.jpg)
கல்வி
வேலைவாய்ப்பு
வாழும் உரிமை
கருத்து சுதந்திரம்
உறவுகள் அழிப்பு
உடைமைகள் அழிப்பு
இனமழிப்பு
மொழியழிப்பு
அந்நிய ஆக்கிரமிப்பு
பண்பாட்டு அடையாளமழிப்பு
இறையாண்மைக்குட்பட்ட குடிமகனை
நேசநாடு கொன்று வீசுதல்
கார்பரேட்டுகள் கொள்ளை இலாபத்திற்கு
பூர்வகுடிகளை பசுமை வேட்டையாடுதல்
சில்லறை வணிகமழிக்க
பன்னாட்டு பகாசுரர்கள் படையெடுப்பு
அணு ஆயுதம் தயாரிக்க
வலிமையற்றோன் வாழுமிடம்
சிறப்பு பொருளாதார மண்டலம்
என்று ஏது நிகழ்ந்தாலும்
கண்டு கொள்ளாதே!
கவலை கொள்ளாதே!
கொடிநாளின் இனிப்பு சுவைத்து
தேசப் பற்றாளனாய் வாழ்ந்து மடி!
அணிலின் முதுகில்
இராமர் மூன்று கோடு போடும்போது,
தேசம் உனக்கு சிலை வைக்கும்!
------------------------------
முழுப் பைத்தியங்களை சமாளிக்கலாம்.
அரைப் பைத்தியங்களை
ஒன்றும் செய்ய இயலாது!
ஆமோதிக்கிறாள் இல்லத்தரசி!
------------------------------
வழித் தடத்தில்
சுடி, சேலை கடக்கையில்
முகம் பார்த்து புளகாங்கிக்கும்
சில்லரைப் புத்தி
கட்டை காடு சேரும்வரை
நிழலாய் கூடவே வருமோ?
------------------------------
எல்லா உடலும்
எக்கு உடல் தான்
நோய்மை வந்து
வருத்தாத வரை.
------------------------------
எதற்கெல்லாமோ
யாரையெல்லாமோ
ஏமாற்றிக் களிக்கிற சைத்தானுக்கு
நோய்மையிடம்
ஏமாந்து போகிற சூட்சுமம் மட்டும்
புரிபடவே இல்லை.
------------------------------
No comments:
Post a Comment