Wednesday, July 18, 2012

தவசி

------------------- 

கானல் அலையடிக்கும் வேகாத வெயிலுல
காலுல செருப்பில்லாம
காத்துல கைகளை வீசி
எட்டு மேல எட்டு வச்சி
பூமியோட நடுவகிடுல பேனைப் போல
ஊர்ந்து போவா பெரிச்சி கிழவி. 


இட்டேரிக் கரையெங்கும் 
உன்னி புதர்ச் செடியும், 
பிச்சிப் பூ வாசனையும், 
பனம்பழ வாசனையும், 
மஞ்சணத்தி மரத்துல 
தவுட்டுக் குருவிகளோட கெச்சட்டமும் 
கை புடிச்சு வழித் துணையா 
சக்கலாக் கரடு வரை வந்து போகும். 

சக்கலா கரட்டோரம் 
கொல்லிமலை பார்த்து விரிஞ்சிருக்கும் 
வாக்கப்பட்ட பூமியை 
குண்டாங்கல்லு மேல நின்னு 
கண்ணுக்கு மேல கைவச்சு நோட்டமிடுவா. 

சம்பா நெல்லு அறுவடை 
சக சோதியா தொடங்கியிருக்கும். 
பண்ணையாளு தவசி 
நெற் தாளுங்களை 
பாய்ஞ்சு பாய்ஞ்சு கட்டிட்டிருப்பான். 

தவசிக்கு வயிரம் பாய்ஞ்ச உடம்பு. 
கழனியிலிருக்கும் போது கோவணமும், 
பண்ணாடியைப் பார்க்க 
ஊருக்குள் வரும்போது 
இடுப்பில் வேட்டியும், 
தலையில் முண்டாசுமா வருவான். 
மேலாடையாக புழுதிப் பூத்திருக்கும்.
பக்கம் வரும்போது வியர்வை கசகசப்பு
புளிச்ச வாடை கொண்டு வரும். 


கழனிக்குப் போனாக்க 
தென்னை மரமேறி 
இளநீ போட்டு தாகமாத்துவான். 

மரவள்ளிக் கிழங்கு புடுங்கி 
தீயில வாட்டி தின்னக் கொடுப்பான். 

பப்பாளிப் பழம் பறிச்சு 
பாளம், பாளமா கீத்திட்டு 
பசியாத்துவான். 

இடையிடையே 
நெல்லி, கொய்யா, கடலை, 
மாங்காய், தட்டக்காய், 
வெள்ளரிப் பழமுன்னு, 
வகை வகையாப் பறிச்சு வந்து  
தின்னுறதை வஞ்சையோடப் பார்த்திருப்பான். 

வேகாத வெயிலுல 
வெந்து தணியுறவன் 
தீவாளி, பொங்கலு, 
மாரியாத்தா நோம்பின்னா மட்டும் 
வெட்டி, துண்டு வேண்டி நிப்பான். 

பண்ணைக்காரிச்சி பேரனுங்க எல்லாம் 
வாடா, போடான்னுவாங்க. 
கிச்சு கிச்சு மூட்டுனாப்புல 
சிரிச்சே தான் கிடப்பானே ஒழிய 
கோவிக்கத் தெரியாது. 

அப்பா வயசு ஆளாச்சே, 
வாடா, போடான்னு சொல்லுறது 
தப்பில்லையான்னு கேட்டா, 
பள்ளு, பறைக்கு எல்லாம் 
பவிசு ஒண்ணும் தேவையில்லை. 
அப்புடித் தான் கூப்பிடனும்னு 
வியாக்கியானம் பேசுவா பெரிச்சி. 

அறுவடை முடிஞ்சு 
அடுக்கடுக்கா மூட்டையடுக்கி 
ரெட்டை மாட்டு வண்டி பத்தி 
ஊஞ்சலாடும் லாந்தரு வெளிச்சத்துல 
கோம்பை தடத்து சல்லி எல்லாம் 
நொறு நொறுங்க சாமமுன்னு பாராம 
சளைக்காம வந்து நிப்பான். 

மரவள்ளிக் கிழங்கு புடுங்கி 
நெறபாரம் ஏத்தி வச்சி 
ரெட்டை மாட்டு வண்டி பத்தி 
புதன்சந்தை போய் வருவான். 

பண்ணக்காரி வெறகு எரிக்க 
மரவள்ளிக் கிழங்கு குச்சியடுக்கி 
ரெட்டை மாட்டு வண்டியில 
கண்ணசந்து படுத்திடுவான். 

பழகுன தடத்து வழி 
பாவிப் பய மாடுங்க ரெண்டும் 
பாதி ராவுலயும் பதவிசா வந்து சேரும். 

காலுக்கு செருப்பாக 
உழைச்சு களைக்கிறவன் 
வீட்டுக்கு வெளியவே தான் 
ஒத்தக்காலு கொக்காக நின்னுருப்பான். 

தவசியை வீட்டுக்குள்ளப் பாக்குறது 
குதிருக்குள்ள 
மூட்டையடுக்கும்போது மட்டும் தான். 

