Monday, July 2, 2012

காலப் பெட்டகம்

-------------------------------------------------------- 




நான்கு பக்கச் சுவர்கள் 
ஒழுகும் மேற்கூரை 
ஒரு சிதைந்த கரும்பலகைக்குள் 
அழியாமல் பாதுகாக்கப்பட்ட 
காலாதிகால நினைவுக்குறிப்புகளை 
மனக்கோழிக் கிளறிக் கலைக்கிறது. 
----------------------------------------------------- 

எல்லா ஊரிலும் கிடைக்குமெனினும்
தானே செய்த அரிசி முறுக்கை 
அசலூரில் தங்கிப் படிக்கும் 
தன் செல்லக்குட்டிக்கு 
யார் தலையிலேனும் 
சுமத்தியனுப்பும் அம்மாக்கள் 
இன்னுமிருக்கவே செய்கிறார்கள். 
---------------------------------------------------------------- 

குடும்பம், சமூகம் புறமொதுக்கி 
அறுபதும் முப்பதுமென 
தொண்ணூறு தினங்களையும் 
முயங்கி சுருண்ட நாய்க்காதல்கூட 
கடவுளின் காதலளவு குமட்டவில்லை. 
-------------------------------------------------------------------- 

என்ன தகிடுதத்தம் செய்தேனும் 
ஆட்சியதிகாரத்தை பிடிக்க தீர்மானித்தவன் 
மிகவும் பின்தங்கிய தொகுதி எதுவென 
பூதக்கண்ணாடி வழி தேடத் தொடங்குகிறான். 
------------------------------------------------------------------------------ 

தாழ் தளம், சொகுசு 
விரைவு, மிதவை என்பதெல்லாம் 
கட்டண உயர்வுக்காகத் தானன்றி 
சனங்களின் பயன்பாட்டுக்கு அன்று.  
-------------------------------------------------------------- 

துரியோதனர்கள் துகிலுரித்ததால் 
நதிப் பெண் 
அழவும் கண்ணீரின்றி 
அம்மணமானாள். 
-------------------------------------------------------- 

யாரையும் கேட்காமல் 
அமரும் இருக்கையினளவு குறைத்து 
தன் வருவாயைப் பெருக்கிய 
பேருந்தின் உரிமையாளன்,  
எல்லோரும் கேட்டுக்கொண்டும் 
பயணக் கட்டணத்தை  
குறைக்க மறுக்கிறான். 
----------------------------------------------------------------- 

எல்லோருக்கும் இரங்கற் பா எழுதி 
நீடூழி வாழ்பவனுக்கு 
ஒரு இரங்கற் பா எழுதவிழைந்த 
எனக்கும் ஒரு இரங்கற் பா 
எழுதி வைத்திருக்கிறான் 
தேதி மட்டும் குறிப்பிடாமல்.  
------------------------------------------------------------

வறுமைக்கோட்டின் வரம்பை 
முப்பத்தி இரண்டென வரையறுத்த 
மா பாவிகளுக்கு 
முப்பத்தி இரண்டு கொடுத்து 
ஆசுவாசம் அடையலாம். 
---------------------------------------------------- 

சாமானியனுக்குண்டான 
எல்லா பொறுப்புகளும் எனக்குமிருக்கிறது. 
சாலையில் எதிர்வரும் 
மாண்புமிகு. அரசு குடிமகன் 
மனம் வைத்தால் 
எச் சேதாரமும் இன்றி கூடடைவேன். 
எல்லாம் அவன் செயல். 
---------------------------------------------------------------- 

அதிகாரத்தின் மீதான 
ஊழல் வழக்குக் கோப்புகளை தின்று  
தன் கோரநாக்கை உள்ளிழுத்துக்கொண்ட  
மராட்டிய மாநிலக் கொடுந்தீயின் 
ஆதிமூலம் குறித்து ஆராய்வதை 
சமூகம் நிறுத்திக் கொண்டால், 
அக் கோரத் தாண்டவம் 
மாநிலம் முழுதும் பரவாமல்  
தலைமை செயலகத்தோடு நின்று கொள்ளும். 
------------------------------------------------------------------------- 

வெட்டுப்பட்ட கைக்கு 
சுண்ணாம்புக் கொடாத காவலதிகாரி 
முடிக்கப்படாத வழக்குகளுக்கு 
பழங்குற்றவாளிகளை 
பொறுப்பாளியாக்கும் போதும், 
வன்தாக்குதலைக் கட்டவிழ்க்கும் போதும் 
கர்ணப் பிரபுவை விஞ்சுகிறான். 
--------------------------------------------------------------------------------- 

ஒப்பீட்டளவில் 
குறைந்தபட்ச அயோக்கியத்தனங்கள் 
கடவுளுக்கு ஏற்புடையதல்ல. 
------------------------------------------------------- 

வாய்ப்புக் கிடைக்காததால் 
நல்லவனாக நீடிக்கிற அயோக்கியர்கள் 
மாபெரும் தலைவர்களாக வீற்றிருப்பது 
சனநாயகம் 
தேசத்திற்கு வழங்கிய வெகுமதி. 
---------------------------------------------------------- 

அடிதடி, கை கலப்பின் பொருட்டு  
காவல் நிலையம் வந்த 
வாதியும், பிரதிவாதியும் 
ஒரு வழியாகச் சமாதானமடைந்தனர். 

பேரம் படியாததால் 
காவலதிகாரி  
சமாதானமடையவில்லை. 
-------------------------------------------------------- 

















2 comments:

”தளிர் சுரேஷ்” said...

மிக அருமையான கவிதைகள்! வாழ்த்துக்கள்!

Agarathan said...

நன்றி சுரேஷ் .....

Blogger Widgets