Saturday, November 12, 2011

அணுத் திமிர் அடக்கு!
             

               நாள்தோறும் செய்தி ஊடகங்களில் இந்திய தேசத்தின் முக்கியப் பிரச்சினையாக அணுமின் உலைகள் தொடர்பான செய்திகள் வலம் வருவதை நம்மால் அவதானிக்க முடிகிறது. அணுமின் உலைகள் நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காகவும், எதிர்கால மின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவுமே ரசியாவின் நவீன தொழில்நுட்ப உதவியுடன் மிகவும் பாதுகாப்பான முறையில் நிறுவப்படுவதாக மக்கள் காவலர் அறைகூவல் விடுக்கிறார். பிறகேன், இந்த அன்றாடம் காய்ச்சிகள் ஒரு சிறு கும்பலாகத் திரண்டு வந்து கூடங்குளம் அணுமின் உலைப்பணியாளர்களைச் செயலாற்ற விடாமல் தடுத்து விரட்டுகிறார்கள்? 
              


                  


                   ஒரு நாடு வளர்ச்சியடைவதைத் தடுக்க, அந்நாட்டு மக்களே தடையாக இருப்பது என்பது என்ன வகையான மனநிலை? கைக் குழந்தைகளுடன் கலந்துகொண்டு, பலநாட்கள் கொடும் பட்டினியில் உண்ணா நிலை ஏன் மேற்கொள்ள வேண்டும்? உண்ணாநிலை என்பது சில நாட்களுக்கு முன்பு வரை வலிமையான ஆயுதமாக பார்க்கப் பட்டது. அவைகள் புதிய வரலாற்றை சமைக்கவல்லதாக இருந்தன. 
                ஈழத்தில் திலீபன் மருத்துவ படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, இனவிடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக உண்ணாநிலை மேற்கொண்டு பனிரெண்டு தினங்களுக்குப் பிறகு ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் உயிர்த் தியாகம் செய்தது, நர்மதை நதிக்கு குறுக்கே அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களோடு இணைந்து சமூக ஆர்வலர் பகுகுணா உண்ணாநிலை மேற்கொண்டு ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்த்தது, மணிப்பூரில் சிறப்புக் காவல் சட்டத்தை திரும்பப் பெறவேண்டி கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இரோம் சர்மிளா உண்ணாநிலை மேற்கொள்வது, நிகமானந்தா என்பவர் கங்கை நதியை சுத்தப் படுத்த வேண்டி இரண்டு திங்களுக்கு மேலாக உண்ணாநிலையிருந்து உயிர் துறந்தது என்று சில உண்ணாநிலைகள் நம்மை நெகிழ்வடைய வைத்த காலம் போய், இன்று நடக்கும் சில உண்ணாநிலைகள் நம்மை வெட்கி தலை குனிய வைக்கின்றன. 
                


                ஈழப் போரை நிறுத்தக் கோரி தமிழினத் தலைவர் என தன்னைத் தானேக் கூறிக்கொண்டவர் மேற்கொண்ட உலகப் புகழ் மூன்று மணிநேர உண்ணாநிலை, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் குசராத் முதல்வர் நரேந்திர மோடியின் உண்ணாநிலை, அவருக்கெதிராக காங்கிரசு முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலாவின் உண்ணாநிலை, ஊழலுக்கெதிராக அண்ணா அசாரேவின் பின்திரளும் மதவாதிகளின் உண்ணாநிலை, பாபா ராம் தேவ் என்ற யோகா தலைவரின் உண்ணாநிலை என்று உண்ணாநிலைகள் மதிப்பிழந்து கொண்டிருக்கும் காலத்தில், 
               தமிழகத்தின் தென்கோடியில் கூடங்குளம் என்ற மீனவ கிராமத்தில் அரசியல் கட்சிகளைத் துணைக்கு அழைக்காமல் தன்னிச்சையாக அணுமின்  உலைக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்று முகிழ்த்திருப்பது என்பது கவனிப்பிற்குரியதாகப் படுகிறது. 
              ஆட்சியாளர்கள் அணு உலை அமைப்பதற்கான காரணங்களென ஆயிரம் சொல்கிறார்கள். ஒரு டன் நிலக்கரி அல்லது எண்ணெய் தரக்கூடிய மின் ஆற்றலை ஒரு கிராம் யுரேனியம் தருகிறது. தற்போது மின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளதெனவும், வருங்காலங்களில் இன்னும் அதிகரிக்குமெனவும், அவற்றை ஈடுகட்ட காற்றாலை, நீர், நிலக்கரியினாலும் முடியாதெனவும், வரும்காலங்களில் எண்ணெய், நிலக்கரி போன்ற இயற்கை ஆதாரங்கள் தீர்ந்துவிடுமெனவும், இது இந்திய மக்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்டுவிடும் எனவும், இந்த ஒப்பந்தம் நம்மை அமெரிக்காவுக்கு அருகில் இட்டுச் செல்கிறதெனவும் கட்டியம் கூறுகிறார்கள். 
           
