Thursday, June 14, 2012

வாழ்க்கை

-------------------------- 




பிணவறைக்குள் நுழைந்து பார்த்தவனின்
அகந்தையைக் கிழித்துப் போட்டு
நடைபிணமாக்கியது மரணம்.
---------------------------------------------------------------------- 

கணக்குத் தீர்க்கணும்.
தெளிந்த நிலையில் முடியாது.
குடித்துவிட்டு பேசிக் கொல்கிறேன்
நானும் அவனை.
------------------------------------------------------------

சொர்க்க ரதத்தின் சாரதி
வாழ்வதென்னவோ நரகத்தில்.
----------------------------------------------------- 

கோவிலுக்கு வழிபட வந்தவர்களின்
உயிரை எடுப்பதற்கு பதில்
கடவுள் அவர்களின் உடமையை
எடுத்துக் கொண்டதாகச் சொல்கிறார்கள்.
தன்னை நம்பி வந்தவர்களின்
உடமையை எடுத்ததற்குப் பதில்
பேசாமல்
உயிரையே எடுத்திருக்கலாம்.
----------------------------------------------------------------------- 

எங்கள் ஊரில்
எப்போதும் செயல்படாது
வேடிக்கைப் பார்ப்பவனை
கையாலாகாதவன் என்பார்கள்.
உங்கள் ஊரில்
அவனைக் கடவுள் என்கிறீர்.
------------------------------------------------------ 

அழகான அக்காக்களின்
உடன் பிறந்தவர்கள் மீது பொழியும்
அன்புமழையானது
விலாங்கு மீனுக்கு வீசும் வலை
என்பதைக் காலம் தான் உணர்த்தும்.
--------------------------------------------------------------- 

பெருந்திணைப் பொழுது.
அணையாக்காமம்
கொழுந்து விட்டெரிந்தது.
தீக்கிரையான வீட்டிலிருந்து
எழும்புகிறது கருகிய வாசனை.
----------------------------------------------------- 

பாசிப் படிந்த பழைய ஓட்டுப் படிப்புரை வீடு
புனரமைப்புக்காக இடிக்கப்படுகையில்
மாமாவும் அத்தையும்
ஏன் அழுகிறார்கள் என
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த
என்னிடம் சின்னக்குட்டி கேட்டாள்.
அவர்கள் இடிந்து கொண்டிருக்கிறார்கள்.
வலி தாங்காமல் அழுகிறார்கள் என்றேன்.
சின்னக்குட்டியும் சேர்ந்து அழுதாள்.
--------------------------------------------------------------------------- 

கையூட்டு வாங்குகிற காவலனோட
பரம்பரையையே இழுத்து திட்டுகிற
சமூக நீதிப் போராளி தான்
கையூட்டு வாங்கலேனாலும்
பிழைக்கத் தெரியாதவன்
என்றும்  திட்டுகிறான்.
---------------------------------------------------------   









Blogger Widgets