Saturday, June 30, 2012

கண்களை விற்று சித்திரம் வாங்கியவன்

 -----------------------------------------------------------------------------------------------------------



பெரிய மீன்களை விட்டெரிந்து
பெரும் முதலைகளை வலைகளுக்குள் வீழ்த்தியவன்
அதிகாரத்தின் மந்திரக்கோலை
அபகரித்து ஆட்டிப் படைத்தான்.
சரசுவதியும் லட்சுமியும்
அவர்கள் சொன்னதைச் சொல்லும்
கிளிப் பிள்ளைகளாகினர்.
அவர்கள் வீசும் ஒரு சில நெல்மணிகளுக்காகவும்
சின்னஞ்சிறிய பழத் துண்டுகளுக்காகவும்
அவர்களை வலம் வரப் பழகியிருந்தனர்.
இப்போதெல்லாம்
அவர்கள் முன்பைப் போலில்லை.
கூண்டைத் திறந்தே வைத்தாலும்
பறக்க எத்தனிப்பதில்லை.
அடிமைச் சகவாழ்வை அப்படியே ஏற்றிருந்தனர்.
கண்கெட்ட பின்னே சூரிய வணக்கம் போல்
காலம் கை மீறிய வேளை
மக்கள் நலன் மண்ணாங்கட்டியென
அரசன் அங்குசம் எடுத்தால்,

நவீன காமராசர்களிடம்
தங்கள் குழந்தைகளைப் பணம் கொடுத்து விற்றவர்கள்
முதலைகளின் வாக்கு வங்கியில்
கை வைக்கும் துர்சொப்பனம் வழங்குவர்.
எல்லாம் உன் கண் முன் தான் பறிபோயிற்று.
பார்வையாளன் வரிசையிலமர்ந்து
வாய் பிளந்து வேடிக்கைப் பார்த்தது நீ தான்.
அவர்களை மட்டும் கூண்டிலேற்றி நீ தப்பவியலாது.
செவிகளை விற்று அலைபேசி வாங்கிய நீ
பேசுவதற்கு ஒன்றுமில்லை.
போர்க்கால அடிப்படையில்
நீ செய்ய வேண்டியது எல்லாம் ஒன்று தான்.
அது
எல்லாவற்றையும் பொத்திக் கிடப்பதே!


 -








1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

<யோசிக்க வைக்கும் வரிகள் .... பகிர்வுக்கு நன்றி

Blogger Widgets