  
                           நீர்மின் நிலையம் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலை ஒரு யூனிட்டுக்கு ரூ.2 எனில், அனல் மின் நிலையம் வழி உற்பத்தியாகும் மின்சாரம் யூனிட்டுக்கு ரூ.2.50 எனில், அணு மின்சாரம் யூனிட்டுக்கு ரூ.7.50 ஆக இருக்கும். இவ்வளவு அதிகமாக விலை கொடுத்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலையும் அதிகரித்து விடும். 
             இவர்களின் வாக்குறுதிக்குப் பின்னால் நமக்கு எழும் சந்தேகங்களுக்கு இந்திய சட்டங்கள் போதுமான விளக்கமளிப்பதாக இல்லை என்பது தான் ஏன் எனப் புரியவில்லை. அணுக் கொள்கை சம்பந்தமாக எந்த கேள்வியும் கேட்க நாடாளுமன்றத்திற்கே அதிகாரம் கிடையாது. பிரதமராக ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பது, நம் நன்மை கருதியே முடிவெடுக்குமென நாம் நினைத்துக் கொள்ளவேண்டும். அணுஉலை குறித்து குடிகள் யாருக்கும் தெளிவு படுத்தவேண்டிய அவசியம் உலகின் மிகப் பெரிய சனநாயகத்திற்கு கிடையாது. நாட்டின் பாதுகாப்பில் யாருக்கும் எந்த ஐயமும் எழக்கூடாது. அவர்கள் சரியானதைத் தான் நினைப்பார்கள் என நம்பித் தொலைக்க வேண்டும். (போபர்ஸ் பீரங்கி, நீர்மூழ்கி ஊழல் என்று எதுவும் இப்போது உங்கள் கனவில் வரக்கூடாது). 
              அணு ஆயுத வல்லரசான அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளே அணு உலைகளை புதியதாக நிறுவுவதில்லை என முடிவெடுத்து செயல்படும்போது, அவர்களை அடியொற்றியே செல்லும் இந்திய ஆட்சியாளர்கள் கிஞ்சித்தும் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்காமல் அணு அணு என அலைவது ஏன்? பாதுகாப்பு கெடுபிடிகளில் மிகவும் முன்னோக்கி சென்று கொண்டிருக்கும் வல்லரசு நாடுகளே இயற்கை சீற்றங்களை கணிக்க இயலாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள். பாதுகாப்பு விசயத்தில் மிகவும் மெத்தனமான ஒரு தேசத்தின்  கையில் இருக்கும் அணு உலைகள் பைத்தியக்காரனின் கையில் கூர்தீட்டப்பட்ட கத்தி இருப்பது போன்றது. 

            


