Friday, November 4, 2011

என் சமூகம் யாருக்குப் பின்னால் போகிறது?

 ---------------------------------------------------------------------------------------



சமூகம் சார் சிந்தனையாளர்களுக்கு, 

                   தமிழ் வணக்கம். பேச வேண்டியதைப் பேசாமலும், பேசக்கூடாததைப் பேசியுமே வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவிட்டு விட்டோம். கொஞ்சம் சமூகம் சார்ந்து, மக்களின் எதிர்காலம் கருதி கொஞ்சம் பேசுவோமா? இப்பொழுது பேசாமல்  எப்போது தான் பேசுவது என் மக்களே?    


             


கடந்த ஆட்சியாளர்களின் சுயநலப் போக்கு, மக்கள் விரோத செயல்பாடுகள், குடும்ப ஆதிக்கம், தமிழின அழிப்புக்கு துணை போன கேடுகெட்ட பதவி அரசியல், சனநாயகம் என்ற பெயரில் நடந்து கொண்டிருந்த மன்னராட்சி மனோபாவங்கள், குடிக்கும், திரைப்படக் கேளிக்கைக்கும் முக்கியத்துவம் அளித்து மக்களின் மூளையை மழுங்கச் செய்தது, எங்கெங்கு காணினும் பெருக்கெடுத்தோடிய ஊழல், இலவசங்கள் கொடுத்து மக்களை கையேந்த வைத்து பிச்சைக்காரர்களாக்கியது, உலகுக்கே சோறு போடும் விவசாயிகளை நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் வாயிலாக சோம்பேறியாக்கியது, விவசாய நிலங்களைக் கூறு போட்டு விற்க அனுமதித்து விண்ணுயர பன்னாட்டு, உள்நாட்டுப் பணக்காரர்களை வர்த்தகம் செய்ய அனுமதித்தது, ஒரு மக்கள் நல அரசு தன் குடிகளுக்கு கல்வியையும், மருத்துவத்தையும் இலவசமாக வழங்கி நல்ல சமுதாயத்தில் அவர்கள் வாழும் உரிமையை வழங்குவதை விட்டு, தனியாரிடம் கல்வியையும், மருத்துவத்தையும் தாரை வார்த்தது என்று ஒரு காட்டாட்சி நடந்து கொண்டிருந்தது. 


           

 துதி பாடியவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவியும், எதிர்ப்பவர்களை என்ன விலை கொடுத்தேனும் வாங்குவது, அதற்கும் மசியாதவர்களுக்கு வாரியங்களை அள்ளி வழங்குவது, மேல் சபையை மீண்டும் உருவாக்கி அதில் இடந்தருவது, வழிக்கு வரவில்லை எனில்  தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற கூட்டணி பாதுகாப்பு சட்டத்தை ஏவி எதிர்க் கருத்தாளர்களை சிறையிலடைப்பது, திமிறினால் அவர்களைக் கொன்று நடுத்தெருவில் வீசுவது, ஊடகங்களை தன் கையடக்கத்தில் வைத்துக் கொண்டு தனக்கு சாதகமான செய்திகளை மட்டுமே மக்களுக்கு வழங்குவது என்று தமிழகத்து ராசபக்சேவாக அதிகாரத்தில் வீற்றிருந்த கொடுங்கோல் ஆட்சியை  வீழ்த்த தக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர்.  

            தேர்தல் திருவிழா வந்தது. ஆளும் அதிகார வர்க்கமும், இழவு காத்த கிளியாக நம் வாக்கை அறுவடை செய்யக் காத்திருந்த எதிர்க் கட்சியும், இவைகளின் முதுகில் சவாரி செய்தே தன்னை வளப் படுத்திக் கொள்ளும் இன்ன பிற மழைக்காலக் காளான்களும் காந்தி தேசக் கோவணாண்டிகளை       பண மழையில் நனைத்தன.
            கூரையைப் பொத்துக் கொண்டு பெய்த பண மழையில் நனைந்தவாறு மக்கள் வீதிகளில் வலம் வந்தனர். கடவுள்கள் வீதிகளில் கரை வேட்டியோடு வாக்குப் பிச்சை எடுத்தனர். உங்களுக்கு உழைக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுங்கள் என்று கெஞ்சினர். பெத்த அப்பா, அம்மாவுக்கு, பிள்ளைகளுக்கு கஞ்சி ஊத்தாதவன், ஊருக்கு உட்காரவைத்து கூழ் ஊற்றுவதாக மன்றாடியபோது எதிர் கேள்வி எதுவும் கேட்காமல் மக்கள் இரசித்தனர். 

         எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற மன நிலையில் காட்டாட்சியை விரட்ட தருணம் பார்த்திருந்தவர்களுக்கு தேர்தல் ஒரு வாய்ப்பை வழங்கியது. பெரிய தீமையை விரட்டி விட்டு, சிறிய தீமையை ஆட்சி பீடத்தில் அமர வைத்தனர்.  அதுதானே சனநாயகம் இந்த சுதந்திர நாட்டின் அடிமைகளுக்கு நடத்தி வந்திருக்கும் பாலபாடம். அதை அடியொற்றியே அவர்களும் தங்கள் சனநாயகக் கடமையாற்றிவிட்டோம் என்ற மிதப்பில், அரசு மது பானமருந்தவும், தொலைகாட்சி, திரைப்படங்களில் கேளிக்கைகளில் மூழ்கியும் காணாமல் போயினர்.   

