Tuesday, October 25, 2011

தீபத் திருநாள் - அலையடிக்கும் நினைவுகள்.




தீபாவளிப் பண்டிகைக்கு  
ஒரு வாரம் முன்பிருந்தே  
மத்தாப்பு பொறி பறக்கும்.   
மனசெல்லாம் தீ புடிக்கும். 


புதுத்துணி பத்துன கனவுல  
அணிஞ்சிருக்கும் பழந்துணிய   
எப்படா கழத்தி வீசுவோமுனு 
மனசு நாள் குறிக்கும். 


இட்லி, தோசை, 
இனிப்பு, பலகாரம் நெனச்சாலே 
நாவெல்லாம் எச்சிலூறும். 


வெளையாட்டுத்தனம் ஒதுக்கி வச்சு 
மாவாட்டும் அம்மாவுக்கு 
மறு பேச்சில்லாம தலையாட்டி 
ஏண்டதைச் செஞ்சு நிப்பேன்.        


வகை வகையா பட்டாசு 
வாங்க வக்கில்லேன்னாலும் 
ஊருக்குள்ள பெரிய வெடி 
யாரெல்லாம் வெடிப்பாங்கன்னு 
தெரிஞ்சி வச்சிருந்து தேடி போய் 
வேடிக்கை பார்த்து கெக்கலிப்பேன். 


நாலணாவோ, எட்டணாவோ 
நாணயத்தைக் கண்டுப் புட்டா, 
செட்டியாரு பட்டாசுக்கடை வாசலில 
செட்டு செட்டா கனவோட 
செம்மாந்து நின்னுருப்பேன்.      


அது ஊருக்குள்ள 
எழவுப் பெட்டி வராத காலம்.    
எங்க சனங்களெல்லாம் 
மனுச உறவுகள மதிச்ச காலம். 


டெண்டு கொட்டகையில் 
பழைய படம் மாத்தியிருப்பான். 
புதுப் பட சுவரொட்டியிலேயே 
பாதிப்படம் பாத்துடுவோம்.  
மீதிப் படத்த பார்த்து தீர்க்க 
மத்தியானச் சினிமாவுக்கு 
காலையிலேயே நின்னுருப்போம். 


மூணுச் சீட்டு, ரங்கரக்கட்டை, 
சினிமாப் பாட்டுப் புத்தகம், 
சவ்வு மிட்டாய்,  
வறுத்த வேர்க்கடலையோட    
கடை விரிச்சிருக்கும் 
கொல்லிமலைச் சாமியாரு கூடவே 
எனக்கு வலயவும் விரிச்சிருப்பாரு. 


அவரப் பார்க்காம தாண்டிட்டன்னா 
சினிமாவப் பாத்துடுவேன். 
பார்த்துத் தொலச்சிட்டன்னா           
மனசத் தொலைச்சிடுவேன். 


சினிமா கொட்டகைல  
அகரத்தானா தான் நுழையுவேன். 
வெளிய வரும்போது 
படத்தோட நாயகனாதான் வருவேன். 


தீபாவளி பண்டிகையில வெந்து தீஞ்சு 
வீட்டுப் பாடம் செய்யாம 
மறுநாள் பள்ளி வகுப்பறையில நுழைஞ்சி   
பெருமாளு வாத்தியாரப் பார்க்கையில, 
அந்த பெருமாளைத் தான் வேண்டிக்குவேன்.    


அவரு நம்ம வாத்தியாரா 
மாறிக் கொடுப்பாரு. 
நானு நம்பியாரா 
மாறி வாங்கிக்குவேன். 


அது ஒரு கனாக்காலம்.   
                ------------------------


                           - அகரத்தான். 

1 comment:

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

அது ஓர் அழகிய கனாக்காலம் . ! பழைமையை நியாபடுத்துகிறது.! வாழ்த்துக்கள் .

Blogger Widgets