"அம்மாயி, தவசி வீட்டுக்குள்ள வரான். 
இப்ப வீடு தீட்டாகாதா?"
பேரனுங்க கேட்கும்போது 
வெளக்க மாரெடுத்து வெரட்டுவா. 

கொண்டு வந்த மூட்டையெல்லாம் 
ஒத்தையாளா இறக்கி வச்சு 
ரொம்ப பசியா இருந்தாக்க, 
"பண்ணைக்காரிச்சி, 
ரெண்டு உருண்டை கம்மஞ்சோறு 
கரைச்சு ஊத்து ஆத்தா, 
வயிறெல்லாம் பத்துது"ம்பான். 

வெங்காயம் கடிச்சு 
வெறுங்கையால வாங்கி குடிச்சவன் 
வந்த சுவடே தெரியாம 
வண்டி பத்தி போயிடுவான். 

தாளறுப்பு, 
தாள் கட்டு சொமக்குறது, 
தாளடிப்பு, 
தாள தூத்தி வாருறது, 
சாணி மொழுகுன களத்துல 
நெல்மணிய பரத்தறதுன்னு 

தவசியும், 
தவசி பொண்டாட்டியும், 
மூணு பிள்ளைகளும் 
சொடுக்கிவிட்ட பம்பரமா 
சொழன்று சொழன்று வாருவாங்க. 

கானல் வெயிலுல 
காலுக்கு செருப்பில்லாம வந்ததுல 
வெந்துபோன பாதத்துக்கு 
கத்தாழைச் சோறெடுத்து கட்டி விடுவான். 

நெற்குவியல் பக்கத்துல 
கயித்துக் கட்டில போட்டு 
பெரிச்சி கிழவி தூங்குறப்ப, 
நெல்லுக் குத்தேறிப் பக்கத்துல 
வேட்டிய விரிச்சிப் போட்டு 
கண்ணயர்வான். 

முணுக்குன்னு சத்தம் கேட்டா 
கண்ணை முழிச்சுப் பார்த்து 
"ஊய்.. ஊய்..னு காத்துலக் கை வீசுவான். 

தூங்குன நேரம் தவிர்த்து 
எஞ்சுன நேரமெல்லாம் 
உழைச்சுக் களைப்பான். 

கதிரறுப்பு முடிஞ்சதுமே 
நெல் அளப்பு நடக்கையில 
பகலுல சூரியனாகவும், 
ராவுல சந்திரனாகவும் 
கழனியிலையே காஞ்சு கெடந்த 
புள்ளக்குட்டிக்காரனுக்கு 
ஒரு வல்லம் நெல்லுமணி சேர்த்தளக்க 
மனசில்லாதவ பெரிச்சி. 

வெயிற் காலத்துல தான் 
கெணறு ஈரமில்லாம வறண்டிருக்கும். 
பேரு பெத்த பெரிச்சிக்கோ 
மனசு எப்பவுமே வறண்டிருக்கும். 

பேரு பெத்த பெரிச்சிக்கு 
மனசெல்லாம் சாதியக் கட்டு. 

சந்தைக்குப் போய் வந்தாலே 
சனங்களைத் தொட்டுருப்போமுன்னு 
கூடையை திண்ணையில வச்சுட்டு 
தலையோட தண்ணி ஊத்தி 
தீட்டுக் கழுவி வீட்டுல நுழையுறவ, 
தவசி கொட்டகையிலையா 
சோத்துக் கஞ்சி குடிப்பா? 

"பண்ணைக்காரிச்சி நல்லாயிருந்தாத் தான் 
நாங்க எல்லாம் நல்லாயிருப்போம். 
கோவமிருக்குற எடத்துல தான் 
கொணமிருக்கும்"னு சொல்லுறவன் 
தான் கஞ்சிக் குடிச்சாலும், 
குடிக்காட்டினாலும், 

பெரிச்சிக் கிழவிக்கு பசியாற 
பெரிய தென்னை மரமேறி 
பிள்ளையாருக்கு அணிலைப் போல 
இளநீ சீவிக் கொடுக்குறப்ப, 
குடுக்கையில நிரம்பி வழியறது 
இந்த பள்ளனோட வியர்வை தான்னு 
ஒரத்து சொல்லத் தோணும். 

சொன்னா குடிக்காம வச்சிடுவான்னு 
எதுவும் சொல்லாம 
இளநீ குடிக்கிற பெரிச்சிய 
தாயைப் போல பார்த்திருப்பான். 

தன்னை வெட்டும் மனுசனுக்கும் 
நீரையே வார்க்கும் பாளைக்கு 
வேறொன்றும் தெரியாது













1 comment:

”தளிர் சுரேஷ்” said...

மிக அருமையான உணர்வுகள்! சிறப்பாக படம்பிடிக்கப்பட்ட கிராமத்து பண்ணையாட்களை பற்றிய கவிதை! சிறப்பு! வாழ்த்துக்கள்!

Blogger Widgets