                   ஜப்பான் புகுசிமோவில் தற்போது நிகழ்ந்த இயற்கை சீற்றத்திற்கு முன் மனித மதிப்பீடுகள் தவிடு பொடியாவதும், அமெரிக்காவில் மூன்று மைல் தீவில் நிகழ்ந்த அணு உலை விபத்தும், ரஷ்யாவின் செர்னோபிலில் ஏற்பட்ட மிகப் பெரிய அணு விபத்தும் மனித குலத்தை தலைமுறை தாண்டி பாதித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தும் இவர்கள் திருந்தவில்லை எனில் அவர்களை இம்முடிவெடுக்க வைக்க எது தூண்டுகோலாக இருந்து இருக்கும்? ஒரு தேசத்திற்கு வளர்ச்சி முக்கியம் தான். ஆனால், அந்த வளர்ச்சியானது  தன் குடிமக்களை அழிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. 
              ஐம்பது ஆண்டுகள் பயன்பாட்டுக்காக கட்டப்படும் அணுமின் உலைகள் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டு வருகிறது. ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு அணுக் கழிவுகள் அங்கேயே பூமிக்கடியில் புதைக்கப் பட்டிருக்கும். அல்லது ஆழ்கடலுக்குள் கொட்டப்படும். சாதாரணமாக ஒரு கட்டிடத்தின் ஆயுள் ஐம்பது ஆண்டுகள் என நிர்ணயிப்படும். அணு உலைக்கென கட்டப்படும் கட்டுமானங்கள் 200 ஆண்டுகள் தாக்குபிடிக்கும் என்றே வைத்துக் கொண்டாலும், பூமிக்கடியில் உள்ள குமுறிக்கொண்டிருக்கும் அணுக் கழிவுகள் தன் வீரியத்தின் அளவில் பாதியைக் குறைத்துக் கொண்டாலும் 40000 ஆண்டுகள் வரை உயிர்ப்புடன் இருக்குமாம். இந்த தேசத்தில் அணு உலைகளில் பலமுறை சிறு சிறு விபத்துக்கள் நிகழ்ந்திருப்பதாகவும், அவற்றை அணுசக்தி நிர்வாகம்  மூடி மறைத்து விட்டதாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வருவதை கேட்கமுடிகிறது. 
             இயற்கைப் பேரிடர்கள் அதிகம் நிகழும் கடலோரங்களில் இந்த அணு உலைகளை நிறுவி விட்டு நிம்மதியாக நாம் உறங்க முடியாது. சிறு விபத்தென்றாலும் ஏற்படும் அணுக் கசிவில் மீனவ சகோதரன் தான் தன் தலைமுறையை முதலில் இழப்பவனாக இருப்பான். திட்டம் தீட்டியவர்கள் பாதுகாப்பாகவே இருப்பார்கள். நீங்கள் இந்த இடத்தில் போபால் விசவாயு விபத்தை நினைத்து கொள்வது தவிர்க்க முடியாதது. 
                தமிழன் இவர்களுக்கு சோதனைக் கூட எலியாகவே தெரிவான் போலிருக்கிறது. தமிழன் இப்பிரச்சினையை தம்மை மட்டுமே பாதிப்பதாகப் பார்க்கவில்லை. ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கு எதிராகவே பார்க்கிறான். ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்காகவும் சேர்த்து தான் உண்ணாநிலை இருக்கிறான். ஆனால், மத்திய, வடக்கு பகுதி வாழ் மக்களோ அது எங்கோ திருநெல்வேலியில் கடைக்கோடியில் நடக்கும் பிரச்சினையாகவே அணுகி வருவதுதான் துயரமாக இருக்கிறது. 
             அமெரிக்கா பொருளாதார அடியாளான ஜான் பெர்கின்ஸ் சொல்வதை கொஞ்சம் கேட்டால் நம்மை சுற்றி என்ன நடக்கிறதென்பதை கொஞ்சமேனும் உணர முடியும். 
              "அமெரிக்க வணிக நலன்களை முன்னிறுத்தும் இந்த வலைப் பின்னலின் பகுதியாக மாறுவதற்கு உலகத் தலைவர்களை தூண்டுவது; முதலில் இந்த தலைவர்கள் மீள முடியாத கடன் வலையில் சிக்கிக் கொள்வார்கள். அது அவர்களது விசுவாசத்தை உறுதிப்படுத்தும். பின்பு நமது அரசியல் பொருளாதார இராணுவத் தேவைகளுக்காக அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு மாற்றாக, தங்கள் மக்களுக்குத் தொழில் பூங்காக்கள், தொழில் வளாகங்கள், மின்சக்தி நிலையங்கள், விமான நிலையங்கள் அமைத்துத் தருவதன் மூலம் தங்கள் நிலையைப் பலப்படுத்திக் கொள்வார்கள். அமெரிக்க பொறியியல், கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளர்கள் கொள்ளை இலாபம் ஈட்டுவார்கள்." 

             


