித் துடிப்பார். 

தம் வீட்டிற்குள் நிகழும் 
ரத்த உறவுகளின் அதிகாரச் சமரை 
தீர்க்கும் திராணியற்றவர்   
விடுதலைப் போராளிகளை 
சகோதரச் சமரால் வீழ்ந்தவர் என்பார். 

பகுத்தறிவுப் பாசறையெனப் பறைசாற்றுபவர்
எப்போதும் மஞ்சள் தூண்டிற்குள்  
முகம் புதைத்திருப்பார். 

வயிற்றுப் பிழைப்புக்கு 
வல்லம் வலிப்போரை 
பேராசை நடுக்கடலுக்குள் 
மூழ்கடிக்கிறது என்பார். 

வர்த்தக ஒப்பந்தமெனக் கூறி 
அந்நியத் தேயிலையை இறக்கி   
தம் சனங்களின் வயிற்றிலடிப்பார். 

நாடகமேடையில் வாழ்வைத் துவக்கியவர் 
உலகின் கவனம் ஈர்த்த உண்ணாநிலையையும் 
நாடக மேடையேற்றி நாறடிப்பார். 

உலோகப் பறவைகள் உமிழ்ந்த எச்சத்தில் 
தம்மினம் கருகி சிதைகையில் 
தம்மினத்தை தானே 
விழுங்கும் அரவம் போலிருந்து 
மழைவிட்டும் தூவானம் விடவில்லையென  
இலக்கிய நயம் பாராட்டுவார். 

கருவறை சிசுவும் 
முள்வேலிக்குள் முடங்குகையில் 
இன்பச் சுற்றுலா சென்று பார்த்து 
கிளிகள் தங்கக் கூண்டிலிருப்பதாக அறைகூவுவார். 

முள்ளிவாய்க்கால் குருதிப்புனலில் நனைகையில்  
இரத்த உறவுகளுக்கு அமைச்சுப் பதவி பெற 
அதிகாரத்தின் காலடியில் ஒற்றைக்கால் தவமிருப்பார். 

தம் இனத்தைக் காவு கொடுத்து 
தவப்புதல்வி செய்த இமாலய ஊழலை  
சனங்கள் காறி உமிழ்ந்த எச்சிலில் நின்று 
"உங்களுக்கு ஒரு மகளிருந்து..." 
எனக் கண்ணீர் உகுப்பார். 

தமிழர் தாயகம் கிடைத்தால் மகிழ்ச்சி என்பார். 
அந்த இலட்சியத்திற்காக 
செயலாற்றுவோரை வேரறுப்பார். 
மந்திரம் ஓதி மாங்காய் பழுக்க வைப்பாரோ? 

கேட்ட இலாகா கிடைக்காதபோது 
ஆதரவை திரும்பப் பெறுவதாக மிரட்டுபவர், 
தம் இனக்கொலையை நிறுத்தக் கோரினால் 
ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு 
என்ன செய்ய முடியுமென தழு தழுப்பார். 

கைக்கெட்டும் தொலைவில் நிகழும் 
இரத்த வெறியாட்டைத் தடுக்காது 
கடவுளைப் போல வேடிக்கைப் பார்த்தவர் 
மலைபோலக் கடிதமெழுதி 
சனங்களை மாயச் செய்வார்.

உறவுக் கண்ணிகளை அறுத்தெறிந்தவர் 
மனிதச் சங்கிலி போராட்டம் என்பார்.  

ஆட்சி அதிகாரத்துக்கு நெருக்கடி முற்றும்போது 
அனைத்துக் கட்சி கூட்டம் என்பார். 
போரை நிறுத்த வலியுறுத்தாது 
காயத்திற்கு மருந்தனுப்பினால் போதும் என்பார். 

தேச பக்தர்களின் இரட்டை நாவை 
வெளிச்சம் போட்டுக் காண்பிக்க 
தன்னையே திரியாக்கியவனின் 
இறுதி ஊர்வலத்தில் 
தடியடி நிகழ்த்தி கலைப்பார். 

தம் இனத்தை அழித்தொழிக்க 
அனைத்தையும் செய்து விட்டு  
"அய்யகோ! தமிழினம் அழிகிறதே!..." 
என்று அழுதரற்றுவார்.  

இன அழிப்பில் பலியானவன் 
கத்திக் கதறியது  
உயர்தனிச் செம்மொழியிலென  
இழவு வீட்டின் ஒப்பாரிப் பாடலுக்கு 
விருது கொடுத்துச் சிறப்பித்து 
செம்மொழிக் கொண்டானென 
தனக்குத் தானே பட்டம் சூடுவார். 

தன் குட்டிகளிருக்கும் திசைநடப்போரை 
மலம் தின்று செரிக்கும் பன்றிகளும், 
போக்கிடமற்ற தெருநாய்களும், 
கொப்பொடிக்க மரமேறுவோரை 
மந்திகளும், காகங்களும் 
ஒன்று சேர்ந்து விரட்டியடிக்கும். 

எட்டாவது அதிசயமாய் 
தம் இன அழிப்புக்கு எதிராக 
ஒன்று சேர்ந்த தமிழனை 
அடக்குமுறைச் சட்டமேவி 
சிறைக்கொட்டடியிலடைத்து மகிழ்வார். 

அரிதாரம் கலைந்த வெட்கமற்று 
அதிகாரம் முழுதும் தொலைத்த பின் 
அங்கத நாடகத்தின் 
அடுத்த காட்சியாய் 

குருதி படிந்த நிலத்தில் 
சாம்பல் பூத்த தெருவில் 
சனங்களை திரளச் செய்ய   
டெசோ மாநாட்டை அறிவிப்பார்.  

சில முகங்களை சாகும்போதும் 
பார்க்கத் தோன்றும். 
சில முகங்களை பார்க்கும்போதெல்லாம் 
சாகத் தோன்றும். 

வரலாற்றின் வழித் தடத்தில் 
எதிரிகள் மன்னிக்கப்படுகிறார்கள். 
ஆனால், 
துரோகிகள் மன்னிக்கப்படுவதில்லை. 
--------------------------------------------------------------------------






No comments:

Blogger Widgets