Saturday, June 9, 2012

வரம்

---------- 


முன்னெப்போதும் பார்த்திராத
கருத்த களையான
பின்னிருக்கை பெண்ணொருத்தியின்
நானறிய ஏதுமற்ற
அலைபேசி உரையாடலில்
என் கவனம் குவிவதும்
என் சிகை திருத்தமும்
ஒரு மரத்திலிருந்து
ஒரு கனி கனிவதைப் போல
ஒரு இலை உதிர்வதைப் போல
தன்னியல்பாக நிகழ்கின்றன.
-------------------------------------------------------- 
பொது கழிவறைக்குள்
இரண்டு காலில் நுழைந்த
அரசின் செல்லக் குழந்தை
மல சலத்தில் புரண்டு
நான்குகால்களில்
பன்றியாக வெளியேறியது.

கை கழுவ நினைக்கிறாள்
கைப் பிடித்தவள்.
---------------------------------------- 

குழந்தைகளுடனான மகிழ் பொழுதுகளை
தின்று செரிக்கும் பூதங்களிடமிருந்து
சாமானியனின் இயல்பு வாழ்க்கையை
மீட்டெடுக்கும் லட்சியத்திலிருந்து
பின் வாங்கப்போவதில்லை நான்.
-------------------------------------------------------------- 

ஒரு மாறுதலுக்காக
வேண்டுதல் நிறைவேறினால்
கடவுளுக்கு மொட்டை போடலாம்.
வேண்டுமானால்
கடவுளையும் பலி கொடுக்கலாம்.
-------------------------------------------------- 

மிடி, சுடி, சல்வார்
மத்தியில் தாவணி.
அந்நிய தேசத்தில்
தாய்த் தமிழ் கேட்ட நெகிழ்ச்சி.
------------------------------------------- 

ஒரு நிறுத்தத்திலிருந்து
அடுத்த நிறுத்தத்தில் இறங்குவதற்குள்
பொறுமையிழக்கும் உன்னை
இந்த வாக்குப் பொறுக்கி அரசியலை
ஆயுள் முழுக்க பொறுக்கச் செய்தது
எதுவென ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்.
---------------------------------------------------------------- 

நீள், துகள், நீர்ம வடிவில்
மரணம் விற்கிறான் மன்னன்.
வாங்குகிறான் குடிமகன்.
----------------------------------------------- 

மின்சாரத்தை தொடுவதும்
மின்சாரமென சொல்வதும்
ஒன்று போலாயிற்று.
---------------------------------------- 

மிகச் சிறந்த குடிமகனின
பொன்னேடுகளில் பொறிக்கப் பட்டவன்
ஆகச் சிறந்த அடிமையாகவே
சனங்களின் மனதில் நிலைக்கிறான்.
---------------------------------------------------------- 

அரசியல் பிழைப்புவாதமே
தீவிரவாதத்தின் தூண்டுகோலெனில்,
தீவிரவாதம் களைய
பிழைப்புவாதிகளை ஒழிக்கலாம்.
---------------------------------------------------------- 

இறையாண்மையின் பெயரில்
நீ நிகழ்த்திய வெறியாட்டிலிருந்து தப்ப
தற்காப்பை மட்டுமே பின்பற்றியிருந்த
பயங்கரவாதி நான்.
சனங்களின் மீதான வெறியாட்டை
வெற்றிகரமாக்கியிருந்த
சனநாயகவாதி நீ.
------------------------------------------------------- 

உள்ளாடை விற்பனைக்கும்
கறிக்கடை விளம்பரத்திற்கும்
ஒப்பனை முகங்களின் உதவியை நாடும்
டாஸ்மாக் தமிழனிடம்
இன உணர்வைப் பற்றி பேசியபோது
கிலோ என்ன விலை என்றான்.
------------------------------------------------------------

தேசத்தை உலுக்கும் பிரச்சினைகளை
தூர வீசி ஐ.பி.எல் பார்.
அரசியல் எதிரிகளின் கைதுகளை கொண்டாடு.
அக்னியும் ஆகாஷும் ஏவினால் ஆட்டம் போடு.
நடிகனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்
பதவி கொடுத்தால் சுவரொட்டி ஒட்டி மகிழு.
தலையாயப் பிரச்சினைகளை
அவர்கள் கடந்து செல்ல
இவ்வாறு தான் நீங்கள் உதவ இயலும்.
------------------------------------------------------------------------ 

உங்கள் வயல்களில்
உங்கள் தேயிலைத் தோட்டங்களில்
உங்கள் மேய்ச்சல் நிலங்களில்
உங்கள் கடைகளில்
உங்கள் கட்டுமானப் பணிகளில்
உங்கள் தொழிற்சாலைகளில்
பெரியசாமியும் கந்தசாமியும்
காணாமல் போய்
அப்பா ராவும் துக்கா ராமும்
வந்தது எப்படியென ஒருமுறையேனும்
உனக்குள் நீ கேட்டுப் பார்.
அப்போது தெரியும் சேதி.
------------------------------------------------------------

கூட்டணி அரசு
சனங்களைப் பாதிக்கும்போதெல்லாம்
வாயைத் திறக்காது வாளாதிருந்தவன்
விரும்பிய இலாக்காக்கள் கிடைக்காதபோதும்,
ஊழல் வழக்கில் வாரிசுகள் வதைபடும்போதும்
ஆதரவை திரும்பப் பெற யோசிப்பான்.
சனங்கள் தான் யோசிப்பதே இல்லை.
---------------------------------------------------------------------- 

அதிகாரத்திற்கெதிரான எனது தாக்குதல்கள்
விரைவில் உனக்கு அலுப்பூட்டக்கூடும்.
சனங்களின் மீதான அதிகாரத்தின் தாக்குதல்களோ
அவர்களுக்கு எப்போதும் அலுப்பூட்டுவதில்லை.

அணு உலைக்கெதிராக 
சனங்கள் கொந்தளிக்கும்போது
மின்தட்டுப்பாடு  தீவிரமாவதும்

எரிபொருட்களின் விலையேற்றம்
சனங்களை வீதியில் திரள வைக்கும்போது
எரிபொருள் தட்டுப்பாடு திணறடிப்பதும்

அத்தியாவசிய பொருட்கள் மீதான
விலைவாசி அதிகரிக்கும்போது
சனங்களின் மீதான நெருக்கடி நெருக்குவதும்

ஊழலுக்கு எதிராக கும்பகர்ண உறக்கம்
கலையும் சனங்களின் மீது
சொத்துக் குவிப்பு வழக்கு அதிகரிப்பதன்

பின்னரசியல் புரியாதவர்களை
விட்டுத் தள்ளுங்கள்.
அவர்கள் வாய்க்கரிசி போட்டுக்கொண்டு
வாக்களித்திருக்கக் கூடும்.
---------------------------------------------------------------------- 

No comments:

Blogger Widgets