                       உலகின் 193 நாடுகளில் அமெரிக்கா தன் நாட்டின் பழமையான கப்பலிலுள்ள மிக மோசமான  ஆஸ்பெட்டாஸ் கழிவை கடலில் கொட்ட இந்தியா தான் சரியான நாடு என தெரிவு செய்து அனுப்பி வைத்தான். உலகின் சர்வதேச குப்பை தொட்டியாக மாறிக் கொண்டிருக்கும் ஒரு தேசம் தன்னை தானே வல்லரசு எனக் கூறிக் கொண்டு தன் தலையில் தானே மண்ணை வாரி எறிந்து கொண்டிருக்கிறது. 
             இந்த ஆட்சியாளர்கள் அணு உலையை தவறியும் கூட கார்பரேட்டுகள், ஆட்சியாளர்கள் வாழும் பகுதிகளில் அனுமதிப்பதில்லை. என்ன செய்ய, இந்த தேசம் தன் வாழ்நாள் முழுக்க அணு அணு என அழிவு சக்தியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு மூளையைத் தானே முதல் குடிமகனாகப் பெற்றிருந்தது. கூடங்குளம் அணுமின் உலையை ஆய்வு செய்வதாக வந்த முன்னாள் முதல் குடிமகன் போராட்டக் காரர்களை சந்திக்கப் போவதில்லையென சொல்லமுடிகிறது. இவருடைய கால கட்டத்தில் தான் இவருடைய இனம் கூப்பிடு தூரத்தில் கொத்துக் கொத்தாகக் கொன்றழிக்கப் பட்டபோது பேசாமடந்தையாக வாழ்ந்து கனவு காணச் சொன்னார்.  சாத்தானை வேதம் ஓத சொல்கிறார்கள். 
அதுவும் தன் பங்குக்கு வேதம் ஓதிச் சென்றுவிட்டது.   

"போராட்டக்காரர்கள் 
இனியும், 
கேள்வி கேட்பார்களேயானால்,  
அடங்கிப் போகவில்லையானால்,  
பட்டினிப் போராட்டத்தை 
தொடர்வார்களேயானால், 
இந்திய இறையாண்மை 
தன் கடமையைச் செய்யும். 
வாழ்க சனநாயகம்!"                  
                   ----------------------------------------------------- 
                     - அகரத்தான். 
-----------------------------------------------------------------------------------------   
பாவலர் அறிவுமதி அண்ணனுக்கு நன்றி! 
கட்டுரைக்கான தலைப்பு அண்ணனின் கவிதையே! 
-------------------------------------------------------------------------------- 
துணை நூல்கள்: 
-------------------------- 
தீராநதி - நவம்பர் 2008 
     "      - அக்டோபர் 2010 
     "      - ஏப்ரல் 2011 
உயிர்மை - ஏப்ரல் 2011 
     "          -  மே 2011 
     "          - அக்டோபர் 2011 
உயிர் எழுத்து - ஏப்ரல் 2011 
காலச்சுவடு - ஏப்ரல் 2011
     "             -  மே 2011 
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் vaakkumoolam                            ----------------------------------- 
குறிப்பு: 
------------ 
           அணு உலை பற்றி பேச நான் ஒன்றும் விஞ்ஞானி இல்லை. சான்றோர்களும், ஆன்றோர்களும் அணு உலைத் தொடர்பான தகவல்களை மனித குலம்  விழிப்படைய எழுதியதை தின்று செரித்த கழுதை தான். அவர்கள் தங்கள் பிறவிக்கடனை  இச்சமூகத்திற்கு அடைத்து வருகிறார்கள். 
ஏதோ என் பங்குக்கு இந்தக் கட்டுரை. 
-----------------------------------------------------------------------------------------

3 comments:

சி.கருணாகரசு said...

உலகின் 193 நாடுகளில் அமெரிக்கா தன் நாட்டின் பழமையான கப்பலிலுள்ள மிக மோசமான ஆஸ்பெட்டாஸ் கழிவை கடலில் கொட்ட இந்தியா தான் சரியான நாடு என தெரிவு செய்து அனுப்பி வைத்தான்.//

இதிலிருந்தே தெரியவில்லையா...
ஆட்சியாளர்களின் மக்கள் நலன், தேச உணர்வு.

திறன் மிகு கட்டுரை... உணர்வுக்கு பாராட்டுக்கள்.

koodal bala said...

பாராட்டுக்கள்!

Anonymous said...

இன்றும் அவர் பாகிஸ்தான் அணு உலை கட்டுகிறது என்று மேற்கோள் காட்டுகிறார்...

இன்னும் நமக்கு போட்டி பாகிஸ்தான் தான் என்ற நினைப்பு அவருக்கு...

அணு தான் நமக்கு பிரகாசமான எதிர்காலம் தரும் என்று ஐம்பது வருடமாக ஏமாற்றி வருகிறார்கள்...

அந்த முதலீட்டை வேறு எதிலாவது செய்திருந்தால் இந்நேரம் ஒரு வல்லரசாய் ஆயிருப்போம் என்பது இந்த மூடர்களுக்கு ஏன் விளங்கவில்லை...?

தொடர்ந்து மிரட்டுங்கள்...

Blogger Widgets