           

இந்த காந்தி தேசத் தமிழன் சோறு தின்னாமல் இருந்தாலும் இருப்பான், தொலைகாட்சி, திரைப்படம் பார்க்காமலும், மது அருந்தாமலும் இருக்க மாட்டான். அப்படி இருக்கப் போய்த்தானே, 2009 மே 18 அன்று கூப்பிடு தூரத்தில், தன் மொழி பேசிய குற்றத்திற்காக  தன் ஒப்புதலின்றி தன் வரிப்பணம் ஆயுதமாகச் சென்று தன் மக்களின் தலையில் கொத்து குண்டுகளாக வீழ்ந்து சிதறடித்து, ஒரு தேசிய இனம் அழித்தொழிக்கப் பட்டபோது எதுவுமே நடவாதது போல, மூவர்ணம் முகத்தில் பூசிக்கொண்டு தொலைக்காட்சியில் இந்திய-இலங்கை மட்டைப் பந்து போட்டியையும், மானாட மயிலாடவும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.              உலகின் வேறு எந்த ஒரு இனமும் இந்த இழிசெயலைச் செய்திருக்குமா? காக்கைக்கூட தன் கூடு இருக்கும் மரத்தில் கொம்பு வெட்ட ஒருவன் ஏறிவர அனுமதிக்காது. ஆறறிவு என்று சொல்லிக் கொண்டு திரியும் மூளைச் சாவடைந்த சதைப் பிண்டமாகவே தானே நாம் வாழ்கிறோம்? சரி, இதைப் பற்றி பேசுவதாக இருந்தால் இந்த யுகம் போதாது. இதைப் பற்றி பிறிதொரு கட்டுரையில் விரிவாக பேசலாம். 
            கடந்த ஐந்தாண்டுகால காட்டாட்சியைத் தூக்கி எறிய காத்திருந்தவர்கள், அந்த ஐந்தாண்டுகாலமும், எதிர்க் கட்சியாக எந்த ஒரு ஆக்கப் பூர்வமான பணியையுமே செய்யாமல், என் பணி கொடநாட்டில் ஓய்வெடுத்துக் கிடப்பதே. உங்கள் பணி என்னை ஆட்சிப் பீடத்தில் தூக்கி வந்து அமரவைப்பதே என்று இறுமாப்புடன் காத்திருந்த எதிர்க் கட்சியைத் தானே அதிகாரத்தில் அமர்த்தி அழகு பார்த்தார்கள்? ரோம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்ததாக சொல்வார்களே அப்படித்தானே, இன்றைய ஆட்சியாளர்கள் அன்று இருந்தார்கள். கொடுங்கோலாட்சிக்கு எதிரான அலை தானாக எதிர்க் கட்சியை ஆட்சி பீடத்தில் அமர்த்தியது. 


           


எவ்வளவு நம்பிக்கையோடு புதிய ஆட்சியை எதிர்பார்த்திருப்பான் தமிழன். ஆட்சிக்கு வந்தவுடன் தடாலடியாக அரசியல் செய்கிறேன் பேர்வழி என்று, சமச்சீர்கல்வி விவகாரத்தில் தனியார் பள்ளிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஆதரித்து தனக்கு வாக்களித்து வாக்களித்தே தேய்ந்து போன கை ரேகைகளுக்கு சொந்தக்காரர்களான அடித்தட்டு மக்களை தண்டிக்க முடிவெடுத்தது, பிறகு தன்னார்வத் தொண்டு அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பொது நலம் சார்ந்தவர்கள், கல்வியாளர்கள், சான்றோர்களின் கருத்து எல்லாவற்றையும் புறமொதுக்கி, நீதி மன்றம் குட்டு வைத்தபின் தன் நிலைப் பாட்டை மாற்றிக் கொண்டது, 

