Thursday, April 19, 2012

சமூகம்....!!!!







பைசா பெறாத வேலினை வைத்து 
இவ்வளவு காலமும் 
எங்களை பயமுறுத்திய கடவுளை 
குண்டுக் கட்டாகக் கட்டி 
காலடியில் வைத்தவாறு 
முதல் வேட்டையை துவக்கினான் களவாணி. 
----------------------------------------------------------------------------- 

கோவில் திருவிழா
ஆடல், பாடல் நிகழ்ச்சியில்
நேருக்கு நேர் சந்தித்த
தந்தையையும், மகனையும் 
பேய்களறைந்து விட்டன.
------------------------------------------------

குழந்தைகள் படித்ததும்
செய்தித் தாள்கள் காலாவதியாகின்றன.
-------------------------------------------------------------------

மின்கலம் வாங்க வக்கற்றவர்கள்
விவாகரத்து வாங்குவது எளிதென்கிறார்கள்.
----------------------------------------------------------------------------

திறந்த வெளியெங்கும்
நுணுங்கி ஒளிர்கின்றன
அரசு கண்ணாடி சீசாக்கள்.
--------------------------------------------

மருத்துவமனைக்குள் மருத்துவனாக
நுழைய விழைந்தவனை
மனநோயாளியாக்கி அனுப்பும்
கல்வி தரகர்களை கொண்டாடி
மகிழ்கிற சமூகம் எம்முடையது.
--------------------------------------------------------------

கூடங்குளத்தில் எல்லா உயிர்களும்
இன்புற்றிருக்க அன்பு செய்தவனை
தூக்கிலிட விழைபவன்
தன்னை சனநாயகவாதி என்கிறான்.  
--------------------------------------------------------------

மின்பயன்பாடு குறித்து அளவெடுத்து
ஐயம் எழுப்பிய கணக்கீட்டாளரிடம்
கை புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்றேன்.
அவர் பேசாமல் வந்த வழி சென்றார்.
-------------------------------------------------------------------------------------------

நெடுஞ்சாலை நடுவில் நின்று
நுகர்வோரை அழைக்கும்
விளம்பர தட்டிகளில்
ஜாய் ஆலுக்காஸ் ஜுவெல்லரி,
எ.ஆர்.ஆர்.எஸ் சில்க்ஸ்,
ஸ்ரீராம் சிட்ஸ்.,
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்.,
காமராஜர் கல்வி நிறுவனங்கள்.
-------------------------------------------------------

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே
முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி
என்பதை தவறாக புரிந்து கொண்டிருக்கக்கூடும்
எம் குடிமகன்கள்.
--------------------------------------------------------------------------------

அதிகாரத்தின் பெருவிருப்பை ஆதரிப்பதில்லை நான்.
என் மீது தீவிரவாத முத்திரை குத்தக்கூடும்.
இன்றோ, நாளையோ அதிகாரத்திலிருப்பவன் அவசியமில்லை.
எப்போதும் அதிகாரத்தை தொலைக்கும் நீ என்ன சொல்கிறாய்?
ஆதரிக்கட்டுமா? மறுதலிக்கட்டுமா?
-----------------------------------------------------------------------------------------------------------    

உன் குடும்பத்தாரை கொலை செய்கிறோம்.
உன் உடைமைகளை நாசப்படுத்துகிறோம்.
உன் வாய்ப்புகளை தட்டிப் பறிக்கிறோம்.
உன் மூதாதையர் கையளித்த
பூர்வசென்ம பூமியை அபகரிக்கிறோம்.
உன் எதிர்காலத்தை இறந்த காலமாக்குகிறோம்.
இழந்த உறுப்புகளும்,
தொலைந்த உடைமைகளும்,
அறுந்த உறவுகளும்
ஏற்படுத்தி சென்ற வெற்றிடங்களை
சல்லிகளை விட்டெறிந்து நிரப்புகிறோம்.
ஏற்றுக் கொண்டு இறையாண்மைமிக்க
குடிமகனாக வாழ்ந்து மடியக் கடவீர்!
----------------------------------------------------------------------------------------




Blogger Widgets