            மூன்று தமிழர் உயிர் காக்க முதலில் அதிகாரம் இல்லை என்று கூறிவிட்டு, மறுநாளே தன் கருத்தை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மாற்றிக் கொண்டதாகவும், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான இடிந்தகரையில் உண்ணா நிலையிலிருக்கும் மக்களின் போராட்டத்திற்கு எதிராக அணு உலைக்கு ஆதரவாக முதலில் பேசிவிட்டு, மறுநாளே மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்ததாகச் சொன்னபோது மக்களின் குரலுக்கு செவி சாய்க்கும் ஒரு மக்கள் நல அரசு வந்ததெனக் கொண்டாடினர். 
            இப்போது உள்ளாட்சி தேர்தலை செம்மையாக அறுவடை செய்துவிட்டு, மூன்று தமிழரின் கருணை மனுக்களை நிராகரிக்க நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்ததும், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு பாதுகாப்பை பலப் படுத்துவதும் புரிந்து கொள்ள முடியாமல் விழி பிதுங்குகிறான் தமிழன்.
            பஞ்சமா பரதேசிகளான வாக்காளப் பெருங்குடி மக்களுக்கு படுக்கப் பாயில்லாத வேளையில், மக்களை ஆள்பவர்களுக்கோ 500 கொடிகளுக்குமேல் செலவு செய்து புதிய சட்டசபையா என மக்கள் உள்ளுக்குள் கருவிக்கொண்டிருந்த வேளையில், சட்ட சபையை பழைய செயின்ட் ஜார்ஜ்  கோட்டையிலேயே நடத்துவதாகவும், புதிய சட்டசபை கட்டிடத்தை மருத்துவக் கல்லூரிக்கு வழங்க முடிவெடுத்திருப்பதாகவும் புதிய ஆட்சியாளர் சொன்னபோது மக்கள் மனமுவந்து ஆதரவளித்தனர். பழைய தீமையின் வாழ்நாள் ஆவலாக அந்த புதிய கட்டிடம் இருந்ததாலேயே அதை மாற்றியிருப்பது எல்லா குடிகளுக்கும் தெரியும். தனியாகச் சொல்லத் தேவையில்லை.
             அப்புறம் முந்தைய ஆட்சியில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்குக்கு தனிப் பிரிவு தொடங்கி வழக்கு தொடுத்து பழையத் தீமைகளை களையெடுக்க நடவடிக்கையைத் தொடங்கியபோது மக்கள் அந்த நடவடிக்கையை கண்டு இரசித்தனர். ஏனெனில் முந்தைய ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் கொள்ளை அடித்தது நிதர்சனமான உண்மை. சந்தையில் அடித்ததற்கு சாட்சி எதற்கு? ஆட்சியாளர்கள் பழி தீர்த்துக் கொண்டபோது மக்களும் பழி தீர்த்துக் கொண்டார்கள். 



              


இப்போது அறிவுசார் மக்களின் அறிவுக் களஞ்சியமாக போற்றப் படவேண்டிய அண்ணா பொது நூலகத்தை மருத்துவமனையாக மாற்ற வேண்டிய அவசியத்தை மக்கள் வினவுகிறார்கள். உங்களுடைய தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு அரசியலை எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். மக்களை சிந்திக்க வைக்கிற தலைமுறையாக மாற்ற வழி வகுக்கும் நூலகங்களில் கைவைப்பது ஏற்கக்கூடியதல்ல. அரசு மதுபானம் மூளை முடுக்குகளில் எல்லாம் விற்கப்படும் சூழலில் அறிவு சார் களஞ்சியங்களை முடக்க நினைப்பது , இந்த மக்கள் சிந்திக்காது இருக்கும் வரைதான் வாக்கு பொறுக்கி அரசியலில் இவர்களை போன்றவர்கள் கோலோச்ச இயலும் . மக்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் இவர்களின் கடையில் வியாபாரம் ஆகாது என்பதாலும் , எதிரியை வெட்ட முடியாவிட்டாலும் பரவாயில்லை அவர்களின் மலத்தையவது வெட்டுவேன் என்பதை போல இருக்கிறது. முந்தைய ஆட்சி அரசு நூலகங்களில் காலச்சுவடு திங்கள் இலக்கிய இதழை, அவற்றின் கடுமையான ஆளும்கட்சி மீதான விமர்சனங்களுக்காக தடை செய்தபோது தமிழ் சமூகம் உள்ளுக்குள் பொங்கி தனது எதிர்ப்பை பதிவு செய்தது வரலாறு.  

               ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் ஆசியாவின் மிகப் பெரிய நூலகத்தை, அறிவு சார் களஞ்சியத்தை தன்னுடைய சுய அரசியல் விருப்பு,  வேருப்புகளுக்குப் பலியிடுவது கடுமையான கண்டனத்திற்குரியது. முந்தைய ஆட்சியின் தீமை தெரிந்தோ, தெரியாமலோ செய்த தவறு இந்த புத்தகப் புதையல்களை மக்களுக்குக் கையளித்தது. அறிவு சார் கருத்துக்கள் மக்களைச் சிந்திக்க வைத்துவிட்டால், தம்மைப் போன்றவர்கள் ஆட்சி அதிகாரத்தை பற்றி இனி நினைக்க முடியாது என்றும், இந்த அழுகிப்போன அமைப்பை மாற்றக் கோரி, மக்கள் அறிவுப் புரட்சியில் இறங்கி விடுவார்கள் என்றும் நினைத்திருக்க வாய்ப்பிருப்பதாகவேப் படுகிறது. புத்தகங்கள் சமூகத்திற்கான அறிவுப் புதையல்கள். அவற்றை புதைத்துவிட்டு அரசியல் செய்பவர்க்கு ஒன்று மட்டும் நினைவிலிருக்கட்டும்.                                                  

அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும்.            

அரசியல்வாதி அடுத்த தேர்தலைப் பற்றி  சிந்திக்கிறான். தலைவன் அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திக்கிறான்.

நீங்கள் யாரென்பதை உணர மக்களுக்கு வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி.     




No comments:

Blogger Widgets